childonroadliten_620

எப்படியும் சொல்ல முடியாத வாழ்வின்
துயர்களை நேற்றைப் போலவே
இன்றும் எதிர்கொள்கிறோம்

ஒரு போர்வையால்
அடக்க முடியாதது எங்கள் குளிர்
ஒரு கரையால் தடுக்க முடியாதது
எங்கள்மீது மோதி உடைக்கும் வெள்ளம்
ஒரு குவளைத் தண்ணீரால்
தீர்க்க முடியாதது எங்கள் தாகம்
ஒரு மருந்தால் போக்க முடியாதது
எங்கள் வலி

நிலத்தைத் துளைத்து நீரெடுத்து
விற்கிறவனும்
மணலைக் கடத்தி
ஆறுகளைக் கொன்றவனும்
புகையினைப் பெருக்கி
காற்றில் கார்பனைச் சேர்த்தவனும்
குளிர்பதனத்திலுறங்கி
ஓசோன் ஓட்டையைப் பெருக்கியவனும்
தூரங்களில் பத்திரமாய் தூங்குகிறார்கள்

இயற்கையின்  கோபங்களில்
நாங்களே அடிபடுகிறோம்
தாயிடம் அடிவாங்கும்
மடிப்பிள்ளையைப் போல

எனினும் வாழ்வின் கெட்டிப் பகுதிகளில்
ஆணிகளை அடித்து மாட்டி வைத்திருக்கிறோம்
எங்கள் உடல்களை