‘உப்பு வயல்' என்னும் நாவல் மூலம் தமிழ் நாவல் பரப்பில் தனி இடத்தை உருவாக்கியவர் சிறீதரகணேசன். பல பரிசுகளைப் பெற்ற அந்த நாவலுக்குப் பிறகு சிறீதர கணேசன் என்னும் எழுத்தாளுமை சிறுகதைகளையும் தமிழுக்குத் தந்தது. தமிழ் தலித் இலக்கியப் போக்கில் சிறீதர கணேசன் ஒரு மைல்கல்லாய் மாறினார். "உப்புவயலில்' வடுவச்சியையும் "சடையன்குள'த்தில் தொடிச்சியையும் உருவாக்கி, தலித் பெண்ணியத்தின் அசல்களாக அவர்களை உலவவிட்டார். தலித் இலக்கியம் தமிழில் ஆழ வேரூன்றிய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தேவை தீர்ந்துவிட்டதாய் பல குரல்கள் எழுகின்றன. தலித் இலக்கியவாதிகள் என்னும் அடையாளத்தோடு பீடங்களைப் பிடித்தவர்கள் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். எங்கே இருக்கிறது தலித் இலக்கியம்? அது நீர்த்துப்போய் விட்டது என்று கூறி அவற்றைப் புறந்தள்ளத் தொடங்கியிருக்கிறது பொதுச் சமூகம்.
 
sridaraganesan 400இந்த நேரத்தில்தான் எல்லார் செவுள்களிலும் அறைந்து இன்னும் சொல்லப்படாத எத்தனையோ தலித் கதைகள் இருக்கின்றன என்று சொல்லி, தன் இருப்பையும் தலித் இலக்கியவாதிகளின் பொறுப்பையும் சுட்டி விரிகிறது "சடையன்குளம்' நாவல். கொட்டிக் கிடக்கும் வாழ்விலிருந்து பல்வேறு கதை மாந்தர்களை உருவாக்கி, அவர்களை தங்கள் வாழ்வின் குறிக்கோளை உணரச் செய்யும் கடைந்தெடுத்த ஓர் அப்பட்டமான தலித் நாவல்தான் "சடையன்குளம்.' தோழர் சிறீதர கணேசனுடன் உரையாடினோம். ஓர் இயல்பான உரையாடலாகத் தொடங்கி வாழ்க்கை, இலக்கியம் என ஆற்றல் வாய்ந்ததாய் அவ்வுரையாடல் மாறியிருக்கிறது.
 
சந்திப்பு :யாழன் ஆதி
 
 
உங்கள் முதல் நாவலான "உப்பு வயல்' வெளிவந்த அனுபவம் எப்படி இருந்தது?
 
"உப்பு வயலை' எழுதி முடிந்த பிறகு அதைப் படியெடுத்து சென்னையில் உள்ள பதிப்பகங்களுக்கு எல்லாம் அனுப்பியிருந்தேன். ஆனால் நான் அனுப்பியதெல்லாம் திரும்பிதான் வந்து கொண்டிருந்தது. சென்னையில் இலக்கியச் சிந்தனை நடத்திய நாவல் போட்டிக்கு அதை அனுப்பி வைத்தேன். நாவல் வென்றால் பரிசுத் தொகையும் கிடைக்கும்; அதே நேரத்தில் புத்தகமாகவும் வரும் என்று நினைத்தேன். ஆனால் அப்போட்டியில் என்னுடைய நாவல் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றது. ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கிய நாவல் பரிசு பெற்றது; அது புத்தகமாகவும் வந்தது. அந்த ஆண்டுதான் முதன்முதலில் நியூ செஞ்சுரி பதிப்பகமும் கலை இலக்கியப் பெருமன்றமும் சேர்ந்து நாவல் போட்டியை நடத்தின. அதில் "உப்பு வயல்' நாவல் முதல் பரிசினைப் பெற்றது. உடனேகூட அது புத்தகமாகவில்லை. அப்புறம்கூட மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் புத்தகமானது. அந்த ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதும் "உப்பு வயலு'க்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு என்னை "உப்புவயல்' சிறீதர கணேசன் என்றே அழைத்தார்கள். அந்நாவல் குறித்த விமர்சனங்களைப் பல இதழ்கள் எழுதின. அதை அய்ந்து பல்கலைக் கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடமாக வைத்தார்கள். அவர்கள் கூட நீண்ட தயக்கத்திற்குப் பிறகே இதைச் செய்தார்கள்.
 
அண்மையில் வந்துள்ள "சடையன்குளம்' வெளிவந்ததைப் பற்றி சொல்லுங்கள்...
 
"சடையன்குளம்' எழுதி முடித்த பிறகு அதை நான்கு பிரதிகள் எடுத்து "கருப்புப் பிரதிகள்' உட்பட நான்கு பதிப்பகங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு பதிப்பகம் "உங்க பேரு எல்லாருக்கும் தெரியுமா?' என்றும் நீங்கள் "சிறு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்களா?' என்றும் கேட்டது. நான் சிறுபத்திரிகைகளில் எழுதுவது இல்லை. நாவல் எழுதுவேன்; அதைப் பதிப்பகங்களுக்குத் தருவேன் என்றேன். இன்னொரு பதிப்பகம் அதைப் படிக்கவே இல்லை. இந்த நேரத்தில்தான் "கருப்புப் பிரதிகள்' நீலகண்டனிடமிருந்து தொலைபேசி வந்தது. நாவலை நீங்கள் நினைக்கிற மாதிரி நாங்கள் வெளியிடுகிறோம்; யாருக்கும் தர வேண்டாம் என்று கூறினார். இன்னொரு பதிப்பகத்தில் "சடையன்குள'த்தை தந்தால் என்னுடைய பழைய நாவல்களையும் பதிப்பிப்பதாகக் கூறினார்கள். நான் "சடையன்குள'த்தை "கருப்புப் பிரதிகளு'க்குக் கொடுத்து விட்டதால் அவர்களுக்குத் தர முடியாமல் போனது. அதனால் என்னுடைய "சந்தி' நாவலை அவர்கள் மறுபதிப்பு செய்வதை நிறுத்தி விட்டார்கள். இப்படித்தான் "சடையன்குளம்' வந்தது. "கருப்புப் பிரதிகள்' மிகவும் தரமாகவும் அழகாகவும் அதை வெளியிட்டது மறக்க முடியாதது.
 
