மிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால், புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில், இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு பவுத்த விகார்களை அப்பீடங்களில் ஏன் நிறுவக்கூடாது? இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடியினர் கோயில்களைக் கட்டக்கூடாதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், கொடுமையான ஒடுக்கு முறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது – தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?

ஒரு நாட்டு மக்களுடைய வரலாற்றின் மீது சில குறிப்பிட்ட நிகழ்வுகள், ஒரு நிலையான தழும்பை ஏற்படுத்தி விடுகின்றன. மத்திய காலப் பகுதியைச் சேர்ந்த ஒரு பழமையான மசூதி, டிசம்பர் 6, 1992 அன்று, ஒரு காட்டுத்தனமான கும்பலால் தகர்க்கப்பட்டதுதான், எனது தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் புனிதமான ஒன்றை இழந்த ஒரு தருணமாக இருக்கிறது. வெற்றி ஆரவாரம் கொண்ட இளைஞர்களால் ஆன ஒரு பெருங்கூட்டம், வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மசூதியின் சுவர்களின் மீது ஏறி, அதன் கோபுரங்கள் மீது காவிக் கொடியை நட்டுவித்ததன் பிறகு, அதன் மூன்று "டூம்'களும் சரிந்து விழுந்தன. சில ஆண்டுகளுக்குப்பிறகு இந்நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் எண்ணத்தைக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களால் உத்வேகம் அளிக்கப்பட்டவர்கள் இவ்விளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கால்பந்து அரங்கத்தைவிடப் பெரியதாய் இல்லாத, தூசு படிந்த சிறு நகரமாகிய அயோத்தியில் உள்ள ஒரு துண்டு நிலத்தின் "தலைவிதியே', காலனி ஆட்சிக்குப் பிந்தைய இந்தியாவின் குறுகிய காலத்தில், பல பத்தாண்டுகளுக்கும் மேலாக, தேசிய அரசியலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அரசுகள் எழுந்தன, வீழ்ந்தன; தெருக்களில் அவ்வப்போது ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது; ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டன, வீடுகள் இடிக்கப்பட்டன – இவையனைத்தும் ஒரு தனிப்பட்ட கசப்பான நிலத்தகராறை ஒட்டியே நிகழ்ந்தன. முதலாவது மொகலாய அரசரான பாபரால் 1527 ஆம் ஆண்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை இருக்க அனுமதிப்பதா அல்லது அதற்குப் பதிலாக அதே இடத் தில் பெரிய கோயில் ஒன்றைக் கட்டுவதா என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. “ஒரு மசூதியைக் கட்டுவதற்காக, அந்தஇடத்தில் இருந்த ராமன் கோயிலை பாபர் இடித்து விட்டார்'' என்றும், “அம்மசூதியை இடித்து விட்டு அதற்குப் பதில் ஒரு பெரிய ராமன் கோயிலை கட்டுவது தேசியப் பெருமைக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது'' என்றும் வலதுசாரி இந்து தேசியவாதக் கருத் தின் ஒரு பெரும் பிரிவு உரிமை கோரியது.

மிக தொடக்கக் காலத்திலேயே, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதே விதிகள் வகுக்கப்பட்டுவிட்ட ஒரு போருக்கு உயிரூட்ட, பாபர் மசூதி ஒரு வலிமையான குறியீடாகப் பரிணாமம் பெற்று, இந்து தேசியவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டது. பகை என்பது, ராமனைப் பின்பற்றுபவர்களுக்கும், அல்லாவைப் பின்பற்று பவர்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய இடம் குறித்த உரிமை கோரலால் எழுந்தது அல்ல. தனது குடிமக்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதைப் பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கும் நாடாக இது இருக்க வேண்டுமா? சட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகளும், பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்கப்பட்ட நாடாக இந்நாடு இருக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக, பண்பாட்டு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கீழானவர்களாக நிரந்தரமாக இருக்க வேண்டுமா என சுதந்திர இந்தியாவின் தன்மை குறித்து எழுந்த வழக்குதான் அது.

