இரண்டு மாதங்கள் இருக்கலாம். ஒரு காலை நேரத்தில் நான் பெரிதும் மதித்த, மதிக்கிற டி.எம்.உமர் பாரூக் ஆகிய டி.எம்.மணி அவர்கள் என்னை அழைத்தார். நான் சற்று பதற்றத்துட பதிலளித்தேன்.பதற்றத்திற்குக் காரணம் குற்றவுணர்வு. அவருக்கு மாரடைப்பு வந்து ‘ஆஞ்ஜியோ' செய்து சுமார் ஆறுமாத காலமாகியும் சென்று பார்க்கவில்லையே என்பதால் விளைந்த பதற்றம். சென்ற ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மாத காலம் அவர் சென்னையில் சிகிச்சை மேற்கொண்ட காலத்தில் எனக்கு அது தெரியாது. மாரடைப்புக்குச் சுமார் ஒரு வாரம் முன்னதாக என் வீட்டிற்கு வந்திருந்தார். ஏதாவது முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்துவிட்டுச் செல்வார். அன்று வந்தபோது சற்று கோபமாகவும் கவலையோடும் காணப்பட்டார். பெ. மணியரசன் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள ‘தமிழ்த் தேசியமும் சாதியமும்' எனும் நூலில் டாக்டர் அம்பேத்கர் அவதூறு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு சரியான ஒரு பதில் எழுத வேண்டும் எனவும் கூறினார். நான் அந்த நூலைப் படிக்கவில்லை.எனக்கு ஒரு பிரதியை அவர் கொண்டு வந்திருந்தார்.

TM umarமணியரசன் போன்றோர் கிட்டத்தட்ட இந்துத்துவ வாதிகள் அளவிற்குப் போய்க்கொண்டிருப்பதையும் தமிழ்த் தேசியம் அங்கு போய் நிற்பதில் வியப்பில்லை எனவும் நான் கூறினேன். அம்பேத்கர் பற்றி மணியரசன் எழுதியுள்ளதற்கு ஒரு நல்ல பதில் எழுத வேண்டும் எனவும் படித்துவிட்டு என்னுடைய கருத்துகளைச் சொல்லுமாறும் கூறி அகன்றார். இது நடந்த சில நாட்களில் மாரடைப்பு வந்து ‘ஆஞ்ஜியோ' செய்து அவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளதை சற்று தாமதமாக அறிந்த நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வந்து பார்க்கிறேன் என்றேன்.தான் வேலூரில் மகள் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் ஒரு மாதத்தில் குடந்தை வந்துவிடுவதாகவும் பிறகு வந்து பார்க்கலாம் எனவும் சொன்னார். அத்தோடு நிறுத்தவில்லை. மணியரசன் நூலுக்குத் தான் மறுப்புரை எழுதத் தொடங்கிவிட்டதாகவும் கூடவே ‘அம்பேத்கரின் மதமாற்றத்திற்குப்பின்னுள்ள அரசியல்' என்றொரு குறுநூல் எழுத இருப்பதாகவும் சொன்னார். தேவையான குறிப்புகள் எதுவும் இருந்தால் உடனே அனுப்பி வையுங்கள் என்றார். தனது உடல்நிலை, சிகிச்சை மேற்கொண்டது இது குறித்தெல்லாம் அவர் ஏதும் பேசவில்லை. இதைத்தான் திரும்பத் திரும்பக் கூறினார். இருக்கட்டும், இப்போதைக்கு இது குறித்து கவலை கொள்ளாமல் ஓய்வெடுங்கள் என்று சொல்லி கைபேசியை நிறுத்தினேன். மனம் கனத்திருந்தது.