சில பதிப்பகங்கள் நாவலை வாங்கி பரணில் வைத்துவிட்டு படிக்காமலே அதை வெளியிட மறுக்கின்றனர். நான் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழ்ப் படைப்பாளிகள் ஒன்றும் வீரம் பொருந்தியவர்களோ பெரிய மனப்பான்மைப் பொருந்தியவர்களோ அல்லர். எல்லார் மனநிலையிலும் சாதி இருக்கிறது! எப்படியாவது தங்கள் படைப்புகள் வெளிவர வேண்டும் என்பதும் குறுக்கு வழியில் சீக்கிரமாகப் புகழ்பெற வேண்டும்; அதற்கு ஆள் கிடைக்குமா என்றுமே நினைக்கிறார்கள். அது அவர்களின் எண்ணமாகவே இருக்கிறது. பல பதிப்பாளர்களும் படைப்பாளிகளை ஏமாற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். சரியாக "ராயல்டி' கொடுப்பதில்லை. நான் ஒரு பதிப்பகத்திடம் பணமாகத் தரவில்லையாகிலும் பரவாயில்லை, அதற்குரிய புத்தகமாகவாவது தாருங்கள் என வேண்டியிருக்கிறேன்.
 
தங்கள் படிப்பு குறித்து சொல்லுங்கள்...
 
"உப்பு வயல்' வெளிவந்த பிறகு எல்லாரும் இந்தக் கேள்வியைத்தான் கேட்டார்கள். நான் ஏழாம் வகுப்பு படித்த தட்டழிந்த பையனாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன் என்றால் யாரும் நம்பவில்லை. அதனால் அவர்களுக்கு என் கதையை சொல்ல வேண்டியிருந்தது. அப்படி கதையாய் சொன்ன பதில்தான் "சந்தி' நாவல். என்னுடைய அய்ந்து வயது முதல் இருபத்து இரண்டு வயது வரை நான் கேட்டது, பார்த்ததுதான் "சந்தி' நாவல். அது என்னுடைய தன் வரலாற்று நாவல். "சந்தி' என்பது இடத்தின் பெயர். நான் பிறந்த சந்தி, நான்கு சாதிகளும் சந்திக்கும் இடம். அந்த இடத்தின் பெயர் மட்டக்கடை சந்தி. தூத்துக்குடியின் ஆரம்பகால வளர்ச்சி அங்குதான் நடந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஓலை மட்டை போன்றவை விற்கப்பட்டிருக்கலாம். அது ஒரு வரலாறு. அதனால்தான் அந்த நாவலுக்கு முன் ஒரு கட்டுரை வைத்திருக்கிறேன் – நானும் மட்டக்கடை முத்துச்சாமியும் – அதைப் படித்தாலே புரிந்துவிடும் அது ஒரு தன் வரலாற்று நாவல் என்று. என்னை அறிந்தவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள்.
 
உங்கள் பெற்றோர் பற்றி சொல்லுங்கள்...
 
என்னுடைய அம்மாதான் என் எல்லா கதாபாத்திரங்களும். வடுவச்சி, தொடிச்சி போன்ற பாத்திரங்கள் எல்லாம் என் அம்மாவை வைத்துதான் உருவாக்கப்பட்டவை. என் அம்மாவை நான் ஒரு பொட்டு வைத்த அம்மாவாக, பூ வைத்த அம்மாவாகப் பார்த்ததே இல்லை. அவர்கள் பெரியாரின் இயக்கத்தில் வேலை செய்த வீரம் பொருந்திய ஒரு பெண்மணி. 1935 36 இல் ரஷ்யாவுக்குப் போய் பெரியார் திரும்பி வரும்போது அவருக்கு தூத்துக்குடியில் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். அதில் பெண்கள் அணிக்கு என்னுடைய அம்மா தலைமை தாங்கி இருக்கிறார்கள். அதற்காக ஒரு பாடலையே உருவாக்கியிருக்கிறார்கள். அதைப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பெயர் லட்சுமி. அவர்கள் அன்றாட பிழைப்பிற்கே அல்லாடும் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான்காம் வகுப்பு வரை படித்தவர்கள். தன்னுடைய பனிரெண்டு வயதிலேயே அவர்கள் ஹார்வி நூற்பாலையில் வேலைக்குப் போயிருக்கிறார்கள்.
 
பிறகு தூத்துக்குடியில் உள்ள கீழூர் என்னும் இடத்தில் ஆர்.சி. சர்ச் (சின்னக் கோயில்) ஒன்று கட்டப்படும்போது அவர்கள் அதில் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அங்கேதான் என்னுடைய தந்தையாரை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். அவர் மிகச்சிறந்த திறமைசாலி. டெரகோட்டா, சிமெண்ட், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றில் கலைநுணுக்கமாக வடிவங்கள் செய்வதில் வல்லவர். அவரின் கைவண்ணம் அந்தப் பகுதியில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் இருக்கும். மணப்பாடு என்னும் கிராமத்திலிருந்து அவர் வந்து அந்த ஆலயத்தில் நகாசு வேலை செய்வதற்காக வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருவரும் தலித்துகள் என்பதால் காதல் சுகமாக முடிந்தது. அவர்களின் மகனாகத்தான் நான் பிறந்தேன். அப்பா பெயர் பலவேசம். அப்பா பிற்காலங்களில் கொழும்புக்கு வேலைக்காகப் போய்விட்டார். திரும்பி வந்த அப்பா, கலைஞராகவே வாழ்ந்தார்.
 
வடுவச்சிக்கும் தொடிச்சிக்கும் என்ன வேறுபாடு?
 