வன்முறை, பிரிவினை ஆகியவற்றின் வேதனைகளுக்கு இடையில்தான் இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது. பிரிவினைக் கலவரங்களின்போது பத்து லட்சம் பேர் உயிரிழந்தனர்; ஒரு கோடி மக்கள் தங்களது மூதாதையரின் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இந்தியாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலைவரான டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்ட மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாகப் புதிதாக சுதந்திரம் அடைந்த இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு வாக்களித்தது. பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்களுக்கு நியாயமான ஏற்பாட்டைச் செய்வது குறித்துதான் காந்தியின் கடைசிப் போராட்டம் இருந்தது. இது, சில அதிதீவிர இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எரிச்சலூட்டியது. காந்தியின் உயிரை அவர்கள் பறித்து விட்டனர்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்த மக்கள், காந்தியின் படுகொலையால் குலைநடுங்கிப் போயினர். அந்த நடுக்கம் பதினைந்து ஆண்டுகளுக்கு வகுப்பு ஒற்றுமை உடையாமல் பாதுகாக்கப் போதுமானதாக இருந்தது. காந்தியின் படுகொலையில் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் அணியான "ஜனசங்'கும் அந்த காலம் முழுமைக்கும் – இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் விளிம்பிலேயே கிடக்க வேண்டியிருந்தது. 1970களின் மய்யப் பகுதியில் நடைபெற்ற நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டபோது தான், அரசியல் மதிப்பில் ஒரு சிறிய அளவை அது திரும்பவும் பெற முடிந்தது. 1984இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட, பாரதிய ஜனதா கட்சி வெறும் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. பெரும் பான்மையான இந்து உணர்வைத் திரட்டுவதற்கு உகந்த ஒரு காரணத்தையும், குறியீட்டையும் அது தேடிக் கொண்டிருந்தது. பாபர்மசூதி பிரச்சனைதான் அதற்குப் பொருத்தமானது என்று அது அடையாளம் கண்டது.

1949 இல் ராமன் சிலைகள் திருட்டுத் தனமாக பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டன. மசூதிக்குள் இருந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நேருவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய, அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த கே.கே. நாயர் மறுத்து விட்டார் (பின்னாட்களில் நாயர் "ஜனசங்'கில் இணைந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்). அங்கு முஸ்லிம்களின் வழிபாடு தடை செய்யப்பட்டது. ஆனால், இந்துக்களின் வழிபாட்டுக்கு வரம்புகளுடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டன. 1986 இல் வெளியிட்ட ஒரு தலைப்பட்சமான நீதிமன்றத் தீர்ப்பினாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு அதற்கு இணக்கமாக இருந்ததாலும், கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, இந்துக்களின் வழிபாட்டுக்கு முழு உரிமையும் வழங்கப்படுவதற்கு வழிகோலப்பட்டது.

அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், செங்கற்களைச் சேகரித்து அனுப்பும் ராம்சிலா நிகழ்வை, நாடு தழுவிய அளவில் 1989இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. இப்பிரச்சாரத்திற்கான வெகுமக்களின் ஆதரவு அலை மிகப் பெரிய அளவில் இருந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு சிறு நகரமான கார்கோனில் அப்போது நான் மாவட்ட நீதிபதியாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தேன். தீய உள்நோக்கம் கொண்ட இப்பிரச்சாரம் வகுப்பு வாதத்தை எவ்வளவு மோசமாகப் பெருக்கியது என்பதை நான் நேரடியாகப் பார்த்தேன். பல நகரங்களில், மக்கள் நன்கொடையாக அளித்த செங்கற்களோடு திரண்ட வன்முறைக் கும்பல், முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடியான முழக்கங்களை எழுப்பிக் கூச்சலிட்டது, அதனால் கலவரம் வெடித்தது, உயிர்கள் பறிக்கப்பட்டன. வீடுகள், குடியிருப்புகள், மசூதிகள் காலியாக்கப்பட்டன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 108 நகரங்கள் மற்றும் மாநகரங்களின் அந்த இருண்ட நாட்களில், ஊரடங்கு நடைமுறையில் இருந்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, 1990 செப்டம்பரில் நடத்திய ரதயாத்திரையின் மூலம் வகுப்புவாதப் பிரிவினை மேலும் தீவிரம் அடைந்தது. சோமநாதபுரம் (1026 இல் படையெடுப்பாளர் கஜினி முகம்மதுவால் கோயில் இடிக்கப்பட்டது இந்நகரத்தில்தான் என்பதால், மதரீதியில் மிகவும் உணர்வைத் தூண்டக் கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது) தொடங்கி அயோத்தி வரை, ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணப்பட்டபோது – அதன் வழியெங்கும் மதவெறியால் சிந்தப்பட்ட ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் குடிமக்களின் நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்தியது.