 தமிழகத்தில் எவ்வளவோ மெத்தப்படித்த அம்பேத்கரியர்கள் எல்லாம் இருக்கும்போது, தொடக்கக் கல்விவரையில் படித்த இந்த தலித் போராளிக்கு அம்பேத்கர் மீது பூசப்படும் அவதூறைக் களையவேண்டும் என்கிற துடிப்பை நினைத்தபோது மனம் கசிந்தது. பின் அவர் சற்று, ஆம் சற்றுதான் உடல் தேறி திருப்பனந்தாள் திரும்பியவுடன் திருவிடைமருதூர் வட்டத்தைச்சேர்ந்த மட்டியூரில் பொது இடத்தில் ஏற்றப்பட்டிருந்த தலித் இயக்கக் கொடிகளை அவ்வூர் வன்னிய சாதியினர் இருமுறை உடைத்துப் போட்ட பிரச்சினையில் அவர் ஈடுபட்டிருந்ததை அறிந்தேன். இதற்கிடையில்தான் இரண்டு மாதத்திற்கு முன் அதிகாலையில் அவரிடமிருந்து அந்த அழைப்பு வந்தது. ‘‘கும்பகோணத்திலா இருக்கீங்க?''என்றார்.’’ஆம்'' என்றேன். ‘‘வந்து பார்க்கிறேன்'' என்றார். ‘‘வேண்டாம் நீங்க ஓய்வெடுங்க, நான் வந்து பார்க்கிறேன்'' எனச் சொன்னேன். ஆனால் போகவில்லை. அடுத்த வாரத்தில் நான் சென்னையில் இருந்தபோது (சூன் 5, 2015) அவரது மூத்த மகனும் தற்போது அவரது ‘நீலப்புலிகள்' இயக்கத்திற்கு அவருக்குப் பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவருமான புரட்சிமணி, தன் தந்தை இறந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டபோது துடித்துப் போனேன்.

                உமர் பாரூக்காக அவர் மாறுமுன் டி.எம்.மணி என்கிற பெயரில் குடந்தையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாதி வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக அவர் அறியப்பட்டிருந்த காலத்திலிருந்தே எனக்கு அவர் பழக்கம். தொண்ணூறுகளுக்கு முன் தலித் அமைப்புகள் மாநில அளவில் வலுவான திரட்சி பெறாமல் நிலவுடைமையும் சாதி ஆதிக்கமும் வேரோடியிருந்த இடங்களில் வலுவான இயக்கங்களை அமைத்துப் போராடி வந்தன. பல வெற்றிகரமான இயக்கங்களை நடத்தியுள்ளன. பல தியாகங்களைச் செய்துள்ளன. கும்பகோணம் பகுதியில் டி.எம்.மணி, பேராவூரணி பகுதியில் அரங்க. குணசேகரன், பரமக்குடி பகுதியில் சந்திரபோஸ் இப்படிப் பலரையும் சொல்லலாம்.

மணி அவர்கள் செயல்பட்ட திருப்பனந்தாளும் சுற்றுவட்டாரங்களும் வரலாற்றுக் காலந்தொட்டு நிலவுடைமை ஆழ வேர்விட்டிருந்த பகுதிகள். தஞ்சை மாவட்டத்தின் மூன்று முக்கிய சைவ மடங்களுள் திருப்பனந்தாளும் ஒன்று. இந்த மடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆறாயிரம் வேலி (சுமார் 40 ஆயிரம்) ஏக்கர் நிலங்கள் உண்டு. இது தவிர இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் அவர்களுக்கு நிலங்கள் உண்டு. மணி அவர்கள் செயல்பட்ட திருப்பனந்தாள்,கும்பகோணம், திருவிடைமருதூர் முதலானவை மேலத்தஞ்சையில் அடங்கும். அதாவது, காவிரிக்கு மேற்புறம் உள்ளவை.கீழ்ப்புறம் உள்ள மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை முதலானவை கீழத்தஞ்சை.கீழத்தஞ்சையில் தலித் மக்கள் அளவில் அதிகம்.

கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விவசாயத் தொழிலாளிகள் என்கிற வகையில் தலித் மக்கள் திரட்டப்பட்டனர்.சாணிப்பால், சாட்டையடி முதலானவை ஓரளவு முடிவுக்கு வந்தன. மேலத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் காலூன்ற இயலவில்லை. இந்நிலையில் நிலப்பிரபுத்துவக் கொடுமையுடன் பின்னிப் பிணைந்து நின்ற சாதிய ஆதிக்கத்தை திருப்பனந்தாள் பகுதியில் எதிர்த்து நின்றவர் டி.எம்.மணி அவர்கள். ஒரு பக்கம் வெள்ளாள மடம்; இன்னொரு பக்கம் இங்கு ஆதிக்கச் சாதியினராக இருந்த வன்னியர்களின் சாதிக்கொடுமைகள் என இரண்டையும் எதிர்த்து நின்றது டி.எம். மணி அவர்களின் ‘அம்பேத்கர் மாணவ இளைஞர் பேரவை' மற்றும் ‘நீலப்புலிகள் இயக்கம்'. 1970 களின் பிற்பகுதி தொடங்கி இறப்பதற்கு முதல்நாள் வரை தலித் மக்களுக்கான வீரஞ்செறிந்த பல போராட்டங்களை நடத்தி ஆயுள் தண்டனை வரை எதிர்கொண்டவர் மணி அவர்கள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இங்கு உருவான தலித் எழுச்சியுடன் இணைந்து செயல்பட்ட எங்கள் மீது அத்தனை நல்ல கருத்து மணி அவர்களுக்கு தொடக்க காலத்தில் கிடையாது. எங்கள் மீது மட்டுமல்ல, அன்று உருவான தலித் எழுச்சியின் விளைபொருட்கள் எதன்மீதும் அவருக்கு அப்படியொன்றும் பெரிய மரியாதை இறுதிவரை இல்லை. எனினும் அவரது வரலாற்றை அறிந்த எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை.

‘தமிழ்க் குடிதாங்கி' என்கிற சிறப்பை மருத்துவர் ராமதாசுக்கு தொல். திருமாவளவன் அவர்கள் அளிப்பதற்குப் பின்னணியாக இருந்த குடிதாங்கி சுடுகாட்டுப் பாதை பிரச்சினை குறித்து ‘நிறப்பிரிகை' இதழில் நாங்கள் வெளியிட்டிருந்த கள ஆய்வு குறித்த மணியின் காட்டமான விமர்சனத்தை இன்றும் அவரது ‘சாதி ஒழிந்தது' நூலில் காணலாம். எனினும் காலம் எல்லாவற்றிலும் மாற்றத்தை விளைவிக்கும்தானே! கடந்த பத்தாண்டுகளில் அவர் என் மீது மிகுந்த அன்பை வெளிக்காட்டினார். நூல்கள் எழுதும்போது ஆலோசனைகள் கேட்பது, அவரது நீலப்புலிகள் இயக்கத்தின் கூட்டங்கள் அனைத்திற்கும் என்னைத் தவறாது அழைப்பது என்பதாக அந்த நட்பு தொடர்ந்தது. கடைசியாக நான் அவரது மேடையில் பேசியது சென்ற ஆண்டு நடைபெற்ற அவரது மகன் புரட்சிமணியின் திருமணத்தின்போது.

                இறுதிக்காலத்தில்தான் அவரது உடல் சற்றுத் தளர்ந்திருந்தது. மற்றபடி நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்பார்களே அப்படி ஒரு தோற்றம். இரும்பால் அடித்துச் செய்தது போன்ற உடல், நறுக்கு தெறித்தாற் போன்ற பேச்சு – இப்படித்தான் கம்பீரமாக அவர் தோன்றுவார். மணி அவர்கள் தமிழ் இலக்கியம், தமிழ் மற்றும் இந்திய மரபுகள், அம்பேத்கரியம், பெரியாரியம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை மிக்கவர் என்பதை அவரது நூற்களை வாசித்தால் புலப்படும்.

காந்தியடிகள் தனக்கு சத்தியத்தின் மேன்மையை உணர்த்திய வரலாறு எனச் சொல்லும் அரிச்சந்திரன் கதையின் தமிழ்வடிவமான ‘அரிச்சந்திரபுராணம்' குறித்த மணி அவர்களின் கட்டுரை (‘தீண்டாமைக்குத் தீர்வு') அவரது தமிழ்ப் புலமைக்கும் விமர்சனப் பார்வைக்கும் ஒரு சான்று. அரிச்சந்திரன் கதை சத்தியத்தின் மேன்மையை விளக்குகிறதோ என்னவோ அது சாதியத்தை, தீண்டாமையை, வர்ண வேறுபாட்டை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறது என்பதை அவர் அதில் தோலுரிப்பார். அவரது அத்தனை குறுநூல்களுமே முக்கியமானவை. ‘செந்தமிழ்நாட்டுச் சேரிகள்', ‘சாதி ஒழிந்தது' ஆகியன இலக்கியத் தரமானவை.

