ஈழப் போராட்டம் மிகப் பெரியதொரு பின்னடைவை சந்தித்துள்ள இவ்வேளையிலும் – இச்சிக்கலை அறிவார்ந்த தளத்தில் நின்று விவாதிக்கவும், ஆதரவு திரட்டவும் தமிழ்த் தேசிய அமைப்புகள் துணியவில்லை. கூட்டம் கூட்டவும், முன்வரிசை கை தட்டுகள் பெறவும் முயலும் இவர்கள் ஈழப் போராட்டத்தை, ஓர் உணர்ச்சிகரமான போராட்டமாக மட்டுமே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாடுகள் ஈழ அரசியல்வாதிகளாலும் பின்பற்றப்பட்டு, அம்மக்களையும் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது.

ஈழப் போராட்டத்தை விவாதிக்கும் ஊடகங்களும் 1983 க்குப் பிற்பட்ட காலத்தை முன்வைத்தே பிரச்சனையை அணுகுகின்றன. ஆங்கில பத்திரிகைகளுக்கும் அதன் அறிவுஜீவி பின்புலத்தாருக்கும் பிரபாகரனைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஏதோ திடீரென்று வானத்தில் பிரபாகரன் என்று ஒருவர் தோன்றி ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்; உலகின் படுபயங்கரமான தீவிரவாத இயக்கத்தை அவர் உருவாக்கி வளர்த்தார். அமைதியாக இருந்த சிங்களர்களுடன் இணைந்து நிம்மதியாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டி, இன்று அம்மக்களை அகதிகளாக்கி, முள்கம்பிகளுக்கிடையே விட்டு விட்டார் என்ற அளவிலேயே அவர்களின் அறிவு எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ‘பிரபாகரன் கொல்லப்பட்டார்' என்ற அறிவிப்பை நாள் முழுவதும் பரபரப்புச் செய்தியாக வாசித்த அவர்கள், அதற்குமுன் நாள்தோறும் ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை செய்தியாக்க முன்வரவில்லை.

இத்தகைய தவறான வரலாற்றுப் புரிதலால், ஈழப் போராட்டம் தொடங்கியது 1983இல் அல்ல; இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலேயே என்பதே இன்றைய தலைமுறைக்கு வியப்பான செய்தியாக இருக்கும்! இன்றைக்கு ஆயுதப் போராட்டமாக மாறிவிட்ட அரசியல் போராட்டம், நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை ‘சிறீலங்காவின் தேசியத் தற்கொலை' நூல் விளக்குகிறது.

இந்நூல் எழுதப்பட்டது 1984இல். அதாவது அரசியல் ரீதியான அறவழிப் போராட்டங்கள் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்காது என்று புரிந்து கொள்ளப்பட்ட இறுதிக்காலம். எனவே, இந்நூலுக்கு நம்பகத் தன்மை அதிகம். இந்நூலின் ஆசிரியர் பிரமிள், தன் முற்பகுதி வாழ்வை ஏறத்தாழ 30 ஆண்டுகள் இலங்கையில் கழித்தவர் என்பதால், அவர் சொல்லும் உண்மைகள் உறைக்கின்றன. தர்க்க ரீதியாக, 25 ஆண்டுகளுக்கு முன்பே சில எதார்த்தமான உண்மைகளை அவர் வெளியிட்டுள்ளார்.

சிங்கள வரலாறாகப் பேசப்படும் மகாவம்சத்தில் இடம் பெற்றுள்ள பலவற்றை கட்டுக்கதை என்றும், தொல்குடி தமிழர்களின் உரிமையை ஒரு கொள்ளைக் கூட்டம் அபகரித்த கதைதான் என்றும் இவர் துணிவுடன் கூறுகிறார். விஜயனின் வரலாறு என்பது, மொழியும் மதமும் வேறுபட்டாலும் – சிங்களரும், தமிழரும் ஒரே திராவிட இனம்தான் என்று பிரமிள் கூறியிருப்பது புதிய செய்தி. ஒருவன் புத்தபிட்சுவாக மாறிய நிலையில்கூட அவனது ஜாதி மூலம் கவனிக்கப்படுகிறது. ஏனெனில், சிங்களவர் இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பூர்வீகத்தில் ஓர் இந்து மரபை சேர்ந்தவராகவே இருப்பர் என்கிறார் பிரமிள்.

