நல்லதே நடக்கும் என்று எண்ணுபவர்களைப்பார்த்து பெல்போர்டு பிரபு கேட்ட கேள்விகளை, இந்து மதக் கோட்பாட்டின் ஆதரவாளர்களைப் பார்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்க முடியும். இன்னும் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்ட மக்கள் அதைவிட அதிகமாகவும் கேட்க முடியும். அவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்க முடியும் : இந்து மதக் கோட்பாடு அவர்களை மனிதர்கள் என்று மதித்து அங்கீகரிக்கிறதா? அவர்களுடைய சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கிறதா? சுதந்திரம் என்பதன் பலனை அவர்களுக்கு விரிவாக்குமா?

குறைந்தபட்சம் அவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சகோதர பந்தத்தை உருவாக்க அது முயற்சி செய்யுமா? தாழ்த்தப்பட்டவர்கள் நம் சகோதரர்கள் என்று இந்துக்களுக்கு அது சொல்கிறதா? தாழ்த்தப்பட்டவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்துக்களிடம் அது கூறுமா? அவர்களிடம் நியாயமாகவும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்துக்களிடம் அறிவுறுத்துமா? அவர்களுடன் நட்புறவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்துக்களின் உணர்வில் புகுத்துமா? அவர்களை நேசிக்கும்படியும், அவர்களை மதிக்கும்படியும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும்படியும் – இந்துக்களுக்கு அது சொல்லுமா? இறுதியாக, எவ்விதப் பாகுபாடுமின்றி வாழ்வின் மதிப்பை இந்துமதக் கோட்பாடுகள் அனைவருக்கும் பொதுவானதாக்குமா?

இத்தகைய கேள்விகளுக்கு எந்த ஓர் இந்துவும் சாதகமான பதிலைக் கூற முடியாது? மாறாக, இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்க நேரிட்ட தீமைகள், இந்து மதத்தினால் அனுமதிக்கப்பட்ட சட்டங்களே ஆகும். அவை இந்து மதக் கோட்பாடு என்ற பெயரில் செய்யப்பட்டதுடன், இந்து மதக் கோட்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டும் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்துக்கள் இழைத்த சட்டப்பூர்வமற்ற நடவடிக்கைகள் சட்டப் பூர்வமாக்கப்பட்ட உணர்வும், பாரம்பரியமும் இந்து மதக் கோட்பாடுகளில் காணப்படுகின்றன; அவை ஆதரிக்கவும் படுகின்றன. இந்து மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அதிலேயே நிலைத்து நிற்கும்படி தாழ்த்தப்பட்ட மக்களை – இந்துக்கள் எவ்வாறு கேட்க முடியும்? தங்களுடைய தாழ்வுக்கு முற்றிலும் பொறுப்பான இந்து மதக் கோட்பாடுகளை தாழ்த்தப்பட்ட மக்கள் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இந்து மதத்தில் இருக்க முடியும்?

தீண்டாமை என்பதுதான் ஒரு மனிதனின் தாழ்வுக்கு அடிப்படை. ஏழையாய் இருப்பது மோசமானதுதான். ஆனால், தாழ்த்தப்பட்டவராக இருப்பதைப்போல அவ்வளவு மோசமானது அல்ல. ஏழையாய் இருப்பவர் பெருமை கொள்ள முடியும். ஆனால், தாழ்த்தப்பட்டவர் அவ்வாறு செய்ய இயலாது. கீழ்மட்டத்தில் இருக்கிறோம் என்று கருதுவது மோசமானது. ஆனால், தாழ்த்தப்பட்டவராய் இருப்பதுபோல அவ்வளவு மோசமானது அல்ல. கீழே இருப்பவர் அவருடைய நிலையிலிருந்து உயர முடியும். ஆனால், தாழ்த்தப்பட்டவர் உயர முடியாது. துயரப்படுவது மோசமானது. ஆனால், தாழ்த்தப்பட்டவராய் இருப்பதைப் போல அது அவ்வளவு மோசமானது அல்ல. இந்த வேதனைகள் என்றாவது ஒரு நாள் மறையும். ஆனால், தாழ்த்தப்பட்டவர் இதையும் எதிர்பார்க்க முடியாது. சாதுவாக இருப்பது மோசமானது. ஆனால், தாழ்த்தப்பட்டவராய் இருப்பதைப் போல அவ்வளவு மோசமானது அல்ல. சாதுவானவர்கள் இந்த உலகைக் கட்டியாள முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் சற்று வலிமையுள்ளவர்களாகவாவது இருக்க முடியும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்த நம்பிக்கைகூட இருக்க முடியாது.

இந்து மதக் கோட்பாடுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய எதுவுமே இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துமதக் கோட்பாடுகளில் இருந்து வெளியேறிச் செல்ல விரும்புவதற்கு இது ஒன்று மட்டுமே காரணம் அல்ல. மற்றொரு காரணமும் இருக்கிறது. அது, இந்துமதக் கோட்பாட்டில் இருந்து அவர்கள் வெளியேறுவதை அவசியம் ஆக்குகிறது. தீண்டாமை என்பது இந்து மதக் கோட்பாடுகளின் ஒரு பகுதியாகும். கற்றறிந்த சீர்திருத்தவாதிகள் என்று தங்களைக் காண்பித்துக் கொள்வதற்காக சிலர், தீண்டாமை என்பது இந்து மதக் கோட்பாடுகளின் ஒரு பகுதி என்பதை மறுக்கிறார்கள்; இவர்களும் தீண்டாமையையே கடைப்பிடிக்கிறார்கள்.

ஓர் இந்து, இந்துமதக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தனக்குக் கீழே பல லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு, பிறரைவிடத் தான் உயர்ந்தவன் என்ற மனோபõவத்தை அதிகரிக்கிறது. ஆனால், தான் இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளவன் என்று தாழ்த்தப்பட்டவர் கூறுவதற்கு என்ன பொருள் இருக்க முடியும்? அதன் பொருள் என்னவென்றால், தான் தாழ்த்தப்பட்டவன் என்பதையும், கடவுளின் முடிவுப்படி தாழ்த்தப்பட்டவனாக இருப்பதையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிறது. ஏனென்றால், இந்து மதக் கோட்பாடுகள் என்பவை கடவுளால் உருவாக்கப்பட்டவை.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 411