தலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – தலித் வரலாற்றாளர்கள் தருகின்ற ஆதாரங்களும், தரவுகளும் – தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்குமான நியாயங்களை உணர வைக்கின்றன. பொதுப்பண்பாட்டிற்கு எதிராக ஓர் எதிர்ப்பண்பாட்டை உருவாக்கவும் தலித் வரலாறு தேவைப்படுகிறது.

வரலாற்றாய்வாளர் ஈ.எச்.கார் என்பவர், வரலாற்றில் தவிர்க்க முடியாதது, தப்ப முடியாதது என எதுவும் இல்லை என்கிறார். ஆனால் இந்திய வரலாற்றைப் பொருத்த வரையில், தலித் வரலாறு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட தொல்குடி மக்களின் வரலாறாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்றைய நவீன எழுத்துச் சூழலில் எதையெல்லாம் வரலாற்றில் தவிர்த்தார்களோ, அதையெல்லாம் தோண்டித் துருவி தரவுகளைத் திரட்டி, அவற்றை ஆவணமாக்கும் பணிகளை தலித் வரலாற்றைக் கட்டமைப்பவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். அதில் முக்கியமான இடம் பூவிழியனுக்கு உண்டு. அவர் வாழும் சீர்காழி அதைச் சுற்றியுள்ள தஞ்சை, கடலூர் பகுதிகளில் நிகழ்ந்த தலித் போராட்டங்களை நுண் வரலாறுகளாக மாற்றும் எழுத்தாளர் பூவிழியன்.

poovizhian_350ரெட்டியூர் பாண்டியன், கே.பி.எஸ்.மணி, இளைய பெருமாள் போன்றவர்களின் வரலாற்று ஆவணங்கள் பூவிழியனுடையவை.  ஒரு மனிதருடைய வாழ்வை, அவருடைய மறைவிற்குப் பிறகு எழுத்தின் மூலம் கொண்டாடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. எத்தனை தலித் தலைவர்கள் மின்விளக்குகூட இல்லாமல், வெறும் மண்ணெண்ணெய் குப்பி விளக்குகளை வைத்துக் கொண்டு, வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் படுத்துறங்கி, கிராமங்களில், சேரிப்பகுதிகளில் விடுதலைக் கருத்தியலை வளர்த்திருக்கின்றனர். அவர்கள் எல்லாம் யார் என்றே இன்றைய இளைஞர் சமூகம் அறிவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

ஏன் அம்பேத்கர் குறித்த வரலாற்றுச் செய்திகள் கூட இன்று ஓரளவு விடுதலை பெற்று வாழ்கின்ற தலித் இளைஞர்களுக்குத் தெரியாமல்தானே இருக்கிறது! பெருவரலாறுகள் மட்டுமே வரலாறுகளாக மதிக்கப்படுகின்றன. வரலாற்றுப் பாடங்களும் பிரதிகளும் கூட பெருவரலாற்றுத்தன்மையுடையனவாகவே இருக்கின்றன. ஆனால், நுண்வரலாறுகள் என்பவை உண்மையான வரலாறுகள். அத்தகைய நுண் வரலாறுகளைக் கட்டமைப்பதன் மூலம், பூவிழியன் தலித் ஆக்கவெளியில் தனக்கென ஓரிடத்தை அடைகிறார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர் பூவிழியன். கல்லூரியில் படிக்கும் போதே கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, ஒரு தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பின்னர் அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர், மறைந்த தலித் தலைவர் எல்.இளையபெருமாள் வசித்த தெருவிலிருந்து கல்லூரிக்கு வருபவர். அவர், இளையபெருமாளின் சமூகப் போராட்டங்களைப் பற்றி சொல்ல, அதன் பிறகு அவர் பேசும் கூட்டங்களுக்கு இவரும் ஒரு பேச்சாளர் என்பதால் பேச வைக்கப்பட்டு சமூகப் பணியாற்றியுள்ளார். அப்போது கே.பி.எஸ். மணி அவர்களின் நினைவு நாள் கூட்டம் ஒன்று நடத்தப்பட, அதில் மணி அவர்களின் பணிகள் பல்வேறு நபர்களால் புகழ்ந்துரைக்கப்பட, அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதன்பிறகு வரலாற்றை எழுதும் எழுத்து வகைமைக்கு வந்திருக்கிறார் பூவிழியன்.

