இனப்படுகொலை எத்தனை பயங்கரமானதென நாம் அறிந்தே இருந்தோம். அது, மனிதநேயமும் நெறிகளும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் மீறலென நமக்கு தெரியும். வெறுப்புணர்வு எவ்வளவு வீரியமிக்கதென, மனித உயிர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வரலாறு நமக்குச் சொல்லியது. எனினும் மிக அண்மையிலும், மிக அருகிலும் இனப்படுகொலையின் நிகழ்காலப் பேரவலம் நடந்தேறியிருக்கிறது. இனவெறித் தாக்குதல்களின் வரலாறாகப் படித்தறிந்தவை எல்லாம் – இத்தனை நெருக்கத்தில் பார்வைக்கு கிடைக்குமென நாம் நம்பியிருக்கவில்லை. ஈழத்தின் கொலைக் களத்திலிருந்து தெறித்து விழுந்த ரத்தத்தின் கறை, நம் முகங்களில் காய்ந்து அப்பியிருக்கிறது. நாமெல்லோரும் அதை நினைத்து துடித்துப் போகிறோம்.

சக மனிதனை வாழ அனுமதிக்காமல், தலைமேல் குண்டு போட்டு கொலை செய்யும் வெறுப்புணர்வின் ஆழம் நம்மை அச்சுறுத்துகிறது. புத்தரை வழிபட்டு பவுத்த நெறிகளை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றவர்களால் – இப்படியொரு மாபாதகத்தைச் செய்ய முடிகிறதெனில், ஆதிக்கவாதிகளுக்கு மொழியோ, மதமோ, இனமோ பொருட்டில்லை. எங்கிருந்தாலும் அவர்கள் அழிவை மட்டுமே நம்புகின்றனர். சிங்கள இனவெறி இதயத்தை கழுவ முடியாமல் பவுத்தமே தோற்று நிற்கையில், இந்தியாவின் சாதி இந்துக்களை அவர்களின் ஆதிக்கச் சிந்தனையிலிருந்து எந்த தத்துவமும் விடுவித்துவிட முடியுமா? இனப்படுகொலை என்பதை எங்கோ தன் எல்லைக்கு வெளியே நடக்கும் குற்றமாகப் பார்க்கும் இந்தியர்களே – தமிழர்களே... உங்கள் கரங்களில் ஜாதியின் பெயரால் இரண்டாயிரம் ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்களுக்கும், இனப்படுகொலைக்கும் இரையாகி வரும் தலித் மக்களின் நிலை – சற்றேனும் உங்கள் சுரணையைத் தொட்டிருக்கிறதா? 

Marichjhapi-11தினம் தினம் செத்துப் போவதும், பூண்டோடு அழிக்கப்படுவதுமாக வரலாறு முழுக்கவே ரத்தக் கறைகளைச் சுமந்த தலித் மக்களின் வாழ்நிலைக்கு ஒரு கொடூர சாட்சியே சுந்தர்பான் – மரிச்ஜாப்பி படுகொலைகள்! காலனிய இந்தியாவில் வெள்ளையர்களால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைப் பற்றி வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு, பிறக்கும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்கும் அது பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. ஆனால், சுதந்திர இந்தியாவில், தன் சொந்த மக்களை ஓர் அரசே கொன்று குவித்த கொடுமை – வரலாற்றின் நினைவடுக்குகளில் இருந்து வலிந்து மறைக்கப்பட்டுவிட்டது. இவ்வினப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் ஆதிக்க சாதியினரே என்றாலும், அவர்களுக்கு நம்ப முடியாததொரு சிறப்புத் தகுதி இருந்தது.

அவர்கள் உலகின் ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கும் பொதுவுடைமைவாதிகள்! இந்நாட்டின் இழிவான மத அரசியலுக்கு எதிரானவர்களாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள்! ஆயிரக்கணக்கான தலித் மக்களை

வன்முறைக்கும் பட்டினிக்கும் இரையாக்கிய அந்த அரச பயங்கரவாதம் நிகழ்ந்து 31 ஆண்டுகள் கடந்துவிட்டன! இந்தியாவின் எல்லா சாதியப் படுகொலைகளைப் போலவும் இடதுசாரி அரசு நிகழ்த்திய மரிச்ஜாப்பி இனப்படுகொலையும் – காலத்தின் ஆழத்தில் காணாமல் புதைக்கப்பட்டு விட்டது. மேற்கு வங்க வரலாற்றையும், மரிச்ஜாப்பியின் பின்னணியையும் தேடிப் பயணிக்கும் எவரையும் உலுக்கி விடுகின்றன, இந்திய இடதுசாரிகளின் உண்மை முகம்!

கம்பீரமான வங்கப்புலி உலவும் உலகின் உயிரியல் அதிசயமாகப் போற்றப்படும் சுந்தர்பான் காடுகள் – மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கின்றன. வனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு இங்கு பெருமளவில் தலித் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடாகக் கருதப்படும் சுந்தர்பானின் கிழக்குப் பகுதியில், பங்களாதேஷ் எல்லையை ஒட்டி, கொல்கத்தாவிலிருந்து சரியாக 75 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமைதியான தீவு மரிச்ஜாப்பி. ஓர் ஊரை அடையாளப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கும். ஆனால், மரிச்ஜாப்பி என்றாலே மனிதப் படுகொலைகள் என அர்த்தப்படுமளவிற்கு இங்கு நடந்தேறின பேரவலங்கள்! 1978 – 79 களில் இத்தீவில் அடைக்கலமாகியிருந்த தலித் அகதிகளை கொத்துக் கொத்தாகக் கொன்று போட்டது, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு. இன்று ஈழத்தின் நிலையும் அன்று மரிச்ஜாப்பியின் நிலையும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில், மரிச்ஜாப்பியின் அகதிகளும் இந்நாட்டை தங்களின் சொந்த மண் என நம்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் உழைப்பாளிகளாகவும், உவர் நிலத்திலிருந்து பயிர்களை விளைவித்துவிடும் வல்லமைமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். அவர்களின் எழுச்சியும் வளர்ச்சியும் அரசுக்கும், ஆதிக்கத்திற்கும் சவாலாக அமைந்தது. அதிகாரத்தில் தங்களுக்கான பங்கைக் கோரும் உறுதியும் துணிவும் நிரம்பக் கொண்டிருந்தனர்.

