உலகின் ஆற்றலுள்ள ஜனநாயக நாடு என்று பாராட்டப்படும் இந்திய நாடு சாதி, சமூக சமத்துவம் எனும் பரிசோதனையில் இன்னும் வென்றபாடில்லை. பல ஆயிரம் சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கும் ஒரு நாடு, சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் – ஒன்றுபட்ட ஒரு தேசமாக ஆக முடியாது. நவீன நாகரிக உலகின் ஒரு தேசமாக இந்திய நாடு உண்மையிலேயே உருவாக வேண்டுமெனில், தலித் பிரச்சினைக்கு முழு நேர்மையுடன் தீர்வு காணப்பட்டாக வேண்டும். அது, உண்மையான பொருளில், பலதரப்பட்ட உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து, சமூக சமத்துவம் நோக்கியும், சோசலிசம் நோக்கியும் இட்டுச் செல்லும் மாபெரும் பணியின் ஒரு முக்கியப் பகுதியாக அமையும்.

D.Raja
வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற இந்தியாவின் மேட்டுக்குடி அறிவாளி வர்க்கம், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையில் ஒரு சிறுபான்மையே என்ற போதிலும், சமூகத்தின் பிற பகுதியினரான தலித்துகள், சுரண்டப்படுவோர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது எவ்வித அக்கறையுமின்றி அவ்வர்க்கம் செயல்படுகிறது. இந்தியா வின் ஆதிக்க சாதி/வர்க்க அறிவாளிகள், உலகமெங்கிலும் ‘இந்தியாவே அடுத்த பேரரசு' என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர்.

தாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய மாய அலைகளின் மீது ஏறி சவாரி செய்துவரும் பொருளாதாரப் பெரும் சக்தியாக, அவர்கள் இந்தியா வைப் பற்றி வரைந்து வரும் வண்ணச் சித்திரங்கள் உண்மையில் மிகக் கேவலமானவை. ஏனெனில், அதீத ஆடம்பரமான செல்வக் களியாட்டங்களோடு, இந்தியாவில் மிக மோசமாக ஏழ்மையும், வன்கொடுமைத் தாக்குதல்களும், ஏற்றத்தாழ்வுகளும் சேர்ந்தே நிலவுகின்றன.

புதிய தாராளவாத, பொருளாதார வளர்ச்சிப் பாதையை இந்தியா தேர்வு செய்து தாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்ற அமைப்பியல் மாற்றங்களில் ஈடுபட்ட காலத்திலிருந்து, மேற்குறித்த ‘சீர்திருத்தங்களின் ஆதாயங்களை' சமூகத்தின் ஒரு சின்னஞ் சிறு பகுதியினர் மட்டுமே அறுவடை செய்து வருகின்றனர்.

மறுபுறம், சமூகத்தின் அறுதிப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள், ஏழ்மையையும் வேலையின்மையையும் முழுப் புறக்கணிப்பையும் சந்தித்து வருகின்றனர். ஆலைத் தொழிலாளர்களும் முறைசாரா தொழில்களைச் செய்யும் உதிரித் தொழிலாளர்களும், அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். விவசாயத் தொழில் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகிறது; விவசாயத் தொழி லாளர்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற தாக்குதல்களின் கீழ் நாடு நசுங்கி வருகிறது. இந்நிலையில், அந்த மாற்றங்கள் வசதி உள்ளவர்களுக்கு வழங்கி வரும் வாய்ப்புகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல, மக்கள் திரளுக்கிடையில் செல்வச் செழிப்புள்ள சில குறுந்தீவுகள் தோன்றி வருகின்றன. பொருளாதாரச் சீர்திருத்தங்களால் பயனடைந்து வரும் பெரும் பணக்காரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலாளர் சட்டங்களை உடைத்தெறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

புதிய தாராளவாதப் பொருளாதாரத்தின் பெரும் ரதம், அது செல்லுமிடங்களில் எல்லாம் பழங்குடி மக்களை, அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி வருகிறது. அவர்கள் எதிர்க்கத் துணிந்தால் அவர்களைக் கொன்றழிக்கவும் அது தயங்குவதில்லை. உலகமயமாக்கம் – தலித்துகள், பழங்குடிகளைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே உள்ள சாதியத்தோடு கூடுதலாக, அடிமைத்தளையின் புதிய வடிவமாக ஆகி வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் தமது ‘சாதி ஒழிப்பு' நூலில் கூறிய கருத்துகள் உண்மையாகி வருகின்றன : ‘சாதி என்ற கொடூர அரக்கன் உங்கள் பாதையில் எப்போதும் குறுக்கிடுவான்; அந்த அரக்கனை அழித்தொழிக்காமல், உங்களால் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ சாதிக்க இயலாது.’
அண்மையில் நடைபெற்ற கயர்லாஞ்சி படுகொலைகள், இந்தியச் சமூகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவும் ஆதிக்கச் சாதிகளின் கூட்டணியையும், அவற்றிற்கிடையில் வழக்கிலுள்ள சாதி வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றன.

