Arumugasamy

சிதம்பரம் கோயிலின் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு, ஆறுமுகச்சாமி ஓதுவாரும் அவருக்குத் துணையாக பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் தொடர்ந்து போராடியதன் விளைவாக, ‘சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம்’ என்ற அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த ஆணையின் அடிப்படையில் ஆறுமுகச்சாமி ஓதுவார் தலைமையில் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று, போராடி, தேவாரம் பாடி, தங்கள் உரிமையை நிலைநாட்டியுள்ளனர். நந்தன் எரித்துக் கொல்லப்பட்ட சிதம்பரம் கோயிலின் மேடையில் தேவாரம் முழங்கியது, ஆயிரம் ஆண்டு காலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி; தமிழ் வழிபாட்டுரிமை நிலைநாட்டப்பட்டு, சாதி வெறி கொண்ட தீட்சிதர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று கொண்டாடும் அளவிற்கு, அண்மையில் சிதம்பரத்தில் நடந்த நிகழ்வுகள் மகிழத்தக்கவைதானா?

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்களால், தமிழ் மக்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயிலில் தமிழில் வழிபட என்ன தடை? எந்தவொரு நாட்டிலும் இறைவழிபாடு என்பது அவரவர் மொழியில் தான் இருக்கும். அவ்வாறே தமிழ்நாட்டிலும் இறை வழிபாடு தமிழ் மொழியிலேயே இருந்து வந்திருக்கிறது. ஏறத்தாழ 5ஆம் 6ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் தமிழகத்தை ஆண்டு வந்த பல்லவ மன்னர்கள், முதன் முறையாக தமிழர் கோயில்களில் பார்ப்பனர்களையும் வட மொழியையும் (சமஸ்கிருதம்) புகுத்தினர். அந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பனிய சடங்குகள் மிக அதிகளவில் தமிழர்களிடையே பரவவும் செய்தன.

பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்களும், அதற்குப் பிறகு வந்த மராட்டிய மற்றும் நாயக்க மன்னர்களும் பார்ப்பனர்களையும் வட மொழியையும் பெரிதும் ஆதரித்தனர். இந்த காலகட்டத்திலேயே பார்ப்பனர்களுக்கு மானியங்களாகப் பெருமளவு நிலங்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையே 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர், பக்தி இயக்கத்தைத் தொடங்கினார். அவரும் மற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர் மற்றம் சுந்தரர் ஆகியோர் சிவன் மீது பாடிய பாடல்களே தேவாரம் என்று அழைக்கப்படுபவை. தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிவன் கோயில்களுக்குச் சென்று, அந்த ஊர் கோயில் மீது பாடல்கள் பாடி பக்தியை பரப்புவதையே இவர்கள் செய்தனர்.

தேவாரத்திலும் மூட நம்பிக்கைகளைப் பரப்பும் கருத்துகள், ஆபாசம், பிற மதங்களின் மீதான காழ்ப்புணர்ச்சி எல்லாமே இருக்கின்றன என்ற போது, எதற்காக தேவாரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். வடமொழி ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்தில் தமிழ்ப் பாடல்களைப் பாடி வழிபடும் இந்த பக்தி இயக்கம் தொடங்கப்பட்டிருந்தாலும், வடமொழியை விட அதிகமாக அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வந்த சமண, பவுத்த மதங்களை எதிர்த்தே இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு சமண, பவுத்த மதங்களை எதிர்த்தவர்களால் பாடப் பெற்ற இந்த தேவாரத்தைப் பாடி வழிபடுவதற்கும், வடமொழி சுலோகங்கள் கூறி வழிபடுவதற்கும் என்ன பெரிய வேறுபாடு?

