periyar 350 copyடிசம்பர் 1917இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியானது. இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பிரிவாக அன்னி பெஸண்டின் தலைமையில் செயல்பட்ட ஹோம் ரூல் லீக் வெகு வீரியமாக இயங்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது. இந்திய தேசியம் தொடர்பான சொல் லாடல்கள், குறிப்பாக இந்து சமுதாயத்தின் பழம் பெருமை பற்றிய பேச்சு தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட தருணம். இந்தச் சூழ்நிலையில் தான் பார்ப்பனரல்லாத சமுதாயங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் ஒன்றிணைந்து மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து 1917ஆம் ஆண்டு முழுக்க சென்னை மாகாணம்தோறும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் கூட்டப்பட்டன. இந்திய தேசியம் குறித்த ஆழமான விமர்சனங்களை இந்த மாநாடுகளில் பேசியவர்கள் முன்வைத்ததோடு, வகுப்புரிமையின் தேவையையும் வலியுறுத்திப் பேசினர். சாதிகளாகப் பிரிந்திருக்கும் இச்சமுதாயம் எவ்வாறு ஒரு தேசமாக அமைய முடியும் என்ற கேள்வியை எழுப்பியதுடன் சாதி களுக்கிடையே சமத்துவம் ஏற்பட்டாலொழிய இந்திய தேச உருவாக்கம் என்பது பார்ப்பனர்களின் நலத்தையும் மேலாண்மையையும் காப்பாற்றும் தேசியமாகத்தான் இருக்கும் என்றும் இவர்கள் கருத்துரைத்தனர். 

பண்டித அயோத்திதாசர் தான் இத்தகைய சிந்தனைகளை தமிழ்ப் பொது சமுதாய வெளியில் முதன்முதலில் முன்வைத்தார். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய, Ôதமிழன்Õ, இதழில் சுதேசிய சீர்திருத்தம் என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். திலகரின் தலைமையில் உருவாகியிருந்த தீவிர இந்திய தேசியத்தைக் குறித்த ஆழமான விமர்சனங்களை இக்கட்டுரைகள் உள்ளடக்கியிருந்தன. அவர் எழுதத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருத்துகள் பொருளாதார, அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனரல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களால் அரசியல் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இவற்றைப் பரப்புரை செய்தவர்கள் அனைவரும் செல் வாக்குடையவர்களாக இருக்கவில்லை. அறிவுத் தளத்திலும் அதிகார உலகத்திலும் பார்ப்பனர்கள் செலுத்தி வந்த ஆதிக்கம், அதனூடாக வெளிப்பட்ட அறிவுத் திமிர், சமத்துவத்தை மறுக்கும் மனப்பாங்கு, பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொண்டு அத்தகைய வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தேடிக்கொண்ட மேன்மை ஆகியவற்றைக் கண்டு சினமுற்ற பலருக்கும் - தலித் தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலருக்கும் - பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. (தலித்துகளின் பங்கேற்பு, அவர்கள் நாடிய சமத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர மறுத்தால் பார்ப்பனரல்லாத இயக்கத்தின் அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகள் சீர்கெட்டுப் போகும் என்று எம்.சி. ராஜா போன்ற தலித் தலைவர்களும், ஓ.கந்தசாமி செட்டி போன்ற தலித் அல்லாத அறிவாளர்களும் அன்றே எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.)