இரண்டு பேருக்குமே நிலைப்பாடு ஒன்றுதான். இரண்டு பேருமே தலித் பெண்கள். உழைப்பாளிகள். நம்முடைய தலித் மக்கள் அத்தகைய அழகான பெயர்களை வைத்திருக்கிறார்கள். தொடிச்சி என்றால் தொன்று தொட்டு அழகுடையவள் என்ற அர்த்தத்தின் சுருக்கம். வடுவச்சி என்றாலும் அழகுடையவள் என்றுதான் பொருள். இப்படி நாவலில் வரும் பெயர்கள் சாம்பான், குன்னி மரியான், வைத்தான் செல்லையா போன்ற பெயர்கள் அருமையாக அமைந்திருக்கும். தம்மகார சாம்பாத்தி என்ற பெயர் தம்மம் சார்ந்த பவுத்தப் பெயராக இருக்கிறது. நமது மக்களின் பண்பாடே பவுத்தப் பண்பாடுதானே. சடையன்குளத்தில் பார்த்தீர்களானால் கோயிலே இருக்காது. இன்னும்கூட விளாத்திகுளம் வட்டத்திலே மண்ணை கொண்டுவந்து வைத்து விழா முடிந்தவுடன் அது சிதறிப்போய்விடும். பிறகு அது மேலேயே உட்கார்ந்து பேசுவார்கள். இது கூட பவுத்த பின்புலம் உடையதுதான். பெயர்கள், சம்பவங்கள் என எல்லாவற்றையும் நாம் ஆராய்ந்தால் இந்த முடிவுக்கு வரலாம். பிறகுதான் தலித் மக்களிடம் இந்துத்துவப் பண்பாடு ஊடுருவி இருக்கிறது.
 
அண்மையில் என்ன படித்தீர்கள்?
 
ஆயிரம் பக்கங்கள் கொண்ட இரண்டு நாவல்களை நான் வாசித்தேன். ஒன்று தஸ்தாவஸ்கியின் "கரம்சோவ் சகோதரர்கள்.' அதைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். மனிதத்தைப் பேசுகிற அற்புதமான நாவல் அது. அப்புறம் நான் படித்தது "அஞ்ஞாடி.' பூமணியின் அந்நாவல் நாடார்களைத் தூக்கிப் பிடிக்கிறது. நான் அறிந்த வரையில் நாடார்களை இப்படி தூக்கிப் பிடித்த நாவல் வேறு எதுவும் இல்லை. அவர்களை ஏன் தலித் எழுத்தாளர்கள் தூக்கி நிறுத்த வேண்டும்? எனக்குத் தெரிந்து நான் செய்த ஒரு கள ஆய்வில் எங்கள் பகுதியில் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் தலித்துகளின் நிலத்தை நாடார்கள்தான் அபகரித்தார்கள். அவர்கள் நிறுவனங்களில் பெரும்பாலும் தலித்துகளுக்கு வேலைகளைத் தர மாட்டார்கள். இப்போது கூட்டப்பட்ட தலித்துகளுக்கு எதிரான சாதிகளின் கூட்டணியில் கூட நாடார்கள் இருக்கிறார்கள். ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தலித்துகளை அடிமைதான் படுத்துவார்கள். அதனால்தான் அந்த நாவலைப் படித்ததும் மிகவும் மனம் வேதனை அடைந்தது.
 
நாடார்களும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்தானே? அவர்களை வேண்டும் என்றேவா தூக்கிப் பிடித்திருக்கிறார் பூமணி?
 
ஒடுக்கப்படும் வரலாறும் ஒரு பக்கம் போகிறது. ஆனால் முழுமையாகப் படித்தபோது வேதனைதான் மிஞ்சியது. வடமாவட்டங்களில் வன்னியர்கள் எப்படியோ அப்படித்தான் நாடார்களும். அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது வரலாற்றில் இருக்கிறது. ஆனால் நிகழ்காலத்தில் அவர்கள் அடக்குமுறையாளர்களாகவே இருக்கிறார்கள். "அஞ்ஞாடி'யை நாட்டார் வழக்காற்று ஆய்வாளர்கள் படித்தால் நிச்சயமாகப் பாராட்டுவார்கள். ஆனால், ஒரு தலித் படிக்கும்போது அப்படிச் செய்ய முடியாது. என்னை மாதிரிதான் கோபப்பட வேண்டி வரும். நாடார்கள் ஏழை நாடார்களாக இருந்தாலும் அவர்கள் தலித்துகளைப் பெயர் சொல்லிக்கூட அழைக்க மாட்டார்கள். ஆகவே, ஆதிக்க சாதியினர் எப்போதும் தலித்துகளுக்கு எதிரானவர்கள்தான். அவர்களை தலித்துகள் ஒன்றும் கொண்டாடத் தேவையில்லை. தலித்தல்லாத ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் இந்த நாவலைத் தூக்கிக் கொண்டாடுவார்கள்.
 
 உங்களுடைய "வாங்கல்' நாவலில் பரதவர்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே?
 
ஆமாம், அப்படி ஒரு நிலைப்பாடு எனக்கு இருந்தது. அவர்கள் கடல் மக்கள். பரதவர்கள் கடலில் சென்று மீன்பிடிப்பார்கள். ஆனால் அவர்கள் மீன் பிடிப்பதற்கு தலித்துகளை அனுமதிக்க மாட்டார்கள். அந்த அங்கீகாரத்தை தலித்துகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். அதை அவர்களின் பிறப்புரிமையாகப் பேசுவார்கள். வேண்டுமானால் தலித்துகளைத் தங்கள் வேலையாட்களாக வைத்துக்கொள்வார்கள். பரதவர்களைப் பற்றி எழுத நிறையபேர் இருப்பார்கள். தலித்துகளைப் பற்றி முழுமையாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் "சடையன்குளம்' நாவலை எழுதினேன். அது தலித் விடுதலைக்காக எழுதப்பட்டது.
 
என்னதான் தலித் நாவல் எழுதினாலும் சிறீதர கணேசன் நாவல்களில் செங்கொடி ஊடாடி வருவதாக ஒரு பேச்சு இருக்கிறதே?
 
