1. நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?

Moon 2. எட்டாத தூரத்திலே
எவரும் இல்லா காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி
இரவெல்லாம் சிரிக்கிறாள்!-அவள் யார்?

3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?

4. ஊருக்கு அழகு எது என்றேன்
ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?

5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?

6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?

7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?

8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?

9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன?

10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ மாதமாகும்!-அவை யாவை?

விடைகள் :

1. விண்மீன்கள்
2. நிலா
3. சூரியன், சூரிய ஒளி
4. ஆறு
5. பனம்பழம்
6. நாணல் புல்
7. பேரிச்சை
8. பல்
9. விரல்கள், உள்ளங்கை.
10. கழுதை


Pin It

ரொம்ப காலத்திற்கு முன்னால், அதாவது நீங்களும் நானும் பிறக்காததற்கு முன்னால் நடந்த கதை இது. அப்போது ஒரு பெரிய காட்டில் நரியொன்று வாழ்ந்து வந்தது. அதன் தினப்படி வேலை என்ன தெரியுமா? பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று கோழிகளையும் வாத்துகளையும் திருடித் தின்பதுதான். லேசுப்பட்ட ஆள் இல்லை இந்த நரி. திருடுவதில் மகா ‘கில்லாடி'.

இப்படி இருக்கும் போது ஒரு நாள் நரி வழக்கம் போல கோழி திருடுவதற்காக கிராமத்திற்குப் புறப்பட்டது. கிராமத்தில் உள்ள ஒரு வீட்டருகில் அது பதுங்கிக் காத்திருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவர்களது சிறிய மகளும் இருந்தார்கள். அம்மா ஒரு புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒளிந்திருந்த நரி இதை ஆர்வமாகக் கேட்டது.

Jackle “அந்தக் கதை இந்தக் கதை கேளு பாப்பா
நல்லக் கதை எல்லாம் கேளு பாப்பா.
ஆமையும் முயலும் கதை சொல்வேன்
ஓட்டப் பந்தய கதை சொல்வேன்.
குரங்கும் முதலையும் கதை சொல்வேன்
வேடனை ஏய்த்த கதை சொல்வேன்.
ஒட்டகம் ஒன்று கூடாரத்தில்
இடம் கேட்ட கதையும் நான் - சொல்வேன்
எந்தக் கதை வேண்டும் சொல்- பாப்பா,
அந்தக் கதை உடனே நான் - சொல்வேன்.''

ஒரு புத்தம் புதிய கதைப் புத்தகத்தைப் பார்த்துதான் அம்மா அந்தப் பாட்டைப் ச்பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நரிக்குப் புரிந்தது. அந்தப் பாடலில் ஒரு முறை கூட நரி என்ற பெயர் வரவே இல்லை. எனவே அதில் தன்னைப் பற்றி ஒரு கதையும் இல்லை என்று நரி தெரிந்து கொண்டது. அதற்கு மிகவும் கோபம் வந்தது. அந்தப் புத்தகத்தை எப்படியாவது திருடிச் செல்ல வேண்டுமென்று அது உடனே முடிவு செய்தது. அன்று இரவு எல்லோரும் தூங்கியபோது நரி பதுங்கிப் பதுங்கி அந்த வீட்டின் ஜன்னலை நெருங்கியது. பிறகு அங்கேயிருந்த கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடியது. ஓடி ஓடி வெகு தொலைவிற்குச் சென்ற பிறகு, சற்று இளைப்பாறிவிட்டு கதைப் புத்தகத்திடம் சொன்னது நரி:

“அந்தக் கதை இந்தக் கதை இருந்தாலும்
என் கதை எழுது புத்தகமே!
இனியும் என்கதை எழுதாதிருந்தால்
கடித்துக் கிழிப்பேன் உன்னை நான்!''

இதைக் கேட்டு பயந்து நடுங்கியது புத்தகம். அய்யோ! நான் அச்சிடப்பட்டு கொஞ்சம் நாட்கள் கூட ஆகவில்லையே... அதற்குள் இந்த நரி கிழித்து விடுவேன் என்று மிரட்டுகிறதே என்று வருந்தியது. அது தயங்கித் தயங்கி நரியிடம் சொன்னது:

“நரியே நரியே என்னைக் கிழிக்காதே!
பல பேர் படிக்கும் புத்தகம் நான்...
நரியே நரியே கிழிக்காதே,
உன் கதை நானே எழுதுகிறேன்!
முதலில் சென்று எங்கிருந்தும்
பேனா ஒன்றைக் கொண்டு வா!''

