periyar 90s

ஆதி திராவிடர் கிறித்துவ பெற்றோர்களுக்கு மகனாக /மகளாகப் பிறந்த, அதாவது பிறப்பால் கிறித்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து / சீக்கியம் / புத்த மதங்களுக்கு மாறும் நிலையிலும் மற்றும் பிறப்பால் இந்து / சீக்கியம் / புத்த மதங்களைச் சார்ந்து இதர மதங்களுக்கு மாறி பின்னர் மீண்டும் இந்து / சீக்கியம் / புத்த மதங்களைத் தழுவும் நிலையிலும் அவர்களை, அவர் சார்ந்த இன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு ஆதிதிராவிடர் சாதிச் சான்று வழங்கலாம் எனவும் தற்போது இந்து / சீக்கியம் / புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதி திராவிடர் மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகளை வழங்கலாம். 

 
– ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் 18.11.2013 அன்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை 
 
எல்லாமே அவர்களுடையது; உழைப்பைத் தவிர!
 
1.12.1997 – பீகார் மாநிலத்தில் உள்ள லட்சுமண்பூர் என்ற கிராமத்தில் ரண்வீர் சேனா என்ற பூமிகார் (பார்ப்பனர்கள்) சாதியைச் சார்ந்த நிலச்சுவான்தார்களின் கூலிப்படை, நள்ளிரவில் தலித் மக்களின் சேரிக்குள் நுழைந்து – 16 குழந்தைகள், 27 பெண்கள் உள்ளிட்ட – 58 பேரை கொன்று குவித்தது. இப்படுகொலையை செய்த 16 பேருக்கு மரண தண்டனையையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையையும் கீழமை நீதிமன்றம் வழங்கியது. ஆனால், மேல் முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட 26 குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது (9.10.2013). பதினாறு ஆண்டுகள் கழித்து இப்படி முற்றிலும் அநீதியான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எப்படி குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ததோ, அதேபோல் லட்சுமண்பூர் படுகொலையை செய்த பார்ப்பனர்களையும் பீகார் உயர் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
 
“இனியும் போராட எனக்கு தெம்பில்லை. 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ஆனால் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றம் அவர்களுடையது; அரசாங்கம் அவர்களுடையது; அதிகாரம் அவர்களுடையது. ஏழைகளிடம் எதுவுமில்லை; இது மிகப்பெரிய அநீதி'' என்கிறார், கொல்லப்பட்ட குடும்பத்தில் ஒருவரான பவுத் பாஸ்வான். சங்கர மடத்தில் இனிப்பு வழங்கப்பட்டது போலவே இக்கிராமத்திலும் இனிப்புகள் வழங்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. “எங்களுக்கு அச்சமாக இருக்கிறது'' என்று இப்படுகொலையில் தன்னுடைய குடும்பத்தில் மட்டும் ஏழு பேரை இழந்த சுனைனா தேவி கூறியிருக்கிறார் ("இந்து' 11.10.2013). 
 
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையங்கம் எழுதி, அடுத்த நாளே "சங்கராச்சாரி குற்றமற்றவர்' என்று முழுப்பக்கம் விளம்பரம் வெளியிட்டு கொண்டாடும் "இந்து' நாளேடு, லட்சுமண்பூர் படுகொலை வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடுகிறது. ஒரே நேரத்தில் ஒரு வழக்கில் கொல்லப்பட்டவர்கள் சார்பிலும்; இன்னொரு வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பிலும் கூசாமல் "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு'வால் எழுத முடிகிறது. தங்கள் மீதான வன்கொடுமைகளுக்கு நியாயம் கேட்க தலித்துகள் நீதிமன்றங்களை நாடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களின் இத்தகு வன்கொடுமைகளுக்கு யாரிடம் போய் நீதி கேட்க முடியும்?
 
சிறைகளில் செருப்பணியும் உரிமை இல்லையா?
 