பதினெட்டு வயசில் மனதில் ஊறியது அந்த இடதுசாரி சிந்தனை. இன்றைக்கு அறுபது வயதிலும் என் எழுத்தில் ஊடாடுகிறது என்பது உண்மைதான். அது பட்டொளி வீசிக்கொண்டுதான் இருக்கும். அப்படிக்கூட ஒரு விமர்சனம் வந்தது. "சடையன்குளம்' நாவலில் இடதுசாரி சிந்தனையுள்ள பாத்திரத்தை ஏன் வலுப்படுத்தவில்லை என்று கேட்டார்கள். ஒரு தலித் ஒரு நாளும் இடதுசாரி சிந்தனைக்கு எதிரியாக இருக்க மாட்டான். ஆனால் ஆதிக்க சாதி வெறிக்கும் பணத்திற்கும் எதிரானவனாக இருப்பான். ஆதிக்க சாதிக்கு சோரம் போவது என்பது தமிழில் நடந்துகொண்டிருக்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு தலித் எழுத்தாளன் எப்போதும் ஆதிக்க சாதி வெறிக்கு எதிர் நிலையில்தான் இருப்பான்.
 
நாவலின் வடிவம் பற்றி சொல்லுங்கள்...
 
ஒரு கவிதையோ கட்டுரையோ படிக்கப்படும்போது அதற்கு ஒரு பின்புலம் தேவைப்படும். ஆனால், சிறுகதையோ நாவலோ அப்படியல்ல. அது ஒரு கதை சொல்லல். கதை சொல்லும் முறை. அது எந்தக் கதையாக இருந்தாலும் எளிதில் புரிந்துவிடும். அதற்காகத்தான் அய்ரோப்பிய இலக்கியம் நமக்கு உரைநடையைக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு சில உரைநடைகளைப் படிப்பதற்கு கோனார் உரை தேவைப்படுமோ என பயமாக இருக்கிறது.
 
அதை மொழிக்கான அடர்த்தியாகக் கொள்ள முடியாதா?
 
அது சில பேருக்குத்தான். ஆனால் அனைத்து மனப்பரப்புகளிலும் போய்ச்சேர வேண்டும். கதை என்பது எல்லாருக்குமானது. யார் வேண்டுமானாலும் கதை சொல்லி கதையைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு கதை சொல்லலாம். அதற்கென்று மொழியோ திருகலோ தேவையில்லை.
 
நீங்கள் எப்படி கதை சொல்லியாக மாறினீர்கள்?
 
நான் ஒரு தட்டழிந்த மனிதன். ஏழாம் வகுப்பிலே என்னைத் தள்ளிதான் வைப்பார்கள். கற்றலில் குறைபாடு உள்ளவர்கள்மீது அந்தக்காலத்தில் யாருமே அக்கறை கொள்ளவில்லை. 1961 71 வரை என்னுடைய கல்விக்காலம். அப்போது வாத்தியார்களின் கொடுமையை மிகவும் அனுபவித்தேன். படிக்காத பிள்ளைகளை எல்லாம் ஆசிரியர்கள் மோசமாக நடத்துவார்கள். அவர்களை கடைசியாக உட்கார வைத்துவிடுவார்கள். கவனிக்க மாட்டார்கள். நான் அப்படித்தான் இருந்தேன். கற்றலில் குறைபாடு உள்ளவர்கள் அவர்கள். நாங்க அய்ந்து பேர் இருப்போம். பல வேலைகளில் ஈடுபட்டு படிக்காம போய்விட்டேன். வாத்தியார் அடிக்கு பயந்து மூன்று கால்சட்டையைப் போட்டுக் கொண்டு போவேன். வாத்தியாரின் தொல்லை தாங்காம பள்ளிக்கு போகாம மதுரைக்கு ஓடிட்டேன். கடைசியில் நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு நான் படிக்க ஆரம்பித்தேன். மட்டக் கடை நூல் நிலையத்தில் ஜெயகாந்தன் கதைகளை முழுவதுமாகப் படித்து தமிழைக் கற்று கொண்டேன். அவர் மேல் எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. அதற்குப் பிறகு கதை சொல்ல ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். படிக்கிற காலத்தில் படிக்காம இப்பப் போயி படிக்கிறானே என்று என்னுடைய அப்பா சொல்வார்.
 
1977 இல் என்னுடைய மூன்று சிறுகதைகளை எழுதினேன். முதல் கதை "விடியாத இரவுகள்.' பாதாள சாக்கடையில் இறங்கும் தலித் மக்களின் நிலைப்பாட்டினைத்தான் முதல்கதையாக எழுதினேன். இரண்டாவது கதை மில் தொழிலாளிகளைப் பற்றியது. மூன்றாவது கதை படிக்க முடியாமல் தன் படிப்பை இழந்த கதை. தூத்துக்குடி கடற்கரையில் நடக்கும் கலை இலக்கியப் பெருமன்ற அரங்கில் பங்கேற்ற தோழர்கள் உதவியுடன் இந்த மூன்றையும் "செம்மலர்', "தாமரை' போன்ற இதழ்களுக்கு அனுப்பினேன். "செம்மலரில்' என் "விடியாத இரவுகள்' கதை முதன்முதலாக வந்தது. பிறகு ஓராண்டிற்குள்ளே மீதி இரண்டு கதைகளும் அச்சாகிவிட்டன.
 
உங்கள் "உப்பு வயல்' பற்றி சொல்லுங்கள்...
 
நான் 1984 வாக்கில் இலக்கியமே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். ஆதிதிராவிடர் சமூக நல இயக்கத்தில் சேர்ந்து நண்பர்களுடன் பணியாற்றினேன். அதன் செயலாளராக இருந்தேன். களப்பணியின் மூலம் தலித் மக்களுக்கு வேலை செய்யலாம் என்று நம்பினேன். தூத்துக்குடி பகுதியில் மட்டும் 300 நிலப்பட்டாக்களை வாங்கி தலித்துகளுக்குத் தந்தோம். அதில் உட்சாதி பிரிவினையை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் எங்களிடமிருந்த தலித்துகளிலே சிலர் வீட்டுமனைப் பட்டா பெறுபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனம் மிகவும் வேதனையடைந்த நிலையில் இருந்தேன். இந்த நிலையில்தான் ராஜம் கிருஷ்ணன் நாவல் எழுதுவதற்காக தூத்துக்குடி வந்து தங்கி, மக்களுடன் பழகி உறவாடி வந்தார். அவரே அப்படி செய்யும்போது நாம் ஏன் நம் மக்களின் வாழ்வை எழுதக் கூடாது என்று எழுதியதுதான் "உப்பு வயல்.' அதற்குப் பிறகு நான் களப்பணி செய்யவில்லை. கிடைக்கும் நேரங்களை எல்லாம் இலக்கியத்திற்காகவே செலவிடுகிறேன்.
 