சுதந்திரம் பெற்ற இலங்கையின் அப்போதைய தமிழ்த் தலைமை, குறுகிய மனோபாவங்களிலிருந்து பிறந்து அவற்றையே பிரதிநிதித்துவப்படுத்துகிற ‘பூர்ஷ்வா' தலைமை என்கிறார் பிரமிள். இத்தகைய மனோபாவத்தினால் இலங்கை தமிழ்ச் சமூகம் பீடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்ததால்தான் சிங்கள அரசியல் சக்திகளால் தமிழர் உரிமைகளைப் படிப்படியாகப் பறிக்க முடிந்திருக்கிறது. இதையே வாக்குகளுக்காகப் போட்டியிட்ட சிங்கள அரசியல் தலைமைகள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டன. அவ்வாறான காலகட்டங்களில் தமிழ் தலைமைகளுக்கு எதார்த்த பூர்வமான அரசியல் உணர்வு இல்லை என்கிறார் பிரமிள். முன்னோக்கிச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை விடுத்து, பழந்தமிழுலகின் மகோன்னதங்களை ‘ரொமான்டிக்' மனோபாவத்தில் வீர உரைகளாகப் பேசிப் பேசி, சிங்கள பீதியை உறுதிப்படுத்தி விட்டனர் என்பது, இன்றைய அரசியலிலும் காணப்படும் ஓர் உண்மை.

தமிழ்ப் பெருமையை ஒரு கலைத் தொழிலாக தங்கள் மேடைப் பேச்சுகள் மூலம் நிகழ்த்திய தமிழக – திராவிட இயக்கத் தலைவர்களின் அடியொற்றி, இலங்கை தமிழர் தலைவர்களும் வீரப் பேச்சுகளை மட்டுமே நம்பி மக்களை வழி நடத்தி வந்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழரிடையே இருந்த பிரிவினை உணர்வுகளை இலங்கை அதிகார வர்க்கம் நுட்பமாகப் பயன்படுத்தி, தமிழரை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆங்கிலேய ஆட்சியின்போது மலைத் தோட்டங்களில் உழைக்க ஆங்கிலேயரால் கடத்தப்பட்ட தமிழர்கள், இலங்கை தமிழர்களுக்கு சிங்களவரை விடவும் அன்னியமாகத் தென்பட்டனர். அதற்குக் காரணம் இவர்கள் ‘கீழ் ஜாதி'யினர் என்று கணிக்கப்பட்டதாக பிரமிள் கூறுவது புது நோக்கு. அதனால்தான் இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக எந்தவித கொந்தளிப்பும் இலங்கை தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை என்கிறார்.

ஆனால் 1955இல் 24 மணி நேரத்தில் இயற்றப்பட்ட சிங்களம் மட்டுமே அரச கருமமொழி என்ற சட்டத்திற்கு எதிராக, தமிழர் தலைமை அறவழியில் எதிர்ப்பைக் காட்டியது. ஆங்கில அறிவினால் பெருமளவுக்கு அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், தங்கள் கவுரவமான நடுத்தர வாழ்வின் ஆதாரம் பறிக்கப்பட்டபோது கிளர்ச்சி பெற்றனர். கி.பி. 1000 அளவில் பார்ப்பன இயக்கங்கள் மூலம் வெறுத்து ஒதுக்கப்பட்ட பவுத்தத்தை இலங்கை பிட்சு கேந்திரம் பேணி வளர்த்து, இலங்கையின் தமிழ் இந்துக்களை தனது பரம வைரியாகக் கணித்து வந்ததும் வரலாற்று நிகழ்வு. இந்த அச்சத்தினை காலப் போக்கில் களையும் இயக்கம் இரு தரப்பினரிடையிலும் பிறக்கவில்லை. அதனால் இரு சாரருமே வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் வெறுப்புணர்வு குறையாமல் பார்த்து வந்துள்ளனர்.

1974இல் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடு தாக்கப்பட்டதன் காரணம், மொழி வளர்ச்சி மாநாட்டை அரசியல் மாநாடாக மாற்றியதுதான் என்கிறார் பிரமிள். தமிழ் மாநாடுகளில் இன்றைக்கும் காணக் கூடிய உண்மை, அரசியல் சார்ந்த புலவர்களேயன்றி சமகால உலகுடனோ, சிந்தனையுடனோ தொடர்புள்ள தமிழ் இயக்கம் எதற்கும் மாநாட்டு வரிசையில் இடம் இருந்ததில்லை. இதை அடியொற்றி அந்தத் தமிழ் மாநாட்டில் பேசிய நைனா முகம்மது, தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டும் எனும் சங்கதியை மெய்சிலிர்க்கப் பேசியபோதுதான் தாக்குதல் நடந்ததாக, இதுவரை வெளிவராத செய்தியை கூறுகிறார் பிரமிள்.