கே.பி.எஸ். மணியின் வாழ்க்கையில் நடைபெற்ற போராட்டச் சுவடுகளை அணு அணுவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் பூவிழியன். சாதி இந்து தெரு வழியாக தலித்துகள் பிணம் போனால் வழிமறிக்கும்போது, பிணத்தை அதே இடத்தில் கொளுத்த வேண்டும் என்று மணி உத்தரவிட, ஓடிவந்து பிணத்தைப் புதைக்க வழிவிட்டிருக்கின்றனர் ஆதிக்க சாதியினர். இது நடந்தது எடமணல் என்னும் இடத்தில். இப்படிப் பல செய்திகள்.

சாதி ஒழிப்பிற்கு அவர் ஆற்றிய போரின் உத்திகள் மிக முக்கியமானவை. செத்துப்போன மாட்டைத் தூக்க ஆதிக்க சாதிகள் வலியுறுத்தினால், கே.பி.எஸ். மணி ஓர் உத்தியைக் கையாண்டிருக்கிறார். எந்த மாடு செத்துவிடுகின்றதோ, அந்த மாட்டின் இணை மாட்டை செத்த மாட்டை எடுக்கின்றவர்களுக்கு தந்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதனால் ஏற்படப்போகும் பொருளாதார இடப்பெயர்வுக் குறித்த அச்சமே, ஆதிக்க சாதியினரை செத்த மாட்டை எடுக்க தலித்துகளை அழைப்பதற்கு தடையாகிப் போனது. இதைப் போன்ற செய்திகள் அந்நூலில் பதிவாகியிருக்கின்றன. அதேபோல்தான் சாவுக்கு குழிவெட்ட அழைத்தால் இடம் தரவேண்டும் என்னும் கோரிக்கையும்.

போராளிகளின் வரலாறு என்பது ஒரு போராட்டத்தின் வரலாறு. எப்படிப்பட்ட போராட்டத்தை நம் முன்னோர்கள் கையெடுத்தார்கள் என்று அறிகின்ற அனுபவமே, புதிய போராட்ட உத்திகளைத் தரும் என்கிறார் பூவிழியன்.

kps_mani_340வரலாற்றை எழுதுதல் என்பதற்கு, பூவிழியனின்  பதில் மிகத் தெளிவானதாகவும், வெளிப்படையானதாகவும் இருந்தது: “அம்பேத்கர் கூறுவதைப் போல, நாம் யார் என்று அறிந்தால்தான் போராட முடியும். தற்பொழுதுள்ள அமைப்புகள் எத்தகைய அரசியல் பார்வையோடு இருக்கின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்களின் வரலாறுகள், அவர்களின் போராட்டங்களை நமக்கு சொல்லித் தருகின்றன. அதன் மூலம் நம்மை நாம் அறிந்து கொள்கிறோம். அதன் மூலம் தான் சுய அறிதல் : சுய உதவி – சுய மரியாதை என்னும் தன்மையை நான் அடைவது  சாத்தியமாகும். சுவாமி சகஜானந்தாவை எடுத்துக் கொண்டால், அவர் தலித் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்து இருக்கிறார். தலித் விடுதலையை கல்வியின் மூலம் பெறலாம் என்று அவர் கருதியிருக்கிறார். இதை நாம் தெரிந்து கொள்ளும் போது, அது நம்மை இயக்குகிறது. நம் செயலைத் தீர்மானிக்கிறது.''