1956 டிசம்பர் 6.அப்போது மணிக்கு வயது 12.அவரும் சற்றே மூத்த அவரது மாமாவும் பந்தநல்லூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த போதுதான் வானொலி அந்தத் துயரச் செய்தியை அறிவித்தது.அண்ணல் அம்பேத்கர் மறைந்தார். இதைக் கேட்டவுடன் மணியின் மாமா தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார். என்னவென்று தெரியாமலேயே மணியும் அழுதிருக்கிறார்.சுற்றியிருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துள்ளது.மணி அம்பேத்கரை அறிந்து கொண்டது அப்படித்தான். அதன்பின் டிசம்பர் 6 மற்றும் ஏப்ரல் 14 ஆகியவற்றில் அம்பேத்கர் நினைவை அப்பகுதியில் ஏந்தத் தொடங்கினார் மணி.

அப்படித்தான் ஒரு நாள்.1962 ஏப்ரல் 14.அப்போது மணியின் வயது 18. ஒரு பன்னிரண்டு பேர் சைக்கிள்களில் அம்பேத்கர் படத்தை மாட்டிக்கொண்டு, ‘தீண்டாமை ஒழிக', ‘தேசப்பிதா அம்பேத்கர் வாழ்க' என முழங்கிய வண்ணம் திருப்பனந்தாளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட பயணம் மேற்கொண்டனர். திருலோகி கிராம எல்லையை அடைந்த போது அங்குள்ள தோப்பு ஒன்றில் தோழர்கள் இளைப்பாற, மணி அருகிலிருந்த பழைய ஆளரவமற்ற வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெரியவர் வந்துள்ளார்.தோற்றம் அவரை வெள்ளாளர் எனக் காட்டியது.

பார்த்தவுடன் மணி எழுந்திருக்கிறார்.அவர் அமரச்சொல்லி தானும் பக்கத்தில் அமர்ந்து, ‘‘தண்ணீர் வேண்டுமா?''எனக் கேட்டுத் தந்தும் இருக்கிறார்.வியப்பு.பின் அவர் ‘‘டி.எம்.மணி வாழ்க என்று சொல்கிறார்களே, அது யார்?''என்று கேட்டிருக்கிறார். மணி சற்றே சுதாரித்துக்கொண்டு, ‘‘அது எங்கள் தலைவர் '' என்றவுடன் அந்தப் பெரியவர், ‘‘அவர் வந்துள்ளாரா?'' என்று கேட்டுள்ளார்.மணி, ‘‘இல்லை'' என்றிருக்கிறார். அந்தப் பெரியவர் அடுத்து கேட்ட கேள்வி மணியின் நெஞ்சில் சொறேர் எனத் தைத்தது.’’நீங்கள் நூறுபேர் இருக்கிறீர்கள். நாங்கள் இரண்டே பேர்தான். இருந்தாலும் உங்கள் அவ்வளவு பேரையும் கட்டி வைத்து நாங்கள் அடிப்போம். நீங்கள் நூறுபேர் இருந்தாலும் பேசாமல் வாய்பொத்தி இருப்பீர்கள். அது ஏன்? அதுதான் எனக்கு விளங்கவில்லை?'' அதை அந்தப் பெரியவர் இறுமாப்புடன் சொல்லவில்லை. அதில் ஓர் அக்கறை தொனித்தது. அந்தச்சொற்கள் மணியிடம் ஆழ்ந்த சிந்தனைகளை ஏற்படுத்தின. தீண்டாமைக்கு எதிரான தனது போராட்டப்பாதை எப்படி இருக்க வேண்டும் என்பது அந்த உரையாடலின் மூலம் மணிக்கு விளங்கியது.

