ஜி.என். சாய்பாபா – தில்லி பல்கலைக்கழகத்தின் ராம்லால் ஆனந் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஆந்திராவில் உள்ள ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சாய்பாபாவுக்கு அய்ந்து வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் இடுப்பிற்கு கீழ்ப்பகுதி இயங்காமல் போய்விட்டது. கல்வி உதவித்தொகை மூலம் படித்து முனைவர் பட்டம் பெற்ற இவர், ‘பசுமை வேட்டை' என்ற பெயரில் சட்டீஸ்கர், மகாராட்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் நக்சலைட்டுகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான மத்திய அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து எழுதியும் போராடியும் வருகிறார். இதனால் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 9.5.2014 அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த – 90 சதவிகிதம் சுயமாக இயங்க இயலாத – இப்பேராசிரியரை மகாராட்டிர காவல் துறை ‘கடத்தி' பிறகு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று கைது செய்ததாக அறிவித்தது. கடந்த 14 மாதங்களாக நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருதய நோயாளியான சாய்பாபாவுக்கு மருத்துவ வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. சிறையில் இவருடைய உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரவலாக எழுந்த கண்டனங்களுக்குப் பிறகு 3.7.2015 அன்று மும்பை உயர் நீதிமன்றம் இவரை மூன்று மாதப் பிணையில் விடுவித்துள்ளது. நாட்டின் கொடூரமான சிறை என்றழைக்கப்படும் நாக்பூர் ‘அண்டா சிறை'யில் தான் சந்தித்த கொடுமைகளை சாய்பாபா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

நக்சலைட்டுகளை குறி வைத்து நடத்தப்படும் பசுமை வேட்டை நடவடிக்கையை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த நிலையில், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?

Saibabaநான் அப்படி எதிர்பார்க்கவில்லை. பசுமை வேட்டையை எதிர்க்கும் ஓர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் இருந்ததால், என் நண்பர்கள் இவ்வாறு நடக்கக்கூடும் என்று எண்ணினர். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக, இது போன்ற பரப்புரைகளில் நான் ஈடுபட்டு வந்திருக்கிறேன். சில ஆர்ப்பாட்டங்களில் நான் பங்கேற்றபோது சாதாரண குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் கைது செய்யப்படவில்லை.பின்னாட்களில் அந்த வழக்குகளும் கூட கைவிடப்பட்டன.

காவல் துறையினர் மட்டும் கொடூரமாக நடந்து கொண்டார்களா? அல்லது சிறை அதிகாரிகளும் அப்படித்தான் நடந்து கொண்டார்களா?

இரண்டு பேருமே அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால் நான் கழிவறைக்குப் போக முடியாத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கினார்கள். எனவே முதல் 72 மணிநேரத்திற்கு நான் சாப்பிட மறுத்துவிட்டேன். என்னை சிறையில் தள்ளியபோது – என்னால் சுயமாக எதையும் செய்ய முடியாத அளவுக்கு இயலாதவனாக நான் இருக்கும் நிலையில் – அவர்கள் எனக்கு எவ்வித உதவியையும் செய்யவில்லை. எனவே மீண்டும் 72 மணி நேரத்திற்கு நான் சாப்பிட மறுத்துவிட்டேன். சிறையில் முதல் இருபது நாட்களுக்கு நான் யாரிடமும் பேச அனுமதிக்கப் படவில்லை. ஆனால் மற்ற சிறைவாசிகள் தங்களால் இயன்ற உதவிகளை எனக்கு செய்தனர். என்னை சிறைப்படுத்தி இருந்த ‘அண்டா சிறை'யில் (முட்டை வடிவச் சிறை) பழங்குடியின இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். மாலையில் அவர்களை சிறையில் அடைக்கும் நேரம் வரும்போது, எனக்கு உதவி செய்ய தங்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளே செல்ல மறுத்தனர். சிறைக்கு வெளியே நான் பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடினேன்; சிறைக்கு உள்ளே அவர்கள் என்னுடைய உரிமைக்காகப் போராடினார்கள்.

