டாக்டர் அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்சிய சிந்தனைத் தளத்தில் இயங்கும் படைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான கட்சி சார்பில்லாத, ஒரு கலை இலக்கிய இயக்கத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் 01.08.2009 அன்று திருச்சியில் நடைபெற்றது. அரங்க மல்லிகா, மதிவண்ணன், அழகிய பெரியவன், அரச. முருகுபாண்டியன், தெ. வெற்றிச் செல்வன் ஆகியோரின் ஈடுபாட்டுடன் கம்பீரன் முன் முயற்சியில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

சிறீதரகணேசன், அன்பாதவன், பாப்லோ அறிவுக்குயில், பாட்டாளி, விஷ்ணுபுரம் சரவணன், லிவிங்ஸ்மைல் வித்யா, அம்மணி, மகராசன், ஆங்கரை பைரவி, கண்ணன், சி. லட்சுமணன், பெ. ராமஜெயம், ரா. தனிக்கொடி, ரா. எட்வின் போன்ற படைப்பாளர்கள், ஆர்வலர்கள் உட்பட 30 பேர் பங்கேற்றனர். அன்றே 15 பேர் கொண்ட அமைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, அரங்க. மல்லிகா அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

12.09.2009 அன்று மீண்டும் திருச்சியில் அமைப்புக் குழு கூட்டப்பட்டது. அதில் இயக்கத்திற்கான பெயர், விதிமுறைகள், தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் இயக்கத்தை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இயக்கத்திற்கு "விடுதலைக் குயில்கள்' என்று பெயரிடப்பட்டது. ஏற்கனவே சுப. வீரபாண்டியன் இப்பெயரில் ஒர் அமைப்பை நடத்தி வந்தார். அவரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு, இந்த பெயரைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து கேட்கப்பட்டது. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். மார்க்சியம் மற்றும் பெரியாரியல் பேசும் கலை இலக்கிய அமைப்புகளில்கூட இல்லாத ஒன்றாக இவ்வமைப்பின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர் இருவரில் ஒருவர் தலித்தாகவும், இன்னொருவர் பெண் அல்லது திருநங்கையாகவும் இருக்க வேண்டும் என்று விதிமுறை உருவாக்கப்பட்டது. 

பின்னர் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் : தலைவர் – அரங்க. மல்லிகா, துணைத் தலைவர் – 1. சிறீதரகணேசன், 2. விழி.பா. இதயவேந்தன், பொதுச் செயலாளர் – கம்பீரன், துணைப் பொதுச் செயலாளர் – அழகிய பெரியவன், துணைச் செயலாளர் – ரா. எட்வின், பொருளாளர் – அம்மணி, செயற்குழு உறுப்பினர்கள் – லிவிங்ஸ்மைல் வித்யா, ம. மதிவண்ணன், அரச முருகுபாண்டியன், தய். கந்தசாமி, தெ. வெற்றிச்செல்வன், அன்பாதவன், ரா. தனிக்கொடி, விஷ்ணுபுரம் சரவணன்.

சமூக – பொருளாதார – பாலின – சமத்துவம், இனம், மொழி, பண்பாடு, குழந்தைகள் உரிமை, கல்வி, அறிவியல் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று விரிந்த தளத்தில் – கருத்தியலாகவும் களத்திலும் பாடுபடும் இயக்கமாக இதை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது, ஒருமித்த கருத்தாக எழுந்தது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் இயக்கத்தை உருவாக்குவதற்கான பொறுப்பாளர்கள் கிடைத்துள்ளனர். வளர்ச்சிப் போக்கில் பிற மாவட்டங்களில் இயக்கம் கட்டமைக்கப்படும்.