“கூலி வேலை செய்றேன் சார். போன ஏழாம் தேதி, பொங்கலுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்புக்கல் வாங்குறதுக்காக தெருவுல நடந்து போய்க்கிட்டிருந்தேன். அங்க நின்னுட்டிருந்த ஆரோக்கியசாமி என்னைக் கூப்பிட்டு, "என்னடா, எங்க முன்னாடி செருப்பைப் போட்டுக்கிட்டு "சரட்டு புரட்டு'ன்னு நடக்குறே. ஒழுங்கா நடக்க முடியாதா? அவ்ளோ திமிரா?'ன்னு கேட்டு வம்பு பண்ணினார். "என் செருப்பு, நான் போடுறேன், நீங்க யாரு அதைக் கேக்க?'ன்னு சொன்னேன். உடனே கோபமாகி, என்னை துரத்தினாரு. பயத்துல ஓட ஆரம்பிச்சேன். ஆனா, அவங்காளுங்க எல்லாருமா சேர்ந்து என்னை கொத்தாப் பிடிச்சு, கண்டபடி அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே அங்க கீழ கிடந்த மலத்தை ஒரு குச்சியில எடுத்து, "இந்த வாய்தானே எதுத்துப் பேசுது?'ன்னு சொல்லிக்கிட்டே என் வாயில வெச்சாங்க! அடியும் அவமானமும் தாங்க மாட்டாம, அந்த இடத்துலேயே நான் நிலைகுத்தி உக்காந்துட்டேன். அதுக்கப்புறம் எங்காளுங்க வந்து, என்னைக் கழுவி கூட்டிட்டுப் போய், அன்னிக்கு நைட்டே வத்தலக்குண்டு கவருமெண்டு ஆஸ்பத்ரியில சேர்த்தாங்க. அப்படியே போலிஸ்ல புகாரும் கொடுத்தோம். ஆனா, அவங்க நடவடிக்கை எடுக்கலை!''

-திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த சடையாண்டி என்ற தலித் இளைஞர். "ஜூனியர் விகடன்' 24.1.2010

அண்மைக் காலத்தில் ஈழத்தமிழர்கள் மீது மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின்போது கூட, மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கும் இழிவுகளை சிங்களவர்கள் செய்யவில்லை. திண்ணியத்தின் வடுக்கள் ஆறாத நிலையில், தலித்துகள் மீது இன்னொரு திண்ணியம் திணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும்கூட பொதுத் தெருவில் ஒரு தலித் செருப்புப் போட்டுக் கொண்டு நடப்பதை, சாதி இந்துக்களால்தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே தெருவில் அய்ந்தறிவுள்ள நாய் பேண்டு வைப்பதோ, நடப்பதோ, குரைப்பதோ, கடிப்பதோ அவர்களுக்கு அருவெறுப்பாக இல்லை! "இந்து மதம் என்பது புனிதப்படுத்தப்பட்ட இனவெறியே' என்ற அம்பேத்கரின் கூற்றை எவரேனும் மறுக்க முடியுமா?

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பதுதான், தலித்துகளுடைய முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. "முன்னேறிய' சக தலித்துகள் குறிப்பாக இடஒதுக்கீட்டுப் பயனாளிகள் இது குறித்த எந்த அக்கறையும், பொறுப்புமற்று உலகியல் இன்பங்களிலேயே தங்கள் நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர். பொது சமூகத்திற்கு இது ஒரு பிரச்சனையே அல்ல.

தலித்துகள் மீதான வன்கொடுமைகளை, சட்டங்களால் தடுத்துவிட முடியாது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த பின்னும், அச்சட்டத்தால் ஓரளவுக்கு நிவாரணங்களை வழங்க முடிந்திருக்கிறதே தவிர, வன்கொடுமைகளைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியாவில் அரசியல் சட்டத்தை விட, ஜாதிய சட்டங்கள்தான் கோலோச்சுகின்றன.தலித்துகள் மீதான வன்கொடுமைகளை, இந்துவாக இருந்து கொண்டே ஒருபோதும் தடுத்து விட முடியாது. இந்துவாக இருக்கக்கூடிய ஆபத்தை உணர்த்தி, அதிலிருந்து விடுவிக்கும் முயற்சியே அடிப்படையானது. அதற்கு அறிவார்ந்த தளத்தில் தீவிரமாக செயல்பட்டு, மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் "நாங்கள் இந்துக்கள் அல்லர்' என்ற முழக்கத்தை "தலித் முரசு' முன்வைத்தது. அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதே காலத்தின் கட்டாயம். தலித்துகளின் அரசியல் எழுச்சியை 20 ஆண்டுகள் கண்டுகளித்து விட்டோம். நம்மீதான இழிவை ஒழிக்கும் ஆற்றலை அரசியல் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. 60 ஆண்டு கால இடஒதுக்கீடும் நம்மீதான இழிவை நீக்கிவிடவில்லை. சட்டம், நிவாரணங்களை மட்டுமே காலம் தாழ்த்தி வழங்கும்; இழிவைப் போக்காது. இதை எல்லாம் உணர்ந்துதான் தொலை

நோக்குடன் நமக்கான செயல்திட்டத்தை அம்பேத்கர் அறிவித்தார்; செயல்படுத்தினார். அந்த வகையில் "நாம் இந்துக்கள் அல்லர்' என்று பிரகடனப் படுத்துவதே நம்மை சுயமரியாதை உள்ளவர்களாக மாற்றும்; அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும்.

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்த நெறியை ஏற்றுக் கொள்வதே பண்பாட்டுப் புரட்சி. நம்மைத் தீண்ட மறுக்கும் இந்து கோயிலை தழுவ முற்படுவது எதிர்ப்புரட்சி. "தலித் முரசு' சார்பில், ஏப்ரல் 14, 2010 அன்று பெரம்பலூரில் முதற்கட்டமாக ஆர். கிருஷ்ணசாமி தலைமையில் 100 குடும்பங்களும்; மே மாதம் வேலூரில் பேராசிரியர் அய். இளங்கோவன் தலைமையில் 100 குடும்பங்களும் பவுத்தம் ஏற்கத் தயாராகி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவு நீக்கும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க, சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைவரையும் அழைக்கிறோம். எம்முடன் அணிவகுக்க விரும்புகின்றவர்கள் "தலித் முரசி'ல் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.