அவர்களின் எழுச்சி, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குறியீடாக மாறியிருந்தது. அதனாலேயே அவர்கள் பசியால் சாகும்படி கைவிடப்பட்டனர். அதனாலேயே வன்முறை எனும் ஆயுதம் அவர் களை வேட்டையாடிக் கொன்றது. இந்திய ஒருமைப்பாட்டின் அடிப்படைத் தத்துவமே சாதியால் அரிக்கப்பட்டிருக்கும்போது, யாராக இருந்தால் என்ன, அவர்கள் எந்த கொள்கையைக் கொண்டிருந்தால்தான் என்ன, சாதி இந்துக்களுக்கு தலித் மக்களெனில் தீண்டத்தகாத அடிமைகள்தான். சொந்த நாட்டிலேயே அகதியைப் போலத்தான் ஒவ்வொரு தலித்தும் வாழ்ந்து வருகிறார் எனினும், மரிச்ஜாப்பியில் படுகொலை செய்யப்பட்ட தலித் மக்கள் திட்டமிட்டே அகதிகளாக்கப்பட்டனர்.

நாமசூத்திரர்கள் – இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் என நான்கு நாடுகளிலும் வாழும் தலித் மக்கள். 2010 கணக்கெடுப்பின்படி, இவர்களின் மொத்த மக்கள் தொகை 80 லட்சம். நாமசூத்திரர்கள் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மாநிலங்களின் சில பகுதிகளிலும் சிதறி இருக்கின்றனர். எனினும், வேறெந்தப் பகுதியையும் விட இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். ஏனென்றால், பிரிவினைக்கு முன்னான இந்தியாவில் வங்காளம்தான் இவர்களின் பூர்வீக மண். இஸ்லாமிய நாடான பங்களாதேஷில் இன்று பெரும்பான்மை இந்து சமூகமாக வாழும் நாமசூத்திரர்கள் – இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கும், சொந்த மண்ணிலிருந்து சிதறடிக்கப்பட்டதற்கும் காரணம், அன்று அவர்கள் வாழ்ந்த சுயமரியாதைமிக்க வாழ்வு.

சாதிப் பிரிவினையும், வன்கொடுமைகளும், தீண்டாமையும் வீரியமிக்கதாக இருந்து தலித் மக்களை வன்மையாக வதைத்த காலகட்டத்திலும் சமூகத் தளத்திலிருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நாமசூத்திரர்கள், தடைகளைக் கடந்து இயங்கத் தொடங்கினர். அதற்கு காரணம், இச்சமூகத்தில் பிறந்த ஹரிசந்த். செல்வாக்கும் துணிவும் இரண்டறக் கலந்த இவர்தான் தன் மக்களுக்கு எழுச்சியையும், சுயமரியாதை உணர்வையும் கற்றுத் தந்தார். கல்வி என்பது சாதி இந்துக்களின் பாட்டன் வீட்டு சொத்தாக இருந்த நிலைமையை உடைத்து, ஹரிசந்த் குடும்பத்தாரின் வழிகாட்டுதலின்படிதான் அய்யாயிரம் பள்ளிகளை வங்காளத்தின் நாமசூத்திரர்கள் நிறுவினர்.

1905 ஆம் ஆண்டிலிருந்து மகன் குருசந்த், தந்தை வழியிலேயே தன் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் உழைக்க, நாமசூத்திரர்களின் சமூக, பண்பாட்டு எழுச்சிக்கு அதுவே வித்திட்டது. கல்வியையும் சுயமரியாதையையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த மக்களை, அரசியல் பாதைக்கு மடைதிருப்பினார், அப்போதைய முக்கியமான தலித் தலைவரான ஜோகிர்நாத் மண்டல். ஒருங்கிணைந்த வங்காளத்தின் கிழக்குப் பகுதியில், கடும் உழைப்பாளிகளாக விவசாயம் மற்றும் பிற உற்பத்தித் தொழில்களிலும் ஈடுபட்டு வந்த நாமசூத்திரர்கள், மண்டலின் வழித்தடத்தில் ஓர் இயக்கமாகக் கிளர்ந்தெழுந்து, சாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமை எதிர்ப்பை ஒரு பண்பாட்டுத் தேவையாகவும் மாற்றமாகவும் நிகழ்த்திக் காட்டினர். சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் இந்தியாவிலும், நாமசூத்திரர்கள் இயக்கம் தவிர்க்க முடியாத அரசியல் இயக்கமாகத் திகழ்ந்தது.

நிலச்சுவான்தார்களான சாதி இந்துக்களின் தார்மீக ஆதரவுடன் அவர்களின் நலன்களை மட்டுமே பாதுகாத்த காங்கிரசின் தலைமையை டாக்டர் அம்பேத்கர் நிராகரிப்பதற்கு முன்னரே, நாமசூத்திரர்கள் இயக்கம், அரசியல் ரீதியாக அதை செயல்படுத்திக் கொண்டிருந்தது. வங்காளத்தின் பணக்கார சாதி இந்துக்களான "பத்ரலோக்ஸ்' (பார்ப்பனர், கயாஸ்தா, வைஸ்யா) நாமசூத்திரர்களின் கட்டற்ற கிளர்ச்சியால் கடுப்பேறிப் போயிருந்தனர். அவர்கள் வங்காள காங்கிரசின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்தபடி, காலனிய இந்தியாவின் கல்வி, நீதித்துறை, அதிகாரம், உள்ளாட்சி என எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கவும், எந்த நலனும் தலித் மக்களை எட்டிவிடாதவாறு தடுக்கவும் பிரிட்டிஷ் அரசோடு பேரம் நடத்தினர். சாதி இந்துக்களின் இந்த சூழ்ச்சியையும் ஆதிக்கத்தையும் உடைக்க கடுமையாகப் போராடியது நாமசூத்திரர்கள் இயக்கம்.

எந்த அதிகாரப் பின்னணியுமின்றி, இன்னும் சொல்லப்போனால் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டபடியே நாமசூத்திரர்கள் இயக்கம், தனக்கென அரசியல் தளத்தில் ஓரிடத்தை உருவாக்கி வைத்தது. வங்காளத்தின் பெரும்பான்மை முஸ்லிம்கள், தீண்டத்தகாதவர்களாக இருந்து மதம் மாறியவர்கள். மதம் மாறியிருந்தாலும் சமூக வாழ்விலும், பொருளாதார நிலையிலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்தனர். சாதி இந்துக்களின் மீது இயல்பாகவே இருந்த வெறுப்புணர்வு, நாமசூத்திரர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்தது. இதனால் 1920 தொடங்கி சுதந்திரம் கிடைக்கும் வரையிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருந்தது. இந்த அரசியல் பலமே டாக்டர் அம்பேத்கர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவும், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்கவும் அடிப்படையாக அமைந்தது.

