மத்திய சட்டமன்றங்கள் தொடக்கத்திலிருந்தே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, வாயில் அடைபட்ட மன்றங்களாகவே இருந்து வந்துள்ளன. 1921இல் மக்கள் ஆதரவின் அடிப்படையில் இவை திருத்தி அமைக்கப்பட்ட போதும் கூட, தாழ்த்தப்பட்ட மக்கள் இவற்றைத் தீண்ட முடியாத நிலையே தொடர்ந்தது. 1926 இல் தான் சிறிதளவு ஒதுங்க இடம் என்பது போன்று, 150 உறுப்பினர்கள் கொண்ட மத்திய சட்டமன்றப் பேரவையில் ஒரேயொரு இடம் மட்டும் ஒதுக்கப்பட்டது; மாநிலங்கள் அவையிலோ அதுவும் இல்லை. இந்த நிலையில்தான் மத்திய சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓரளவு இடம் ஒதுக்கும் நோக்கில், சைமன் ஆணையம் பரிந்துரைக்க முற்பட்டுள்ளது. சைமன் ஆணையத்தின் பரிந்துரை கூட மய்யப் பேரவைக்குத்தானே ஒழிய மாநிலங்களவைக்கு இல்லை. நமது கோரிக்கைகள் குறித்து, நம்மைப் பிச்சைக்காரர்களைப் போன்று கருதி, நமக்கு மிக சொற்பமான பரிந்துரையையே செய்துள்ள போதிலும்-அதற்காக சைமன் ஆணையத்துக்கு நன்றி சொல்வோம்.

சைமன் ஆணையம் தனது பணியைத் தொடங்குவதற்கு முன்னர், இங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்ய முனைந்த இந்திய அரசு, தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருப்பதைவிட உண்மையில் மிகவும் குறைவானதுதான் என்று காட்ட, எத்தனை பெருமுயற்சிகளையெல்லாம் மேற்கொண்டது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட மிகக் குறைவான மதிப்பீட்டிலும்கூட, இந்திய மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம்தான் என்று சைமன் ஆணையம் எடுத்துக் கொண்டது. அதன் பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய சட்டமன்றப் பேரவையில் சைமன் ஆணையம் பரிந்துரைத்துள்ள பிரதிநிதித்துவம்-8 சதவிகிதம் இடங்கள்தான்; மாநிலங்கள் அவைக்கோ ஒன்றுமே இல்லை.

22. சைமன் ஆணையம் நமது தேவைகளையும் கோரிக்கைகளையும் திட்டமிட்டே குறைவாக மதிப்பீடு செய்திருப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சைமன் ஆணையம் நமக்கு நியாயமாக மட்டுமின்றி, ஓரளவு பரிவுடனும் நடந்து கொள்ளும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரிவு காட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குப் போதிய காரணங்கள் இல்லாமலில்லை. அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் எவ்வாறு ஒரு சமூகம் மட்டும் அதிகளவு விசுவாசம் காட்டி மிகுதியான சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடிகிறதென்று எனக்கு விளங்கவில்லை.

அப்படியே அதிகளவு சலுகைகளைப் பெறுவதற்கு விசுவாசம்தான் அளவுகோல் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களின் விசுவாசமோ எல்லையற்றது என்பதை அறிவோம். அவர்கள் பிரிட்டிஷாரைக் கொள்கை நோக்கில் மட்டுமின்றி, மெய்யான பற்றுடனும் நேசிப்பவர்கள். ஆனால் அவர்கள் தங்களின் பாழ்பட்ட தாழ் நிலையைக் காட்டித்தான் தங்கள் மீது பரிவு கருதப்பட வேண்டுமென்று கோருகின்றனர் (விசுவாசத்தைக் காரணம் காட்டி அல்ல). தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று தாழ்வுற்றுச் செயலற்ற அவல நிலையில், இந்தியாவின் வேறு எந்தச் சிறுபான்மை இனமும் துன்புறு நிலையில் இல்லை. அவர்களது இன்னல்கள் மிகப் பல; அவை மிகவும் தனித் தன்மை கொண்டவை என்பதன் காரணமாகவே இந்தியா, சுய ஆட்சி (Home Rule) நிலைக்குத் தகுதியற்றது என்று கருதப்பட்டது. இவ்வளவு தூரம் கொடுமைகள் இழைக்கப்பட்டு வந்த சமூகம்தான் மிகுந்த பரிவுடன் நடத்தப்படுவதற்குரியது என்பதை நேர்மை கொண்டவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சைமன் ஆணையம் அவர்கள்பால் பரிவேதும் காட்டவில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்குக் குறைந்தளவு நீதியைக்கூட வழங்கத் தவறியுள்ளது.