தலித்துகள் தாக்கப்படும்போது அல்லது சாதி ஒடுக்குதலுக்கு எதிராகக் கிளர்ந்தெழும்போது, குறிப்பிட்ட அந்த வட்டாரத்தின் தலித் அல்லாத சாதிகளுக்கிடையில் தலித்துகளுக்கு எதிரான ஒரு விந்தையான பெரும்பான்மை உருவாகி விடுகிறது. குறிப்பிட்ட அந்தச் சூழலில் அவ்வகைப் பெரும்பான்மை, ஆளும் வர்க்கம் போல செயல்படுகிறது. இதனால் போராடும் தலித்துகள், சிறுபான்மையினராக்கப்படுகின்றனர். சாதிப் பிரச்சனைகள் மேலெழும் தருணங்களில் எல்லாம் இவ்வாறாக உண்டாக்கப்படும் தலித் அல்லாதோரின் பெரும்பான்மை, குறிப்பிட்ட அவ்வட்டாரத்தின் குடிமைச் சமூகத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது.

பார்ப்பனர் மட்டுமின்றி, அண்மைக் காலங்களில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிற இடைநிலைச் சாதிகளும்கூட, மேற்குறிப்பிட்ட தலித்துகளுக்கெதிரான ‘தலித் அல்லாதோர்' எனும் பெரும்பான்மை உருவாக்கத்தில் பங்கேற்கின்றனர். இதன் விளைவு, தலித்துகள் சிறுபான்மையினராகவும் உதவியற்றோராகவும் ஆக்கப்படுகின்றனர்.

தலித் அல்லாத பெரும்பான்மைச் சமூகம், தலித்துகள் மீதான வன்முறைகள் பற்றிய அக்கறை அற்றதாக ஆகிவிடுகிறது; அல்லது குறிப்பிட்ட அச்சூழலில் செயல்பட இயலாமல் போய்விடுகிறது. இந்திய சாதி அமைப்பின் உள்கட்டுமானத்திலேயே அமைந்துள்ள பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, தனிமைப்படுத்துதல் ஆகிய கூறுகளின் விளைவாக, மேலே குறித்த தலித் அல்லாதோர் பெரும்பான்மையும் தலித்துகளின் சிறுபான்மையும் சாத்தியமாகின்றன.

அடிமைச் சமூகத்தில்கூட, அடிமைகள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும், அடிமைகளின் எஜமானர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவும் அமைவர். எனவே, அடிமைகளுக்கிடையில் தோன்றும் சமூக விழிப்புணர்வு மிக விரைவில் பெரும்பான்மை அடிமைகளுக்கிடையில் பரவி, அதுவே அடக்குமுறை அமைப்புக்கு எதிரான, ஒன்றுபட்ட இயக்கங்களுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புண்டானது. இது, மத்தியகால நிலவுடைமை அமைப்புக்கும் பொருந்தும்.

ஏனெனில், அங்கும் நிலவுடைமையாளர்கள் சிறுபான்மையாகவும், பண்ணை விவசாயிகள் பெரும்பான்மையாகவும் இருப்பதுண்டு. ஆனால், இந்திய சாதி அமைப்பைப் பொறுத்தமட்டில், அதன் தனித்த உள் அமைப்பு, எப்போதுமே மிக அதிகமாக ஒடுக்கப்படும் மக்களை பெரும்பான்மையாக உருவாக அனுமதிப்பது இல்லை.

அது மட்டுமல்ல, சாதி அடக்குமுறை மற்றும் சாதி மோதல் தருணங்களில், சமூகத்தின் மேட்டிமைச் சாதிகள் பெரும்பான்மையாகத் திரளவும் அது உதவுகிறது. இது, சாதி அமைப்பின் மிக மோசமான பண்பாகும். ஒடுக்கப்படும் சாதிகளுக்கு உடனடியாக மேல் நிலையிலுள்ள சாதிகள், நேரடியாக ஒடுக்கும் சாதிகளாகவும், சற்றுத் தொலைவில் உள்ள பிற ஆதிக்க சாதிகள், சாதி அடக்குமுறைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; அவ்வமைப்பைப் பாதுகாப்பவையாகவும் அவை செயல்படுகின்றன.

