‘‘தேசிய அளவில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இம்மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் நீதிமன்றத் தலையீட்டிற்குப்பிறகே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 74 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 70 சதவிகித வழக்குகள் ஆதாரம் இல்லையென முடிக்கப்பட்டு விடுகின்றன. 10 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வேறு ஜாதிப் பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழக நிதிநிலை அறிக்கையில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்படும் 18 சதவிகித நிதியில் 2 சதவிகிதம் மட்டுமே அவர்களுக்காக செலவிடப்படுகிறது. மீதமுள்ள நிதி பொதுத்திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது''– என ‘தேசிய எஸ்.சி. / எஸ்.டி. ஆணைய'த்தின் தலைவர் அண்மையில் (9.7.2015) சென்னை வந்திருந்தபோது தெரிவித்துள்ளார்.

தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது என்றால், தமிழ்ச் சமூகம் தலித் மக்கள் மீது மூர்க்கமான முறையில் பாகுபாட்டையும் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது என்று பொருள். நீதிமன்றங்களில் 10 சதவிகித வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்படுகிறது எனில், நீதிமன்றமும் காவல் துறையும் இம்மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்று பொருள். தலித் மக்களுக்கான நிதியில் இரண்டே இரண்டு சதவிகிதம் மட்டுமே செலவிடப்பட்டு, மற்ற நிதியெல்லாம் பொதுத் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது எனில், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இதற்கு உடந்தையாக இருக்கின்றன என்று பொருள். அரசின் ஓர் அங்கமான ஓர் ஆணையமே ஆதாரத்துடன் குற்றம் சாட்டியும் இந்த அரசோ, பிற கட்சிகளோ இது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 30 க்கும் மேற்பட்ட தலித் இளைஞர்கள் வேறு ஜாதிப் பெண்களைக் காதலித்ததால் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் கடந்த மாதம் கோகுல்ராஜ் கொல்லப்பட்டுள்ளார். அதற்கு எதிரான கண்டனங்கள் எவையும் அதற்கடுத்து நடைபெறும் கொலையை தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஏனெனில்,’’கோகுல்ராஜ் தன்னுடைய பிறப்பின் அடிப்படையிலான வரையறையை உணர்ந்திருக்க வேண்டும்'' என்று கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் மாநில அமைப்பாளர் கே. கோபால் ரமேஷ் தெரிவித்திருக்கும் அப்பட்டமான ஜாதி வெறிக் கருத்துகள் (‘ப்ரண்ட்லைன்', 7.8. 2015) இங்கு கண்டிக்கப்படுவதில்லை. மருத்துவர் ராமதாசும் பா.ம.க. வும் தலித் மக்களுக்கு எதிராக உமிழ்ந்து வரும் வெறுப்புரைகள்தான் வன்கொடுமைகளுக்கு வித்திடுகின்றன. ஆனாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எல்லா அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளாக தலித்துகள் இருக்கிறார்கள் என்ற போதிலும் அவர்களுக்காகப் பேச எந்தக் கட்சியும் முன்வருவதில்லை! மதுவையும் ஊழலையும் ஒழிக்கிறோம் என்று முழங்கும் கட்சிகள் எதுவும் தலித் மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்போம் என்று பேசுவதில்லை. அரசியலில் தலித்துகள் வெறுத்து ஒதுக்க வேண்டிய கட்சிகளில் முதலிடத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, ‘தேவேந்திர குல வேளாளர்' என்ற பட்டியல் சாதியினரின் இட ஒதுக்கீட்டைப் பறிக்க முயல்கிறது. பட்டியல் சாதியினர் இந்துக்களாக இருப்பதால்தான் தீண்டாமையும் இழிவும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறதே தவிர, அவர்கள் பட்டியல் சாதியினராய் இருப்பதால் அல்ல. இவ்வுண்மையை மறைத்து அவர்களின் ஜாதி அடையாளத்தை வலுப்படுத்தி வரும் இக்கட்சி, அதே நேரத்தில் இம்மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதியினரையும் அது வலுப்படுத்தி, இவ்விரு பிரிவினரிடையே பிளவையும் பாகுபாட்டையும் கூர்மைப்படுத்துகிறது. அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவின் மதுரை வருகை இதை உறுதிப்படுத்துகிறது.

விலங்குகள் தங்களுக்கான இணையைத் தேடிக்கொள்வதற்கு சுதந்திரம் இருக்கும் இந்நாட்டில் தலித்துகளுக்கு அத்தகைய சுதந்திரம் இல்லையென்பதும்; அதற்காகவே அவர்கள் கொல்லப்படுவதும் அம்மக்கள் மீது பரிதாபப்படுவதற்கான விஷயம் அல்ல; மாறாக, இங்கு வானளாவப் பேசப்படும் ஜனநாயகத்தின் மீது படியும் ரத்தக்கறையைத் துடைத்தெறிவது பற்றியது. தலித் – தலித் அல்லாதோர் பாகுபாட்டு இடைவெளியைக் குறைக்க சமூகம் உரத்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அய்.அய்.டி. இல் அம்பேத்கர் பெரியார் வட்டம் தடைசெய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தன்னியல்பாகக் கிளர்ந்தெழுந்தனர். ஆனால், இவ்விரு தலைவர்களும் ஜனநாயகப்படுத்த விரும்பிய சமூகம் – ஜாதி வெறியோடு இருப்பதை – எதிர்த்து என்றைக்கு கிளர்ந்தெழப் போகிறோம்? 

Pin It