அப்படி இரண்டும் ஒன்றென நாம் நினைத்த போதும் பார்ப்பனர்கள் அப்படி நினைக்கவில்லை என்பதால்தான் - ஒன்றை உயர்ந்தது என்றும் மற்றொன்றை தாழ்ந்தது என்றும் சொல்வதோடு, அதனை கோயிலுக்குள் அனுமதிக்கவும் மறுக்கின்றனர். தேவாரப் பாடல்கள் வடிவிலோ, வேறு எந்த வடிவிலோ தமிழ் கோயிலுக்குள் நுழைவது என்பது, தங்கள் ஆதிக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்றே பார்ப்பனர்கள் கருதுகின்றனர். கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை அனுபவிப்பதற்காக மட்டும் அவர்கள் இதனை செய்யவில்லை. அதைவிட முக்கியமாக, சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே இதில் தீவிரம் காட்டுகின்றனர். பார்ப்பனர்களுக்கு இன்று வரை இருக்கக்கூடிய சமூக ஆதிக்கத்தின் வேர், இந்து மதத்தில் அவர்களுக்கு இருக்கும் மேலாதிக்கமே ஆகும்.

இந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவே பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகப் போராடினார். இந்த அடிப்படையிலேயே தமிழ் வழிபாட்டுரிமைக்கான போராட்டமும் நடைபெறுகிறது. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதோடு தமிழ் வழிபாட்டுரிமை நிலைநாட்டப்பட்டு விட்டதா என்பதே நம் கேள்வி. சிற்றம்பல மேடை என்பது, கோயில் கருவறை அல்ல. கருவறைக்கு முன் உள்ள மேடை மட்டுமே. அங்கு தமிழ் துதிப்பாடல் பாடுவதற்கே இத்தனைப் போராட்டம். உண்மை என்னவெனில், இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இதுதான் நிலைமை. அதாவது, இன்று வரை தேவாரப்பாடல்கள் கருவறைக்கு வெளியில் மட்டுமே பாடப்படுகின்றன.

தமிழில் அர்ச்சனை செய்வதற்கு சட்டம் உள்ளது என்பதை நாம் அறிவோம். அர்ச்சனை என்பது வேறு. பூசை என்பது வேறு. கோயில்களில் நாள் முழுவதும் பலவித பூசைகள் செய்யப்படுகின்றன. அவற்றிற்கு ‘கால பூசை’கள் என்று பெயர். இந்த பூசைகள் அனைத்தும் இன்று வரை வட மொழியில் மட்டுமே செய்யப்படுகின்றன. அர்ச்சனை என்பது பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, குறிப்பிட்டவர்களின் நல்வாழ்விற்காக செய்யப்படும் வழிபாடு. இது மட்டுமே இன்று வரை தமிழிலும் செய்யப்படுகிறது. வடமொழியில் செய்யப்படும் பூசை தொடங்குவதற்கு முன், கருவறை வாசலில் நின்று ஒரு ஓதுவார் தேவாரப் பாடலைப் பாடுவார். அவர் பாடி முடித்ததும் கருவறைக்குள் உள்ள பார்ப்பன அர்ச்சகர் வட மொழியில் பூசையை நடத்துவார். இன்று வரை அனைத்துக் கோயில்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

ஓதுவார் என்பவர் பார்ப்பனர் அல்லாதவர். அவருக்கும் அவர் பாடும் தமிழ்த் தேவாரப் பாடலுக்கும் கருவறையில் நுழைய இன்று வரை அனுமதி இல்லை. ‘தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்’ என்ற அரசாணை வெளியிட்ட போது அதை அப்படியே கோயிலிலும் எழுதி வைத்தனர். ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற அந்த அரசாணை வெளியிடப்பட்டு ஏறத்தாழ 25 ஆண்டு காலத்திற்குப் பிறகே ‘தமிழிலும்’ என்பது ‘தமிழில’' என்று மாற்றம் பெற்றது. ஆனால் நடைமுறையில் வடமொழியிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. தமிழ் அர்ச்சனையை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட்ட அன்றைய இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம், நடைமுறையில் வடமொழியிலேயே அர்ச்சனை செய்யப்படுவது குறித்து கேட்டபோது, மக்கள்தான் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டும் என்று கூறிவிட்டார்.