அந்த நாட்களில் பா.ஜ.க. எழுப்பிய முழக்கங்கள் திகைப்படைய வைப்பவையாக இருந்தன. முஸ்லிம்கள் குறித்து வைக்கப்பட்ட முழக்கம் இது : “துலுக்கனுக்கு இருப்பது ரெண்டு இடம்தான். எது வேண்டும் உனக்கு? பாகிஸ்தானா? கபர்ஸ்தானா?'' (கல்லறைத் தோட்டம்) முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தில் இறங்க போலிஸ்காரர்களுக்கு வெளிப்படையான அழைப்புகள் விடப்பட்டன. “இந்துவும் இந்துவும் அண்ணன் தம்பிகள்; இடையில் எங்கேடா வந்தது சீருடை?'' மசூதி இருக்கும் அதே இடத்தில்தான் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற உறுதிமொழிதான் அந்த இயக்கத்தின் பொது கீதமாக இருந்தது.

ராமன் பிறந்த துல்லியமான இடம் எது? அல்லது அவன் உண்மையிலேயே பிறந்த வரலாற்று மனிதன்தானா? என்பனவற்றை எல்லாம் உறுதி செய்வது சாத்தியமற்றது என்ற உண்மை எல்லாம் ராமன் கோயில் இயக்கத்தின் தலைவர்களுக்கு தேவையற்றவையாகத் தோன்றின. நாட்டின் பெரும்பான்மை மக்கள் தொகையினராகிய இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. எனவே, இந்திய முஸ்லிம்களும், நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும், மதசார்பற்ற ஜனநாயகவாதிகளும் அவர்களின் மத நம்பிக்கையை மதித்தாக வேண்டும் என அவர்கள் அறிவித்தனர். அந்த இடத்திலிருந்து மசூதியை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மொகலாயரின் வெற்றிக்கு முன்பு வரை இருந்தது என நம்பும் ராமன் கோயிலை திரும்பவும் கட்டுவது என்பது அவர்களைப் பொருத்தவரை, தேசியக் கறையை சரி செய்யும் செயலாகும். இந்து மக்களின் வரலாற்றுத் தோல்வியையும், அவமானத்தையும் பழிதீர்த்து நேர் செய்யும் செயலாகவும் அது இருக்கும் என அவர்கள் அறிவித்தனர்.

வரலாற்று ரீதியாகவும், சட்டப்படியும் அவர்களது குற்றச்சாட்டுகள் மிகவும் பலவீனமானவை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. உண்மையில், மசூதி கட்டுவதற்காக ராமன் கோயில் இடிக்கப்பட்டது என்பதை நிறுவ தொல்லியல் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ எதுவும் இல்லை என பெரும்பான்மையான சார்பற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். இவ்வழக்கு நாட்டிலுள்ள மிக உயர்ந்த நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்பு ஒருவேளை தங்களது உரிமை கோரலுக்கு எதிராக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்துத்துவாவின் தலைமை, நீதிமன்றத்தில் இவ்வழக்கை தீர்த்துக் கொள்வதற்கு உடன்பட மறுத்துவிட்டது.

ஏனெனில், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்தையே மறுதலிக்கும் விதமாக, பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளுக்கு சட்டம் கூட கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என அவர்கள் நம்பினார்கள். ராமன் பிறந்த இடம் குறித்த நம்பிக்கையில் கூட, இந்துக்களுக்கு இடையில் கருத்தொற்றுமை கிடையாது. அயோத்தியில் கூட, தங்களது விருப்பத்திற்குரிய கடவுளான ராமன் பிறந்த இடம் இதுதான் என உரிமை கொண்டாடும் பல்லாயிரக்கணக்கிலான கோயில்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சியில் நீதி, கருணை ஆகியவற்றின் குறியீடாகவே ராமன் இருக்கிறானேயன்றி, வன்முறை, ஓரவஞ்சகம், அச்சம் ஆகியவற்றின் மூலம் ஆட்சி செய்வதன் குறியீடாக அவன் இல்லை என நம்புவதால், அயோத்தியின் பெரும்பான்மையான மக்கள் தொடக்கத்தில் இருந்தே ராமன் கோவில் பிரச்சனையை எதிர்த்து வந்தனர்.