இன்றைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில் பார்ப்பன ரல்லாதார் என்று இனியும் பேசுவதில் நியாயமிருக்க முடியுமா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய கேள்விகளை எழுப்பியவர்கள் பார்ப்பனர்களின் மேலாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டதை சகிக்க மாட்டாது பார்ப்பனரல்லாதார் இயக்கம் பேசிய நியாயங்களையும் விமர்சனங்களையும் எள்ளி நகையாடினர். இன்றோ தலித் அறிவாளர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். பார்ப்பனரல்லாதார் நலம், உரிமைகள் என்று பேசிக் கொண்டு சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தைத்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் நிறுவியுள்ளது என்று இவ்வறிவாளர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக 1967இல் தொடங்கி இன்று வரை நடைபெற்று வரும் திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் இத்தகைய மேலாதிக்கத் துக்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை.  காலம் கிளர்த்தி யுள்ள வரலாற்று மாற்றங்கள் பார்ப்பனரல்லாத சாதிகளின் பொருளாதார பலம், சமூகத் தகுதி, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பார்ப்பனர்களின் மேலாண்மையில் சிற்சில சேதாரங்கள் ஏற்பட்டிருப் பினும், அவர்களின் ஆதிக்கமானது பல நிலைகளில் இன்றுமே தொடர்கிறது. குறிப்பாக மதம், உயர் கல்வி, ஊடகத் துறை, மத்திய அரசு நிர்வாகம், வங்கித்துறை, தனியார் துறை - நமது பொருளாதார, பண்பாட்டு வாழ்வில் தீர்மானகரமான பங்கு வகிக்கும் துறைகளில் அவர்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். அதே சமயம், அவர்களின் மேலாண்மைக்கு சவால் விடுத்து அவர்களின் சாதி ஆணவத்தை சாடிய பார்ப் பனரல்லாத அறிவாளர்கள் சார்ந்திருக்கும் சமுதாயங்களும் சுதந்திர இந்தியாவின் அரசியல், பொருளாதார வாழ்வில் முக்கிய பங்காற்ற வந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரை, நிலம், வர்த்தகம், அரசு நிர்வாகம், காவல்துறை, ஊடகத் துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும் இந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அதிகாரமும் கூடியுள்ளன. குறிப்பாக இச்சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றியுள்ளனர். இந்த அதிகாரமானது எல்லா பார்ப் பனரல்லாத சமுதாயங்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பது உண்மைதான் என்றாலும், குறிப்பிட்ட சமுதாயம் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் அரசியல் பலம் பொருந்தியவர்களாகவே இருக்கின்றனர்.

தலித் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க் கையில் ஒப்பீட்டளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள நிலையிலும் கூட அவர்களின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் இன்றுமே சமூகத் தளத்தில் உத்திர வாதம் இல்லை. சட்டம் பேசும் உரிமைகளை மெய்யுலகில் செயல்படுத்த வருகையில் தலித்துகள் சந்திக்கும் சவால்களும் அவ்வுரிமைகளை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களும் நாளுக்கு நாள் கூடி வருகின்றனவேயழிய குறைந்த பாடில்லை. அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் அதிகரிக்க தலித்துகளின் உரிமைசார் செயல்பாடுகளே காரணங்களாக உள்ள அவல நிலையும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. பழைய தீண்டாமை வகைகள் ஆங்காங்கு குறைந்துள்ள போதிலும் தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமைகள் கூடியுள்ளன.

இன்னும் சொல்லப் போனால், பார்ப்பனரல்லாத சாதிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள், போட்டா போட்டிகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும், தலித் விரோத செயல்பாடுகள் என்ற இந்த ஒரு புள்ளியில் அவர்கள் இணையவே செய்கின்றனர்.  குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத சமுதாயத்திலுள்ள வர்க்க, வட்டார வேறுபாடுகளை சமன்படுத்தவும் ஈடுகட்டவும் இத்தகைய வன்செயல்களும் அவை முன்நிறுத்தும்

சாதிப் பெருமித அரசியலும் உதவுகின்றன. 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தலித்துகளுக்கும் பழங்குடி யினருக்கும் எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்தல், சாதி மறுப்புத் திருமணங்களையும் காதல் உறவுகளையும் சாடுதல், அவற்றை சகிக்க மாட்டாது சம்பந்தப்பட்ட இளைஞர்களை துன்புறுத்தல், கொலை செய்தல், தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்க முடியாது அவர்களின் சொத்து களை சூறையாடுதல் என்பன போன்ற செயல்களில் பார்ப்பனரல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல், சமுதாய தலைமைகளாக தம்மை அறிவித்துக் கொண்டு செயல்படுபவர்கள் ஈடுபட்டு வருவதைக் காண் கிறோம். அவர்களின் அரசியல் தலைமையை ஏற்று சாதிப் பெருமிதங்களைக் காப்பாற்ற இச்சமுதாயங்களைச் சேர்ந்த வறிய பிரிவினரும் களம் இறங்குவதும் நடைபெற்று வருகிறது. இழப்பதற்கு சாதி அடை யாளத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத சூழ்நிலைதான் இவர்களை இவ்வாறு செயல்பட வைக்கிறது - எல்லா விதமான இயலாமைகளையும் ஈடுகட்ட சாதிப் பெருமிதம் கைகொடுக்கிறது.