"உப்பு வயல்' தலித் மக்களின் கதையா?
 
உழைக்கும் மக்களைப் பற்றிதான் அந்நாவலை எழுதினேன். உப்பளங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான். நான் அதை எழுதுகையில் தலித் நாவல் என்னும் மய்யத்தைக்கொண்டு எழுதவில்லை. தலித்தாக நான் இருந்ததால் என்னையறியாமல் தலித் எண்ணங்கள் கொப்பளித்து வந்து நாவலில் பரவியது. அது முழுக்க இடதுசாரி சிந்தனை கொண்டு எழுதப்பட்டது. "உப்புவயலை' இடதுசாரி நாவல் என்று எழுதுபவர்களும் உண்டு. அதை தலித் நாவல், இடதுசாரி நாவல் என இரண்டு வகைகளிலும் வைக்கலாம்.
 
"உப்புவயல்' வடுவச்சி எப்படி உருவானார்?
 
அவள் உழைக்கும் பெண்களின் பிரதிநிதி. நான் நிறைய உழைக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். முன்பே சொன்னதுபோல் என்னுடைய தாயிடமிருந்துதான் வடுவச்சியை உருவாக்கினேன். அவரின் பிரதியாகத்தான் வடுவச்சி வந்தாள். அந்தப் பாத்திரத்திற்கு நிகழ்காலப் பெயர்களைக் கூட நான் வைத்திருக்கலாம். ஆனால், என்னுடைய முன்னோர்கள் எவ்வளவு அழகான பெயர்களைக் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்த வேண்டி நான் வடுவச்சியை உருவாக்கினேன். ஆனால், "உப்புவயல்' எழுதும்போது எனக்குத் திருமணம் ஆகியிருந்தது. என்னுடைய அம்மா நான் எழுதும்போதெல்லாம் திட்டுவார்கள். அந்தம்மாதான் "உப்புவயல்' வெளிவந்ததும் வாங்கிப் படித்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: “இந்த நாவலை எப்படி கணேசனாலே எழுத முடிந்தது? அடேயப்பா. நாவலைப் படித்து முடிந்ததும் கொஞ்ச நேரம்கூட அசைய முடியவில்லை.'' இன்னும் அந்தக் குரல் எனக்குள்ளே ஒலிக்கிறது.
 
உங்கள் வாசிப்பைப் பற்றி சொல்லுங்கள்
 
நான் ஜெயகாந்தனைப் படித்த பிறகு நிறைய படித்திருக்கிறேன். இந்திய மொழிகளில் வெளிவந்திருக்கிற நாவல்களின் மொழிபெயர்ப்பை பெரும்பாலும் நான் படித்திருக்கிறேன். இந்த பன்மொழி நாவல்களை வாசிக்கும்போதுதான் நாவலின் கட்டுமானம் பிடிபட்டது. மலையாளம், கன்னடம், வங்காளம், ஒரிசா, போன்ற மொழிகளில் வந்த நாவல்களின் மொழிபெயர்ப்புகளை நான் வாங்கிப் படித்திருக்கிறேன். அவற்றை மிக பத்திரமாக பொக்கிஷம்போல சேமித்து வைத்திருக்கிறேன்.
 
"சடையன்குளம்' பற்றி சொல்லுங்கள்...
 
அது தலித் மக்களின் நிலைப்பாடு. முழுக்க முழுக்க தலித் மக்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம். அதுதான் "சடையன்குளம்' முழுவதும் இருக்கும். அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் இதுவரை முழுமையான தலித் நாவல் என்பது வரவில்லை. தலித் வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் காட்டுவதாகவே அவை அமைந்திருக்கின்றன. தலித்துகளின் வாழ்க்கை தலித்துகளால்தான் மேம்படும், தலித்துகள் மட்டும்தான் தலித்துகளை வாழ வைக்க முடியும். தலித்துகள் மட்டும்தான் தலித்துகளுக்காகப் போராட முடியும் என்று தலித் வாழ்வு முழுமையாகச் சொல்லப்பட்ட நாவல் "சடையன்குளம்' மட்டும்தான்.
 
இதுவரை தலித்துகளால் எழுதப்பட்ட ஒரு நாவலில் தலித் பிரச்சினை முழுமையாகச் சொல்லப்படவில்லை. பாமாவின் கதை தலித்துகளுக்கு எதிராக இருக்கும் கிறித்துவ அமைப்பைப் பற்றி பேசுகிறது. சோ. தர்மன் நாவல்களில் பார்ப்பனியத்தின் தூக்கல் அதிகம் சொல்லப்படுகிறது. இமையத்தின் நாவல்களில் தலித்துகள் இடைசாதிக்காரர்களைப் போலக் காட்டப்படுகின்றனர். பூமணியின் நாவல்களில் தலித்துகளுக்கு கொண்டாட்டமே இல்லை. இப்படி எல்லாரையும் சொல்லலாம். தலித் வாழ்வு முழுமையாகச் சொல்லப்படவில்லை. கதை சொல்லப்பட வேண்டும்; கதை விடக் கூடாது. அப்படி ஒரு கதை இல்லை என்ற எண்ணம்தான் கோபமாக மாறி நான் "சடையன்குள'த்தைச் சொல்ல நேர்ந்தது.
"சடையன்குள'த்தில் இடதுசாரி சிந்தனைகள் இருந்தாலும் அது தெரியக்கூடாது, தலித் சிந்தனைதான் இருக்க வேண்டும்; தலித் வாழ்வுதான் சொல்லப்பட வேண்டும் என நான் திட்டமிட்டு எழுதினேன். ஆனாலும், இந்த நாவலில் வரும் தொடிச்சி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்தான்.
 