நவீனமயமாக்கல் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுடன் சாதி அமைப்பு தானாகவே தகர்ந்துவிடும் என்ற தட்டையான புரிதலும் தவறு. இந்திய முதலாளியச் சமூகத்தின் இயங்கியல் அதிகச் சிக்கலானது. நிலவுடைமை அமைப்பையும், நிலவுடைமை வர்க்கத்தையும் அடியோடு அழித்தொழிக்காமல், இந்திய முதலாளிய வர்க்கம் முதலாளியத்தை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது.

நிலச்சீர்திருத்தங்களைச் செய்யாமல், இந்த அரசாங்கங்கள் விவசாய வளர்ச்சியை உண்டாக்குவோம் என்றால், அது எந்த வகையான வளர்ச்சி? மரபார்ந்த நிலவுடைமை வர்க்கங்கள் மற்றும் புதுப் பணக்கார விவசாயிகள் ஆகியோரின் தலைமையிலான விவசாய வளர்ச்சியையே இந்திய அரசு பின்பற்றி வருகிறது என்பதுதான் அதன் பொருள்.

அதிக இடுமுதல், ஒட்டுவிதைகள், ரசாயன உரங்கள் போன்றவற்றைக் கொண்ட பசுமைப்புரட்சி, பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே ஏற்புடையவை. பணக்கார விவசாயிகள் சந்தைக்காகவே உற்பத்தி செய்கிறார்கள். எனவே, விவசாயம் ஒரு முதலாளியத் தொழில் துறையாகிறது. இதுபோன்ற செயல்பாடுகள், பணக்கார விவசாயிகளைத்தான் பலப்படுத்துகின்றன.

இவ்வாறு பணக்கார விவசாயிகளை மய்யப்படுத்திச் செய்யப்படும் விவசாய வளர்ச்சி, சமூக ரீதியாகவும் அதன் உடனடி விளைவுகளைக் கொண்டுள்ளது. அதாவது, சமூகத் தளத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் பணக்கார விவசாயிகள் சாதி அமைப்பைத் தகர்ப்பதிலோ, அதனைப் பலவீனப்படுத்துவதிலோ ஈடுபடுவதில்லை.

மாறாக, மலிவான கிராமப்புற உழைப்புக்காகவும் மரபார்ந்த சமூக ரீதியான அடிமைத்தனத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் சாதியத்தை போற்றிப் பாதுகாக்கின்றனர். கிராமப்புற பணக்கார விவசாயிகள் கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, சாதியச் சமூகத்தைப் பாதுகாக்கின்றனர். சாதி அமைப்பு முதலாளிய உற்பத்தி முறையிலும் அதன் விளைச்சலைத் தருகிறது.

மேலும், அரசின் கிராம வளர்ச்சித் திட்டங்கள் சாதி அமைப்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கிராமப்புற வளர்ச்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். அதற்காக அரசு நிதி ஒதுக்கீடுகளையும், வங்கிகளையும் பயன்படுத்துகின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். இருப்பினும், அவ்வகை நிதி ஆதாரங்களின் மிகப்பெரும்பகுதி, கிராமப்புற பணக்காரர்களையே சென்று சேர்கிறது என்பதும் உண்மை.

மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அதே கிராமப்புற பணக்காரர்கள்தான் என்பதும், கிராமநல வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் (பஞ்சாயத்து ராஜ் பட்ஜெட் உட்பட) அவர்களையே சென்று சேர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கவை. கிராமப்புற ஏழைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி ஆதாரங்கள் அனைத்தும், தம் கட்சிக்காரர்களுக்கே சென்று சேருமாறு ஆளும் கட்சிகள் பார்த்துக் கொள்கின்றன.

கிராமப்புறத்திலுள்ள தமது கட்சி ஊழியர்களை அக்கட்சிகள் இவ்வாறாகத்தான் திருப்திப்படுத்துகின்றன. இவ்வாறாக கிராமப்புறங்களில் சாதி, மூலதனம், அரசு அதிகாரம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களும் ஒன்றிணைந்து, கிராமப்புற வாழ்வை முழுவதும் கைப்பற்றிக் கொள்கின்றன. இத்தகைய சூழலில், சாதி எந்த வகையிலும் ஒழிக்கப்படுவதோ, சேதப்படுவதோ இல்லை. மாறாக, கிராமப்புற இந்தியாவில் தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர்.

ஒரு வலுவான அரசியல் நிலைப்பாடும், சாதி அமைப்பினுள் சட்ட ரீதியான தலையீடும் – நமது காலத்தின் மிக முக்கியமான தேவைகளாகும். சாதியமைப்பின் வக்கிரங்களுக்கு எதிரான மாபெரும் கருத்தியல், அரசியல், கிளர்ச்சிப் போராட்ட நடைமுறை ஒன்றை இந்தியா கோரி நிற்கிறது. அறிவுத் துறையினர், எழுத்தாளர்கள் மற்றும் போராளிகள், சாதிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராகத் தங்களின் முழு ஆற்றலையும் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

கம்யூனிச, சோசலிச சக்திகள் மட்டுமின்றி, அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்திய சமூகத்தின் இந்த நிரந்தரக் கொடுமைக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். இந்தத் திட்டத்தில் தலித்துகள் தமது சுயபாதுகாப்பிற்காக, தனித்த இயக்கங்களைக் கட்டுவதும் ஒரு முக்கியமான பகுதியாகும். இருப்பினும், தலித்துகளும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே, எல்லா விளிம்பு நிலை மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும்.

அரசியல் தளத்தில், இடதுசாரி ஜனநாயக அணிகள், தலித் அமைப்புகளைத் தமது பிரிக்கவொண்ணா கூட்டு சக்திகளாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இன்னொருபுறம், தலித் கட்சிகள் தமது முதலாளிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தைக் கூர்மைப்படுத்தியாக வேண்டும். கீழிருந்து கட்டப்படும் பரந்த அரசியல் விழிப்புணர்வும், அரசியல் ஒற்றுமையும், குறிப்பாக இடதுசாரி, ஜனநாயக மற்றும் சாதி எதிர்ப்புக் கட்சிகளின் ஒற்றுமையுமே இந்தியாவில் சாதி அமைப்புக்கு எதிரான வலுவான அரசியல் அணியை உறுதிப்படுத்தும்.

சாதி அமைப்பை அங்கீகரிக்கும் மநுஸ்மிருதி முதலான புனித நூலதிகாரத்திற்கும், சதுர்வர்ண அமைப்புக்கும் எதிராக, கம்யூனிஸ்டுகள் உறுதியான கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டும். சோசலிசத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியக்கூடிய அடிப்படை அமைப்பியல் மாற்றங்களுக்காகவும், புரட்சிகர சமூக உருவாக்கங்களுக்காகவும் நடத்தப்படும் அத்தகைய நீண்ட நெடிய, தளர்ச்சியற்ற போராட்டங்களே காலப்போக்கில் சாதியை யும் சாதி அமைப்பையும் அகற்றுவதற்கான தளத்தை உருவாக்கும்.

அம்பேத்கரின் ஆய்வு முறையியல் மார்க்சியமல்ல. இருப்பினும், அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள் அவரது காலனி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு மற்றும் தீவிர ஜனநாயக திசைவழிகளைக் காட்டுகின்றன. சாதி அமைப்பு இந்திய வரலாறு முழுவதும் பொருளாதாரத்திறன் அற்றிருந்ததையும், சாதி நடைமுறைகள் மூலதனம் மற்றும் உழைப்பின் அசைவுகளைக் குறைத்தமையையும் அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார்.

தனிமனித மற்றும் சமூகத் திறன்களை சாதி அமைப்பு முடக்குகிறது. ஒரு தனிமனிதன் தனது தொழிலைச் சுதந்திரமாகத் தேர்வு செய்வதற்கும், அதனையே தொடர்ந்து செய்து தேர்ச்சி பெற்று, தனது போட்டியிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும் சாதி அமைப்பு தடையாக இருக்கிறது.

முதலாளியத்தில் சாதி அமைப்பு, மலின உழைப்பை அல்லது இலவச உழைப்பைத் திரட்டித் தர முடிகிறது. இன்றைய காலங்களிலும் சாதி அமைப்பைப் பாதுகாப்பதன் மூலம், பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சுமத்த முடிகிறது என்று அம்பேத்கர் தெரிவிக்கிறார். எடுத்துக்காட்டாக, உலகமயமாக்கலின் துயரங்களை விவசாயிகளின் மீதும், இந்த நாட்டின் மிக ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும் சுமத்த முடிகிறது.