வரலாற்றில் நடந்த தவறுகளுக்காக இப்போது நேர்படுத்துவதும், பழி வாங்குவதும் சரியானதுதான் என்கிற இந்து தேசியவாதிகளின் அடிப்படைக் கருத்தை, பெரும்பான்மையான இந்துக்கள் மறுக்கிறார்கள். இன்றைய மக்கள் தங்களது கடந்த கால வரலாறுகளின் சுமைகளை ஏன் சுமக்க வேண்டும்? அவற்றுக்காக நாம் ஏன் பரிகாரம் தேட வேண்டும்? சரி, அப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்றே வைத்துக் கொண்டோம் என்றாலும் கூட, இவ்வாறான சுமைகள் குறிப்பிடப்பட்ட சிலருக்கு மட்டும் என குறுக்கப்பட்டதாக ஏன் இருக்க வேண்டும்?

எடுத்துக்காட்டாக, மிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால் புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில் இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு, பவுத்த விகார்களை அவ்விடங்களில் ஏன் நிறுவக்கூடாது? இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடி யினர் கோயில்களைக் கட்டக்கூடாதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், கொடுமையான ஒடுக்குமுறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது, தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?

டிசம்பர் 6, 1992 அன்று நாட்டின் நெடிய மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் திரட்டி வரப்பட்ட இளைஞர்கள், பாபர் மசூதிக்கருகில் குழுமியபோது, செயல் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி லிபரான் கமிஷன் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஒட்டுமொத்தத் தலைமையையுமே குற்றஞ்சாட்டி இருக்கிறது. “சர்ச்சைக்குரிய கட்டடத்தை தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் கோயிலைக் கட்டுவதற்கு இத்தலைவர்கள் கூட்டாக துணிகர முயற்சியில் இறங்கினார்கள்'' என்கிறது அக்கமிஷன். காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மய்ய அரசு, 36 மணி நேரத்திற்கும் மேலாக, மசூதியை தரைமட்டமாக்கியதை மட்டுமல்லாமல், அவ்விடத்தில் ஒரு தற்காலிகக் கோயில் எழுப்பும் வரைக்கும் வெட்க

மின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது – அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் சட்டத்தையும் பாதுகாப்பதற்கு பதிலாக, அதிதீவிர இந்து தேசியவாதிகளை திருப்திப்படுத்தும் அவர்களின் வழக்கமான கொள்கைக்கு பாதகமில்லாமல் இப்போதும் நடந்து கொண்டார்கள் என்று சொல்லலாம்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய வகுப்புக்கலவரத்தின் மோசமான ஆவேச வெறி நாடு முழுவதும் பரவத்தொடங்கி, 2002 குஜராத் இனப்படுகொலை வரைக்கும் தொடர்ந்து ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது.

ராமன் கோயில் இயக்கத்தின் வெறுப்பு மற்றும் பிரிவினையை மய்யப்படுத்திய இப்பிரச்சாரத்தின் மூலம், பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அரசியல் விளைச்சலை அறுவடை செய்தது. பல சந்தர்ப்பவாத மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியுடன் 1990களின் இறுதியில் முதன்முறையாக அது மய்ய அரசை அமைப்பதற்கு வழிகோலியது. மிக முக்கியமானதும், நெருக்கடியானதும் ஆன இந்த ஆண்டுகளில், இந்திய ஜனநாயகத்தின் ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மக்களை கைவிட்டு விட்டன. மாநில மொழிகளில் வெளிவரும் உள்ளூர் நாளிதழ்கள் கலவரக்காரர்களுக்கு "ராம பக்தர்'கள் என்று புகழாரம் சூட்டின. மதக் கலவரத்தைத் தூண்டியதிலும், இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயகத்தை எதிர்த்த பிரச்சாரத்தைத் திட்டமிட்டதிலும், தலைமை தாங்கி நடத்தியதிலும் அத்வானி போன்றவர்களின் பங்கை மூடி மறைத்து விட்டு, அவரைப் போன்றவர்களை மிதவாதிகள் என மறுகண்டுபிடிப்புச் செய்து முன்னிறுத்துவதில் தேசிய ஊடகங்கள் துணிந்து ஈடுபட்டன.

1992இல் நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிலோ அல்லது அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிலோ ஒருவரைக் கூட நீதிமன்றங்கள் தண்டிக்கவில்லை. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் தலைவர்கள் குற்றத்தில் வகித்த பங்கை லிபரான் கமிஷன் உறுதி செய்தது. ஆனால் எந்த கிரிமினல் நடவடிக்கையையும் அவர்கள் மீது எடுக்க அது பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மய்ய அரசு இப்பரிந்துரைகளை அவசர அவசரமாகப் பரிசீலனையின்றி ஏற்றுக் கொண்டது. அரசியல் வெறுப்பினால் இழைக்கும் குற்றங்களைச் சூழ்ந்துள்ள தண்டனை குறித்த அச்சம் தேவையற்ற நிலை, இந்நாட்டில் ஒரு மரபாகத் தொடர்வதன் தொடர்ச்சியாகவே இது நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான உரிமை கோரல் தொடர்பாக சட்டப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சட்டத்தின் முதன்மையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.

சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் ஆகிய பழமையான மரபுகளைத் தோற்கடித்து, வெறுப்பு மற்றும் பிரிவினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட அரசியலே பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெறும் என்பதை, பாபர் மசூதி இடிப்பின் மூலம் எழுப்பப்பட்ட புழுதி மண்டலம் உணர்த்துவதாக இருந்தது. நவீன சட்ட அமைப்புகள் வரையறுத்த வரையறைகள் மற்றும் சுதந்திரமடைந்த பிறகு இந்திய மக்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றைத் தோற்கடித்து விட்டு, ஒரு கும்பலின் காட்டுத்தனமான வன்முறை வெற்றி பெறுவதை அது குறிக்கிறது.

எந்தக் கடவுளை வழிபட நீ தேர்ந்தெடுக்கிறாய் என்பதோ, எந்தக் கடவுளையும் வழிபட மாட்டேன் என்பதோ, ஒரு பெரிய விஷயமாகவே இந்நாட்டில் இருக்காது என்றும், இந்தச் சாதியையோ, அந்தச் சாதியையோ சார்ந்தவராக இருப்பதுவோ, ஆணாக இருப்பது அல்லது பெண்ணாக இருப்பது, அல்லது பணக்காரனாக இருப்பதோ, பராரியாக இருப்பதுவோ – இந்நாட்டில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்றும், நாட்டின் சட்டத்தால் சமமானப் பாதுகாப்புக்கு உத்திரவாதப்படுத்தப் பட்டவராகவும், முழு அளவுக்குச் சமமான மனிதராகவும், குடிமகனாகவும் நீ இருப்பாய் என்றும் – இந்திய மக்கள் தங்களில் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட உறுதிமொழிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதை அது குறித்தது.

இடிக்கப்பட்ட மசூதியின் இடிபாடுகளுக்குக் கீழே இந்தியா என்ற கருத்தாக்கம் வீழ்ந்து கிடக்கிறது. ஆனால், கடைசியில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்களைச் சார்ந்தவர்களைக் கொண்ட இந்தியாவின் சாதாரண பொதுமக்கள், வெறுப்பு மற்றும் பிரிவினையின் அரசியலுக்கு எதிராக 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் உறுதியுடன் வாக்களித்தனர். ராமன் கோயில் இயக்கத்தின் பேரபிமானிகள் கூட வாக்காளர்களைத் திரட்டுவதற்கான சக்தியை ராமன் கோயில் இழந்து விட்டது என ஒத்துக் கொள்கிறார்கள்.

காட்டுத்தனமான கும்பலால் 1992 இல் தரைமட்டமாக்கப்பட்ட மத்தியகாலப் பகுதியைச் சேர்ந்த மசூதியின் இடிபாடுகளின் கீழிருந்து இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் துண்டுகளை, இந்தியாவின் பராரிகளாக்கப்பட்ட மக்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பழமையானதும் வேறுபாடுகள் செழித்ததுமான இந்நாட்டின் சேர்த்துக் கொள்ளும் தன்மையுள்ள, பன்மைத்துவ மரபுகளை மறுபடியும் விளையச் செய்தவர்கள் அவர்களே.

(ஹர்ஷ் மந்தர், இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவர். 1980 இல் அய்.ஏ.எஸ். ஆன இவர், முசோரியில் உள்ள அய்.ஏ.எஸ். அகாதமியில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராகவும், தேசிய எஸ்.சி./எஸ்.டி. நிதி உதவிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். குஜராத் இனப்படுகொலை நடைபெற்ற சில நாட்களிலேயே அய்.ஏ.எஸ். பணியில் இருந்து கொண்டே "டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் இவர் எழுதிய மிக முக்கியமான ஒரு கட்டுரை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இக்கட்டுரையில் குஜராத் இனப்படுகொலை திட்டமிட்ட ஒன்றே என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார். அதோடு மட்டுமின்றி, இப்படுகொலைகளைக் கண்டித்து தன்னுடைய அரசுப் பணியையும் உதறினார். இவர் "தி இந்து' (6.12.09) நாளேட்டில் எழுதிய கட்டுரையே இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

- தமிழில் : ம. மதிவண்ணன்