eelam_people_500

திறக்கப்படாத வொரு மதுக்குப்பியென
தினவு முறிக்கும் வேட்கையொடு
தின்னவும் பருகவுமான
அப்பமும் குருதியுமாக
பிரித்தறிய முடியாத பிண்டமாய்
உறைந்து கிடக்கிறாய்;
கால தேவனின்
காமக் கடும்பசிப் பேழையில்

தீர்க்கவியலாத தாபத்துடன்
திசையெங்கும் ஒளிவீச
சுட்டெரிக்கும் தணலோடு
பிணைந்து மருகிக் கிடக்கும்
நிணம் -
தேவன்
நான்
என் உடலம்

இந்திர விழாவின்
அந்திமக்காலக் கடைசி
முழுநிறை மதியும்
ஏழு கடல்களும் சங்கமிக்கும்
பாலைப் பெரு வெளியில்
காய்ந்து உதிரலாம் -
அய்நிலங்களும்
அயந்திணைகளும்
அய்ங்குடிகளும்
இருள் சுழற்றி
இல்லா தொழிந்தும் போமோ?

ஆநிரை கவர
அகழி தூர்த்துப் புக
அரண்கள் கொத்தளங்கள்
தகர்த்து முன்செல்ல
ஆதிக் குடித் தலைவனுக்கு
ஆணையிட்ட சேடிப் பெண்டிர்
அக் கணம்
மின்னிக் களிக்கலாம்
விண் பூக் கூட்டமாய்

கண்ணகிப் பெருமாட்டி
முலையறுத்துப் பற்றிப் படர்ந்த
உயர் நெருப்பில்
அழிந்து போனது அவன்
தமிழ்ச்சங்கம் மட்டுமா -
நம் சந்திப்புகளுக்கான
அந்தரங்கக் குடில்களும்தாமே?

கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே முகிழ்த்த
தணல் தழுவி நிரவ
உயிர்க் குடிகள் தீப்
பிழம்பாய் உலவித் திரியும்
அரிச்சந்திர மயான காண்டமே
உனதும் எனதுமான
வரலாறு என்பதையுணர்.

என் விரல் தீண்டி
கருகிச் சரிந்தன நம்
கரிசல் காட்டில் விளைந்த
பருத்திக் காய்களில் நெய்த
உன்
அந்தப்புரத் திரைச்சீலைகள்

ஊரெங்கும் ஒரே பிணவாடை
செவிகேள் மரண ஓலம்

என் வெப்ப மூச்சுக்கும்
சாம்பலாய் உதிரும்
சீமைச் சந்தைக்கு விலைபோகாத
உன்னுடை களைந்து
அம்மணம் அணிந்து வா -

ஊரெங்கும் ஒரே பிணவாடை

பொங்கிச் சுழித்தோடும்
பொருநை நதி மூழ்கி
அக்கரைக்குக் குடியேக
அதிர்ந்து வீழும்
அரண்மனை புழக்கடையில்
அனல் கீறிய
அம்மண உயிர்ச்சவமாய்
விழிகள் பூத்துக் கிடக்கிறான்
தேவன் -
ஆழிக்கடல் மூழ்கடித்த
லெமூரியா மலைக் குன்றின்
நீர் பாவாத உச்சி நிலம்
வாழப் பொருத்தமான மிச்சமாய்;
வங்கப் பெருவெளியில்
கண்ணீர்த் தீவென
கண்டடைந்தேன் நமக்காய் -

இனம் தழைக்கவும்
மொழி சிறக்கவும்
ஆதிசிவன் உடனுறைந்த
அப்பத்தா அம்மைக் கிழவியின்
அழகிய விருட்சம் நீ
முக்காலமும் சிதையாத
தாய் வழிச் சிற்பமோ?

அறம் பொருள் இன்பம் நிர்மூலமாகிய
மரண ஓலத்தின் நடுவிலும்
வெஞ்சினம் பித்தேறி
சிரம் கொப்பளித்துச் சிவக்க
காமரூபம் கொள்கிறேன்
நான் -

தேவனின் வருகைக்காக
வழி பிளந்து பேரிரைச்சலோடு
விலகி நிற்கும்
பெரும் புனல் அதுவே
காமக் கடும்பசிப் பேழையோ?
எல்லைகள் விரிந்த நீர்மத்துள்
தலைமுறை ஏக்கங்களோடு
உன் உயிர் தழுவி
இறங்குகிறான் தேவன் -

தொன்மம் பூத்த மதுக்குப்பியே!
பனித்த உடலம் திறந்து
ஆலகால நஞ்சென
என் உயிர் குடி
அமுதமென உள்ளிறங்கு -

வானத் தூர தொலைவில்
வையக ஆழப் புதைவில்
நாகர்கள் புடை சூழ
களிநடனம் புரிகுவோம் - நம்
ஆலிங்கனம் பூக்கட்டும்
உச்சிநில கண்ணீர்த் தீவில்
விருட்சம் தழைக்கட்டும்;
இனம் மொழி திணை
இனி அழியப் போவதில்லை.

உயிரணுவும் மெய்க்கருவும்
புணர்ந்த சினையில்
தலைச்சன் மொழி பூக்கும்;
நம் தலைமுறை யெச்சங்கள்
காக்கும் நடுகல் சாமிகளின்
உருவில் ஆயுதமென
அஃது
தொப்புள் கொடியறுத்து உதிரும்
குருதியில் முகிழ்க்கும் -
இக்கவிதையும்கூட

ஆதிபகவன் முதற்றே உலகு

- இளம்பரிதி