கிராமங்களில் தலித் மக்கள் செருப்பணிந்து செல்லக்கூடாது என்ற தீண்டாமைக் கொடுமை நடைமுறையில் இருப்பதைப் பற்றி நாம் செய்தி ஏடுகளில் அவ்வப்போது படித்திருக்கிறோம். ஆனால் அரசின் சிறைச்சாலைகளில் இப்படியான தீண்டாமைக் கொடுமையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? சேலம் மத்தியச் சிறையில் தலித் மக்கள் செருப்பணிந்து நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து "தமிழக வழக்குரைஞர் மாணவர் கூட்டமைப்பு' 12.08.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. இக்கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சந்தியூர் பார்த்திபன், “சேலம் சிறையில் தலித் மற்றும் மதச் சிறுபான்மையினர்கூட செருப்பணிந்து நடக்க அனுமதியில்லை. சாதி சார்ந்த அரசியல் கட்சியினர் மட்டுமே இங்கு நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். தலித் மக்கள் தனிமைச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அங்கு அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படுவதில்லை. தலித் சிறைவாசிகள் மட்டும் அல்லர்; சிறையில் பணியாற்றும் தலித் பணியாளர்கள்கூட பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்'' என்கிறார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி'யின் அமைப்பாளர் சிம்சன், “நான் சிறைவாசியாகப் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், சிறையில் நிச்சயமாக தலித்துகள் மீது பாகுபாடுகள் காட்டப்படுகின்றன; அதிலும் சேலம் சிறை இதற்குப் பெயர் பெற்றது'' என்றார் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' – 13.8.2013). தலித் மக்கள் சுயமரியாதை உணர்வுடன் செருப்பணிந்து நடப்பதைப் பார்க்கும் சாதி இந்துக்கள், தங்களை யாரோ செருப்பால் அடிப்பது போல் உணர்கிறார்களோ என்னவோ? 
 
"தமிழக அருண்சோரி'யைப் புகழும் அம்பேத்கரிஸ்டுகள்!
 
"இன்றைய காந்தி' என்ற தலைப்பில் ஜெயமோகன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூலை எழுதினார். அந்நூலில் காந்தியைப் புனிதமாக்கும் முயற்சியை விடவும் பாபாசாகேப் அம்பேத்கரையும் பெரியாரையும் கொச்சைப்படுத்துவதற்கே முன்னுரிமை அளித்திருந்தார். இந்நூல் குறித்து தமிழக அறிவுஜீவிகள் எவரும் வாய் திறக்கவில்லை. அருண்சோரி என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கரை அவதூறு செய்து ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதை மறுத்து சில நூல்கள் அந்த காலகட்டத்திலேயே வெளிவந்தன. அருண்சோரி தலித் இயக்கங்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். ஆனால், தமிழகத்தில் உள்ள தலித் இயக்க அறிவுஜீவிகள் "தமிழகத்தின் அருண்சோரி'யைப் போற்றிப் புகழ்கின்றனர். ஒருபுறம் அம்பேத்கரை அவமதித்து, பவுத்தத்தை திரிபுக்குள்ளாக்கி மறுபுறம் அயோத்திதாசப்பண்டிதரை உயர்த்திப் பிடிப்பதாக ஜெயமோகன் காட்டும் பாசாங்குக்கு மயங்கி, அவருடைய "வெள்ளையானை' நூலை "எழுத்து' என்ற தலித் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பேராசிரியர் சரஸ்வதி, கவுதம சன்னா உள்ளிட்டோரும் இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுச் "சிறப்பித்து'ள்ளனர். பெரியாரை அவமதிக்கும் சில தீவிர அறிவுஜீவிகள், அம்பேத்கரை அவமதிக்கும் இந்த எழுத்தாளரை அண்மைக் காலமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அரசியலில் மட்டுமல்ல, அறிவுத் தளத்திலும் "மோடி மஸ்தா'னின் செயல்திட்டத்தை நிறைவேற்ற அம்பேத்கர், பெரியார் பாசறைகளிலும் கூட்டணிகள் மலிவாகக் கிடைக்கின்றன. 
 
