அன்பான குழந்தைகளே! வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

student
இந்த ஒரு மாத காலமாக செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்ப ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது. அது என்னவென்று உங்களுக்குக்கூட தெரியும். மாணவர்கள் மோதல்! சென்னையில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள பல மேல்நிலைப் பள்ளிகளிலும் கூட, மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் நிலை உருவானது. சமூகத்தில் இருக்கின்ற முட்டாள்தனமான பிரிவினைகளை காரணம் காட்டி, ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது தவறானது; கல்வியின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரானது. மாணவப் பருவம் படிப்பதற்கான பருவம். அந்த வயதில் படிப்பதுடன், தங்களுக்குள்ளே இருக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறமொழிகளில் ஏதேனும் ஒன்றையாவது தேர்வு செய்து பயிற்சி பெற வேண்டும். உங்களை ஒரு முழு மனிதராக மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.

பாடங்களின் வழியே நீங்கள் பெற்ற மதிப்பீடுகளான பொய் பேசாமலிருத்தல், ஒழுக்கத்தை கடைப்பிடித்தல், அனைவரையும் மதித்தல், சாதி, மத கருத்துக்களை தூக்கி எறிதல், மனித உரிமை கருத்துக்களைப் பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடித்தால்-உங்கள் சிந்தனை தெளிவு பெறும். எதிர்காலத் தமிழகம் சீர்பெறும்.
Pin It