ambedkar_johindarnath

சுதந்திர இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்க, 1946 ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அச்சபை சுதந்திர இந்தியாவின் தற்காலிக மக்களவையாக செயல்படும் தகுதியையும் பெற்றிருந்தது. மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தற்காலிக மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இடம்பெறும் அவசியத்தை உணர்ந்திருந்த டாக்டர் அம்பேத்கர், எப்படியேனும் இந்த அவையில் இடம் பெற்றுவிட முயன்று கொண்டிருந்தார். ஆனால், தலித் மக்கள் பெரும்பான்மை அல்லாத மகாராட்டிர மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் இருந்தது. அதோடு, சர்தார் படேலின் அறிவுரையின்படி பி.ஜி.கேர் தலைமையிலான மகாராட்டிர அரசு, அம்பேத்கருக்கு எதிராக முனைப்போடு செயல்பட அவருடைய வெற்றி தடுக்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரின் இருப்பு வரலாற்றுத் திருப்புமுனையாகவும், சமூக மாற்றத்திற்கான விதையாகவும் அமையப் போகும் முக்கியமான தருணத்தில் அவருக்கு கைகொடுத்தார், நாமசூத்திரர்கள் இயக்கத்தை வழிநடத்திய ஜோகிர்நாத் மண்டல். தனது மாநிலத்திலிருந்து அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக முழு மூச்சோடு செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டார். அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்து, இந்திய நாட்டில் ஆதிக்க சாதி இந்துக்களால் துடைத்தெறியப்பட்ட ஜனநாயகத்தை அம்பேத்கர் மீட்டெடுக்க ஒரே காரணம் நாமசூத்திரர்கள் என்றால் அது மிகையல்ல.

நாமசூத்திரர்களின் எழுச்சி, சாதி இந்துக்களுக்கு எரிச்சலையும் அவமானத்தையும் மனக் கொதிப்பையும் உண்டாக்கியது. வெள்ளையர்கள் இந்தியாவின் கைகளைக் கட்டியிருந்த விலங்கை உடைத்த நொடி, ஆதிக்க சாதியினர் சற்றும் தாமதிக்காமல் சாதிய சாட்டையை கையிலெடுத்துக் கொண்டனர். சாதி இந்துக்களின் சுதந்திர இந்தியா, தலித் மக்களுக்கு பெருஞ்சிறையாக மாறியது. அது, சாதியைத் தகர்த்தெறிந்த நாமசூத்திரர்களை இன்னும் மோசமாகப் பழிவாங்கியது. 1947 இல் சுதந்திரம் கிடைத்த உடனேயே பிரிவினைக்கான முழக்கங்களும், போராட்டங்களும் தீவிரமடைந்தன. வங்காளத்தின் சாதி இந்துக்கள் தங்களின் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென வலியுறுத்தியதற்கு ஒரே காரணம் நாமசூத்திரர்கள் மட்டுமே. தலித் மக்களின் சுதந்திர உணர்வு எந்த அளவிற்கு சாதி இந்துக்களை அச்சுறுத்தியிருந்தது எனில், ஆதிக்க சாதியினர் அதிகமுள்ள வங்காளத்தின் மேற்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், நாமசூத்திரர்கள் அதிகளவிலும் அதிகாரத்திலும் இருந்த கிழக்குப் பகுதியை பாகிஸ்தானோடு இணைக்கவும் திட்டமிட்டு காய் நகர்த்தும் அளவிற்கு. அதன்படியே மேற்கு வங்காளம் இந்தியாவோடும், கிழக்கு வங்காளம் பாகிஸ்தானோடும் பிரிந்தது.

பிறப்பால் இந்துக்களான நாமசூத்திரர்கள், பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினராகக் கைவிடப்பட்டனர். நாமசூத்திரர்களை விரட்டிவிட்டு மேற்கு வங்கத்தை கைப்பற்றிய சாதி இந்துக்கள், ஆட்சி அதிகாரத்தின் எல்லா கிளைகளிலும் அமர்ந்தனர். அன்று தொடங்கி இன்று வரையிலும் பார்ப்பனர், கயாஸ்தா, வைசியா ஆகிய மூவரின் கைகளில்தான் மேற்கு வங்கம் சிக்கியிருக்கிறது. ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் அவர்களே இருக்கின்றனர். காங்கிரஸ்காரர்களாகவும், இடதுசாரிகளாகவும் இரு எல்லைகளையும் ஆக்கிரமித்திருக்கின்றனர். மேற்கு வங்க அமைச்சரவையில், காங்கிரஸ் ஆட்சியின் போது 78 சதவிகிதமாக இருந்த "பத்ரலோக்'கின் எண்ணிக்கை இடதுசாரிகளின் ஆட்சியின் போது 90 சதவிகிதமாக அவர்களுடைய பிரதிநிதித்துவம் உயர்ந்ததிலிருந்தே இதன் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஓரிடத்தில் செழிப்பாக வாழும் மக்கள் அங்கிருந்து துண்டிக்கப்படும்போது, அவர்களுக்கான முதல் துயரம் தொடங்குகிறது. பாகிஸ்தானோடு அனுப்பப்பட்ட நாமசூத்திரர்கள், தங்களின் அத்தனை கால உழைப்பு, உழைப்பின் பலன்; கிளர்ச்சி, கிளர்ச்சியின் பலன்; போராட்டம், போராட்டத்தின் பலன் என எல்லாவற்றையும் இழந்து நின்றனர். சாதி இந்துக்களின் இந்த சூழ்ச்சியும், தங்களின் நாடே தங்களை கைவிட்ட துரோகமும் கடுமையான மனச்சோர்வுக்கு அவர்களை தள்ளியது. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து ஆண்டாண்டு காலமாகப் போராடி அடைந்தவற்றை எளிமையாக பலி கொடுத்து, மத ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் திராணியை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. என்னதான் இந்துக்களுக்கு எதிராகப் போராடியவர்களாக இருந்தாலும், பாகிஸ்தானில் நாமசூத்திரர்கள் இந்துக்கள்தானே. இதனால் இந்தியாவாலும் வெறுக்கப்பட்டு, பாகிஸ்தானாலும் மறுக்கப்பட்டு கையறு நிலைக்கு வந்தனர் நாமசூத்திரர்கள்.