                தஞ்சை மாவட்டத்தின் ஒரு வகை மாதிரியான பண்ணை அடிமைக் குடும்பத்தில் ‘ஆறாவது தலைமுறை அடிமை' யாக ஆறு குழந்தைகளுக்கு மத்தியில் பிறந்த மணி, வெகு விரைவில் அப்பகுதி மக்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானார். சென்ற மாதம் அவர் இறந்தபோதுகூடத் திரண்டிருந்த தலித் மக்கள், ‘‘இனி எப்பிடிய்யா தைரியமா இந்தக் கடைவீதியில நாங்க வந்து போவோம்...'' எனக் கதறி அழுததை ஒருவர் குறிப்பிட்டார்.

தலித் மக்களுக்குப் பிரச்சனைகளுக்கா பஞ்சம்? அதுவும் அவர்கள் எதிர்கொள்பவை சாதாரணப் பிரச்சினைகளா?உயிர்ப்பிரச்சினைகள். இத்தகைய பெரும் பிரச்சினைகள் மட்டுமின்றி, ‘‘குடும்பச் சண்டையாக இருந்தாலும் கோழிச்சண்டை, குழந்தைச் சண்டையாக இருந்தாலும் என்னிடம் புகார் சொல்லி முடிந்தால்தான் எங்கள் சேரி மக்களுக்கு நிம்மதி வரும்'' என மணி ஓரிடத்தில் குறிப்பிடுவார். அவர் ஆயுள் தண்டனை பெறக் காரணமாக இருந்த திருப்பனந்தாள் கலவரம்(1982) கிட்டத்தட்ட ஒரு போரைப் போலவே நடந்துள்ளது. ஒரு பக்கம் ஆதிக்க சாதியினர், இன்னொரு பக்கம் மணி அவர்களால் திரட்டப்பட்ட தலித் இளைஞர்கள் எனத் திரண்டு மோதிய நிகழ்வு அது. கையில் ஆயுதம் தாங்கிய 22 தலித் இளைஞர்கள் மாட்டு வண்டிகளில் கற்களை ஏற்றிக் கொண்டு எதிரிகளை நோக்கி விரைந்தோடியபோது, தங்கள் பிள்ளைகளைக் கூட தடுக்காத தலித் பெண்கள் மணியை மட்டும், ‘‘நீ இருந்தால் எங்களுக்குப் போதும்'' என கண்ணீர் மல்கத் தடுத்ததை மணி நினைவுகூர்கிறார்.

‘இந்து'க்களுடனான அந்த சமர் ராஜேந்திரன் என்கிற ரவுடிப் பட்டியலில் இருந்த ஓர் இந்து கொல்லப்பட்டதில் முடிந்தது. ஆம். மணி சாதிக் கொடூரர்களை, ‘ஆதிக்க சாதி' அல்லது ‘சாதி இந்துக்கள்' என்றெல்லாம் குறிப்பிடுவதில்லை. மாறாக அவர்களை ‘இந்துக்கள்' எனவும் ‘எதிரிகள்' எனவும்தான் குறிப்பிடுவார்.சாதி விலக்கல் மற்றும் தீண்டாமையை மத ரீதியில் நியாயப்படுத்தும் இந்து மதம், அதன் இயல்பிலேயே தீண்டாமையைக் கொண்டுள்ளது என்பது அதன் பொருள். அப்படிக் கடைப்பிடிப்போர் தலித் மக்களின் எதிரிகள். அவர்களிடம் தேசியம் என்றோ தேர்தல் மூலம் அதிகாரம் என்றோ சமரசம் ஆதல் தலித் மக்களின் விடுதலைக்கு எதிராகவே முடியும் என்பதுதான் டி.எம்.மணி என்கிற உமர் பாரூக்கின் கருத்தாக இருந்தது என்பது, அவரது வாழ்வையும் எழுத்துகளையும் வாசிப்போர் அறிவர். தலித் அல்லாத அனைவரையும் இந்துக்கள் எனச் சொல்வதன் மூலம் அவர் தலித் மக்கள் இந்துக்கள் அல்லர் என்பதையும் கூடவே வற்புறுத்துகிறார்.