சிறையதிகாரிகள் உங்களை மரியாதையோடு நடத்தினார்களா?

அவர்கள் மரியாதையுடன் பேசினார்கள். ஆனால், என்னை கொடூரமான அண்டா சிறையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும்; 24 மணிநேரமும் எனக்கு உதவியாளரை ஏற்பாடு செய்து தர வேண்டும்; என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் வரும்போது எனக்கு குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று அரசின் வெவ்வேறு துறைகளில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் வந்து கொண்டே இருந்தது.

நீதிமன்றத்தின் ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நீதிமன்றத்திடம் தெரிவித்திருப்பீர்கள் அல்லவா?

பாதுகாப்பு காரணங்களைச் சொல்லியே என்னை அவர்கள் ஒருபோதும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. ‘வீடியோ கான்பரன்ஸ்' முறையை மட்டுமே அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறைச்சூழலில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த முடியாத நிலையில் ‘வீடியோ கான்பரன்ஸ்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் என்னால் செல்ல இயலவில்லை. அவர்கள் என்னை தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.ஒவ்வொரு நிலையிலும் இயலாதோருக்கான சட்ட விதிகள் மீறப்பட்டன.இது நீதிபதிக்குத் தெரியும். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என விண்ணப்பித்தேன். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. ஒரு நீதிபதி கேட்டார்: ‘‘நான் ஆணை பிறப்பித்தால் கூட அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் நீதிமன்றம் இரண்டாவது மாடியில்தான் செயல்படுகிறது. இங்கு நீங்கள் எப்படி வரமுடியும்?'' இயலாதோர் சட்டப்படி எல்லாரும் பயன்படுத்தக்கூடிய தளத்தில்தான் நீங்கள் நீதிமன்றத்தை வைத்திருக்க வேண்டும் என்று கூறினேன். சிறை அதிகாரிகளை நீதிபதிகள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

மருத்துவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்களா?

தொடக்கத்தில் தவறான அறிக்கைகளைத் தரும்படி அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டது. இருப்பினும் சிலர் அதை எதிர்த்து மறுஆய்விற்கு ஆணையிட்டனர். எனக்கு நான்கு முறை எம்.ஆர்.அய்.ஸ்கேன் செய்யப்பட்டது. எனக்கு 10 ஆண்டுகளாக இருதயக் கோளாறு இருக்கிறது. ஆனால் முதல் அறிக்கை என்னுடைய இதயம் சிறப்பாக செயல்படுவதாகக் கூறியது. சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் விசாரணைக் கைதிகள் சிறையைவிட்டு வெளியே செல்லும்பொழுது – இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள் உட்பட – எட்டு காவலர்கள் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது என்னுடன் ஆயுதம் தாங்கிய காவலர்கள் (அதில் சிலரிடம் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் இருந்தன) 20 பேர் இருந்தனர். மருத்துவர் என்னைப் பரிசோதனை செய்யும் அறையில் இவர்கள் அனைவரும் சூழ்ந்து நின்று கொண்டு ஒரு பயங்கரமான சூழலை ஏற்படுத்துவார்கள். சுயமாக என்னால் நிற்கக்கூட முடியாத நிலையில் என்னால் எப்படி தப்பித்து ஓட முடியும் என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. ஆனால் அவர்களும் மிரட்டப்பட்டனர். இப்படியான சூழலில் எப்படி எனக்கு சிகிச்சை அளித்திருக்க முடியும்? ஒரு தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட அந்த 8 நாட்களைத் தவிர, எனக்கு வேறெந்த சிகிச்சையும் தரப்படவில்லை.

இவையெல்லாம் உங்களை நம்பிக்கை இழக்கச் செய்ததா?