பிரிவினையின் பாதிப்பு, அடுத்த 30 ஆண்டுகளுக்கான சமூக – பொருளாதார நெருக்கடியாக மக்களை வதைத்தது. பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும் தத்தம் நாடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் உணவு, நிலம் என எல்லாமே பற்றாக்குறையாக மாறின. ஒரு நாடு இரண்டாகப் பிரிந்த வெறுப்புணர்வின் எச்சங்கள் எங்கும் சிதறிக் கிடந்த நிலையில், 1971இல் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து கிழக்கு வங்காளம், வங்காளதேசமாக (பங்களாதேஷ்) தனி நாடு கண்டது. இதிலும் பாதிக்கப்பட்டவர்கள் நாமசூத்திரர்கள்தான். ஏனெனில், அவர்கள் கோலோச்சிய இடமான கிழக்கு வங்காளம் இப்போது அவர்களுடையது அல்ல. வெளிப்படையாக அதுவொரு முஸ்லிம் நாடு! ஒருங்கிணைந்த வங்காளத்தில் முஸ்லிம்களோடு இருந்த இணக்கம், மதப் பிரிவினையில் அழிந்து போயிருந்தது.

வசதி வாய்ப்புகளோடு இருந்த சாதி இந்துக்கள், கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்தியாவிற்கு எளிதாக திரும்பிவிட, தங்கள் இடத்தை விட்டு வர முடியாமல் தவித்த நாமசூத்திரர்கள், அங்கே இரண்டாந்தரக் குடிமக்களாகக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் வேறு வழியே இல்லாமல், இந்தியாவிற்கு அகதிகளாகத் திரும்பும் சூழல் ஏற்பட்டது. போராட்டம் தான் எனினும், தாங்கள் செருக்கோடு இருந்த நாட்டில் வாழ்வது ஒன்றே அவர்களுக்கான ஒரே ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. உழைக்க அஞ்சாதவர்கள் என்பதால், நாடு திரும்பும் வாய்ப்பு கிடைத்தால் தரிசிலும் விதைத்து இழந்ததை மீட்கும் ஆவலோடு அவர்கள் காத்திருந்தனர்.

அகதிகளாகத் திரும்பிய நாமசூத்திரர்களை மேற்கு வங்கம் எப்படி வரவேற்றிருக்கும் என நம்மால் கணிக்க முடிகிறது. அரசியல் அதிகாரத்தோடு வாழ்ந்த அடிமைகளைப் பார்த்து வயிறெரிந்த ஆதிக்க சாதியினர், பதிலடி கொடுக்க இப்போது தயாராகக் காத்திருந்தனர். பிரிவினையின் முதல் கட்டமாக அகதிகளாக வந்த சாதி இந்துக்கள், கொல்கத்தாவை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாகக் குடியேற அவர்களுக்கு அந்நிலங்களை வழங்கி, எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த அப்போதைய மேற்கு வங்க காங்கிரஸ் அரசு, நாமசூத்திரர்களை தங்கள் மாநிலத்திலிருந்து விரட்டிவிட முயற்சிகளை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் பி.சி. ராய், அப்போதைய பிரதமர் நேருவுக்கு, “அவர்களை குடியமர்த்த எங்களிடம் இடமில்லை. வேறு மாநிலங்களுக்கு அனுப்புங்கள்'' என்று கடிதம் எழுதினார். வங்காள மொழி பேசும் நாமசூத்திரர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு மாநிலங்களில் குடியமர்த்தும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும் சாதி இந்துக்களின் வெறுப்புணர்வும், அவர்கள் கைவசம் இருந்த அரசு அதிகாரமும் வலிந்து அவர்களை ஒரிசா, சட்டீஸ்கர், உத்ராஞ்சல், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது. சிங்கள இனவெறி அரசின் இன்றைய முகாம்களில் மனித உரிமைகள் சிதைக்கப்பட்டு வாழும் ஈழ மக்களைப் போலவே, அன்று நாமசூத்திரர்கள் மேற்கு வங்காளத்திலும் வேற்று மாநிலங்களிலும் முகாம்களில் உழன்றனர். குற்றவாளிகளைப் போல எந்நேரமும் காவல் துறையினரின் துப்பாக்கி அவர்களை குறி பார்த்திருந்தது. அகதி முகாம்கள், வாழ்வு மறுக்கப்பட்ட வதைக்கூடங்களாக நாமசூத்திரர்களை வதம் செய்தன. ஒவ்வொரு மாநில அரசும், நாமசூத்திரர்களுக்கான அடிப்படை வசதிகளையும், உரிமைகளையும் மறுப்பதன் மூலம் – தன் மாநிலத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கு அவை ஏதோவொன்றை கற்பிக்க முனைந்தன எனலாம். வாழ்வதற்கான எல்லா சாத்தியங்களையும் இழந்ததோடு, சாதி ஆதிக்க அரசின் வன்முறைகளுக்கும் ஆளாகினர்.

வேற்று மாநிலங்களின் அகதி முகாம்களை விட்டு மேற்கு வங்கத்திற்கு தப்பிச் செல்ல நினைத்தவர்கள், காவல் துறையால் கொல்லப்பட்டனர். முகாம்களில் வசதிகளைக் கோரியவர்கள் துன்புறுத்தப்பட்டனர். அகதிகளுக்கு இடம் கொடுக்க அரசைப் போலவே மக்களும் விரும்பாத நிலையில், முகாம்கள் தரிசு நிலத்திலேயே அமைக்கப்பட்டன. குடிசைகளிலும், தார்ப்பாலின் குடில்களிலும் ஆடு, மாடுகளைப் போல அடைக்கப்பட்டனர். அகதிகள் தப்பிவிடாதவாறு முகாம்களைச் சுற்றிலும் முள்வேலிக் கம்பிகள் பாதுகாத்தன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தரிசு நிலத்தில் அரும்பாடுபட்டுத்தான் விவசாயம் செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் விவசாயிகளே என்றாலும் தட்பவெட்பமும், பழக்கப்படாத நிலத்தின் தன்மையும் நாமசூத்திரர் அகதிகளின் துயரத்தை அதிகரித்தன. அப்படி விளைவித்த பொருட்களையும் உள்ளூர்வாசிகள் காவல் துறையின் துணையோடு கொள்ளையடித்துச் சென்றனர். அகதிகளுக்கென ஒதுக்கப்பட்ட மானியங்களிலும், நிவாரணப் பொருட்களிலும் கடுமையான ஊழல் நடந்தது. குறைந்தபட்ச பலன்கள் கூட பாதிக்கப்பட்டவர்களை வந்து சேரவில்லை. உரிமைகளுக்காக நாமசூத்திரர்கள் நடத்திய எல்லா போராட்டங்களும் வன்முறையிலேயே முடிந்தன. துப்பாக்கிச் சூட்டையும் சிறை தண்டனையையும் அன்றாட நிகழ்வாகக் கடந்து போனார்கள் நாமசூத்திரர்கள். இக்காலகட்டத்தில் பல மாநிலங்களின் சிறை முகாம்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டுகிறது.