சாதிய சக்திகளுடன் சமரசமற்ற போர் என்பதுதான் 18 வயதில் அந்த திருலோகிப் பெரியவரின் சொற்களினூடாக மணி அவர்கள் வந்தடைந்த ஞானம்.ராஜேந்திரன் கொலை வழக்கில் 54 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். முதல் குற்றவாளி மணி. அவரது தம்பி மதியழகனும் மற்றொருவரும் ராஜேந்திரனைப் பிடித்துக் கொண்டதாகவும், மணி அவரை வெட்டிக் கொன்றதாகவும் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடியது. மதம் மாறியிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலரின் பாதுகாப்பில் தலைமறைவாக இருந்து பின் குடந்தை ஆர்.பி. ஸ்டாலின் அவர்கள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மணி.

மணியின் வழக்கை நடத்தியவர் புகழ்பெற்ற வழக்குரைஞர் தஞ்சை ராமமூர்த்தி. அவரும் ஓர் ஆதிக்க சாதியினர்தான்.அவர் மிகச்சிறப்பாக இந்த வழக்கை நடத்தினார்.இறுதிவரை மணி அவர்கள் மிக்க நன்றியுடன் மதித்தவர்களில் ராமமூர்த்தி முதன்மையானவர். விசாரணை நீதிமன்றம் மணிக்கு ஆயுள் தண்டனையும் அவரது சகோதரர் உட்பட இதர ஆறு பேர்களுக்கு தலா ஓராண்டும் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் மணிக்காக வாதிட்டு விடுதலை வாங்கித் தந்தவர் தஞ்சை ராமமூர்த்தி அவர்கள்தான். இந்த வழக்கில் இன்னொன்றை யும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ராஜேந்திரனைக் கொன்றவர் ஒரு 18 வயது இளைஞர்.அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்தார். ஆனாலும் அதற்கு மணி ஒப்பவில்லை.

தொடர்ந்து அப்பகுதி தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக மணி எடுத்த போராட்டங்கள் ஏராளம். ‘செந்தமிழ் நாட்டுச் சேரிகள்' மற்றும் ‘சாதி ஒழிந்தது' எனும் நூல்களில் வேட்டமங்கலம், குடிதாங்கி, அண்டக்குடி, புத்தூர், காவல் கூடம், பாலாக்குடி, வேலூர் முதலான ஊர்களில் மணியின் வழிகாட்டலில் நடைபெற்ற போராட்ட வரலாறுகளைக் காணலாம். சேரி மக்கள் என்னென்னவிதமான பிரச்சினைகளை எல்லாம் எதிர் கொள்ள நேரிடும் என்பதை விளக்கும் கையேடுகளாக இவ்விரு நூற்களையும் சொல்லலாம். சாதியத்தின் செயல்பாடுகளை அவர் தன் அனுபவங்களின் ஊடாகவும் படிப்பின் ஊடாகவும் நுணுக்கமாகப் புரிந்து கொண்டு இயங்கினார்.

சாதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் அம்பேத்கர் அவர்கள் கோட்பாட்டுரீதியாகக் கூறுவனவற்றை 1,2... என தன் நூற்களில் ஆங்காங்கு மிக நுணுக்கமாக மணி பட்டியலிட்டிருப்பதைக் காணலாம். எங்கு போனாலும் அங்குள்ள புத்தகக் கடைகளில் அம்பேத்கர் நூல்களை – அவை ஆங்கிலத்தில் இருந்தாலும் – வாங்கிவிடுவார் என்கிறார் அவரது அருமை நண்பர் ‘வைகறை வெளிச்சம்' நிறுவனர் குலாம் முகம்மது அவர்கள். அதே போல தந்தை பெரியார் சாதி ஒழிப்பு குறித்து சொன்னவற்றையும் மிக நுணுக்கமாகத் தன் நூற்களில் கோடிட்டுக் காட்டியிருப்பார் மணி.