அச்சுறுத்தும் புள்ளி விவரம்
 
தேசிய குற்ற ஆவண மய்யம் வெளியிட்டுள்ள தகவல்கள் (தமிழ்நாடு 2012): 4,678 குற்றவாளிகளில் 1,748 தலித்துகள்; 322 பழங்குடியினர்; 642 முஸ்லிம்கள்; 673 கிறித்துவர்கள் உள்ளனர். 7,994 விசாரணைக் கைதிகளில் 3,442 பேர் தலித்துகள், 898 பேர் பழங்குடியினர், 663 பேர் முஸ்லிம்கள், 637 பேர் கிறித்துவர்கள். 523 தடுப்புக் காவல் கைதிகளில் 202 பேர் தலித்துகள், 36 பேர் பழங்குடியினர், 77 பேர் முஸ்லிம்கள், 43 பேர் கிறித்துவர்கள்.
 
அவதூறுகள் என்ன செய்துவிடும்?
 
பெரியார் மீதான அவதூறுகள் புதிதல்ல. எந்தப் பொறுப்பும் சமூக அக்கறையுமின்றி எழுதுவதற்கு தற்பொழுது இணைய தளங்கள் விரிந்து கிடக்கின்றன. “தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால்தான் விலைவாசி உயர்ந்து விட்டது' என்று பெரியார் சொன்னதாக ஓர் அவதூறு தலித்துகள் நடத்தும் சில ஏடுகளிலும், அறிவுஜீவிகள் என்போர் பல கூட்டங்களிலும் எவ்வித ஆதாரமுமின்றி நீண்ட நாட்களாகப் பரப்புரை செய்து வந்தனர். உண்மை என்ன என்பதற்கு பெரியார் ஆற்றிய உரையே பதிலாக ("விடுதலை' 15.12.1968) இருக்கிறது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி: “நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்த சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்ஷன்போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று விளம்பர நோட்டிஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று வால்போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். அதைக் கண்ட சிலர் என்னிடம் வந்து நீ எப்படி சொல்லலாம் என்று கேட்டார்கள். நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது; போட்டால் துணியே போடக்கூடாது; அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது? இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக்கொண்டு அந்த இன மக்களை எனக்கு ஓட்டுப்போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.'' தொண்ணூறுகளில் பெரியாரை எதிர்க்கத் தொடங்கியவர்கள் இன்று தங்களிடம் எந்த சரக்கும் இல்லாததால் காணாமல் போய்விட்டார்கள். ஆனால், அவதூறு செய்பவர்கள் புதிது புதிதாக முளைக்கிறார்கள். அன்று தலித்தியவாதிகள்; இன்று தமிழ்த் தேசியவாதிகள். பெரியாரின் கருத்தியல் பற்றிப் பரவுவதே இதற்குக் காரணம். அவதூறுவாதிகள் வருவார்கள், போவார்கள் நாம் அதைப்பற்றி கவலைப்பட ஏதுமில்லை. ஏனெனில், பெரியார் என்ற காட்டாற்று வெள்ளம் எதையும் அடித்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.
 
***
 
தமிழ்நாட்டில் தனது சாதியினர் மீதுதான் அதிக அளவில் தடுப்புக் காவல் சட்டங்கள் ஏவப்படுவதாக அண்மையில் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது ஒரு தவறான செய்தி. தேசிய குற்ற ஆவண மய்யம் வெளியிட்டிருக்கும் 2012 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலேயே அதிகமான நபர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு எனத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 523 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசியக் குற்ற ஆவண மய்யம் தெரிவிக்கிறது. இதில் 202 பேர் தலித் மக்கள்; 36 பேர் பழங்குடியினர் 77 பேர் முஸ்லிம்கள் 43 பேர் கிறித்துவர்கள். மொத்த எண்ணிக்கையான 523 பேரில் 358 பேர் அதாவது 68 சதவிகிதத்தினர் இந்த நான்கு சமூகங்களைச் சார்ந்தவர்கள். தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஜாதி வெறியர்கள் மீதோ, மத வெறியர்கள் மீதோ இந்த சட்டங்களை ஏவுவதற்கு பதில் எந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் மீதே இதைப் பயன்படுத்துவது இயற்கை நீதிக்கு முரணானது.
 
 – தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்
Pin It