மேற்கு வங்காளம் நாமசூத்திரர்களை வரவேற்கவில்லை எனினும், பழகிய மொழி, பண்பாடு, நிலம், தட்பவெட்பம் இவற்றை மீறி இம்மக்கள் அங்கு திரும்பிவிட விரும்பியதற்கு ஒரு வலுவான காரணமிருந்தது. நாமசூத்திரர்கள் என்ற சாதிப் பிரிவு, அம்மக்கள் அகதிகளாக இருந்த மாநிலங்களின் எஸ்.சி./எஸ்.டி. பட்டியலில் இல்லை. இதனால் இடஒதுக்கீட்டின் பலன்களையும் அனுபவிக்க முடியாமல் தவித்தனர். மேற்கு வங்கத்தில் மட்டுமே அதற்கான வாய்ப்பிருந்ததால், நாமசூத்திரர்களின் அதிகபட்ச கனவு சொந்த மாநிலத்திற்கு திரும்பிவிட வேண்டுமென்பதாகவே இருந்தது. பிற மாநிலங்கள், அகதிகளை வேண்டா வெறுப்பாகக் குடியமர்த்தி துன்புறுத்தி வந்த நேரத்தில், மேற்கு வங்க இடதுசாரிகள் நாமசூத்திரர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். 1960களின் பிற்பகுதியில் தொடங்கி 70களின் மத்திய காலம் வரையிலும் மிகத் தீவிரமாக இப்பிரச்சாரம் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள், வங்காளம் பேசும் எல்லா அகதிகளையும் தன் மாநிலத்தில் குடியமர்த்துவது சாத்தியம் எனக் கூறி, பகிரங்கமாக அதற்கு அழைப்பும் விடுத்தனர். தாங்கள் ஆட்சிக்கு வரும்போது, அகதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.

அகதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்த நினைத்தது சி.பி.எம். பிற மாநிலங்களில் குடியமர்த்தப்பட்ட அகதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் – ஏற்கனவே மேற்கு வங்கத்தில் உள்ள அவர்களின் உறவினர்களையும், சமூகத்தினரையும் வாக்கு வங்கியாக மாற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைத்த இடதுசாரிகளின் கணிப்பு தவறவில்லை. இதற்காக அவர்கள் கடுமையாக உழைத்தனர். தண்டகாரண்யாவில் இருந்த முகாமொன்றுக்குச் சென்று மேற்கு வங்காளத்திற்கு வருமாறு நேரடியாக அகதிகளை அழைத்தபோது, மக்கள் நெகிழ்ந்து போனார்கள். இந்த அழைப்பை மிக நேர்மையானதாகவே அவர்கள் கருதினர். அதுவரை ஆட்சியை தக்க வைத்திருந்த காங்கிரசை வீழ்த்தி, 1977 ஆம் ஆண்டு முதன்முறையாக ஆளுங்கட்சி இருக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பிடித்ததற்கு, அகதிகள் ஆதரவுப் பிரச்சாரத்தின் பலனும் ஒரு முக்கியக் காரணம். இந்த வெற்றியை இடதுசாரிகளை விடவும் அகதி மக்களே பெரிதும் கொண்டாடினர்.

வங்காளம் பேசும் எல்லா அகதிகளையும் குடியமர்த்த மேற்கு வங்கத்தில் இடமிருக்கிறது என்ற இடதுசாரிகளின் வார்த்தைகளால், நல்வாழ்வு பிறந்துவிட்ட நம்பிக்கையோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து குறிப்பாக தண்டகாரண்யாவிலிருந்து தலித் அகதிகள் மேற்கு வங்கத்திற்கு வரத் தீர்மானித்தனர். அகதிகள் தாங்களே உருவாக்கின "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' என்ற அமைப்பின் உறுப்பினர்களை மேற்கு வங்க அரசோடு இது குறித்துப் பேச அனுப்பி வைத்தனர். சுந்தர்பான் காடுகளில் இருந்த மரிச்ஜாப்பிதான் குடியேறுவதற்கான அவர்களின் தேர்வாக இருந்தது. இதை ஏற்கனவே பல கூட்டங்களில் சி.பி.எம். மற்றும் அகதி மக்களின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இடதுசாரிகளோடு இணைந்து அகதி தலைவர்கள் மேற்கொண்ட ஆய்வை முன்வைத்து, எல்லா அகதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் இடமிருக்கிறது என சி.பி.எம். உறுதியாக வாதிட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அகதிகள் விஷயத்தில் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு பெரிய ஆர்வம் எதையும் காண்பிக்கவில்லை. அதோடு அவர்கள் எதை நினைத்துப் பிரச்சாரம் செய்தார்களோ அதை அடைந்துவிட்டதால், இப்போது அவர்களின் அழைப்பில் மாற்றமிருந்தது. அதாவது, "அகதிகள் வரலாம். ஆனால், அவர்களாகவே குடியேறிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் அவர்களோடு ஒத்துழைக்காது' என்றனர். ஆனால் இதை எச்சரிக்கையாக அன்றி அழைப்பாக ஏற்று, மேற்கு வங்கத்தின் சுந்தர்பான் காடுகளை நோக்கி கிளம்பிய நாமசூத்திரர்களுக்கு அங்கே காத்திருந்தது – துரோகமும், வன்முறையும், பட்டினியும் மரணமும் கூடிய அரச பயங்கரவாதம்!

Marichjhapi-15தங்களின் அகதிகள் ஆதரவு பிரச்சாரத்திற்கு எத்தனை மரியாதை இருக்கிறது என்பதை தேர்தலின் வெற்றியைக் கொண்டே மார்க்சிஸ்டுகள் கணித்திருக்க வேண்டும். ஆனால், மறுகுடியமர்த்தலுக்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் அமைதி காக்க, அகதிகளோ ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக மேற்கு வங்கம் வந்தடைந்தனர். அவர்களின் வருகை வாசலிலேயே தடுக்கப்பட்டது. தங்கள் எல்லைக்குள் வரவிடாமல் அரசு தடுத்து நிற்க, பட்டினியோடு ரயில் நிலையங்களிலேயே தங்க வேண்டிய சூழலுக்கு அகதிகள் தள்ளப்பட்டனர்.