இதற்கு மாற்று யோசனையாக, கோயில்களில் அர்ச்சனை சீட்டு வழங்கப்படும் போது, வடமொழி அர்ச்சனை சீட்டு வேண்டும் என்று கேட்டால் மட்டுமே வடமொழி அர்ச்சனை சீட்டை தர வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழ் அர்ச்சனைச் சீட்டையே தர வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார். அன்று அத்துறை ஆணையராக இருந்தவர் மெய்கண்ட தேவன். ஆனால், செம்மங்குடி சீனிவாச (அய்யங்கார்) தலைமையில் ஒரு பார்ப்பனர் குழு சென்று அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்து, இந்த வாய்மொழி உத்தரவை திரும்பப் பெற வைத்ததோடு, அத்தகையதொரு உத்தரவை செயல்படுத்திய அதிகாரி மெய்கண்டதேவனை உடனே பணிமாற்றம் செய்யவும் வைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை, தமிழில் என குறிப்பாகக் கேட்டாலொழிய வடமொழியில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது. இதுதான் இன்று தமிழ் வழிபாட்டின் நிலைமை!

2000ஆம்ஆண்டு சிதம்பரம் நடராசன் கோயிலுக்குள் நுழைந்து தேவாரம் பாட முயன்ற ஆறுமுகச்சாமி ஓதுவாரை தீட்சிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடித்து கையை முறித்து தூக்கி வெளியில் எறிந்தனர். அதன் பிறகு அவர் தமிழகம் முழுவதிலும் உள்ள சைவ மடங்களின் ஆதினங்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார். ஆனால் ஒரு மடாதிபதி கூட அவருக்காக வாய் திறக்கவில்லை. அண்மையில், தருமபுர ஆதினம் ஒரு படி மேலே சென்று ‘கோயில்களில் தமிழ் வழிபாடு கூடாது' என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டார். பக்தி இயக்க காலத்தில் சமண, பவுத்தத்திற்கு எதிராக சைவத்தையும், கோயில்களிலும் மதத்திலும் நிலவும் வட மொழி ஆதிக்கத்திற்கு எதிராக தமிழை காக்கவும் வளர்க்கவும் தமிழகமெங்கும் பல்வேறு சைவ மடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்த சைவ மடாதிபதிகள் அனைவரும் பார்ப்பனர் அல்லாதவர்களே. ஒவ்வொரு ஆதின மடத்திற்கும் ஆயிரக்கணக்கில் நிலங்களும் பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களும் உள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களாலும் மக்களாலும் இவர்களுக்கு வழங்கப்பட்டவை. சுகபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் இந்த மடாதிபதிகளுக்கு சைவத்தைப் பற்றியும் தமிழைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லை, மனமுமில்லை. சைவத்தையும் தமிழையும் தவிர, வேறு வேலைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்'' என்கிறார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.

“ஆறுமுகச்சாமி ஓதுவார் தான் தாக்கப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் உள்ள மடாதிபதிகள் அனைவரையும் சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார். ஆதின மடங்கள் மட்டுமல்ல; அண்மைக் காலத்தில் உருவான சாமியார்கள் உட்பட அவர் சந்திக்காத சாமியார்கள் இல்லை. அதோடு இந்து அமைப்புகளிடமும் பிற கட்சியினரிடமும் ஆதரவு கேட்டு நடையாய் நடந்தார். ஒருவரும் அவருக்கு உதவவில்லை. இறுதியில் அவர், கடவுள் மறுப்பாளர்களான எங்களைத் தேடி வந்தார். அதுவும் மனித உரிமைகள் மற்றும் தமிழுணர்வு என்ற அடிப்படையிலேயே அவர் எங்களிடம் வந்தார்'' என்கிறார் சிதம்பரம் பிரச்சனையில் தொடக்கம் முதல் ஆறுமுகச்சாமி ஓதுவாருக்கு துணையாக நின்று பல்வேறு வழக்குகளை நடத்தியவரான வழக்கறிஞர் ராசு.

தமிழர்கள் மீதான சூத்திர இழிவைப் போக்கும் ஒரு கட்டமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இனி அர்ச்சகர் வேலை என்பதும் அரசு வேலையே என்பதால், அதிலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசு நடத்தும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து அரசுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களே இந்த வேலைக்கு தகுதி பெற்றவர்கள் என்றும் அந்த சட்டம் சொல்கிறது. அப்படியெனில், இனி பொதுப்பிரிவில் உள்ள 31 சதவிகித அளவில் மட்டுமே பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக முடியும். அதிலும் அரசுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே. பரம்பரை பெருமை எல்லாம் இனி செல்லுபடியாகாது.