 பூவிழியனின் இன்னொரு முக்கியமான வரலாற்று ஆவணம், ரெட்டியூர் பாண்டியன் வரலாறு. சாப்பறை அடித்தலை இழிதொழிலாகக் கருதி, அதை ஒழிக்கும் போராட்டம் என்பது, தமிழ்நாட்டின் பல தலித் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்ட தலித் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளில் எல்லாம் சேரிக்குள்ளோ, ஊருக்குள்ளோ மரணம் நிகழுமெனில் பறையடிக்கப் போகக்கூடாது என்று போட்டிருக்கும் தீர்மானத்தை, தலித்துகள் இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர் என்பது கண்கூடு. அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தியதால், ரெட்டியூர் பாண்டியன் கொல்லப்பட்டு இருக்கிறார். அவருடைய ஆளுமையை மிகச்சிறப்பான வகையில் பதிவாக்கியுள்ளார்.

காட்டுமன்னார் கோயில் வட்டம் ரெட்டியூரில் பிறந்தவரான பாண்டியன், வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் படிக்கும்போதே சமூகப்பற்றுள்ளவராக, சீர்த்திருத்தக்காரராக இருந்திருக்கிறார். தலித் பகுதியில் படிக்கின்ற மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது, அவர்களை சுத்தமாக இருக்க வைப்பது, தலித் பகுதிகளில் பெண்கள் தெருக்களில் சமையல் செய்தால் வீட்டிற்குள் செய்ய வற்புறுத்துவது, அனைவருக்கும் கையெழுத்துப் போட சொல்லிக் கொடுப்பது, அப்பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியில் ஒருவேளை ஆசிரியர் வரவில்லையென்றால், தானே போய் வகுப்பெடுப்பது என்று பல பணிகளை பாண்டியன் செய்திருக்கிறார்.

ரெட்டியூர் பாண்டியனுக்கு  1983 ஆம் ஆண்டு இளையபெருமாள் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவருடன் சேர்ந்து பல பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆதிதிராவிட நலச் சங்கத்தின் தலைவராக இளையபெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு, பறையடிக்கும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்று தீர்மானம் போடப்படுகிறது. குருங்குடி வன்னியர்கள் நடத்தும் திருவிழாவில் தீர்மானத்தை மீறி அதிக கூலி பெற்றுக் கொண்டு பறையடித்ததைக் கண்டித்த போராட்டத்தில், பாண்டியன் காவல் துறையினரால் கொல்லப்பட்டார். அவருடைய இந்தத் தியாகம் சமூக அவலத்தைப் போக்குவதற்கானது என்பது உண்மை. ஆனால் அதைப் பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அதற்காகக் கடுமையாக உழைத்து தரவுகளைத் தேடுவது என்னும் கடினமான பணியை மேற்கொண்டது பூவிழியனின் சிறப்பு. அவர் சேகரித்து தந்திதிருக்கும் ஆவணங்கள், அந்த உழைப்பிற்குச் சான்று பகர்கின்றன.

"பரிணாமம்' என்னும் தலித் வரலாற்றுக் காலாண்டிதழையும் பூவிழியன் நடத்தி வருகிறார். அதிலும் மீட்சி பெறும் வரலாறுகளை எழுதி வருகிறார். தலித் எழுத்து தற்பொழுது எப்படி இருக்கிறது என்னும் வினாவிற்கு, “அதிகாரத்தை நோக்கிய எழுத்து என்று தலித் எழுத்துகளை எழுதியவர்கள், அதை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். புதிதாக எழுதவரும் யாரையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை என்று கூறுகிறார்.

தலித் எழுத்து மற்றும் கலை வகைமைகளில் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்துடன் தலித் விடுதலைக்கான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். நுண்வரலாறுகளை உருவாக்கி, அதன்மூலம் தலித் எழுச்சிக்கான பங்களிப்பை ஆற்றி வரும் பூவிழியனின் பணிகள் பாராட்டுக்குரியவை.                      

பூவிழியன் தொடர்பு கொள்ள : 97878 54141

– யாழன் ஆதி