எங்கிருந்து வந்தோமோ அங்கே திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு துளியும் இல்லை. பிரிவினை தங்களின் எல்லா உடைமைகளையும் சுரண்டிக் கொண்ட நிலையில் எஞ்சியவற்றை விற்றுத்தான் அவர்கள் மேற்கு வங்கம் வந்திருந்தனர். மார்க்சிஸ்ட் அரசு இரு கைகளை நீட்டி தங்களை அரவணைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு வந்த நிமிடமே பொசுங்கிப் போனது. துப்பாக்கி ஏந்திய மேற்கு வங்க காவல் துறை மூர்க்கமாக அவர்களை ரயில் நிலையங்களில் இருந்து விரட்டியது. தண்ணீரும் உணவுமின்றி தவித்த ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்த அடி நகர முடியாமல் அப்படியே உறைந்து நின்றனர். நம்பிக்கைத் துரோகம் தந்த வலியும், பட்டினிக் கொடுமையும் முற்றிலுமாக அவர்களை முடக்கின. துப்பாக்கிச் சூட்டிலும், பசியிலும் இறந்து போனவர்களுக்கு இதுவரையிலும் கணக்கில்லை!

மார்க்சிஸ்ட் அரசின் ஒடுக்குமுறைகளையும் மீறி சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் மரிச்ஜாப்பியை அடைந்தன. இவர்கள் காவல் துறையின் கண்களில் படாமல் தண்டவாளங்களின் வழியே பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தே வந்தனர். எடுத்துச் செல்லவும் எதுவுமில்லை, சென்ற இடத்திலும் ஒன்றுமில்லை என்றபோதும் மரிச்ஜாப்பி மண்ணில் தலித் அகதிகள், தங்கள் உழைப்பனுபவத்தால் அடுத்த சில மாதங்களிலேயே ஒரு மாயத்தை நிகழ்த்திக் காட்டினர். அவர்களுக்கு வேண்டியிருந்ததெல்லாம் சொந்த மண்ணில் இளைப்பாற ஒரு காணி நிலம். அந்த இடம் எத்தனை சீர்கெட்டதாக இருந்தாலும் அதை செழுமைப்படுத்திக் காட்டும் திறன் அவர்களிடம் நிரம்பியிருந்தது. மேற்கு வங்கத்திலேயே வளர்ச்சியற்ற ஏழ்மை மிகுந்த பகுதியாக இருந்த மரிச்ஜாப்பியை, அரசின் எந்த உதவியுமின்றியே வளர்ச்சி மிக்க பகுதியாக மாற்றிக் காட்டினார்கள். வெறும் சில மாதங்களிலேயே அங்கே மீன் பிடி துறை உருவானது; உப்பளங்கள் தோன்றின; கிணறுகள் வெட்டப்பட்டன; மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் கட்டி முடித்தனர். கடுமையான உழைப்பாளிகளான நாமசூத்திரர்கள், கையறு நிலையிலும் நம்ப சாத்தியமற்ற பொருளாதாரத்தை கட்டமைத்தனர்.

இந்தியாவின் அவலம் என்னவெனில், இங்கே சீர்த்திருத்தவாதிகளாக முன்னிற்பதும் சாதி இந்துக்கள்தான்! முதலாளித்துவத்தையும் ஆதிக்கத்தையும் ஆதரிக்கும் வலது சிந்தனையை எதிர்த்து பொருளாதார சமத்துவத்தை கொள்கையாக முன் வைத்து மார்க்சியம் பரவியபோது, இந்தியாவின் சாதி இந்துக்கள் அதையும் கைப்பற்றிக் கொண்டனர். அடிமைகளுக்கான விடுதலைக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளையும் ஆதிக்கவாதிகளே எடுத்துக் கொள்வார்களெனில், அந்த தத்துவத்தின் கதி என்னவாகும் என்பதற்கு இந்தியாவின் இடதுசாரிகளே சாட்சி. ஏழை பணக்காரன் என்ற இரண்டே பிரிவுகள் கொண்ட நாடுகளுக்கான இடதுசாரித் தத்துவம் இந்தியாவிற்கு துளியும் பொருந்தாததன் காரணம், இங்கு "பணக்கார தலித்' அடிமையாக இருக்கும்போது, "ஏழை சாதி இந்து' ஆண்டானாக ஆட்டுவிக்கிறான். பொதுவுடைமை என்பது உடைமைகளைத்தான் பொதுவாக்குகிறது; உரிமைகளை அல்ல என்பதால் அக்கொள்கையை எந்த வகையிலும் சாதியத்தோடு பொருத்திப் பார்க்க முடியாது. மேற்கு வங்க "பத்ரலோக் மார்க்சிஸ்டு'களின் மூளையில் ஊறிப் போயிருந்த சாதிய வன்மம் மறுபடியும் நாமசூத்திரர்களை பலியெடுக்கக் கிளம்பியது.

இடதுசாரிக் கொள்கை நியாயத்தின்படி நாமசூத்திரர்களின் உழைப்பும், சுய பொருளாதார முனைப்பும், மக்கள் வளர்ச்சித் திட்டங்களும் பெரும் மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், எப்படியேனும் இந்த வளர்ச்சியை தடுத்துவிட நினைத்த மார்க்சிஸ்ட் அரசு, அதிரடியாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

சுந்தர்பான் காடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்த மரிச்ஜாப்பி – மேற்கு வங்க அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றும், தலித் அகதிகள் வனச் சட்டத்தை மீறுவதாகவும், வனத்தின் வளங்களுக்கு கேடு விளைவிப்பதாகவும், உயிரியல் சமன்பாட்டை சிதைப்பதாகவும் திடீர் சுற்றுச்சூழல் ஆர்வலராகிக் குற்றம் சாட்டியது. ஆனால், அது உண்மையில்லை என மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும், தலித் அகதிகளுக்கும் தெரிந்தே இருந்தது. மரிச்ஜாப்பி – பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லைக்குள் இல்லை. இடமில்லை என அடித்து விரட்டியும் பிடிவாதமாகக் குடியேறி அங்கேயும் வாழ்ந்து காட்டிய நாமசூத்திரர்களால் மார்க்சிஸ்ட் அரசின் முகமூடி கிழிந்து போனதே இப்பொய்ப் பிரச்சாரத்திற்கு காரணம்.

