அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மாணவராக சேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2.7.2013 அன்று அங்கு நிகழ்ந்த கருத்தரங்கில் – ஆந்திர பல்கலையின் மானுடவியல் துறை பேராசிரியர் டாக்டர் பி. டி. சத்யபால் – பங்கேற்று ஆற்றிய உரையை கடந்த இரு இதழ்களில்  (அக்டோபர், நவம்பர் 2012) வெளியிட்டிருந்தோம். அதன் நிறைவுப் பகுதியை இவ்விதழில் வெளியிடுகிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய தனிப் பிரதிநிதித்துவத்தை கோராதவரை அவர்கள் இஸ்லாத்திலோ, கிறித்துவத்திலோ இணைவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என வட்ட மேசை மாநாட்டின் போது காந்தி தெரிவித்தார். ஆனால் பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு கோவிந்த் வல்லப் பந்த், பட்டியல் சாதியினர் இந்து மதத்தை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு பூனா ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் எந்த சலுகையும் கிடைக்காது என்று எச்சரித்தார். பார்ப்பனியம் சிறுபான்மை மக்கள் மீது திணித்த எதேச்சதிகார தேசியத்திற்கு மேற்கண்ட நிகழ்வு ஒரு சான்று.

ambedkar 452

சிறுபான்மையினரைக் கையாளும்போது பார்ப்பனியம் வெளிப்படுத்தும் பாசிச முகத்தை அம்பேத்கர் விளக்குகிறார்: ‘‘சிறுபான்மையினர் அதிகாரத்தில் பங்கு கேட்பது வகுப்புவாதம் எனப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைச் சமூகம் அதிகாரத்தை முற்றுரிமையாக்கிக் கொள்வது தேசியம் எனப்படுகிறது.'' இந்து ராஜ்யம் உருவானால் அது சந்தேகமே இல்லாமல் நாட்டிற்குப் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். இந்துக்கள் என்னதான் கூறினாலும் இந்துத்துவம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு தடைக்கல்லாகவே இருக்கும். அதன் அடிப்படையில் இந்துத்துவம் ஜனநாயகத்துடன் பொருந்திப் போகாது என்றார் அம்பேத்கர்.

மதம் மற்றும் மொழி அடிப்படையிலான பிரிவினை யை கூர்மைப்படுத்தும் இந்துக்களின் செயல் திட்டத்தைக் கணித்த அம்பேத்கர், பாகிஸ்தான் உருவாக்கம் என்பது வகுப்புச் சிக்கலுக்கு தீர்வாகாது என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்த விரும்பினார். ‘‘இந்து ராஜ்யம் நிச்சயமாக என்ன விலை கொடுத்தாவது தடுக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்கு பாகிஸ்தான்தான் ஒரே தீர்வா?''என்று கேட்டார். இந்து மகா சபை மற்றும் இந்து ராஜ்யம் போன்ற செயல்திட்டங்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் லீக்கை கொண்டிருந்ததன் விளைவாக – தங்கள் மேல் தாங்களாகவே சுமத்திக்கொண்ட தவிர்க்க இயலாத எதிரிகளாகும்.

இது வினை மற்றும் அதற்கு எதிர்வினை.ஒன்று மற்றொன்றின் செயலுக்கு காரணமாக அமைகிறது.நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களையும் ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதே ‘இந்து ராஜ்யம்' என்ற பிசாசை அழிக்க ஒரே வழி என அம்பேத்கர் அறிவுறுத்தினார். ஆனால் முஸ்லிம்கள் பார்ப்பன சக்திகளின் செயல் திட்டத்தின் வழியே கொண்டு செல்லப்பட்டதும், பிரிவினை என்ற கொடுமையான நிகழ்வும் அதையொட்டி நடந்த வெட்கக்கேடான வன்முறை வெள்ளத்தில் சீக்கியர்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பிறரும் மூழ்கிப் போனதும் நன்கு அறியப்பட்ட வரலாறாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களை பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் உறுதியுடன் இருந்த அம்பேத்கர், தன்னை ஓரம் கட்ட செய்யப்பட்ட அனைத்து உத்திகளையும் தாங்கி உறுதியாக நின்றார். ‘‘நமது போராட்டம் சொத்துக்கானதோ அதிகாரத்திற்கானதோ அன்று.நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும்பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது'' என்றார்.