“இத்தனை காலமும் பார்ப்பனர் என்ற ஒரே தகுதியை வைத்து, உண்மையிலேயே வழிபாட்டு முறைகள் அறிந்தவரா, அறியாதவரா என்ற கேள்வியின்றி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, நம் வரிப்பணத்தில் அவர்களுக்கு சம்பளமும் அளிக்கப்பட்டு வந்தது. இனி அது போல நடக்காது. கண்டிப்பாக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்று வந்தால் மட்டுமே, அதுவும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே அர்ச்சகர் நியமனம் நடக்கும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் முதல் குழு இன்னும் இரண்டு மாதங்களில் பயிற்சியை நிறைவு செய்ய இருக்கின்றது. அவர்களுக்கு பணி அளிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது காலியாகியுள்ள பல இடங்களை நிரப்பாமல் வைத்திருக்கின்றனர். இனி இந்தப் பயிற்சிப் பள்ளி வழியாக மட்டுமே நியமனம் நடக்கும்'' என்கிறார் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான அறிவுக்கரசு.

1971இல் அன்றைய தி.மு.க. அரசால் முதன் முதலில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியவர்கள் எடுத்துரைத்த வாதம் என்னவெனில், பார்ப்பனர்களைத் தவிர பிறர் கோயில் கருவறைக்குள் சென்று பூசை செய்வது, ஆகம விதிகளுக்கு முரணானது என்பதுதான். 1982இல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். நீதியரசர் மகராஜன் தலைமையில் கோயில் சீர்த்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றினை அமைத்தார். மகராஜன் குழு தமிழகத்தில் உள்ள கோயில்களை ஆராய்ந்ததோடு, ஆகம விதிகள், அது தொடர்பான அறிஞர்களின் கருத்துகள் அனைத்தையும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்தது.

அந்த அறிக்கையில் பிறப்பால் பார்ப்பனர் அல்லாதவர்கள் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசையில் ஈடுபடுவது ஆகம விதிகளுக்கு முரணானது அல்ல என்று தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். மேலும், கருவறைக்குள் தமிழில் வழிபாடு நடத்துவதும், தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பதிகங்கள் பாடுவதும் எவ்வகையிலும் ஆகம விதிகளுக்கு எதிரானது அல்ல என்பதையும் பல்வேறு அறிஞர்களை மேற்கோள் காட்டி விளக்கியிருக்கிறார்' என்கிறார் பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் தா.செ.மணி.

மகராஜன் குழுவின் பரிந்துரைக்கேற்ப இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. (இதற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தகுந்தது). ஆனால், வழிபாட்டில் தமிழ் என்பது இன்னமும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. அரசு நடத்தும் பயிற்சிப்பள்ளிகளில் கூட தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலுமே வழிபாட்டு முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வடமொழியை தங்கள் தாய் மொழியாகக் கருதும் பார்ப்பனர்கள், வட மொழியில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்வதில் யாருக்கும் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் தங்கள் மொழியை தமிழர்கள் மீது திணிக்க முற்படும் போது தான் பிரச்சினை எழுகிறது.

அடிப்படைக் கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும் என்பதும், மக்களுக்கான அரசு ஆணைகள் மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டும் என்பதும், மக்களின் குறைகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மக்கள் மொழியில் இயங்க வேண்டும் என்பதும் உரிமைகள் என்பதை விட, அவைதான் இயற்கையான செயல்பாடுகளாக இருக்க இயலும். அதைப்போலத்தான் வழிபாட்டு மொழியும் மக்களின் மொழியாக இருக்க வேண்டும்.

கிறித்துவ மத வழிபாடு லத்தீன் மொழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்திய போது, மார்டின் லூதர், “ஏன் என் கடவுளை என் மொழியில் வழிபடக்கூடாது'' என்ற கேள்வியை எழுப்பினார். பைபிளை தன்னுடைய ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்தார். இதனால் கத்தோலிக்கத் திருச்சபை அவரை மதத்திலிருந்து நீக்கியது. அவரது இந்த மொழி அடிப்படையிலான எதிர்ப்புக் குரலில் உருவானதே கிறித்துவ மதத்தின் ‘புராட்டஸ்டன்ட்’ பிரிவு.