பரிசுகளை நிறையபேர் வாங்கலாம். சாகித்ய அகாதமி பரிசு வாங்கி "தோல்' நாவலை எழுதிய செல்வராஜ் பிறப்பால் ஒரு தலித்துதான். ஆனால் அந்த நாவலை வாசிக்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நாவலில் மட்டும் குறைந்தது நூறு இடங்களுக்கு மேல் "சண்டாளர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பாத்திரங்கள் சொல்வதாக இருந்தால்கூட பரவாயில்லை. ஆசிரியர் கூற்றாகவே அது அமைந்துள்ளது. இதை எப்படிப் பார்ப்பது? தலித்துக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. அதனால் ஒன்றும் இல்லை. ஆனால் தலித்துகளின் வாழ்வைச் சொல்ல வேண்டும். அதுதான் தேவை. ஒரு தலித் இறந்து போனால் பார்ப்பனர்கள் தூக்கிச் சென்று புதைக்கிறார்கள் என்று எழுதுவது கதை எழுதுவது கிடையாது; கதை விடுவது. அது எப்படி நடக்கும்? அப்படி நடந்திருந்தால் தலித்துகள் இப்போது பூத்துக் குலுங்கி இருப்பார்களே? அந்த நாவல் பார்ப்பனர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அவர்களால்தான் இடதுசாரி சிந்தனை வளர்ந்தது; அவர்களால்தான் தலித் சிந்தனை வளர்ந்தது என்று சொல்லாமல் சொல்கிறது.
 
சடையன்குளத்தில் தொடிச்சி என்ற பெண் பாத்திரம்தான் எல்லாவற்றையும் முன் நகர்த்துகிற பாத்திரமாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண் தலைமை குறித்து சொல்லுங்கள்?
 
தலித் விடுதலைக்கு மட்டும் ஆண்களை சேர்க்காமல் பெண்களைச் சேர்த்திருந்தால் இன்றைக்கு மகத்தான விடுதலை பிறந்திருக்கும். ஆண்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தொடர்ந்து சாதி பார்க்கிறவர்களாகவே இருக்கிறார்கள். தலித்தாக இருந்தால் கூட அவர்கள் உட்சாதிகளைக் கூர்ந்து பார்க்கிறவர்களாக இருக்கின்றனர். ஆனால் பெண்கள் அப்படிப் பார்ப்பதில்லை. மற்றசாதிப் பெண்கள் கூட தொண்ணூறு விழுக்காடு சாதி பார்ப்பதில்லை. ஆண்கள் வலிந்து ஊட்டினால்தான் சாதி பார்ப்பார்கள். தலித் பெண்கள் வன்முறைக்குதான் பயப்படுவார்கள். தலித் இயக்கங்களில் பெண்கள் அதிகமாகப் பங்கெடுத்தால் தலித் விடுதலை சாத்தியமாகும். காந்திய இயக்கங்களில் பெண்கள் அதிகமாகப் பங்கெடுத்ததால் தான் அது வெற்றிபெற்றதாகக் கூறுகிறார்கள். பெரியார் இயக்கத்திலும் பெண்கள் பெருந்திரளாகப் பங்கேற்றிருக்கின்றனர். அதனால்தான் தொடிச்சி போன்ற பெண்கள் படைக்கப்படுகிறார்கள். எந்த சேரிக்குப் போனாலும் நிறைய தொடிச்சிகளை நீங்கள் பார்க்கலாம். 1972 க்குப் பிறகு தலித் குடும்பங்களை நீங்கள் பார்த்தீர்களானால் முப்பது சதம் ரேஷன் அட்டைகளில் குடும்பத்தலைவர்களே இல்லை. அவர்களே உழைத்துதான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் உழைப்பதற்கும் போராடுவதற்கும் தயங்கியதே கிடையாது.
 
இன்னும் சொல்லப்படாத கதைகள் தலித் வாழ்வியலில் இருக்க, தலித் இலக்கியம் முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுவது சரிதானா?
 
தலித்துகளை ஆதிக்க சாதியினர்தான் அடிக்க வேண்டும் என்று இல்லை. இப்படிப்பட்ட நயவஞ்சக மனநிலை உள்ள எழுத்தாளர்கள் கூட நம்முடன்தான் இருக்கிறார்கள். தலித் அல்லாதவர்கள் எழுதும் தலித் கதைகளில் தலித் பாத்திரங்களின் பெயர்கள் மிகவும் மோசமாக இருக்கும். "மண்ணாங்கட்டி' என்று தலித்துகளுக்குப் பெயர் வைப்பார்கள். உண்மையிலேயே "மண்ணாங்கட்டி' என்ற பெயர் தலித்துகளில் இல்லை. இது ஜெயகாந்தன் தொட்டது. அவர்தான் தலித்துக்கு விரோதமான கதைகளைத் தொட்டவர். அவர் பிடித்த அந்தப் பிடிதான் இன்றுவரை தொடர்கிறது. இளம் சாகித்ய அகாதமி வாங்கிய மலர்வதியிடம் அப்போக்கு இருக்கிறது. மேலாண்மைப் பொன்னுச்சாமி, பெருமாள் முருகன் ஆகியோர் கதைகளில் இந்தப் போக்கு இருக்கிறது. அவர்கள் உருவாக்குகிற தலித் பாத்திரங்களை ஒரு தலித் எழுதினால் உருவாக்க மாட்டார். தலித் அல்லாத எழுத்தாளர்களின் உள்ளத்தில்தான் இது ஓடிக்கொண்டிருக்கிறது. அதனுடைய தாக்கம்தான் இது. பெருமாள் முருகனின் "கூளமாதாரி' அத்தகைய ஒன்றுதான்.
 
