அடர்ந்த காடு. உயரமான மரத்தின் அடர்ந்த நெருக்கமான கிளையின் இடையே புறா இணை ஒன்று தன் அழகான கூட்டை அமைத்திருந்தது. கூட்டிலே முட்டைகள் இட்டதும் பெண் புறாவிற்கு பயம் ஏற்பட்டது. ஏதாவதொரு வேடன் வந்து தங்கள் முட்டைகளை எடுத்துக் கொண்டு போய்விடுவானோ எனப் பயந்த பெண் புறா, "அன்பே இனியும் நாம் தனித்திருக்கக்கூடாது. யாரேனும் நமக்கு நண்பர்கள் இருந்தால் நல்லது. தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள் அல்லவா?'' என்றது.

ஆண்புறா சில நிமிடம் பதிலே கூறவில்லை. பிறகு, "நீ சொல்வது சரிதான். ஆனா நம் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எவரையுமே இங்கு காணோமே'' என்றது. "அதனால் என்ன? நம் இனமில்லாவிட்டால் என்ன? யாராக இருந்தாலும் நட்புறவு கொள்வதுதான் நல்லது, அதுவும் நமக்கு நன்மையாகத்தான் இருக்கும்'' என்றது பெண் புறா.

"உண்மைதான்'' எனக் கூறிய ஆண் புறா சிந்தனையில் ஆழ்ந்தது.

அவர்கள் இருந்த மரத்திற்கு சற்று தூரத்தில் இணை பருந்துகள் வசித்து வந்தன. புறா ஒரு நாள் அங்கு பறந்து சென்றது. பருந்துகள் அதை வரவேற்று உபசரித்தன. புறா கூறிற்று: "பருந்தாரே, நாம் அண்டை அயலார்கள் அல்லவா? நாம் நமக்குள் நட்பாக இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் சமயத்தில் உதவி செய்து கொள்ளலாம். நாம் ஒற்றுமையாக, நட்புறவுடன் இருக்க வேண்டும்''

புறா கூறியது பருந்துக்கு மிகவும் பிடித்தது. அது கூறிற்று, "புறாவே, நான் உன்னுடன் தோழமை கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதோ பார், அந்த ஆலமரத்தின் பொந்தில் ஒரு பயங்கரமான கருநாகம் வசிக்கின்றது. பார்க்கப் போனால் அதுவும் நம் அயலான்தான். கருநாகத்தையும் பகைவனாகக் கொள்ளாமல் நண்பனாக்கிக் கொள்வதில் என்ன தவறு?'' என்றது. புறாவும் இதற்கு சம்மதித்தது.

புறாவும் பருந்துமாக, கருநாகத்தைத் தேடிச் சென்றன. இருவரும் தங்கள் எண்ணத்தை வெளியிட்டதும் கருநாகமும் மிக மிக மகிழ்ச்சி கொண்டது. தான் இருவருக்கும் உற்ற நண்பனாவதாக வாக்களித்தது. அன்றிலிருந்து இம்மூன்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டன.

ஒரு நாள் புறா தம்பதிகளின் கவலை உண்மையாகிவிட்டது. வேடனொருவன் காடெல்லாம் சுற்றி அலைந்து களைத்தவனாய் அந்த மரத்தினடியில் வந்து உட்கார்ந்தான். அவனுக்கு அன்று முழுவதும் ஒரு வேட்டைப் பொருளும் கிடைக்கவில்லை. எங்கு வலை வீசினாலும் ஒன்றும் சிக்கவில்லை. பறவைகள் பறந்துவிட்டன. மிருகங்கள் ஓடி விட்டன. காட்டுப்பன்றி கூட கிடைக்காமல் போனதினால், அவன் மிகுந்த மனத் துயரத்துடனிருந்தான்.

குளிர்ந்த நிழலிலே வந்து அமர்ந்ததும் அவன் மனதில் மீண்டும் ஆசையும், நம்பிக்கையும் துளிர்விட்டது. இவ்வடர்ந்த மரத்தில் ஏறிப் பார்த்தால் ஏதாவது பறவைக் குஞ்சுகள், முட்டைகள் கிடைக்காதா? என மனம் ஆசை கொண்டது. பறவைக் குஞ்சுகளின் ‘கீச் கீச்' என்ற ஒலி கேட்கிறதா என்று அவன் கவனத்துடன் காது கொடுத்துக் கேட்டான்.

அவன் முகம் மலர்ந்தது. கெடு வாய்ப்பாக பறவைக் குஞ்சுகள் வெளிவந்து சில நாட்களே ஆகியிருந்தன. இன்னமும். அவைகளுக்கு இறக்கைகள் கூட முளைக்கவில்லை. பறக்க முடியாது. பறக்கத் தெரியாது. பஞ்சணை போன்ற புற்களின் மெத்தையிலே உறங்கிய குஞ்சுகள் ‘கீச் கீச்' என சப்தமிட்டுக் கொண்டிருந்தன. வேடனின் மனம் மகிழ்ச்சியடைந்தது. ஆனால் அவ்வொலி எங்கிருந்து வருகின்றது என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனெனில் எங்கும் இருள் பரவி நின்றது.