இல்லை.சிறை அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் உள்ளேயே போராடினோம். நாக்பூர் மத்திய சிறையில் இருக்கும் சாதாரண சிறைவாசிகளை ஒருங்கிணைத்து அங்கு நாள்தோறும் நடத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இங்கு அவர்கள் அடிக்கப்படுகிறார்கள்; அவர்களுடைய கை கால்கள் உடைக்கப்படுகின்றன. பழங்குடியினரின் செயல்கள் சிறை ஒழுக்கத்தை மீறுபவையாகப் பார்க்கப்படுகின்றன. சிறை அதிகாரிகள் வரும்போது தலைவணங்கி தங்கள் செருப்புகளை கழற்றிவிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களெல்லாம் சில பழங்குடியினருக்கு தெரியாது. அவர்களுடைய பண்பாட்டில் இத்தகைய நிலப்பிரபுத்துவ விதிகள் எல்லாம் இல்லை. ஆனால் பழங்குடியினர் ஆணவத்தோடு இருப்பதாக சிறையதிகாரிகள் கருதுகிறார்கள். மற்றவர்கள் சிறையதிகாரிகளுக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பைத் தெரிவித்தால் கூட அடிக்கப்படுகிறார்கள்; அவர்கள் முற்றிலும் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். காலை முதல் மாலை வரை கொதிக்கும் வெயிலில் நிற்க வைக்கப்படுகிறார்கள். அவர்களின் தலையை மொட்டை அடித்து தலைகீழாக நிற்க வைக்கப்படுகிறார்கள். சிறு தண்டனையிலிருந்து நிலப்பிரபுத்துவ துன்புறுத்தல்கள் வரை அங்கு எல்லாவிதமான கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

மகாராட்டிராவில்தான் அதிக எண்ணிக்கையில் காவல் மரணங்கள் நிகழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓராண்டு நான் சிறையில் இருந்த போது 98 சிறைவாசிகள் இறந்து போயினர். அதில் 5 பேர் நாக்பூர் மத்திய சிறையில் என் கண்முன்னாலேயே இறந்து போயினர். அதில் மூன்று பேருக்கு இருதயக் கோளாறு இருந்தது. அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.ஆனால் அவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. மற்ற இருவர் துன்புறுத்தல்களை இனிமேலும் தாங்க முடியாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொண்டனர். பெருமளவிலான சிறைவாசிகள் நீண்ட நாட்கள் சிறையில் இருப்பதால் மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அவர்கள் மனநலப் பிரிவில் வைக்கப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடிக்கப்படுகின்றனர். மார்ச் 30 அன்று நடந்த சிறை உடைப்பு நிகழ்வுக்குப் பிறகு (நாக்பூர் சிறையிலிருந்து 5 குற்றவாளிகள் தப்பினர்) எல்லா சிறைவாசிகளும் இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்பட்டனர். இவர்களுடைய காயங்களை சிறை மருத்துவர்கள் பதிவு செய்யவில்லை. இதில் 80 பேர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார்கள். ஆனால் இதை நீதிபதிகளும் கண்டுகொள்ளவில்லை. சிறையைப் பார்வையிட வரும் உள்துறை செயலர், அய்.ஜி., டி.அய்.ஜி.தொடங்கி சிறைக்காவலர் வரை கைவிலங்கிடுதல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக நான் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

சிறை என்பது சீர்திருத்துவதற்கான ஓர் இடமில்லையா?

அங்கு அப்படியான ஓர் உணர்வு அறவே இல்லை. அங்கு சிறைவாசிகளை மிரட்டியும் இழிவுபடுத்தியும் அவர்கள் சிறைக்குள் இருக்கிறார்கள் என்பதை உணர வைப்பதற்கான பயிற்சி பெற்றவர்களாக மட்டுமே நடந்து கொள்கிறார்கள். சிறைவாசிகள் மாண்புடன் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் விடுதலையாவதற்கு முன்னால் அங்கு பணியிலமர்த்தப்பட்ட காவலர், சிறைவாசிகளை திருத்துவது குறித்து பேசுவாரே தவிர, அவரும் அவர்களை அடிக்காமலிருப்பதில்லை. அவரிடம் நான் இதைப்பற்றி எடுத்துச் சொன்னபோது அவர், மகாராட்டிராவில் இருக்கக்கூடிய சிறைக் கையேட்டில், தேவைப்பட்டால் சாதாரண அடியிலிருந்து சாட்டையால் அடிப்பது வரை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

நீங்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டீர்களா?

நீங்கள் நீதிமன்றத்தைத் தவிர எதன் மீதும் நம்பிக்கை வைக்க முடியாதே! நீங்கள் நீதிமன்றத்தை நம்பவில்லையெனில் உங்களை இருள் சூழ்ந்துவிடும். நீதிமன்றம் என்றாவது ஒருநாள் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அதுவரை நீதிக்காக காத்திருக்க வேண்டியதுதான். நீதிமன்றங்கள் இல்லையெனில் சிறையை விட்டு வெளியே வர வாய்ப்பே இல்லை. உண்மை என்னவெனில் 99 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீது தவறான வழக்குகளே உள்ளன. அவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுகிறார்கள். அமர்வு நீதிபதிகள் சில சாட்சிகளை விசாரிப்பதன் மூலம் அவை பொய்யானவை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

ஒட்டுமொத்த சிறை அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சமூகத்தின் குறுகிய வடிவ மாதிரியாகத்தான் சிறை இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள அமைப்பு ரீதியான வன்முறை, நிலப்பிரபுத்துவ உறவுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவப் படுத்தப்படாத பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் சிறையில் அதிகளவில் உள்ளனர். ஏற்கனவே வாய்ப்பு வசதிகளற்ற சமூகங்களிலிருந்து வரக்கூடிய இச்சிறைவாசிகளுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லாததால் மிக எளிதில் இவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்ள முடிகிறது.

சோதனையான இத்தருணத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக நீங்கள் வருத்தப்படவில்லையா?

இல்லவே இல்லை.ஜனநாயக உரிமைகளுக்காக இன்னும் தீவிரமாகப் போராட வேண்டும் என்ற உறுதியையே இந்த வேதனைகள் உணர்த்தின. நான் என்ன செய்தேன், என்ன செய்யத் தவறினேன் என்றும் என் தவறுகளை திருத்திக் கொள்ளவும் இரவு பகலாக சிந்தித்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக நான் எப்போதும் வருத்தப்படப் போவதில்லை; ஏனெனில் அவை புனையப்பட்ட குற்றச்சாட்டுகளே. குற்றத்திற்காக வருந்துவது என்னுடைய உரிமைகளை மட்டும் அல்ல; என் மனசாட்சியையும் மீறும் செயலாகும். நான் ஒரு போராளியாக முப்பது ஆண்டுகளாக செயல்பட்டது வீணாகிவிடும்.ஒரு கணம் கூட நான் விரக்தியடையவில்லை. மாறாக, நான் அங்கு கண்ட அநீதிகளை எப்படி வெளியே கொண்டு வந்து எதிர்ப்பது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இது என்னுடைய மனவலிமையால் அல்ல; என்னைச் சுற்றி இருக்கும் பழங்குடியினரால். அவர்கள் ஏன் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதே தெரியாத நிலையிலும் அவர்கள் எவ்வளவு உற்சாகமாக கற்றுக்கொண்டார்கள்! பழங்குடியினர் செய்தித்தாள்களை படிக்கும்போதும் கணக்கு மற்றும் புவியியலைப் புரிந்துகொள்ளும்போதும் அவர்கள் பெற்ற உற்சாகம், நம்பிக்கையற்ற அந்த சூழலிலும் ஓர் உயிரோட்டத்தை ஏற்படுத்தித் தந்தது. நான் விடுதலை ஆனபொழுது அவர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர் – நான் வெளியே போகிறேன் என்பதற்காக அல்ல; அவர்களின் மகிழ்ச்சி போகிறதே என்பதற்காக! 

நேர்காணல்: ஜோதி புன்வானி

தமிழில்: புலேந்திரன், நன்றி: rediff.com

Pin It