தலைமைகள், கட்சிகளைக் கடந்து சமுதாய மனநிலையில் மாற்றங்களே ஏற்படவில்லை என்று கூறிட முடியாது. மாற்றங்களுக்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன - சாதி எல்லைகளைக் கடந்த தோழமை, காதல், அரசியல் இணைவு, அறிவுலகத்தில் நடைபெறும் சிற்சில உரையாடல்கள் என்று பல நிலைகளில் இவை தம்மை வெளிப்படுத்திக் கொள் கின்றன. ஆனால் புதியதொரு அரசியல், சமுதாய இலக்கை நிர்ணயிக்க வல்லவையாக இம்மாற்றங்களை அடையாளப்படுத்தி, அத்தகைய இலக்கை நோக்கி சமுதாயத்தை நகர்த்தும் அரசியலோ சிந்தாந்தமோ இன்று இல்லை. சாதியை அழித்தொழிக்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்தால் மட்டுமே இத்தகைய நகர்வு சாத்தியப்படும். ஆனால் திராவிட இயக்கமாகப் பரிணமித்து ஆட்சியதிகாரத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் இத்தகைய இலக்கைப் பற்றி சிந்திப்பதற்கான அரசியல் திண்மை யையும் கற்பனையையும் இழந்து விட்டது என்றே கூற வேண்டும்.

தமிழ் அடையாளம் என்ற செக்யூலர் புள்ளியில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இணைப்பதில் அவ்வியக்கம் வெற்றிகளைக் கண்டது என்பது உண்மைதான். மேலும் Òதமிழ்Ó அடை யாளம் என்பது சாதி இழிவை அகற்றி தலித்துகளுக்கும் பிறருக்கும் புதிய மனித வார்ப்புகளை அளிக்கவல்லது என்று அயோத்திதாசர் உள்ளிட்ட பலரும் நம்பினர். தலித்துகள்தான் ஆதித் தமிழர்கள் என்று அவர் அறுதி யிட்டுக் கூறியதற்கான நியாயங்களை மொழியிலும் இலக்கியத்திலும்தான் அவர் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுமே Òதமிழ், தமிழர் நலம்Ó என்ற பொதுக் கோரிக்கையை திருமாவளவன் உள்ளிட்ட தலித் தலைவர்கள் முக்கியமானதாகக் கருதுகின்றனர். 

ஆனால் இந்த செக்யூலர் அடையாளமானது சாதி எதிர்ப்பு என்ற உள்ளீட்டை முதன்மைப்படுத்தும் போதெல்லாம், அதற்கான நியாயங்களைப் பேசிய போதெல்லாம் சாதித் தமிழர்களுக்கு அது ஏற்புடை யதாக இருப்பதில்லை. சாதிக்கு அப்பாற்பட்டதாக மொழி, பண்பாட்டு அரசியல் அமைய வேண்டும் என்று அவர்களின் தலைமையும் ஏன் தொண்டர்களும் கூட இன்றுமே கூறிவருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது இத்தகைய மனநிலை வெளிப்பட்டது. தமிழ் அடையாளத்தை சாதி எதிர்ப்பு அடையாளமாக உருமாற்றச் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து நாம் ஆக்கப்பூர்வமாக உரையாட தயங்குவதற்கும் மறுப்பதற்கும் காரணம், தமிழ் என்று சொன்னாலே, அதனளவில் அது அதிகாரத்தை எதிர்க்க வல்ல, பொது நியாயம் பேசவல்ல அடையாளம் என்று கொண்டு விடுகிறோம் அல்லது அவ்வாறு நினைப்பது என்பது நமக்கு வழமையாகிவிட்டது. மத்திய அரசையும், பார்ப்பன-பனியா அரசியல், சமுதாய ஆதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் எதிர்க்க தமிழ் அடையாளம் முன்வைக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த எதிர்ப்பின் மொத்த உருவமாக தமிழ் அடையாளம் பாவிக்கப்பட்டதேயழிய, தமிழ் சமுதாயத்தில் நிலவும் சாதி, பாலின, வர்க்க வேறுபாடுகளை களைய வல்லதாக, அவற்றைக் கடந்த சமத்துவமான, நீதியான சமுதாயத்தை உருவாக்க வல்லதாக அறியப்பட வில்லை. அப்படியே அறியப்பட்டாலும் பழம்பெருமைப் பேச்சிலும் சங்க இலக்கியங்களைக் கொண்டாடுவதிலும் தான் தமிழ் மரபுக்குரிய சமூக நீதி வெளிப்பாடு கண்டது.