புத்தகம் சொன்னது நியாயமாகத்தான் தெரிந்தது நரிக்கு. எழுத வேண்டுமென்றால் ஒரு பேனா வேண்டுமல்லவா? எனவே, நரி புத்தகத்தை ஒரு தாழம்புதரில் மறைத்து வைத்து விட்டு பேனா கொண்டு வருவதற்காகப் புறப்பட்டது. நடந்து நடந்து அது தூரத்தில் இருந்த ஒரு வீட்டை அடைந்தது. அந்த வீட்டில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்த சிறுவன் அப்போதுதான் வெளியே சென்றிருந்தான். ஜன்னலருகில் இருந்த மேசை மீது பேனா கிடந்தது.
அந்தப் பேனாவிடம் சொன்னது நரி:

“எழுதுபவனே உடனே வா!
கதை எழுதப் போவோம் வா!
மாட்டேன் என்று சொன்னாயோ,
கடித்து உடைப்பேன் பார்த்துக் கொள்!''

இதைக் கேட்ட பேனா பயந்து நடுங்கியது. அய்யோ நான் உருவானதிலிருந்து கொஞ்சம் பக்கங்கள் கூட எழுதி முடிக்கவில்லையே... அதற்குள் இந்த நரி உடைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறதே என்று வருந்தியது. அது தயக்கத்துடன் நரியிடம் கூறியது :

“நரியே நரியே நான் வருவேன்!
கதை எழுதவே நான் வருவேன்!
ஒரு துளி மையும் இல்லாமல்
என் வயிறும் காய்ந்து கிடக்கிறதே
மையில்லாமல் எழுதுவது
யாரால் இயலும் சொல் நரியே''

பேனா சொல்வதும் நியாயமாகத்தான் தெரிந்தது நரிக்கு. மை இல்லாமல் எந்தப் பேனாவால் தான் எழுத முடியும்? அது பேனாவை ஒரு கற்றாழைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு நடந்தது. நடந்து நடந்து ஒரு மை வியாபாரியின் கடைக்குச் சென்றது. கடைக்கு அருகிலேயே பதுங்கிக் காத்திருந்தது. முதலாளி சற்று அசந்த நேரம் பார்த்து ஒரு மைப் புட்டியை எடுத்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாக ஓடி வந்தது.

நரி மைப் புட்டியை எடுத்துக் கொண்டு நேராகக் கற்றாழைப் புதருக்குச் சென்றது. அங்கிருந்த பேனாவிடம் மைப்புட்டியைக் கொடுத்தது. பேனா என்ன செய்தது தெரியுமா? மை முழுவதையும் ஒரே மடக்கில் குடித்து விட்டது. மை குடித்து வயிறு நிறைந்தவுடன் பேனா நரியுடன் புறப்பட்டது. விரைவிலேயே அவர்கள் இருவரும் புத்தகம் இருந்த தாழம்புதரை அடைந்தார்கள்.

பேனா கிடைத்ததும் புத்தகம் தன் பக்கங்களில் அந்த நரியைப் பற்றிய கதையை எழுதத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது நரி. மகிழ்ச்சி தாங்காமல் துள்ளிக் குதித்தது. ஊளையிட்டபடியே மண்ணில் புரண்டு குட்டிக் கரணம் அடித்தது. “ஹா... ஹா... ஹா! ஊ... ஊ... என்னைப் பற்றிய கதை இல்லாமல் ஒரு கதைப் புத்தகம் இருக்கலாமா? நான் அதை அனுமதிப்பேனா?'' என்று கூச்சலிட்டது. சற்று நேரம் கழிந்த பிறகு புத்தகம் சொன்னது:

“நரியே நரியே அருகே வா,
உன் கதை எழுதி முடித்தேன் நான்.
உனக்கும் படித்துக் காட்டட்டுமா?''
நரி ஆனந்தமாய் அரைக்கண் மூடிக்கொண்டு தலையசைத்தது. நரியின் கதையை வாசிக்கத் தொடங்கியது புத்தகம் :

canines “நரி நரி திருட்டு நரி
கோழி திருடும் குள்ள நரி.
கோழி திருட ஒரு முறை
பாய்ந்து பாய்ந்து வந்தது!
பாய்ந்து வந்த நேரத்திலே
புத்தகத்தைக் கவர்ந்தது!
பின்பு அது ஓடிச் சென்று
நல்ல பேனாவையும் எடுத்தது!
பேனா திருடிச் சென்ற நரி
மறைத்தெடுத்தது மையையும்!
நரி நரி குள்ள நரி
கண்டதெல்லாம் திருடும் நரி!''