மரிச்ஜாப்பியையும் அங்கு வாழ்ந்த தலித் அகதிகளையும் மொத்தமாக அழித்துவிடும் நோக்கத்தோடு முற்றிலுமாக பொருளாதாரத் தடையை அறிவித்தது மேற்கு வங்க அரசு. இதனால் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மரிச்ஜாப்பியை சிறைக் கூடமாக்கி சுற்றி வளைத்தது காவல் துறை. ஏறக்குறைய முப்பது காவல் படைகள் மாதக் கணக்கில் இருந்து நாமசூத்திரர்களின் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மீன்பிடித் துறை, உப்பளங்கள் என எல்லாவற்றையும் சிதைத்தன. குடிசைகளைப் பிய்த்தெறிந்து, தண்ணீரும் உணவும் கிடைக்காதவாறு வாழ்வாதாரங்களை நொறுக்கி, தடுத்தவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி துன்புறுத்தின. தப்பிச் செல்ல முயன்றவர்கள் சற்றும் தாமதிக்காமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சொல்லித் தெரிய வேண்டியதில்லை, இப்படியொரு பயங்கரவாதம் நடக்கும்போது, செத்து மடிவதற்கு முன் காவல் துறையால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களின் கதையை! அழித்தொழிப்பது ஒன்றே குறிக்கோளான பின், அதற்கென நியாயங்கள் இருக்குமா என்ன? ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் காரணமே இல்லாமல் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டனர். பச்சைத் தண்ணீர்கூட கிடைக்காமல் நாவறண்டு சுருண்டு விழுந்தனர் பலரும். உணவையும் தண்ணீரையும் தேடி பக்கத்து தீவுகளுக்கு நீந்திச் செல்ல முற்பட்டவர்கள் அடுத்த நொடியே தோட்டாவிற்கு பலியானார்கள். 1979 சனவரி 31 அன்று பசியைப் பொறுக்கமாட்டாமல், உணவைத் தேடி மரிச்ஜாப்பியை விட்டு வெளியேறியவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 36 பேர் பலியானார்கள்.

காடுகளுக்குள் இருந்த தீவினில்,சத்தமே இல்லாமல் மனித வேட்டையை நடத்தியதால் மரிச்ஜாப்பியில் ரகசியமாக நடந்தேறிய இனப்படுகொலை வெளி உலகத்திற்கு தெரியவே சில மாதங்கள் ஆனது. அதற்குள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர். மார்க்சிஸ்ட் அரசின் பயங்கரவாதச் செயல் கசிந்துவிடாதவாறு காலமும் சூழலும்கூட கைகொடுத்திருந்தன எனலாம். 1960–70களில் மேற்கு வங்கத்தில் உண்டான நக்சல்பாரி எழுச்சியால் ஏற்பட்ட பதற்றமும், ஒடுக்குமுறைகளும் ஒரு பக்கமும், 1970களின் தொடக்கத்தில் பங்களாதேஷின் போர்ச் சூழலால் அகதிகளின் வருகையும் மேற்கு வங்கத்தின் அமைதியை குலைத்திருந்தன. நாட்டின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்த இப்பிரச்சனைகளின் தொடர்ச்சியாக, எங்கோ யாருமற்ற வனத்திற்குள் வீழ்த்தப்பட்ட நாமசூத்திரர்களின் அழிவு கவனத்திற்கு வரவில்லை.

ஊடகங்கள் இதைப் பற்றி எழுதத் தொடங்கிய போது, அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு, "புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மேற்கு வங்கத்தின் கம்யூனிச அரசுக்கு எதிரான சி.அய்.ஏ.யின் சதி இது' என திரித்துக் கூறியதோடு, அனைத்து ஊடகங்களும் தேச நலனுக்காக செயலாற்றும் தனது அரசுக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். மரிச்ஜாப்பியின் தலித் அகதிகளை "அந்நிய சக்திகளின் உளவாளிகள்' என்றும், இத்தீவை அவர்கள் ஆயுதப் பயிற்சிக்கான களமாகப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டி, தனது பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்தினார். மரிச்ஜாப்பியின் எல்லையைக்கூட ஊடகங்கள் தொட்டுவிடாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் செத்து விழுந்தவர்களின் எண்ணிக்கையோ, அவர்கள் அனுபவித்த வதைத் துயரமோ வெளியுலகம் அறிய வாய்ப்பே இல்லாமல் போனது.

திட்டமிட்டு, ஓர் ஒழுங்கோடு 1979 சனவரி தொடங்கி மே மாதம் வரை, அய்ந்தே மாதங்களில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று முடித்தது மேற்கு வங்க அரசு. பசிக்கும் வன்முறைக்கும் இரையாகாமல் தப்பியவர்களை போர்க் குற்றவாளிகளைப் போல சட்டீஸ்கருக்கும் அந்தமானுக்கும் கடத்தியது. மேற்கு வங்க அரசு, நாம சூத்திரர்களை அழித்து மரிச்ஜாப்பியை "விடுவித்த' வரலாறு இதுதான். வனச்சட்டத்திற்கு புறம்பாக காடுகளை அழிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட அகதிகள் வாழ்ந்த அதே மரிச்ஜாப்பியை பின்னர் சி.பி.எம். ஆதரவாளர்கள் ஆக்கிரமித்தனர்.

ஓர் அரசு தன் சொந்த மக்களை இனப்படுகொலை செய்து அழித்த அவலம் வெளியுலகத்தின் புலன்களை எட்டாதவாறு கச்சிதமாக மறைக்கப்பட்டதால், எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள் என துல்லியமாகக் கணக்கிட இயலவில்லை. மரிச்ஜாப்பியில் குடியேறியவர்கள் 15 ஆயிரம் குடும்பங்கள் எனில், அதில் 4 ஆயிரத்து 250 குடும்பங்கள் காணாமல் போனதாக சில அதிகாரப்பூர்வ குறிப்புகள் கூறுகின்றன. காணாமல் போனவர்கள் படுகொலைக்கு பலியானார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. குடும்பத்திற்கு நால்வர் என கணக்கிட்டாலும் சி.பி.எம். அரசு சுமார் 17 ஆயிரம் அகதிகளைக் கொன்றது உறுதியாகிறது.

நாமசூத்திரர் என்ற தீண்டத்தகாத மக்கள், அரசின் பொய்மையை உடைத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை சடலமாக்கி மரிச்ஜாப்பியை மயானமாக்கியது சாதி இந்து மார்க்சிஸ்ட் அரசின் இனவெறி. இப்படியொரு பயங்கரவாதத்தை நிகழ்த்திய சுவடே தெரியாமல், மேற்கு வங்க மார்க்சிஸ்டுகள் ஜனநாயகவாதிகளாகவும் சாதிக்கு எதிரானவர்களாகவும் முகமூடி அணிந்து கொண்டு அலைகிறார்கள். முற்போக்காளர்களாக அறியப்படும் மேற்கு வங்கச் சமூகம், தன் மண்ணில் துடைத்தெறியப்பட்ட மனித மாண்பினைப் பற்றி இன்று வரையிலும்கூட வெளிப்படையாகப் பதிவு செய்யவில்லை. அந்நிய உளவாளிகள் என்ற குற்றச்சாட்டிற்கோ, அவர்கள் ஆயுதப் பயிற்சி செய்தார்களா என்பதற்கோ எந்த ஆதாரத்தை யும் இன்று வரையிலும் யாரும் கோரவில்லை. நீதி விசாரணைக்கான கோரிக்கையே இல்லாமல் மவுனமாக இப்படுகொலையை அங்கீகரித்தது மேற்கு வங்க அறிவுச் சமூகம்.