இன்றுமே இந்துத்துவ எதிர்ப்பின் முக்கிய அறிகுறி யாக தமிழ் அடையாளம் முன்வைக்கப் படுகிறது. ஆனால் அவ்வடையாளத்தின் பெயரில் இந்துத்துவத்தை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அதன் பெயரில் எதை எதையெல்லாம் காப்பாற்ற விரும்புகிறோம், எதை எதையெல்லாம் சரிக்கட்ட மறுக்கிறோம் என்பன குறித்தும் நாம் சிந்திக்க மறுக்கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது என்ற எச்சரிக்கை மணியை அடிப்பது முக்கியம்தான் என்றாலும் அக் கட்சியானது நம் சமுதாய, அரசியல் வாழ்க்கையிலும் அறவியல் சிந்தனையிலும் புகுத்தியுள்ள சீர்குலைவுகளைப் பற்றிப் பேச நமக்கு வாய் வருவதில்லை. இந்திய அரசு, இந்துத் துவம் ஆகியவற்றை எதிர்க்கும் தமிழ் ஆர்வலர்கள் பாசிச அரசியலுக்கு வழிவகுத்த அதிமுகவின் கையூட்டு அரசியலையும் ஜனநாயக விரோத செயல்பாடுகளையும் பற்றிய பொது விவாதத்தை ஏற்படுத்தத் தயாராக இல்லை. இது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல - தமிழ் அடையாளம் என்பதன் உட்கூறுகள் குறித்து விமர்சனபூர்வமாக யோசிக்க நமக்கிருக்கும் தயக்கத்தையே காட்டுகிறது.

மற்றொரு முக்கியப் பிரச்சனை, பெண் விடுதலை தொடர்பானது. பெண்களின் உடல்களில் தான் சாதி களின் அடையாளம் பொறிக்கப்படுகிறது. அவர்களின் கருவுறும் ஆற்றலின் மீது சாதிக் குடும்பமும் அதன் ஆணாதிக்கத் தலைமையும் இன்றுமே அதிகாரம் செலுத்தி வரும் சூழ்நிலையில் பெண்களின் உடல் மாண்பு, சுய விருப்பம், காதல், மன விழைவு, மண வாழ்க்கை, தாய்மை கடந்த வாழ்க்கையை தேர்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரம் ஆகியவற்றை தமிழ்ச் சமுதாயம் பொருட்டாகக் கருதாததோடு, இவை குறித்து அறிவுபூர்வமாக விவாதித்த சுயமரியாதை இயக்க மரபையும் தொலைத்துவிட்டது அல்லது அதனை நினைவு கூர்வதை கவனமாகத் தவிர்த்து வந்துள்ளது. அப்படியே பேசினாலும் சாதிமறுப்புத் திருமணங்களை ஆதரிப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று கருதிவிடுகிறது. சாதிக் குடும்பம், சாதியால் கட்டமைக்கப்பட்ட பொதுவெளி, இவற்றை இயக்கும் ஆணாதிக்க சிந்தனை, மனப்பாங்கு ஆகியவற்றைக் குறித்து யோசிக்கக்கூட தயாராகவில்லை. சாதி அமைப்பை ஏற்காது அதன் பிடியிலிருந்து வெளியேற விரும்பிய பெண்களின் வாழ்வியலுக்கு ஆதரவாக நின்ற சுயமரியாதை இயக்க மரபின் நிழல்கூடு தம்மீது பட்டு விடக்கூடாது என்ற அன்று முதல் இன்று வரை முற்போக்கு அரசியல் கருத்துகளைக் கொண்டுள்ள ஆண்களும் கவனமாக இருந்து வந்துள்ளனர்.