இத்தகைய தமிழ் தலைமை தமிழர்களுக்கு எவ்வித நியாயமான பலன்களையும் சிங்கள அரசுகளிடமிருந்து பெற்றுத் தர முடியாது என்ற உணர்விலிருந்தே தீவிர ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இலங்கை தமிழ் தலைவர்களுக்கு சிறப்புப் பலன்களை கொடுத்துவிட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள அரசுகள் பிடுங்கி யுள்ளன. இதற்கு உடந்தையாக 1983 சூலை வரை தமிழ் தலைமை இருந்திருக்கிறது எனும் பிரமிளின் கருத்து, ஆயுதப் போராட்டம் நியாயமானது என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது.

1983 ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலைகளை ஓர் இனப்படுகொலை என்றே பிரமிள் சொல்லவில்லை. தொழில் திறன் மூலம் டாலர் சம்பாத்தியமும்; வெளிநாட்டு சாதன வசதிகளும் கொண்ட ஓர் அதி உயர் வர்க்கமாக உருவாகிய தமிழர்கள் மீது பொறாமை கொண்ட சிங்கள மேல் தட்டு வெறியர்களே ‘கறுப்பு சூலை'க்கு காரணம் என்கிறார். தமிழரது அறிவார்ந்த உயர்வின் மீது கொண்ட ஆத்திரம் மற்றும் பொறாமையால் யாழ் நூலக எரிப்பு நிகழ்ந்தது. அதேபோல் தமிழரின் பொருளாதார உயர்வின் மீது கொண்ட ஆத்திரம், சூலை கலவரத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

தமிழர்களை நிர்மூலமாக்கி விட்டால் இலங்கையின் பொருளாதாரம் சிங்களர் கைகளுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தே சூலை கலவரம் நிகழ்ந்தது. அப்போது சுமார் 40 ஆயிரம் பேர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இவர்களை இந்தியாவுக்கு ஈர்த்தது, தமிழக தலைவர்களது கற்பனைப் பேச்சுகள்தாம். ஆனால் இவர்களை நோக்கி தமிழ் தலைவர்களது கரம் நீளவில்லை எனும் உண்மையை அன்றே பேசியிருக்கிறார் பிரமிள்.

இந்நூல் வெளியான 1984இல் இருந்து இன்று வரை அரசியல் சக்திகளின் பார்வைகள், பங்களிப்புகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ‘வாய்ச்சொல் வீரர்'களாக தலைமைத்துவம் ஏற்றிருந்த அரசியல் தலைமைகள் மக்களை அறிவார்ந்து வழி நடத்தியிருந்தால், பொருளாதார – மனித – தார்மீக – நாகரிக நாசங்களாக இலங்கை அனுபவித்து வரும் எவையும் நடந்திராது. தங்கள் பிரச்சனைகளை தங்களுக்குள் சுமூகமாகத் தீர்க்கிற மனிதத்தனம் செயல்பட்டிருக்கும் என்று பிரமிள் கூறுவது ஏற்கக் கூடியதே.

ஆனாலும் அதற்குப் பிறகு வந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியவை பல உண்டு. தமிழன் ஏமாற்றப்பட்டு வருகிறான் என்பது மட்டும் மாறவில்லை. எந்தப் பக்கச் சார்பும் இல்லாமல் ஒரு புது நோக்கோடு இலங்கை இனப் பிரச்சனையை அணுகிய மிகச் சில எழுத்துகளில் இதுவே முதலாவதாக இருந்திருக்க வேண்டும்.

இந்நூலிலிருந்து

“இலங்கைக்குப் பிழைக்கப் போன தமிழர்கள் அங்கே தனி நாடு கேட்கிறார்கள்” – இது, இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்ராயம். இவர்களது இந்த அபிப்ராயத்துக்கு ஆதாரமே இல்லை. முதலாவதாக, இலங்கை வாழ் தமிழினம் இலங்கைக்குப் பிழைக்கப் போன ஓரினமல்ல. இலங்கையிலுள்ள ‘இலங்கைத் தமிழர்கள்' விஷயத்தில் மட்டுமல்லாமல், அங்குள்ள ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்' விஷயத்திலும் இது பொருந்தும். இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகள் மீது பூர்வீக உரிமை உண்டு. இலங்கையில் வழங்கும் தமிழ் இடப்பெயர்களின் தொன்மை முதலியன இதற்கு சாட்சியமாகும். அங்குள்ள சிங்களவர்களையும்விடத் தொன்மையான தொடர்புக்கான சாட்சியங்கள் இவை.