தலித்தியத்தின் பெயரால் பெரியாரை அம்பேத்கருக்கு எதிர்நிலையில் நிறுத்தி சிலர் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்திச் சொல்லாடிய காலங்களில் பெரியாரை எந்நாளும் விட்டுக்கொடுக்காது உயர்த்திப் பிடித்த மணி, பெரியாருக்கு எதிரான இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டித்து சுவாமிமலையிலும் குடந்தை மகாமகக் குளக்கரையிலும் பொதுக்கூட்டங்களை நடத்திக் காட்டினார். தலித் மக்களின் இரு கண்களாக அவர் அம்பேத்கரையும் பெரியாரையும் ஏந்தி நின்றார். அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் ஊடாகப் பெற்ற கோட்பாட்டு பலம், அனுபவங்களின் ஊடாகக் கற்ற பாடங்கள் ஆகியவற்றின் ஊடாக நமது சாதிமுறை குறித்து அவர் நுணுக்கமாக பல விடயங்களைக் கூறுவதை அவரது எழுத்துகளில் நாம் காண இயலும்: ‘‘கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்த சாதிக் கடமைகளை அவரவர் செய்ய வேண்டுமென்பதுதான்'' என்பார் ஓரிடத்தில் (‘சாதி ஒழிந்தது' – பக்கம்: 18). ‘‘தலித்துகள் தாக்கப்படும் போதும் கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்த் தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை''என்பார் இன்னொரு இடத்தில் (‘சாதி ஒழிந்தது' – பக்கம்: 25).

எத்தனை நுணுக்கமாக அவர் இந்த சாதியச் சமூகத்தை அவதானிக்கிறார் என்பதற்கு மலைக்குறவர்கள் பற்றிய அவரது கட்டுரை சான்று (‘காத்தாயி மகன்' – ‘சாதி ஒழிந்தது' பக்கம்: 72 – 82). மலைக்குறவர்கள் என்போர் ஒரு காலத்தில் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டோர். பட்டியல் இனத்தில் (குஞிடஞுஞீதடூஞுஞீ கூணூடிஞஞுண்)இணைக்கப்பட்டுள்ள இவர்களை இன்னும் திருட்டு முதலான குற்றங்களைப் புரிகிறவர்களாகவே காவல்துறை அணுகி வருகிறது. தலித் மக்களை விடக் கீழ் நிலையில் இருக்கும் இவர்கள் தலித் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப்பிடிப்பதுதான் வேடிக்கை. பன்றி மேய்த்து வந்து மணியின் ஆதரவில் ஒரு குடியிருப்பை உருவாக்கி வாழ்ந்த இவர்களைப் பற்றிச் சொல்லும் மணியின் கட்டுரை, ஒரு சிறுகதை போலச் செறிவுடன் அமைந்த ஒன்று. மலைக் குறவர்களுக்குள் இரு பிரிவுகள்.இவர்களுக்குள் திருமண உறவு கிடையாது. இந்த அடிப்படையில் அங்கு உருவாகும் சாதிச்சிக்கல்கள், சாதிப்பஞ்சாயத்துகள், அவற்றின் ஊடாகப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுதல் ஆகியவற்றைத் தொட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. ‘இந்து மதம் ஏழைகளாகப் பிறந்தவர்களைக் கூட எப்படிப் பிரித்து வைத்திருக்கிறது பார்த்தீர்களா?' என வியக்கும் மணி (பக்கம்:76), இந்தியச் சாதிகள் எதுவும் ‘செட்டியார், வெள்ளாளர், முதலியார்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும் அவை இந்தப் பெயரிலான பொது அடையாளங்களுடன் விளங்குவதில்லை. இவற்றிற்குள்ளும் உட் பிரிவினைகள் கடுமையாக குறிப்பாகத் திருமண உறவுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. தலித் சாதிகளும் இதில் விதிவிலக்கல்ல என்பார்.

                இளைய பெருமாள் அவர்களை தலைவராக ஏற்றுச் செயல்பட்ட மணி, அவர் குறித்து மிக்க மரியாதையுடன் எழுதுவார்.இளையபெருமாள் அவர்கள் இறுதிவரை தலித் மக்களுக்காக உழைத்தவர்.இந்து மதத்தை நம்பியவர். காங்கிரஸ்காரரும் கூட. இப்படியானவர்களுங்கூட தலித் பிரச்சினைகளில் அக்கறையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும் என்பதைச் சொல்லும் மணி, எனினும் இத்தகையோரின் நல்லெண்ணச் செயல்பாடுகளுக்கு சில வரம்புகளுண்டு என்பதையும் நாசூக்காகக் குறிப்பிடுவார்.

காவல்கூடம் எனும் ஊரில் ஒரு பிரச்சினை. தலித் மக்களின் 47 குடிசைகள் கொளுத்தப்பட்டன. நீலத்த நல்லூர் பள்ளிக்கூடத்தில் அம்மக்கள் தஞ்சம் புகுகின்றனர். இதைக்கேள்விப்பட்டு மணி அங்கு போகிறார். இளைய பெருமாளும் அம்மக்களை சந்திக்க வருகிறார். இதையறிந்து அப்பகுதியில் மிக்க செல்வாக்கு உடையவரும் வீடுகளைக் கொளுத்தியவர்களின் உறவினரும் காங்கிரஸ்காரருமான ராமகிருஷ்ணன் என்பவரும் வந்து சக காங்கிரஸ்காரர் என்கிற வகையில் இளைய பெருமாளிடம் பேசுகிறார். வீடுகள் எரிந்தவுடனேயே தான் அங்கு வந்து ஒரு மூட்டை அரிசி கொடுத்து சோறு சமைத்துப் போட்டதாகவும் தாசில்தாரிடம் சொல்லி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 ரூபாய் கொடுக்கச் சொன்னதாகவும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் முகம்மதுவிடம் சொல்லி இன்னொரு 200 ரூபாய் கொடுக்கச் சொன்னதாகவும், இதை வைத்துக்கொண்டு இந்துக்களின் வீடுகளிலிருந்து மரங்களை வெட்டி குடிசை அமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். பின்னர் இளைய பெருமாளை வீட்டிற்கு அழைத்துச் சென்று தலித் மக்களில் சுப்பிரமணி என்பவர்தான் கம்யூனிஸ்ட் கட்சி வைத்துக் கொண்டு பிரச்சினைகள் செய்வதாகச் சொன்னதோடு, தலித் மக்களே குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொண்டதாகவும் சொல்லி வைக்கிறார். அதே நேரத்தில் அந்த சுப்பிரமணி காவல் நிலையத்தில் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

வீடு கட்டிக் கொள்ளும் வரை தலித் மக்கள் எங்கே இருப்பார்கள்? என இளையபெருமாள் கேட்டபோது பக்கத்தில் உள்ள திடலில் தற்காலிகக் கொட்டகை ஒன்று போட்டுக் கொள்ளலாம் என்கிறார் ராமகிருஷ்ணன். சரி, பார்த்துச் செய்யுங்கள் எனச் சொல்லி இளையபெருமாள் அகல்கிறார். இளையபெருமாள் சென்றவுடன் காவல்நிலையம் சென்று சுப்பிரமணியை மீட்டு வருகிறார் மணி. குடிசைகளைத் திருப்பிக் கட்டுவது மட்டுமல்ல, குடிசைகளைக் கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சொல்கிறார். அடுத்த சில நாட்களில் பள்ளிக்கூடம் நடத்த வேண்டும் எனச்சொல்லி அங்கு குடியேறியிருந்த தலித் மக்களை வன்முறையாக அரசு வெளியேற்ற முனைந்தபோது மணியின் தலைமையில் மக்கள் வெளியேற மறுக்கின்றனர். ‘உதைத்து வெளியேற்றுங்கள்' என துணை ஆட்சியர் ஆணையிட்டபோது ‘உள்ளே நுழைந்தால் நீங்கள்தான் உதை வாங்குவீர்கள்' என மணி பதிலளித்ததைக் கண்டு திகைத்து வெளியேறினார் அதிகாரி. பின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா தலையிட்டு, அம்மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் 52 வீடுகளைக் கட்டிக்கொடுக்கவும் குடிசைகளைக் கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார். கங்கப்பா ஒரு தலித் என்பதும், அடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன. இளையபெருமாள் போன்றோரின் செயல்பாட்டு வரம்பிற்கும், மணி அவர்களின் தீரமிகு களச் செயற்பாட்டிற்கும் ஓர் எடுத்துக்காட்டாகத்தான் இந்தப் போராட்டத்தை மட்டும் விரிவாகச் சொல்ல நேர்ந்தது.

– அடுத்த இதழில் நிறைவடையும்

Pin It