மேட்டிமைச் சாதிகள், ஒடுக்கப்படும் மக்கள் குறித்து எந்தவித சமூகப் பொறுப்பையும் ஏற்காத நிலையை ஏற்படுத்தித் தரும் தனித்த பண்பை சாதி அமைப்பு கொண்டுள்ளது என்பதை அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அம்பேத்கர் தனது ஆய்வுகளில் மிகச் சுதந்திரமாக மதத்திலிருந்து பொருளாதாரத்திற்கும், பொருளா தாரத்திலிருந்து வெகுமக்கள் உளவியலுக்கும் அல்லது சட்டங்கள் குறித்த விவாதங்களுக்கும் மாறிச் செல்கிறார்.

எந்த ஒரு ஒற்றை நிர்ணயவாதத்திற்கும் இடமளிக்காமல், அம்பேத்கர் ஓர் அம்சத்திலிருந்து மற்றோர் அம்சத்திற்கு எளிதாகக் கடந்து செல்கிறார். சாதி அமைப்பு அதன் இயல்பில் அதிக நிர்ணயத்தன்மை கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறார்.
‘மாநிலங்களும் சிறுபான்மையினரும்' எனும் கட்டுரையில் டாக்டர் அம்பேத்கர், தொழில் துறையில் அரசு சோசலிசம், விவசாயத் துறையில் கூட்டுப்பண்ணை முறைமை கொண்ட அரசுடைமை ஆகிய கருத்துகளைப் பற்றிப் பேசுகிறார்.

மேற்குறித்த இரண்டு துறைகளுக்குத் தேவையான நிதி மூலதனம் (ஆரம்ப மூலதனம் திரட்டப்படுதல்) காப்பீட்டுத் துறையையும் வங்கிகளையும் நாட்டுøடமை ஆக்குவதன் மூலம் திரட்டப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் நலன்களை மனதில் கொண்டு கூட்டுப்பண்ணைகளை முன்மொழிகிறார். அம்பேத்கர் முன்வைத்த அரசு சோசலிசம் எனும் கருத்தாக்கம், இப்பிரச்சினையின் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையாகவே அரசு சோசலிசம் என்பதை ஆக்குவதன் மூலம் அதனை நாட்டின் நிரந்தர அமைப்பாக அம்பேத்கர் உறுதிப்படுத்த விழைகிறார். இத்திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன : ஒன்று, ‘அரசு சோசலிசம் பொருõளதார வாழ்வின் முக்கியத் துறைகளில் எல்லாம் நிறுவப்பட வேண்டும்' என்பது. இரண்டாவது, ‘அரசு சோசலிசத்தை நிறுவுவது என்பதைச் சட்ட உருவாக்க சபைகளின் விருப்பு வெறுப்புக்கு விடாமல், அதனைச் சட்ட உருவாக்க நிறுவனங்களோ, நிர்வாக அமைப்போ மாற்ற முடியாதபடி அரசியல் சட்டத்தின் அடிப்படை விதியாக அமைத்து விடுவது.'

அரசு சோசலிசம் எதார்த்தமாக ஆவதற்கு, அது அரசியல் ஜனநாயகத்தின் வழி நிறுவப்பட வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். டாக்டர் அம்பேத்கர் சோசலிசம் என்ற கருத்தை முறையாகவும் முழுமையாகவும் வளர்த்தெடுத்ததால், அதற்கு சட்ட ரீதியான அரசியல் பாதுகாப்பை வழங்க முயன்றார். ஜனநாயகம் குறித்த பிரச்சினை அம்பேத்கருக்கு மய்யமானதாகும்.
ஏனெனில், அது இந்தியாவில் சாதி அமைப்பு எனும் பிரச்சினையோடு தொடர்பு கொண்டது.

இந்தியாவை ஜனநாயகப்படுத்துவது என்பது, மிக முக்கியமாக சாதி அமைப்பை ஒழிப்பதாகும். புரட்சியின் வளர்ச்சிக் கட்டங்கள் குறித்த மார்க்சியக் கோட்பாட்டின்படி, ஒரு சோசலிசப் புரட்சிக்கு முன்னதாக எப்போதுமே ஒரு ஜனநாயகப் புரட்சி நிகழும். ஜனநாயகப் புரட்சி என்பது, அடிப்படையில் நிலவுடைமை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டிருக்கும். இந்திய நிலப்பிரபுத்துவம் சாதி அமைப்பின் அடிப்படையாகவும் பாதுகாவலனாகவும் விளங்கும்போது, சாதி ஒழிப்புக்கான போராட்டம் என்பது, இந்திய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத வேலைத் திட்டமாக ஆகிறது.