புத்தகம் சொன்ன கதையைக் கேட்டு நரி மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டது. அதற்கு ஏற்பட்ட கோபத்தையும் வருத்தத்தையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டு விரைவாக வீடு நோக்கி நடந்தது. நடந்து போகும் போது அது இப்படிச் சொன்னது: “ச்சே! இந்தக் கதைப் புத்தகங்களில் உள்ள கதைகளெல்லாம் ஒரு பைசா கூட பெறாத கதைகள். ச்சே, ச்சே! முட்டாள்கள்தான் கதைப் புத்தகங்களைப் படிப்பார்கள்...'' இதைக்கேட்டு புத்தகமும் பேனாவும் குபீரென்று சிரித்தன. பிறகு அவரவர் வீட்டிற்கு நடந்து சென்றன.
மலையாளம் : எம்.ஆர். பிரதீப்
தமிழில் : யூமா வாசுகி

-நன்றி : "முள்ளம்பன்றியின் கனவு' அறிவியல் வெளியீடு,

Pin It

Goper_Nicus விண் கோள்களின் தோற்றம் பற்றிய அறிவியல் பிரிவை விண்கோளியல் Cosmogony என்று அழைக்கிறார்கள். இத்துறை இன்று மிகச்சிறப்பாக வளர்ந்திருக்கிறது. ஆனால் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்துறை அவ்வளவாக வளர்ந்து இருக்கவில்லை. இத்துறையே புவி இயற்பியல் (Geophysics), புவிவேதியியல் (Geochemistry) புவியியல் (Geology) போன்ற கிளைத்துறைகளுக்கு அடிப்படையாக விளங்கி வருகிறது.

விண்கோளியல் 18 ஆம் நூற்றாண்டில் தான் தோன்றியது. 1745இல் புபோன் என்ற பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி இருந்தார். சூரியனில் பெரிய வால்நட்சத்திரம் மோதிய போது, சிதறிய சூரியப் பொருளிலிருந்து கோள்கள் தோன்றின என்றார். 1755இல் ஜெர்மானிய தத்துவ அறிஞர் காண்ட் என்பவர் "சடப் பொருள்கள் எனப்படும் உயிரற்ற துகள்களிலிருந்து தான் உலகம் உருவாகியிருக்கிறது' என்றார்.

Kalileo 1796இல் வானியல் அறிஞரும், கணித அறிஞருமான லாப்லாஸ் ‘உலக அமைப்பு பற்றிய விளக்கம்' (Exposition of the world system) என்ற நூலை வெளியிட்டார். இவரின் கருத்துகள் காண்ட்டின் கருத்துக்களைப் போலவே இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் லிகோண்டஸ் என்பவரும் தன் கருத்தை வெளியிட்டார். விண்வெளியில் இருந்த நுண் துகள்கள் நெகிழ்வோடு இணைவதும், மோதுவதுமாக இருந்திருக்கும். அத்துகள்கள் மிகவும் தட்டையான சுழலும் தட்டாக ஒன்று திரண்டிருக்கும். அதனால் தான் கோள்கள் உருவாகியிருக்கும் என்று அவர் சொன்னார். இந்தக் கருத்து, அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

1564ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ள ப்ளாரன்சில் பிறந்த கலிலியோ, சூரியனை கோள்கள் சுற்றுகின்றன என்று கண்டறிந்து சொன்னதற்காக மரண தண்டனை பெற்றார். கிறித்துவ மத போதகர்கள் விதித்த அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் கலிலியோ. அவர் காலத்துக்கு முன்பாக வாழ்ந்தவர் டாலமி (கி.பி.2ஆம் நூற்றாண்டு). அவர் பூமியைத்தான் எல்லா கோள்களும், சூரியனும் சுற்றுகின்றன என்றார். ஆனால் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோவுக்கும் முந்தைய கோபர்நிகஸ், கலிலியோ சொன்னதைப் போலவே சூரியன் மய்யக் கொள்கையை சொல்லியிருக்கிறார்.

இந்த அறிவியல் அறிஞர்களின் வரிசையில் மிகவும் முக்கியமானவர்கள் இருவர். அவர்கள்தான் கெப்ளரும், நியூட்டனும். கெப்ளர் நீண்டகாலமாக அறிவியல் அறிஞர் ஒருவரிடம் உதவியாளராக இருந்தார். கெப்ளர் (1571-1630) வெளியிட்ட கோள்களின்
இயக்கம் பற்றிய மூன்று கொள்கைகள் மிகவும் முக்கியமானவையாகும்.

Kepler கெப்ளரின் விதிகள்

1. கோள்கள் சூரியனை ஒரு குவிமய்யமாகக் கொண்ட நீள் வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன.
2. ஒரு கோள் அதன் நீள்வட்டப்பாதையில் இயங்கும்போது சூரியனுக்கும், கோள்களுக்கும் இடையில் வரையப்படும் கோடு-சம கால அளவுகளில் சம பரப்பளவைக் கடக்கும்.
3. கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனிலிருந்து அவற்றின் சராசரி தொலைவுகளின் மும்மடிகளுக்கு நேர் விகிதத்தில் உள்ளன.

இந்த விதிகளின் அடிப்படையில் கோள்களின் சுற்றுப் பாதைகளும், அவற்றின் பரப்பும், சுற்றுக் காலமும் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன.


Pin It