நீங்கள் பார்த்தீர்களானால் "சடையன்குள'த்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் வயித்தான் செல்லையா. அவருக்கு வயிறு பெரிதாக இருந்ததால் வயித்தான் என்று பெயர் வந்தது. அதையும் அவருடைய பெயரையும் இணைத்துதான் வைக்கப்பட்டிருக்கும். தலித் அல்லாத எழுத்தாளர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். மாறாக வயித்தான் என்றுதான் சொல்லியிருப்பார்கள். மேலும் என்னுடைய நாவலில் பாத்திரங்களுக்கு வர்க்கப் பெயர் கிடையாது. ஆதிக்கசாதி எழுத்தாளர்கள் தலித் பாத்திரங்களுக்கு வர்க்கப் பெயர்தான் வைப்பார்கள்.
 
தற்பொழுது அவர்களால் பேசப்படும் குறுநாவலான "தூப்புக்காரி'யில் கூட அப்படித்தான் இருக்கிறது. நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் எழுதிய நாவல் அது. அதில் அவருடைய அம்மா ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்வார்கள். தலித்துகள் மட்டுமல்ல; நாடார்களும் அத்தகைய வேலை செய்கிறார்கள் என்று கூறுவது. ஆனால்,அந்தத் தாயின் மகள் ஒரு தலித்தைக் காதலிக்க மாட்டார்; ஆனால் ஓர் ஆதிக்க சாதி பையனைக் காதலிக்க அவன் கைவிட்டுவிடுவான். இது எல்லாம் தெரிந்தும்கூட ஓர் அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த பையன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான். அவனும் இறந்து அந்தப் பெண் தன் தாய் செய்த துப்புரவு வேலையையே செய்கிறாள் என்பதுதான் கதை. இதை பொன்னீலன் போன்றவர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்தார்கள்.
 
தலித் இலக்கியங்கள் தலித் இயக்கங்களுக்குப் பயன்படுகின்றனவா?
 
ஒரு நூற்றாண்டின் தலித் வாழ்வியலைச் சொல்ல வேண்டிய கடமை தலித் அறிவுஜீவிகளுக்கு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு தலித் இயக்கங்கள், அரசியலின் எழுச்சிதான் தலித் எழுத்தாளர்களை தூக்கிப் பிடித்து கொண்டாட வைத்தது. இது, ஆதிக்க சாதி எழுத்தாளர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கிடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தலையணை தலையணையாய் எழுதினார்கள். கல்கி எழுதினார். நா.பார்த்தசாரதி எழுதினார். ஜெயகாந்தன் எழுதினார். ஒரே ஒருவர்தான் தமிழில் அப்போது தலித் சமூகத்திலிருந்து எழுதினார் அவர் கவிஞர் தமிழ் ஒளி. அவரையும் ஜெயகாந்தன் இழிவுபடுத்தினார். என்னிடம் அவர் பறையன் என்று சொல்லவில்லை; அதனால் தமிழ் ஒளியிடம் நான் பேசுவதில்லை என்று ஜெயகாந்தன் கூறினார். இந்தக் கேள்விக்கு நான் என்ன சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் என்பது ஆயிரங்கால் மண்டபம் போன்றது. அவற்றில் பத்துக் கால் தலித் இலக்கியம். தலித் இலக்கியத்தைத் தவிர்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாது. அந்த பத்துக் கால்களை கட்டிக்கொண்டிருக்கிறோம். இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. தலித் இலக்கியம் இல்லாமல் தலித் அரசியல் இல்லை. முழுமையான தலித் இலக்கியம் அதற்கான வீச்சோடு இன்னும் வரவில்லை.
 
தலித் இலக்கியம் வீச்சோடு வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?
 
அதற்குக் காரணம் தலித் எழுத்தாளர்களின் பேராசை. சீக்கிரம் புகழ் பெற வேண்டும். பரிசு வாங்க வேண்டும். சிறுபத்திரிகைகளில் தங்கள் படங்கள் வரவேண்டும் ஆதிக்க சாதியினர் தம்மைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதுதான்.
 
அடுத்த தலைமுறை புதிய தலித் எழுத்தாளர்கள் வரவில்லையே? அதற்குக் காரணம்?
 
ஆமாம். அதை நீங்களும் நானும்தான் செய்ய வேண்டும். தலித் எழுத்தாளர்களுக்கு என்று சரியான அமைப்புகள் இல்லை. சில அமைப்புகள் தோன்றின. ஆனால் அவை சுயநலம் மிக்கவையாக இருந்தன. சுய நலத்தைத் தூக்கிக் கொண்டு எவ்வளவு நாள் சுமக்க முடியும்? பொது நோக்கு இல்லை. கல்லூரி முடிக்கும் வரை தலித் இளைஞர்களுக்கு சாதியின் கொடூரம் தெரியாது. அவர்கள் வேலைக்குப் போகும்போதுதான் அதன் கொடுமையை உணர்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முப்பத்தாறு வயது ஆகிவிடும். அதற்குப் பிறகுதான் அவர்கள் வருகிறார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் போல ஓர் அமைப்பை தலித் இயக்கங்கள் அமைக்கவில்லை. அங்கே ஒருவரி கூட எழுதாதவர்கள் அந்த அமைப்பில் இருப்பார்கள். தொண்டு செய்வார்கள். எழுத்தாளர்களைப் பேசுவார்கள். ஆகையால் புதியவர்கள் வருகிறார்கள். தலித் இயக்கங்கள் அப்படிச் செய்யவில்லை. இது தற்காலிகம்தான். இது ஒரு பெரிய கடல். அலைகள் ஓயாது. கண்டிப்பாக இளைஞர்கள் வரத்தான் செய்வார்கள். அதற்கு காலம் ஆகலாம். தலித் எழுச்சியையும் போராட்டத்தையும் யாராலும் தடுக்க முடியாது.
 
நவீன இலக்கியம் குறித்த உங்கள் பார்வை என்ன?
 
நான் அதை தலித் பார்வையில்தான் பார்க்கிறேன். நவீன இலக்கியம் பேசுபவர்கள் எல்லாம் தலித் இலக்கியத்தை ஒத்துக்கொள்வதில்லை. அப்படி ஒத்துக் கொண்டால்கூட அது பம்மாத்துதான். அவர்கள் மனங்களிலும் உடைகளிலும்கூட சாதி இருக்கிறது. நவீன இலக்கியவாதிகள் சுகஜீவிகள். தலித்துகளின் மீது நிகழ்த்தப்படும் கொடூரத்தன்மையை நவீன இலக்கியம் சொல்ல முடியாது.
 