பிரிவினையெனும் பெயரால் சாதி இந்துக்களால் பழிவாங்கப்பட்டு, பயங்கரவாதிகள் என்ற பட்டத்தோடு கொலை செய்யப்பட்ட நாமசூத்திர தலித் அகதிகள் பற்றி வெளியுலகம் அறிந்துவிடாதவாறு, இன்று வரையிலும் உண்மைகள் முடக்கப்பட்டிருக்கின்றன. மரிச்ஜாப்பி படுகொலைகள் பற்றி கேள்விப்பட்டவர்கள்கூட, அது இடதுசாரிகளால் நிகழ்த்தப்பட்டதென்ற உண்மையை அறிய வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. மரிச்ஜாப்பி இனப்படுகொலை முற்றிலுமாக மறக்கப்பட்டது, மறைக்கப்பட்டது. ஆனால், இந்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு மூர்க்கமாகப் பழிவாங்கப்பட்ட வலியோடும் வேதனையோடும் – எங்கெங்கோ ஒன்றிரண்டாக சிதறி அடையாளம் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாமசூத்திரர்களுக்கும், பகுத்தறிவுச் சமூகத்திற்கும் இடதுசாரிகள் சொல்லப் போகும் பதில்தான் என்ன?

பிரிவினையின்போதும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் எத்தனையோ லட்சம் பேர் அகதிகளாக இந்தியா வந்தனர். அவர்கள் அனைவரும் பல வகையான சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். எனினும், தீண்டத்தகாத நாமசூத்திரர்களை மட்டும் ஓர் எல்லைக் குள் முடக்கி படுகொலை செய்தது, இனவெறியன்றி வேறில்லை. தலித் அகதிகளை தன் மண்ணிலிருந்து வேரறுத்துவிடும் அவ்வெறியைக் கொண்டிருந்த மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு, ராஜபக்ஷேவைப் போலவே பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளி என்பதில், மனித உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது.

மீண்டும் மீண்டும் சாதி வக்கிரத்தின் உக்கிரத்தைப் பற்றி நாம் பேசியாக வேண்டியிருப்பதன் காரணம் இதுதான். சாதியின் முன் எந்த கொள்கையும் தோற்றுப் போகிறது. எந்த புரட்சியும் மடிந்து போகிறது. பிழைக்கவும், அதிகாரத்தில் நிலைத்திருக்கவும் ஆதிக்கவாதிகளுக்கு சாதி தேவைப்படுவதால், அவர்கள் ஒருபோதும் அதற்கெதிராக இயங்குவதில்லை. அவ்வகையிலேயே, இடதுசாரி சாதி இந்துக்கள், சாதிய வக்கிரத்தை உதிரத்தில் ஓடவிட்டு மூளையை மட்டும் பொதுவுடைமைக் கொள்கையால் சலவை செய்து கொண்டிருக்கின்றனர். இப்போதெல்லாம் தங்களின் பொதுவுடைமை முகத்தைக் காப்பாற்ற, காந்தியைப் போலவே இவர்களுக்கும் தீண்டாமை மட்டும் வேண்டாததாகிறது.

தீண்டாமையை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு, சாதியை ஒரு பண்பாட்டுக் கூறாக வளர்த்தெடுக்கும் கள்ள முனைப்பு – எல்லா சாதி இந்துக்களையும் போல இடதுசாரிகளையும் ஆட்டுவிக்கிறது. ஓர் ஆதிக்கக் கருத்தியல் எப்படி சமூகத்தின் பண்பாடாக இருந்து வழிநடத்த முடியும்? இந்த கபடத்தின் மூலம் இவர்களுக்கு இருவேறு லாபங்கள் கிடைக்கின்றன. ஒன்று இந்து சனாதன முகம், இரண்டு இடதுசாரி என்ற புரட்சி முகமூடி. சாதியை பண்பாட்டு நெறியாக ஏற்ற ஒரு சாதாரண இந்தியக் குடிமகனிடமிருந்து ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கும் தத்துவத்தைப் பயின்ற இவர்கள் எங்கே வேறுபடுகின்றனர் என இதுவரையிலும் கூட கண்டறிய முடியவில்லை.

சாதி இங்கே பண்பாடாகவும் வாழ்வியல் நெறியாகவும் இருக்கிற வரை – இந்துத்துவவாதிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. மரிச்ஜாப்பி போன்ற மனிதப் படுகொலைகள், சனாதன தர்மத்தின்படி சரியான நியாயங்களைப் பெற்றுக் கொண்டேதான் இருக்கும். தினம் தினம் தலித்துகள் ஒடுக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, சிதைக்கப்படும் அவலம் மவுனத்தால் மறைக்கப்படுவது தொடரும். அரசும், ஊடகங்களும், பொது மக்களுமாக எல்லோருமே சாதியை கொண்டாடும்போது, சாதியே இங்கு சமூக, பொருளாதார, அரசியலை நிர்ணயிக்கும் "ஆக்கமாக' இருக்கும்போது – அதன் பெயரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளும் படுகொலைகளும்கூட ஒரு பண்பாட்டுத் தேவையாகிவிடுகிறது. இதன் பின்னணியில் படிந்திருக்கும் வெறுப்புணர்வை இனவெறி என நாம் இனங்காணுதல் வேண்டும்.

கூலி உயர்வு, பாட்டாளிகளின் உரிமை என்று முழங்கி, தலித் மக்களின் தோள்களில் கைபோட்டு அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாக வசப்படுத்தும் முயற்சியில் சளைக்காமல் ஈடுபட்டுவரும் கம்யூனிஸ்டுகளுக்கு – ஒருபோதும் துடைத்தெறியமுடியாத அவர்களின் களங்கத்தை நினைவூட்டுகிறோம். சாதியே ஆதிக்கமாகவும் அடிமைத்தனமாகவும் இருக்கும் இந்திய நாட்டில், சாதியை அழித்தொழிக்காமல் பொதுவுடைமை சூத்திரத்தை அப்படியே செயல்படுத்த முடியாது. சாதி ஒழிப்பு என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அஞ்சுகிற சாதிய கம்யூனிஸ்டுகளை – மரிச்ஜாப்பியின் நினைவுகளோடு நாம் நிராகரிக்கிறோம்.