ஒரு ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றாமல், சோசலிசப் புரட்சியை நோக்கி நகர முடியாது என்பதை மார்க்சியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனநாயகப் புரட்சியே சோசலிசப் புரட்சியாக வளரும். சாதியற்ற சமூகம் இல்லாமல், வர்க்கமற்ற சமுதாயம் சாத்தியமல்ல என்பதை அம்பேத்கர் வலியுறுத்துகிறார். இதனை எந்தப் புரட்சிக்காரனும் கடந்து செல்ல முடியாது.

முதலாளிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையிலான அம்பேத்கரின் வரலாற்றுப் பார்வை உலகமயமாக்கம், நவகாலனியம் போன்ற சூழல்களைக் கொண்ட இன்றைய உலகுக்கு, கூடுதல் பொருத்தம் உடையதாக உள்ளது.

சாதிகளையும், சாதி அமைப்பையும் தகர்ப்பது, இந்திய ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாகும். சாதி அமைப்பை அழித்தொழிக்காமல், இந்திய நிலப்பிரபுத்துவத்தை முற்றாக அழிக்க முடியாது. இந்திய முதலாளிய ஒழுங்கிற்கு சாதி அமைப்பை நிர்மூலமாக்கும் அரசியல், பொருளாதார ஆற்றல் இல்லை. ஏனெனில், சாதிப் பிளவுகள் தொழிலாளர் வர்க்கத்தை கூறுபடுத்தி, கூலி உழைப்பைச் சுரண்டுவதற்கு உதவி செய்கின்றன.

தலித்துகள் மீதான வன்கொடுமைகள், தலித் புறக்கணிப்புகள் எந்த வடிவில் எங்கு நடந்தாலும், கம்யூனிஸ்டுகள் அவற்றை முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டும். சமூக நீதிக்காகப் போராடுவதிலும் தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும் நாம் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் படிப்படியாக சாதி அமைப்பை ஒழிப்பதற்கான களம் உருவாகும்.

இந்து சமூகத்தின் உள்ளீடான ஒரு கூறு சாதியம். இந்தியச் சமூகத்தின் பிற மதங்களை ஊடுறுவும் அளவுக்கு வலிமை கொண்டதாக சாதியம் உள்ளது. இந்து மதத்தில் அது சமய அங்கீகாரம் பெற்றுள்ளது. பிற மதங்களிலோ சாதி, ஒரு சமூக நடைமுறையாக உள்ளது. எனவே, சாதிகளுக்கு எதிரான போர் இந்தியச் சமூகத்தில் மனங்களை வெல்வதற்கான, சமூக மனோபாவத்தை வெல்வதற்கானப் போர் ஆகும். அது ஒரு சமூக கருத்தியல் போர்.

கயர்லாஞ்சி போன்ற கொடூரங்களிலிருந்து தலித் இயக்கங்கள் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தமது குறைபாடுகளை நீக்கிக் கொள்ள வேண்டும். மிக விரிந்த அளவிலான கருத்தியல் பார்வையும் தெளிவும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் உணர்வுபூர்வமாக தலித்துகளிடையில் பணியாற்றி, இவ்விரண்டு அணிகளுக்கிடையில் உடைந்து போயிருக்கும் உறவுகளை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும்.

மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தலித் சுயமரியாதை, அடிப்படை மனித உரிமைகள், மாண்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான பரந்த வெகு மக்கள் இயக்கங்களை உருவாக்க வேண்டும். தலித் விடுதலை எனும் இறுதி இலக்கை நோக்கியே அந்தப் போராட்டங்கள் அமைய வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினை முதலில் எதிர்கொள்ளப்படாமல் ‘ஒளிரும் இந்தியா'வோ ‘எழுச்சி பெற்ற இந்தியா'வோ சாத்தியமில்லை.

21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானதாக ஆக வேண்டுமெனில், இந்நூற்றாண்டு முதலில் கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு – சமத்துவம், ஏற்பு, உள்ளிணைப்பு (equality, acceptance, inclusiveness) ஆகியவற்றை வழங்கும் நூற்றாண்டாக ஆக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், இந்த நாடு கேலிக்குரியதாகத்தான் இருக்கும்.

இக்கட்டுரையாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்