எதார்த்த வகை கதை சொல்லல் உங்களுடையது. நவீன எழுத்தாளர்கள் புதுமாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். அது தலித் இலக்கியத்தில் சாத்தியமில்லையா?
 
அது தலித் இலக்கியத்தில் ஊடுருவ முடியாது. தலித் இலக்கியம் என்பது ஜாதி ஒழிப்புக் களம். குளிர்பதன அறைகளில் உட்கார்ந்து கொண்டு பாத்திரங்களை உருவாக்க முடியாது. சேரிகளின் வெப்பங்களிலிருந்து வார்த்தைகளைப் பெறவேண்டும். அது எல்லாவற்றையும் உடைத்து எறிந்து விடும். நாவலை முடிக்கும்போது ஒரு பாரம் இருக்கும். அது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடும். ரஷ்ய இலக்கியங்கள் அப்படித்தான் இருந்தன. "அன்னாக்ரீனா' வைப் படித்தால் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. தற்போது படிக்கும் ஓர் இளைஞன்கூட அதை உணர முடியும். காரணம் எதார்த்த வகையில் கதை சொன்னதுதான்.
 
தலித் இலக்கியங்களில் தொன்மங்களைப் பயன்படுத்தலாமா?
 
தொன்மம் என்பதே பார்ப்பனியம்தான். "பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்' என்ற தொன்மம் எங்கிருந்து வந்தது? சிவனும் பார்வதியும் மக்களுக்கு பால்தர காமதேனு பசுவை அனுப்பினார்களாம். எல்லாரும் பாலுக்கு ஆசைப்பட பறையன் மட்டும் காமதேனு பசுவின் கறிக்கு ஆசைப்பட்டிருக்கிறான். அதனால் அவன் பின்னுக்குத் தள்ளப்பட்டான் என்று சொல்லப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு பறையர்கள் பெருமை பேசக்கூடாது. ஒண்டிவீரன் பகடை என்ற தொன்மத்தை வைத்துக் கொண்டு அருந்ததியர்களும், தேவேந்திரர்கள் என்று பள்ளர்களும் இப்படி தொன்மத்தை வைத்துக்கொண்டுதானே "நாங்கள் ஆண்ட பரம்பரை' என்று கூறுகிறார்கள். பூமணியின் "அஞ்ஞாடி'யில் தொன்மம் இருக்கிறது வில்லுப்பாட்டு போன்றவை. அவற்றைக்கேட்டுக் கொள்ள இப்போதுதான் எந்திரங்கள் இருக்கிறதே? சோ. தர்மனின் "கூகை'யில்கூட தொன்மம் இருக்கிறது. அது பார்ப்பனியத்தைத்தான் தூக்கிப்பிடிக்கும். தலித் இலக்கியத்திற்கு அது பொருந்தாது. வெங்கட்சாமிநாதன் என்பவர் வழக்குரைஞர் சுமதி எழுதின "மணிமண்டபம்' என்ற ஒரு நாவலை, அது சவுண்டிப் பார்ப்பனர்களின் கதையை சொன்னதால் அதை தலித் நாவல் என்று சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் இருக்கின்றன.
 
ஜெயமோகனின் "நூறு நாற்காலிகள்' பற்றி?
 
படித்தேன். ஒரு தாயாரை இவ்வளவு கொச்சைப்படுத்திய ஒரு எழுத்தை என் வாழ்நாளில் நான் படிக்கவில்லை. மோசமான, அயோக்கியத்தனமான ஒன்று. "நூறு நாற்காலிகளை' கொண்டாடுபவர்கள் தலித் துரோகிகள், கருங்காலிகள் என்று கூட சொல்லலாம். கொடூரமான குறுநூல். அந்தப் பாத்திரமே தலித் துரோகிதான். அவன் ஒரு பார்ப்பன இந்து ஆசிரமத்திற்குப் போய்தான் கலெக்டர் ஆவான். அதற்குப் பிறகுதான் அவன் தாயார் மேலேயே அவனுக்கு அக்கறை வருகிறது. அந்த இனம் மட்டும் உயிரோடு இருந்தால் எழுத்தாளனை சும்மா விட்டிருக்காது. அந்த இனம் அழிந்து போய்விட்டது.
 
அடுத்ததாக என்ன செய்யலாம்?
 
தலித் இலக்கிய அமைப்புகளைக் கட்டலாம். ஒரு பத்து ஊர்களிலாவது நாம் அமைப்பினை உருவாக்க வேண்டும். அதன்மூலமாகத்தான் நாம் பணியாற்ற வேண்டும். புதிதாக எழுத வரும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் வரவேண்டியவை ஏராளம் இருக்கிறது. கால் நூற்றாண்டு தலித் இலக்கியம் போதாது. இன்னும் வரும் காலத்தைப்பற்றி நாம் யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனர்களைக் கூட தலித் எழுத்தாளர்கள் என்று சொல்லும் நிலை வந்துவிடும். அந்த நிலையை நான் யோசித்துப் பார்க்கிறேன். அதைத் தடுக்க வேண்டும்.
 
விருதுகள் குறித்து...
 
தலித்துகளுக்கு இன்னும் விருது கொடுக்கப்படவில்லை. இதை இடஒதுக்கீடு என்று சொல்வது கங்கணம் கட்டி தலித்துகளை அடிப்பது. இப்போதுதான் தலித் ஒருவருக்கு விருது கொடுக்கப்பட்டது. அவர் பிறப்பால் தலித். எழுத்தால் இடதுசாரி. நான் விருதுகளுக்கு ஆசைப்படவில்லை. ஆசைப்பட்டால் "சடையன்குளம்' போன்ற நாவலை என்னால் எழுத முடியாது. அடுத்ததாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை எழுத முயல்கிறேன். ஒரு நூற்றாண்டில் தலித்துகளின் எழுச்சி மற்றும் நூறாண்டு வரலாற்றை நாவலாக எழுத முயல்கிறேன். 
 
ஒளிப்படங்கள் : ஆர்.ஆர். சீனிவாசன்
 
Pin It