தலித் மக்களை இந்து அடிமை முறையினால் தங்களுக்கு கீழானவர்களாக மாற்றும் பார்ப்பனிய சதித்திட்டத்திற்கு எதிர் வினையாக அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் மதம் என்பது மனித நலன்களை மய்யப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஆன்மிகத்தில் மய்யம் கொண்டதாக இருக்கக் கூடாது என நடைமுறைத் தத்துவத்தின் மூலம் விளக்கினார். ஜனநாயகப் புரட்சிகர தத்துவம் என்பது வெறுமனே சமூக, சட்டம் மற்றும் பொதுவில் சமநிலைகளை உள்ளடக்கியது அல்ல; அது மதத்திலும் சம நிலையைக் கோருவது என்றார். மதத்தை சக மனிதர்களை ஒடுக்குவதற்கான முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தும் பார்ப்பனியப் பண்பாட்டைத் தகர்ப்பதற்கான ஒரு கவனமான முயற்சியாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

தேசிய மறு கட்டமைப்பிற்கான ஒரு முக்கியக் கருவியாக அம்பேத்கரின் சிந்தனைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் முத்திரை தாங்கி நிற்கிறது. எதிர்கால அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் ஓர் ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி அம்பேத்கர் மட்டுமே பேசினார்: ‘‘நமக்கு இருக்கும் சவால் எல்லாம் தற்போதைய வேறுபாடுகள் நிறைந்த மக்கள் கூட்டத்தை எவ்வாறு (அனைவரின் ஒத்துழைப்புடன்) ஒரு முடிவு எடுக்க வைத்து நம்மை ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும் பாதையில் அணிவகுப்பது என்பதாகும். நமது கவலையெல்லாம் முடிவைப் பற்றியது அல்ல; நமது கவலை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றித்தான்.'' அனைத்தும் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டமைக்க அம்பேத்கர் ஜனநாயகத்தை ஓர் அரசியல் ஏற்பாடாகப் பார்க்கவில்லை. மாறாக, அதை அவர் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான ஒரு வழி முறையாகவே கருதினார். சகோதரத்துவம் என்பது ஜனநாயகத்தின் வேர் என்றும் சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் மற்றும் சுதந்திரம் போன்ற மற்ற கொள்கைகள் மீது மட்டும் அமைந்த ஜனநாயகம் நீடித்து நிற்காது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஜனநாயகத்தின் அடித்தளங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் மீது சமூகத்தை கட்டமைக்க வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமத்துவத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்வதற்கான விதிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. பிரதிநிதித்துவம் என்பது இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு அனைத்தும் நிறைந்த ஒரு ஜனநாயக சமூகத்தை உருவாக்க பாதை வகுக்கப்பட்டது. பார்ப்பனிய சமூகப் படி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை – பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் – என்ற மூன்று முதன்மைக் கூறுகள் உள்ளடங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற வகைப்பாட்டை அம்பேத்கர் உருவாக்கினார். புதிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இந்நாட்டின் சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கு சமூக நீதியைப் பெற்றுத்தரும் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.

பார்ப்பனியத்தின் அதிகார முற்றுரிமையை வகுப்புவாரிபிரதிநிதித்துவத்தின் மூலம் ஒழித்தல் என்பது திட்டம். சாதி முறையை ஒழிக்க பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற மூன்று பிரிவுகளையும் ஒரே தளத்தில் கொண்டுவந்து – ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியாக பிரதிநிதித்துவத்தை வழங்காமல் – சாதிகளின் தொகுப்பாக உள்ள மேற்படி பிரிவுகளுக்கு – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற வகையின் கீழ் அளிப்பது என்பது கொள்கை.

அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் ஒரு மக்கள் நல அரசை உருவாக்குவதையும் சமூக ஒழுங்கை கட்டமைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்த கொள்கைகளை முக்கிய சாரம்சமாகக் கொண்டுள்ள பிரிவு 38 – ‘‘சமூக மாற்றத்திற்கு அரசைப் பொறுப்பாக்கி அரசு மக்கள் நலனை மேம்படுத்த வேண்டி நீதி, சமூக, அரசியல், பொருளாதார உரிமைகள் அனைத்து மக்களுக்கும் எல்லா நிலைகளிலும் கிடைக்கும் படியான ஒரு சமூக ஒழுங்கை சிரமேற்கொண்டு உருவாக்கி, அதை எவ்வளவு திறம்பட முடியுமோ அவ்வளவு திறம்படப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது'' எனக் கூறுகிறது.