முற்போக்கு அரசியலின் முக்கிய கூறாக விளங்கும் இடதுசாரி இயக்கங்கள் சாதி எதிர்ப்பைக் கையில் எடுக்கத் தவறியதையும் இங்கு நாம் சுட்டிக் காட்ட வேண்டி யுள்ளது. தலித் தொழிலாளர்களின் பக்கம் நின்று பற்பல போராட்டங்களை நடத்திய போதிலும், அவர்களின் சமூக மாண்பை நிலை நிறுத்த தீண்டாமையின் பல வடிவங்களை எதிர்த்து செயல்பட்டாலும், சாதி ஓழிப்பு என்பதை தமக்கான முக்கிய இலக்காக, வர்க்கப் போராட்டத்துக்கு இணையான, அதனுடன் சேர்ந்து நடைபெற வேண்டிய போராட்டமாக அண்மைக்காலம் வரை இவ்வியக்கங்கள் இனங்காணவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவராகிறோம்.

கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங் களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்கவும் வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிக நாட்களும் தொடர்ச்சி யாகவும் ஆட்சி செலுத்தியுள்ளது.

திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக் கொண்டால் அது தொடக்கத்தில் மக்கள் நலம்சார் ஆட்சியாக அமையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநில சுயாட்சி, நீதியான பொருளாதார வளர்ச்சி, வகுப்புரிமையை பாது காக்கத் தேவையான சட்டதிட்டங்கள், சாதி கலக்காத பண்பாட்டு உருவாக்கம் என்று பல விஷயங்கள் இங்கு சாத்தியப்படும் என்று பலர் அன்று நினைத்தனர்.

பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் முன் ஆட்சி புரிந்த காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிய வளர்ச்சி, உற்பத்திசார் திட்டங்களை திமுகவும் பின் பற்றியது. குறிப்பாக வேளாண்துறையில் தொடங்கப் பட்டிருந்த பசுமைப் புரட்சியை இக்கட்சியின் ஆட்சியுமே தொடர்ந்து வளர்த்தது, விரிவுபடுத்தியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகார வலிமை கொண்டும் சமரச நடவடிக்கைகளின் மூலமும் இக் கட்சி எதிர்கொண்டது. விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை சமன்படுத்துவதிலும் நிலவுடைமை யாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் திமுகவினர் கைவிடவில்லை - வெண்மணிப் படுகொலை இதற்கு முக்கிய சான்று.

தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரஸ் கொள் கைகளைப் பின்பற்றிய அதே வேகத்தில் தொழிலாளர் களின் போராட்டங்களை அடக்கியடுக்கவும் திமுகழக ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. அன்று முக்கிய தொழிலாளர் தலைவராக இருந்த வி.பி. சிந்தனுக்கு நேர்ந்த கதியை அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. எந்த மாணவர்களின் போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததோ இதே மாணவர்களின் போராட்டங்களை மூர்க்கமாகக் கையாளவும் திமுக தயங்கவில்லை.

அதே சமயம் வளர்ச்சி, மக்கள் நலம் என்ற இரண்டு விஷயங்களிலும் தனக்குள்ள Òஅக்கறைÓயை ஆட்சி யாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டும் வந்தனர். எடுத்துக் காட்டாக, சாலை, போக்குவரத்துத் துறைகளில் முதலீடு செய்தது, போக்குவரத்துத் துறையை அரசுடைமை யாக்கியது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு சிறப்புப் பொருளாதார மண்டலங் களை அமைக்க தோதான திட்டங்களை திமுகதான் செயல்படுத்தியது. இதையெல்லாம் செய்த அதே வேளை, வகுப்புரிமையை உத்திரவாதப்படுத்தியது. குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவு படுத்தி நகர்ப்புற வறிய பிரிவினருக்கான வீட்டு வசதி களை செய்து கொடுத்தது. மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களை பொதுவெளியில் தொடர்ந்து நடத்தியது.  முக்கியமாக தமிழ் சமுதாயத்தில் பார்ப்பன அறிவாளிகள் செலுத்தி வந்த மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட அறிவாளர்களின் வளர்ச்சியை சாத்தியப் படுத்தியது. தமிழ் அடையாளத்துக்கு செக்யூலர் உள்ளீட்டை வழங்கியதன் மூலம் தலித்துகளையும் கூட தன்வசப்படுத்தியது.

கையூட்டு அரசியலுக்கு அது வழிவகுத்த போதிலும், உள்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கத் தவறிய போதிலும் தேவைப்பட்டபோது மத்திய அரசுடனும், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடனும், ஏன் ஒருகட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட அரசியல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட போதிலும் தன்னை தமிழர் நலம் காக்கும் கட்சியாக தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டது - இத்தனைக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினையே அது மேற்கொண்டது.

திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான் சாதி இந்து சமுதாயங்களை சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினரின் ஒப்பீட்டளவிலான பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது. அதே சமயம், நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, இந்த வளர்ச்சி யானது இச்சமுதாயங்களின் சாதிய தன்னிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம், சாதி எதிர்ப்பு என்பதை வகுப்புரிமையுடன் மட்டும் தொடர்புபடுத்திய அரசியல் சிந்தனையும் செயல்பாடும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். மேலும், சாதியமைப்பை பத்திரப்படுத்தியுள்ள நிலவுடைமை முறை, சாதிய உளவியல், பண்பாடு, பொது வெளியில் சாதியைக் கடந்த உறவுகள் அவ்வப் போது சாத்தியப்பட்டாலும் பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும்போது சாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்நிறுத்தப்படுதல் ஆகியனவற்றை அரசியல்ரீதியாக அணுகுவதற்கான கருத்து நிலையும் அதையட்டிய செயல்பாடும் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. எனவே, சாதி இந்துக்களின் வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் ஜனநாயக பரவலாக்கத்தை சாத்தியப்படுத்திய போதிலும் சமுதாய வெளியிலும் நமது அரசியல் ஊடாட்டங் களிலும் ஜனநாயகம் ஆழமாக வேர் கொள்ள வித்திட வில்லை - தலித்துகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடை பெற்று வரும் வன்முறைகளும், சுய விமர்சனத்துக்கு இடங்கொடுக்காத ÒதிராவிடÓப் பெருமித அரசியல் சொல்லாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று அரண் சேர்த்து உண்மையான ஜனநாயக வளர்ச்சியை தடுத்துள்ளன. முக்கியமாக தலித்துகளுக்கு எதிராக செயல்படும் சாதி இந்து சமுதாயத்தினருக்கு அரசின் பாதுகாப்பு தொடர்ந்து இருந்து கொண்டே வந்துள்ளது.

அடுத்து அதிமுகவின் ஆட்சிக்காலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தின் அரசியல், சமுதாய வெளிகளிலிருந்து ஜனநாயகப் பண்புகள் முற்றிலுமாக தூக்கியெறியப்பட்ட ஆட்சிக்காலங்களாக அவை இருந்தன என்று சொல்லலாம். மக்களுக்கான ஆட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் மக்களை மதிக்காத, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஆட்சியாகத் தான் ஆதிமுதற்கொண்டே இக்கட்சியின் ஆட்சி அமைந்தது. அறிவுபூர்வமாக சிந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுதலுக்குப் பதிலாக மாநிலத்தின் நிதியாதாரங்களை கட்சித் தலைமையின் சொந்த கருவூலத்துக்குரிய சொத்தாக பாவித்தே அக்கட்சித் தலைமை செயல்பட்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட முக்கிய மதிப்புரை ஒன்று அவரின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டதன் விவரங் களையும், அவரின் ஜனநாயக விரோத செயல்பாடுகள் மாநிலத்தின் ஜனநாயக வாழ்வில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டுக் காட்டியது. அவரின் ஆட்சியில் நடந்த என்கவுண்டர் கொலைகள், ஊடகத் துறையைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்ட மாற்றங்கள், சிவில் உரிமைகளுக்காகப் பாடுபட்ட அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை அந்த மதிப்புரை உள்ளடக்கி யிருந்தது.  

எம்.ஜி.ஆர் ஆட்சியின் முக்கிய சாதனை சத்துணவுத் திட்டம்தான். அதை சிலாகித்துப் பேசு பவர்கள் அதற்கு வித்திட்டவர் காமராஜர் என்பதையும் அவருக்கு முன் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சுப்பராயனின் அமைச்சரவை இத்திட்டத்தை அறிமுகப் படுத்தியிருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதில்லை. எம்.ஜி.ஆர் இத்திட்டத்தைப் பரவலாக்கினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதைச் செய்ததன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கான பெரும் வாய்ப்பையும் வெளியையும் அவர் ஏற்படுத்தினார் என்று கொண்டாலும், கல்வி தொடர்பான அவரின் பிற கொள்கைகளுடன் இதனைத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் - குறிப்பாக உயர் கல்வி தனியார் மயமாவதற்கான திட்டத்தைத் தீட்டியவர் அவர்தான். தனியார் கல்லூரிகளில் வகுப்புரிமையைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இங்குள்ள பிற்பட்ட, தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பை அரசு கைவிடவும் இந்த முடிவு காரணமாக இருந்தது. 