போப் இரண்டாம் ஜான் பால் காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளில் வழிபாடு நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை உலகெங்கிலும் உள்ள கிறித்துவ மத தேவாலயங்களில் அந்தந்த மக்களின் மொழியிலேயே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

முஸ்லிம் மதத்திலும் கூட, மசூதிகளில் தமிழ் வழிபாடு நடத்த எவ்விதத் தடையும் இல்லை. தொழுகைக்கு அழைக்கும் ஒலி மட்டும் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரபி மொழியில் இருக்கிறது. இதையும் தமிழில் மாற்ற வேண்டும் என்று குரல்கள் இன்று எழும்பத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் அந்தந்த காலகட்டங்களில் பவுத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாம் எனப் பல்வேறு மதங்கள் பரவியிருக்கின்றன. ஆனால் அந்த மதம் உருவான மொழி தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதில்லை. மாறாக அம்மதங்களைப் பரப்ப வந்தவர்கள், தமிழ் மொழியைக் கற்று தமிழ் மொழி மூலமே தங்கள் மதப்பணிகளை மேற்கொண்டனர்.

இத்தாலிய நாட்டிலிருந்து கிறித்துவ மதத்தைப் பரப்ப தமிழகம் வந்த பாதிரியார் பெஸ்கி, தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து, தமிழ் மொழியிலேயே தனது மதப் பணிகளை செய்தார். தனது பெயரைக் கூட வீரமாமுனிவர் என்று தமிழில் மாற்றியமைத்துக் கொண்டார். இத்தாலியை தாய் மொழியாகக் கொண்டவர் எழுதியது என்று நம்ப முடியாத அளவில் ‘தேம்பாவணி’ எனும் காவியத்தையும் தமிழில் படைத்தார். உமறுப் புலவர் ‘சீறாப்புராணம்’ எனும் முஸ்லிம் மதக் காவியத்தை தமிழிலேயே இயற்றினார். ஆனால் வேத மதம், ஆரிய மதம் என்று தமிழகத்தில் நுழைந்த பார்ப்பனர்கள், இங்கு ஏற்கனவே நிலவி வந்த பல்வேறு பழமையான வழிபாட்டு முறைகளிலும் ஊடுருவியதோடு, ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அனைத்தையும் ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் தாங்களே மேலானவர்கள் என்றும் அறிவித்துக் கொண்டனர்.

பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட போது கூட, பைபிளில் வரும் பெயர்கள் கூட நல்ல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ‘ஜீசஸ்’ ஏசுவாகவும், ‘மேரி’ மரியன்னையாகவும், ‘ஜோசப்’' சூசையப்பராகவும் வழங்கப்பட்டன. ஆனால், இதற்கு நேர் மாறாக தமிழில் வழங்கி வந்த தமிழ் நாட்டின் பல கோயில்களில் உள்ள கடவுள் பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டு, இன்றும் அதுவே தொடர்வது இந்து மதத்தில் மட்டுமே. அங்கயற்கண்ணி- மீனாட்சியாகவும், சொக்கநாதர்- சுந்தரேசுவரராகவும், மலைமகள்- பார்வதியாகவும், முருகன்- சுப்பிரமணியாகவும் மாறியது இப்படித்தான்.

தமிழகத்தின் ஊர்ப் பெயர்கள் இடைக்காலத்தில் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் வட மொழியிலும் மாற்றியமைக்கப்பட்டதை எல்லாம் மீண்டும் தமிழுக்கு மாற்றியமைக்கும் சீரிய பணியினை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதைப்போலவே இடைக்காலத்தில் கோயிலுக்குள் புகுந்த வடமொழியை தூக்கியெறிந்து விட்டு, இனி கோயில் வழிபாடுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே நடக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் முழுமையாக தமிழ் வழிபாட்டு முறைகளை கற்றுக் கொடுத்து, கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறையினை முழுமையாக்க வேண்டும்.

பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்களைக் கொண்டு மீண்டும் வட மொழியில் வழிபாடு நடத்தப்படுமெனில், அது மிகவும் கேலிக்குரியதாகிவிடும். பார்ப்பனர்களையும் வடமொழியையும் ஒரு சேர அடிப்பது மட்டுமே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்ததன் உண்மையான சமூக நீதி நோக்கத்தை நிறைவேற்ற வழி வகுக்கும்.

-பூங்குழலி