அம்பேத்கர்தான் முதன் முதலில் பார்ப்பனிய சாதி முறையை பால் பாகுபாடுகளுடன்(அதிகாரத்தில் ஆண் பெண் வேறுபாடு) தொடர்புபடுத்தினார். சாதியை முற்றிலும் ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்த பார்ப்பனிய சக்திகள் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் ஆண் பெண் என்ற பால் பாகுபாடுகள் மறைந்து சமநிலையை அடையும் அதே வேளையில் சாதி பாகுபாடுகளும் ஒழியும் என்று கருதி ஆண் – பெண் சமநிலையை கொண்டுவர ஏதுவாக இந்து சட்ட வரைவை உருவாக்க அரும்பாடுபட்டார். ‘பண்டிதர்களின் அரசு' இந்து சட்ட வரைவையும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் கண்டறிவதற்கான ஆணையத்தையும் அனுமதிக்காத பொழுது அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை துறந்தார்.

 சமூகம் ஒன்றாக இருக்க அது சட்டத்தின் அனுமதியையோ தார்மிக ஒழுக்கத்தையோ கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது நிச்சயமாக சிதறி விடும் என்றார் அம்பேத்கர். ஜனநாயக சமூகத்தை ஏற்படுத்துவதில் இன்றியமையாததாக இருக்கும் சமூக மற்றும் தார்மீக நெறிகளை வளர்த்தெடுக்கத் தேவையான மூலங்களை அம்பேத்கர் புத்த மதத்தில் கண்டார். பவுத்தத்தின் முக்கியக் கூறு வெறுமனே துன்பங்களை அகற்றுவது மட்டுமே அல்ல.இது எதிர்மறையானது மட்டும் அல்ல; இது அதன் சிறு கூறு மட்டுமே. மாறாக, அது தவறில்லாத நிலையை (கஞுணூஞூஞுஞிtடிணிண) அடைவதாகும். இத்தகு சிந்தனையே நேர்மறையானதும் அடிப்படையானதுமாகும். ஜனநாயக சமூகத்தை உருவாக்க அவர் இந்தியாவை ‘பிரபுத்த பாரத்' ஆக உருவாக்கும் தனது செயல் திட்டத்தை வெளியிட்டார். அவர் ஒழுக்கம் என்பது நடப்பதனைத்தையும் வெறுமனே வேடிக்கை பார்த்தல் அல்ல என்றும் அது நடந்த பின்பு வினையாற்றாமல் – அதற்கு முன்னரே சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதாகும் என வலியுறுத்தினார். ஜனநாயகத்தை காப்பது என்பது அதன் உண்மையான பொருளில் புத்த மதத்தினர் ஒவ்வொருவரின் கடமையாகிறது.

அரசியல் சட்டம் எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த பின்பும் ஜனநாயகப் பண்புகள் இந்திய குடிமக்களிடம் உறுதி பெறாதது கெடுவாய்ப்பானது ஆகும். கல்வியறிவின்மை, வறுமை, அதிகாரமின்மை போன்றவற்றால் அவர்களால் ஜனநாயகப் பணிகளை செய்ய முடிவதில்லை. சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய பெரும்பான்மை தொல்குடி மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15 மற்றும் 16 இல் வழங்கப்பட்ட உரிமைகள் தகுதி என்ற போலியான வாதத்தின் பெயரால் மறுக்கப்படுகிறது. இந்த சம வாய்ப்புக்கான சட்டம் சமூகத்தில் அடிக்கடி உணர்ச்சிகர சிக்கலை ஏற்படுத்துகிறது. கொள்கையையும் வழிமுறையையும் குழப்பிக்கொள்வது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சிக்கல்.

பிரதிநிதித்துவம் வழங்குவதும் நேர்மையான மற்றும் சம வாய்ப்பு வழங்குவதும் கொள்கை. இடஒதுக்கீட்டு முறை என்பது அதற்கான ஒரு வழிமுறை. சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களை ஒரே காரணியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் (பட்டியல் சாதியினர் தீண்டாமையால்; பட்டியல் பழங்குடியினர் தனிமைப்படுத்தப்படுவதால்; இதர பிற்படுத்தப்பட்டவர்கள் – சமூகத்திலும் கல்வியிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால்) கீழ் ஒன்றுபடுத்துவது என்ற அம்பேத்கரின் கொள்கை – சாதி முறையால் பாதிக்கப்பட்ட அந்த மக்களாலேயே – கண்டுகொள்ளப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் பார்ப்பனிய கொள்கையான ஒதுக்குதல் கொள்கையால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களை இன்னும் பார்ப்பனியம்தான் வழிநடத்துகிறது.

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்கள் – பொது கண்காணிப்பிற்கு திறந்து விடப்பட்ட பிறகு – மேலடுக்கில் உள்ள சாதிகள் பண்பாட்டு முதலீட்டை பொருளாதார முதலீடாக மாற்றம் செய்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக உருவாயின. இதன் மூலம் பொருளாதாரத்தில் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியது. பெருவாரியான நிலங்கள் தனியாருக்கு அளிக்கப்படுகின்றன. லாப நோக்கமுள்ள நிறுவனங்களுக்கு கட்டுக்கடங்காத வாய்ப்புகள், சட்டத்திற்கு தவறாக பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டதால் உருவான கல்வி மோசடிக்குழுக்கள், தடுக்கப்படாத மத அடிப்படைவாதம் போன்ற அனைத்தும் சேர்ந்து அம்பேத்கர் இரட்டை எதிரிகளாக அடையாளப்படுத்திய பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் இரண்டையும் வலுப்படுத்தின.

வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதாரத்தின் அடிப்படைச் சக்கரங்கள் சமூகத்தின் அனைத்து முதலீடுகளும் பண்பாட்டு முதலீடு உட்பட தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. வளர்ச்சி மட்டுமே இந்தியாவின் குறிக்கோளாக இருந்தால் போதாது. அது சமூகம் விரும்பத்தகுந்த விதத்தில் இருக்க வேண்டும். தாராளமயம் என்ற தத்துவத்தின் மீது அமைந்த உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றில் மட்டுமல்லாது கல்வி, அறிவு ஆகிய துறைகளிலும் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. அம்பேத்கர் இச்சூழ்நிலையை முன்கூட்டியே எச்சரித்தார்.

‘‘கவனமும் உறுதியும் மிக்க ஒரு சிறுபான்மைக் கூட்டம் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளையே – நிலையில்லாத அறியாமை மிக்க பெரும்பான்மை மக்களுக்கு எதிராக – உருவாக்கிக் கொண்டிருக்கின்றன' என்ற பாபாசாகேப்பின் எச்சரிக்கைக்கு நாம் செவிசாய்க்காததால் உலகமயமாக்கலுக்கு பின்னரும்கூட இந்த அவலநிலை தொடர்கிறது.

அதிகாரமும் அறிவும் பெற்ற வகுப்புகள் காந்தியை அமைதி மற்றும் அகிம்சைக்கான தேவதூதராக உயர்த்திக் காட்டுவதிலும் அம்பேத்கரை ஓரம் கட்டுவதிலும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. வகுப்புவாரி தீர்ப்பின் பொழுது மேற்கத்திய ஊடகங்கள் ஒருபுறம் பார்ப்பனிய முறையின் சாராம்சத்தை முழுவதும் அறியாததாலும் பார்ப்பனியப் பிரச்சாரத்தின் தாக்கத்தாலும் காந்தியின் நாடகங்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டன. அம்பேத்கர் இதை முற்றிலும் உணர்ந்திருந்ததால் தன்னால் இயன்றபொழுதெல்லாம் உண்மையை எடுத்துரைத்து வந்தார்.

வெறும் சாதிகளின் உறுப்பினர்களாக உள்ள மக்களை ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவையை உணர்ந்தவர்களாக மட்டுமல்லாது – ஜனநாயகத்தை செயல்படுத்துபவர்களாகவும் – சமத்துவம் பெற்ற பொறுப்பான குடிமக்களாகவும் – மாற்றுவதுதான் அம்பேத்கர் நமக்கு அளித்த மிகப்பெரிய பொறுப்பாகும். மனித உறவுகளை நிர்வகிக்கும் கொள்கையாக ஜனநாயகம் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிடாமல் காப்பதுதான் நம் மீது உள்ள பெரும் சுமை. ‘ஜனநாயகம் மடியும் நேரமே உங்கள் அழிவிற்கான நேரம்' என அம்பேத்கர் எச்சரித்தார்.’’தீமைகள் புதிய நாகரிகத்தினால் உருவான எந்திரங்களால் வருபவை அல்ல. தனியார் சொத்தையும் சுய லாபத் தேடலையும் புனிதமானவையாக மாற்றிய சமூகத்தை நிர்வகிக்கும் இந்த தவறான கொள்கைகளால் வருபவை. நாம் இச்சமூகத்தை ஜனநாயக அடிப்படையில் மாற்றியமைக்காதவரை எந்த மாற்றத்தையும் காண முடியாது'' என்றார் அம்பேத்கர்.

 நீங்கள் இந்த முறையைத் தகர்க்க விரும்பினால், அதை கடும் நெருக்கடிக்கு தொடர்ந்து உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். டாக்டர் அம்பேத்கரின் ஜனநாயக இயக்கத்தால் பலனடைந்த, கல்வி அறிவு பெற்றவர்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது. கல்வியும் சுய நலமும் மக்களுக்கு துன்பத்தை உண்டாக்கும் வேறுபாடுகளையே தருகின்றன என்பது நமது வேதனை நிறைந்த அனுபவம் ஆகும். எனவே பார்ப்பனிய சமூக முறையினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சமூகக் கடமையுணர்வை உருவாக்கும் ஒரு தேசிய இயக்கம் என்பது தேவையாகிறது. இதைத்தான் அம்பேத்கர் ‘கருத்தியல் தேர்' (இச்ணூச்திச்ண)முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்றார். எனவே ஒரு நிலையான, உறுதிமிக்க, கண்காணிப்பு மிகுந்த சமூகத்தைக் கட்டமைக்க பார்ப்பனிய சமூகத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சகோதரத்துவ உணர்வை உருவாக்க வேண்டும்.

எனவே இச்சமூகத்திற்கு, மிக முக்கியமாக இதில் கல்வி அறிவு பெற்றவர்களுக்கு சமூக, ஒழுக்க விழிப்புணர்வை உருவாக்கவும் மனித நேயம் மிக்க சமூகத்தை கட்டமைப்பதற்கான பொறுப்பு உள்ளது.ஒரு நீதியான சமூகச் சூழலை உருவாக்குவதன் மூலமே தேசிய நலனை தக்க வைக்க முடியும் என்ற சூழல் இந்தியாவில் இருப்பதை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். ஜனநாயக ஏற்பாட்டை நிறுவுவதில் பெரிய தடைக்கற்கள் மனக்கண் முன் தோன்றினாலும் அம்பேத்கர் ஒரு ஒற்றுமையான சமூகத்திற்கான நம்பிக்கையுடன் இருந்தார். அவரது நம்பிக்கை பார்ப்பனியத்தைப் பற்றிய நமது புரிதலையும் அதற்கெதிரான நம் செயலையுமே சார்ந்திருக்கிறது. இறையாண்மை மிக்க சுதந்திர இந்தியாவிற்கான மக்களின் எதிர்பார்ப்பிற்கு பார்ப்பனியம் என்ற வாழ்க்கை மற்றும் சமூகத் தத்துவம் ஒரு பேரழிவாகும் என்று எச்சரித்தார். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வளர்த்தெடுப்பதன் மூலமே பெற்ற சுதந்திரத்தை தக்க வைக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். பொது நலனுக்காகவும் சர்வதேச மனித நலனுக்காகவும் உலகம் மறுகட்டமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அம்பேத்கரியம் அதற்கான வழியை காட்டுகிறது. அது ஒரு புதிய உலக விதியைக் கட்டமைக்கும் பார்வையை கொண்டிருக்கிறது.

– முற்றும்

தமிழில்: செ. சரவணன்

Pin It