சைமன் ஆணையத்தை நியமிக்க வேண்டும் எனும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழியும் போது, பிரிக்கன் ஹெட் பிரபு வெளிப்படுத்திய நல்லுணர்வுகள் என்னவாயின என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? தாழ்த்தப்பட்ட வகுப்புகள் என்பது சிறப்பானதோர் பொறுப்புக் கட்டளை என்றும், அவர்களை பேணிக் காப்பதற்கு உறுதியான வழிவகை ஏதும் செய்யாமல் பிரிட்டிஷார் அதைப் பிறர் கையில் ஒப்படைக்க இயலாதென்றும் அப்போது அவர் கூறினார். பரிவார்ந்த அவ்வுணர்வுகளை சைமன் ஆணையத்தின் பரிந்துரைகள் நிறைவு செய்துள்ளதாக எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே பெரியோர்களே! மற்ற மக்கள் நம்மை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதில் நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கெடு வாய்ப்பால் நாம் அடைந்து வரும் பல்வேறு இன்னல்களையும் பிரிட்டிஷார் விரிவாக விளம்பரப்படுத்துவது-அவற்றை நீக்கும் நோக்கத்தில் அல்ல; இந்தியாவின் அரசியல் முன்னேற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான சாக்குபோக்குகளாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, இனி நமது தலைவர்களின் கடமை, பிரிட்டிஷார் இதுவரை நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, நமது எதிர் காலம் எவ்வாறு அமைய வுள்ளது என்பதில் மிந்த அக்கறை செலுத்தி, அதற்கேற்ப நமது செயல்பாடுகளை எவருக்கும் அஞ்சாமல் திட்டமிடுவதே என்று நான் கருதுகிறேன். மேலும், நம் மீது தாராளமான பரிவுடன் நடந்து கொள்ளாவிடினும் நமது குறிப்பான நிலைகளுக்கேற்ப, உரிய நியாயமான வகையிலாவது நாம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களும் தன்னாட்சியும்

23. தன்னாட்சி பெறும் இந்தியாவின் வருங்கால அரசமைப்புச் சட்டத்தில் நாம் பெற்றாக வேண்டிய பாதுகாப்புகளையும், உறுதிப்பாடுகளையும் குறித்து நான் கூற வேண்டிய அனைத்தையும் கூறி முடித்து விட்டேன் என்று கருதுகிறேன். ஆனால் இத்துடன் இம்மாநாடு கருத்தில் கொள்ள வேண்டிய பொருண்மைகள் அனைத்தும் முடிவடைந்து விடவில்லை. நாட்டின் தற்போதைய அரசியல் போராட்டம் குறித்த தனது கருத்தை இம்மாநாடு தெளிவுறுத்தாவிடின், அதன் நோக்கம் முழுமையாக நிறைவு பெற்றதென ஒருபோதும் கூற இயலாது. 1928 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் கல்கத்தா மாநாட்டில், 1929 டிசம்பர் இறுதிக்குள், இந்தியாவில் டொமினியன் ஆட்சி முறை நிறுவப்பட வேண்டுமென்றும், தவறினால் டொமினியன் தகுதிக்குப் பதிலாக முழுமையான விடுதலைக்குப் போராட இருப்பதாகவும், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுப்பது போன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூர வேண்டுகிறேன்.

காங்கிரஸ் விடுத்த இந்த இறுதி எச்சரிக்கைக்கு கிடைத்த பயன், இந்தியாவுக்கு டொமினியன் தகுதி வழங்குவதுதான்-பிரிட்டிஷாரின் இந்தியக் கொள்கையின் நோக்கம் என்று வைசிராயிடம் இருந்து அறிவிப்பொன்று கிடைக்கப் பெற்றதுதான். டொமினியன் தகுதி என்பதை ஓர் இலக்காக அன்றி உடனடி நிகழ்வாக எதிர்பார்த்த காங்கிரசார், இவ்வறிவிப்பால் மன நிறைவு பெறவில்லை. எனவே, 1929 டிசம்பரில் காங்கிரசார் கூடி, நாட்டு விடுதலையே இந்தியாவின் குறிக்கோள் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் குறிக்கோள் குறித்து உங்கள் பார்வை என்ன என்பதை அறிவிப்பது உங்கள் கடமை. விடுதலைக் கோரிக்கையை நமது எண்ணத்தில் இருந்து நாம் நீக்கியே விடலாம். இப்போதைய நிலையில், அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதுடன் பேரழிவாகவும் அமைந்துவிடக் கூடும் என்பது என் கருத்து.

ஒரே நாடு, ஒரே அரசமைப்புச் சட்டம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வுகளால் ஒன்றிப் பிணைக்கப்பட்ட மக்கள்தான் விடுதலை என்னும் சவாலை ஏற்றுச் செயல்படத்தக்கவர்கள். இத்தகைய நிலையில் இருந்து நமது நாடு வெகு தொலைவில் உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. எனவே, முழு விடுதலை என்பதிலுள்ள ஆபத்தைத் தவிர்த்து, விடுதலை நிலையை அளிக்கும் "டொமினியன்' தகுதியே இப்போதைக்கு உகந்த, மேலான குறிக்கோளாகும். முழு விடுதலை எனும் குறிக்கோளின் பயன் குறித்து காங்கிரசாருக்கே இன்னும் சில கடுமையான அய்யங்கள் தீராத நிலையிலிருப்பதால், அக்குறிக்கோளுக்கு நமது ஆதரவை நாம் மறுக்க வேண்டும்.

24. ஆனால், மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் ஆட்சியான தன்னாட்சியை ஒத்த "டொமினியன்' தகுதி குறித்து நாம் என்ன கூற வேண்டும்? இதைக் குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர், நீங்கள் உண்மையில் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு பிரிட்டிஷாரின் ஆட்சி ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது என்பதில் அய்யத்திற்கிடமில்லை. இந்த அரிய தொடர்பு நமக்குக் கிடைக்கா விட்டால், இந்தியாவில் அறிவார்ந்த விழிப்புணர்வு இத்தகைய அளவிலும் வேகத்திலும் நிகழ்ந்திருக்காது. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் முதலான குறிக்கோள்களோடு கூடிய அய்ரோப்பிய நாகரிகத்தின் தொடர்பு இல்லாமல், இங்கு நிலவுகின்ற சமூக அறநெறிகள் எனக் கூறப்படும் பல்வேறு இழிந்த வழக்க மரபுகளைக் குறித்த அவமான உணர்வுகூட, நமக்குத் தோன்றியிருக்க வாய்ப்பின்றிப் போயிருக்கலாம்.

-தொடரும்

Pin It