கையூட்டு அரசியல் வளரவும் விரிவடையவும் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக அமைந்தது (இதற்கு முன் ஆட்சிகளும் கட்சிகளும் கையூட்டு அரசியலைப் பின்பற்றவில்லை என்று கூறிட முடியாது - திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவுகள் அக்கட்சித் தலைமைக்கு சாதகமாக அமைய வில்லை என்பது வரலாறு). அக்கொள்கையைப் பின்பற்றி தமிழகத்தின் மூலவளங்களை சூறையாடும் மோசமான வளர்ச்சிப் போக்கை ஜெயலலிதா தலைமையில் பதவி யேற்ற ஆட்சி முன்னெடுத்தது. இத்தகைய சூறையாடுதல் என்பது Òஇயல்பானதாகÓ ஆக்கப்பட்டு அதனால் இலாபம் ஈட்டிய தொழிற்குழாம்களும் குடும்பங்களும்  சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக் கொள்ளவும் அவரின் ஆட்சி வழிவகுத்தது. இருந்தும் மக்களின் நல்லாசியையும் ஆதரவையும் பெற எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்ற சலுகை அரசியலை இவர் அருங்கலையாக உருமாற்றினார் - குறிப்பாக ஏழைப் பெண்களை குறிவைத்து இவரின் சலுகை அரசியல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில்தான் குறிப்பிட்ட சாதியினரின் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்ட அரசியல் வளர்ச்சி என்பது உத்தியாகக் கையாளப் பட்டது. நமது ஜனநாயக அரசியலில் சாதி சமுதாயங் களின் நலனே மக்கள்நலனாக அறியப்பட்டு வரும் நிலைமையுள்ள போதிலும், குறிப்பிட்ட சாதியினரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமிட்ட அரசியலை அதிமுகதான் வெற்றிகரமாகவும் பட்ட வர்த்தனமாகவும் கையிலெடுத்தது. சாதிக் கட்சிகளின் வளர்ச்சிக்கான நியாயங்கள் எவ்வாறானதாக உள்ள போதிலும், அவற்றுக்கான அரசியல்ரீதியான ஒப்புதலை அதிமுகவின் செயல்பாடுகள் பெற்றுத் தந்தன. இதைச் செய்த அதேவேளை தலித்துகளுக்கு எதிரான போக்கை அரசு மேற்கொள்வதையும் இக்கட்சிதான் Òஇயல்பாÓக்கியது. தன் பங்கிற்கு திமுகவும் ஆட்சியில் இருக் கையில் இந்த போக்கைக் கடைப்பிடிக்கத் தவறவில்லை.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் கண்டுள்ள மாற்றங்கள், அந்த இயக்கம் வழி உருவான அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் சாதித்தவை, செய்யாதவை, காலம் கிளர்த்தியுள்ள வரலாற்றுபூர்வமான மாற்றங்கள் ஆகிய வற்றைக் குறித்த துல்லியமான நுணுக்கமான ஆய்வுகள் நமக்குத் தேவை. அவற்றை மேற்கொள்ளும் மனநிலையும் அவசியம் - வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்து இத்தகைய ஆய்வுக்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

பெரியார் நமக்கு வலியுறுத்தியவற்றை இங்கு நினைவுகூர்வது அவசியம் - சாதி, பார்ப்பனியம், இந்துமதம், பணக்காரத்தனம் ஆகிய அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்துள்ளவை யாகும் என்பதை அவர் சளைக்காமல் கூறிவந்தார். பார்ப்பனர்களின் மேலாண்மை, பணக்காரர்களின் ஆதிக்கம், இந்துமதம் சாற்றும் சாதிக்கொரு நீதி ஆகியவற்றை எதிர்ப்பதும், அவற்றுக்கு மாற்றீடாக பொதுவுடைமை, சமதர்மம், பகுத்தறிவு பேசும் அரசியல், சமுதாய செயல்பாடுகள் ஆகியன தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதும் அவசியம் என்பதை தன் வாழ்நாள் முழுக்க சுட்டிக்காட்டினார். அதற்கான செயல் பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் வாதங்களைப் புதிப்பித்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதாக நமது ஆய்வுகளும் விவாதங்களும் அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Pin It