இரவு நேரம், பறவைகள் யாவும் தங்கள் தங்கள் கூட்டிலே முடங்கியிருந்தன. வேடனின் கண்கள் அலைந்தன. ஆனால் ஒன்றும் தெளிவாகப் புலப்படவில்லை. அவனுக்கொரு எண்ணம் தோன்றியது. மரத்தின் கீழே கிடந்த காய்ந்த சருகுகளைத் திரட்டினான். தீ மூட்டினான். தீ எரிவதைக் கண்ட புறாக்கள் விழித்துக் கொண்டன. "வந்தது ஆபத்து'' என்றது மனது. "சரி, இனி நம் நண்பர்களை உதவிக்கு அழைக்க வேண்டியதுதான்'' என்றது ஆண் புறா.

பெண் புறா இதற்கு இசையவில்லை. "வேண்டாம். உடனே பிறரை உதவிக்கு அழைப்பது சரியல்ல. முதலில் நாம் முயற்சி செய்து பார்ப்போம். அதில் தோல்வி அடைந்தால் பிறகு அவர்களை அழைக்கலாம்'' என்றது. இருவரும் பலவாறு யோசித்தனர். அருகிலிருந்த குளத்தில் தங்கள் இறக்கைகளை நனைத்துக் கொண்டு பறந்து வந்து தீயின் மீது நீர்த் துளிகளை சடசடவென உதிர்த்தால் தீ அணைந்துவிடும். இருளில் வேடன் ஒன்றும் செய்ய முடியாதென அவை முடிவு செய்தன.

நெருப்பு எரிந்தது. வெளிச்சம் பரவியது; வேடன் மரத்தின் மீது ஏறத் தொடங்கினான். இதைக் கண்ட புறாக்கள் குளத்தை நோக்கிப் பறந்து சென்றன. நொடியில் திரும்பி வந்து தங்கள் ஈரமான இறக்கைகளைப் படபடவென வீசின. நீர்த் துளிகள் வீழ்ந்தன. இதுபோல பல முறை செய்தன. தீ அணைந்து விட்டது. வேடன் மரத்திலிருந்து இறங்கிவிட்டான். இம்முறை அவன் நிறைய சருகுகளை சேகரித்து மீண்டும் தீ மூட்டினான்.

புறாக்களின் இறக்கைகள் சோர்ந்துவிட்டன. அவை களைத்துவிட்டன. அடிக்கடி நீரில் நனைந்ததால் உடல் நடுங்கியது. பெண்புறா ஆணை நோக்கி, "அன்பரே, இனி நண்பர்களை உதவிக்கு அழைக்க வேண்டியதுதான்'' என்றது. ஆண்புறா உடனே பருந்துகளுக்குச் செய்தியை அறிவித்தது.

பருந்துகள் உடனே உதவிக்குத் தயாராகின. புறாக்கள் செய்தது போலவே தங்கள் பெரிய பெரிய அடர்ந்த சிறகுகளில் தண்ணீரைச் சுமந்து வந்தன. தீயின் மீது மீண்டும் தண்ணீரைப் பொழிந்ததும், தீ அணைந்து விட்டது. பருந்துகள் இடைவிடாது தீயை அணைக்கப் பாடுபட்டன.

வேடன் இம்முறை கோபம் கொண்டான். எப்படியும் மேலே ஏறி, அப்பறவைக் குஞ்சுகளைப் பிடிக்காமல் விடுவதில்லை என்று முடிவு செய்தான். ஆயினும் மீண்டும் தீ மூட்ட அவனுக்குத் தெம்பில்லை. பசியாலும் களைப்பாலும் அவனுடல் தளர்ந்து இருந்தது. இனி இரவை மரத்தடியிலே கழித்து விடுவது, பொழுது புலர்ந்ததும் மரத்தின் மீது ஏறுவது என்ற முடிவுக்கு வந்தவனாய் மரத்தடியிலே படுத்துக் கொண்டான்.

பருந்துகளும், புறாக்களும் வேடனது எண்ணத்தை ஊகித்துவிட்டன. அவை பாம்பை உதவிக்கு அழைத்து வரச் சென்றன. உறங்கிக் கொண்டிருந்த பாம்பு, நண்பர்களின் வேண்டுகோளைக் கேட்டதும் உடனே உதவிக்கு விரைந்து வந்தது. வேடன் உறங்கினான். இரவெல்லாம் கருநாகம் மரத்தைச் சுற்றி காவலிருந்தது. பொழுது புலர்ந்தது. லேசான வெளிச்சம் எங்கும் பரவியது. கண்களைத் தேய்த்துக் கொண்ட வேடன் ஆவலுடன் மரத்தை நோக்கினான். மரத்தின் மேலே ஏறுவதற்காக காலைத் தூக்கினான். அவ்வளவுதான் கருநாகம் புஸ்.... எனச் சீறிக் கொண்டு வந்தது. பயந்து போன வேடன் ஓட ஆரம்பித்தான். பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டே திரும்பிப் பாராது ஓடினான்.

புறாக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்தன. குஞ்சுகள் ‘கீச் மூச்'சென தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன.