Goper_Nicus விண் கோள்களின் தோற்றம் பற்றிய அறிவியல் பிரிவை விண்கோளியல் Cosmogony என்று அழைக்கிறார்கள். இத்துறை இன்று மிகச்சிறப்பாக வளர்ந்திருக்கிறது. ஆனால் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்துறை அவ்வளவாக வளர்ந்து இருக்கவில்லை. இத்துறையே புவி இயற்பியல் (Geophysics), புவிவேதியியல் (Geochemistry) புவியியல் (Geology) போன்ற கிளைத்துறைகளுக்கு அடிப்படையாக விளங்கி வருகிறது.

விண்கோளியல் 18 ஆம் நூற்றாண்டில் தான் தோன்றியது. 1745இல் புபோன் என்ற பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி இருந்தார். சூரியனில் பெரிய வால்நட்சத்திரம் மோதிய போது, சிதறிய சூரியப் பொருளிலிருந்து கோள்கள் தோன்றின என்றார். 1755இல் ஜெர்மானிய தத்துவ அறிஞர் காண்ட் என்பவர் "சடப் பொருள்கள் எனப்படும் உயிரற்ற துகள்களிலிருந்து தான் உலகம் உருவாகியிருக்கிறது' என்றார்.

Kalileo 1796இல் வானியல் அறிஞரும், கணித அறிஞருமான லாப்லாஸ் ‘உலக அமைப்பு பற்றிய விளக்கம்' (Exposition of the world system) என்ற நூலை வெளியிட்டார். இவரின் கருத்துகள் காண்ட்டின் கருத்துக்களைப் போலவே இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் லிகோண்டஸ் என்பவரும் தன் கருத்தை வெளியிட்டார். விண்வெளியில் இருந்த நுண் துகள்கள் நெகிழ்வோடு இணைவதும், மோதுவதுமாக இருந்திருக்கும். அத்துகள்கள் மிகவும் தட்டையான சுழலும் தட்டாக ஒன்று திரண்டிருக்கும். அதனால் தான் கோள்கள் உருவாகியிருக்கும் என்று அவர் சொன்னார். இந்தக் கருத்து, அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

1564ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ள ப்ளாரன்சில் பிறந்த கலிலியோ, சூரியனை கோள்கள் சுற்றுகின்றன என்று கண்டறிந்து சொன்னதற்காக மரண தண்டனை பெற்றார். கிறித்துவ மத போதகர்கள் விதித்த அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் கலிலியோ. அவர் காலத்துக்கு முன்பாக வாழ்ந்தவர் டாலமி (கி.பி.2ஆம் நூற்றாண்டு). அவர் பூமியைத்தான் எல்லா கோள்களும், சூரியனும் சுற்றுகின்றன என்றார். ஆனால் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோவுக்கும் முந்தைய கோபர்நிகஸ், கலிலியோ சொன்னதைப் போலவே சூரியன் மய்யக் கொள்கையை சொல்லியிருக்கிறார்.

இந்த அறிவியல் அறிஞர்களின் வரிசையில் மிகவும் முக்கியமானவர்கள் இருவர். அவர்கள்தான் கெப்ளரும், நியூட்டனும். கெப்ளர் நீண்டகாலமாக அறிவியல் அறிஞர் ஒருவரிடம் உதவியாளராக இருந்தார். கெப்ளர் (1571-1630) வெளியிட்ட கோள்களின்
இயக்கம் பற்றிய மூன்று கொள்கைகள் மிகவும் முக்கியமானவையாகும்.

Kepler கெப்ளரின் விதிகள்

1. கோள்கள் சூரியனை ஒரு குவிமய்யமாகக் கொண்ட நீள் வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன.
2. ஒரு கோள் அதன் நீள்வட்டப்பாதையில் இயங்கும்போது சூரியனுக்கும், கோள்களுக்கும் இடையில் வரையப்படும் கோடு-சம கால அளவுகளில் சம பரப்பளவைக் கடக்கும்.
3. கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனிலிருந்து அவற்றின் சராசரி தொலைவுகளின் மும்மடிகளுக்கு நேர் விகிதத்தில் உள்ளன.

இந்த விதிகளின் அடிப்படையில் கோள்களின் சுற்றுப் பாதைகளும், அவற்றின் பரப்பும், சுற்றுக் காலமும் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன.


Pin It