Periyar DK


நவம்பர் மாதம் 26 ஆம் தேதி 1957 அன்று மாலை, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாத திராவிடர்களும் இச்சட்டம் நெருப்பிட்டு கொளுத் தத்தக்கது என்று, இம்மாநாடு பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது’ என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த எட்டு நாட்களில் அரசியல் சட்டத்தை எரித்தவர்களுக்கு, மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கும் சட்ட வரைவு அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்தைக் கொளுத்தினர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட்டனர். சிறைக்குள்ளேயே 5 பேர் மாண்டனர். சிறையிலிருந்து விடுதலையானவுடன் சில நாட்களிலேயே 13 பேர் மரணமடைந்தனர்.

சாதியை ஒழிக்க, சட்டத்தை எரித்து சிறை சென்ற 50 ஆவது ஆண்டில், சாதி ஒழிப்பு மாநாட்டை பெரியார் திராவிடர் கழகம் மே 19, 2007 அன்று தஞ்சையில் சிறப்பாக நடத்தியது. இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக மாபெரும் போராட்டத்தை நடத்திய வரலாற்றுப் பெருமை பெரியாரையே சேரும். இத்தகைய தியாகத்தை நினைவு கூறும் வகையில் இம்மாநாடு நடைபெற்றது.

காலையில் சாதி ஒழிப்பு கருத்தரங்கத்திற்கு விடுதலை ராசேந்திரன் தலைமை வகித்தார். சாதி ஒழிப்பில் புத்தர், அம்பேத்கர், புலே, பெரியார் மற்றும் சமகால களப் போராளிகள் என்ற தலைப்புகளில் அழகிய பெரியவன், வெண்ணிலா, த. பானுமதி, தலித் சுப்பையா மற்றும் புனித பாண்டியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அதற்குப் பிறகு சட்ட எரிப்பு வீரர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 40 போராளிகள் வெளிப்படுத்திய உரைகளும், அனுபவங்களும் கூட்டத்திலிருந்த அனைவரையும் உணர்ச்சிப் பிழம்பாக மாற்றியது. மாலையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். அதற்குப் பிறகு இரவு திருவள்ளுவர் திடலில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

1. சாதியத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்களுக்கு சுயமரியாதையும் சம உரிமையும் என்ற நோக்கோடு கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமே பின்பற்றப்பட வேண்டிய சாதியின் அடையாளத்தை, அதிலிருந்து திசைதிருப்பி, அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கிகளை உருவாக்குவதற்கும் சுயநல சக்திகள் தங்கள் சுரண்டலுக்கும், சுயநலனுக்கும் பயன்படுத்துவது அதிகரித்து வருவதும், இந்த சாதிய உணர்வுகளுக்குத் தீனிபோடக் கூடிய திரைப்படங்களும், கலைவடிவங்களும் பெருகி வருவதும், சமூகத்தை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்தான போக்கு என்று இம்மாநாடு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. சாதி அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குப் பதிலாக, சாதிக்கு புத்துயிர் ஊட்டும் அரசியல் கட்சிகள், சுயநல சக்திகள், திரைப்படங்கள், கலைவடிவங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று சாதி எதிர்ப்பாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

2. இந்து சாதி அமைப்பு, தொழிலையும், வாழ்க்கைத் துணையையும் தேர்வு செய்வதில் சாதியைப் புகுத்தி, சமூகத்தைத் தேக்கமடையச் செய்து விட்டதோடு மனித உணர்வு களையும் உரிமைகளையும் நசுக்கி வருகிறது. இந்தச் சாதித் தடைகளை மீறி வயது வந்த பெண்ணும், வயது வந்த ஆணும், வாழ்க்கைத் துணைவர்களாக விரும்பும்போது, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் முதலில் பாசத்தைக் காட்டியும், அது பலிக்காமல் போனால் அச்சுறுத்தல், வன்முறைகளைப் பயன்படுத்தியும் சாதி வெறியோடு தடுக்கப் பார்க்கிறார்கள். இப்படித் தடுக்க முனைவதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, கடும் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும், இவர்களில் தலித் பெண்ணோ, ஆணோ இருப்பார்களானால் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதனைக் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழக அரசை வற்புறுத்துகிறது.

3. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி போல் இந்திய நீதிப்பணியை (Indian Judicial Service) ஏற்படுத்த, தற்போதுள்ள அரசியல் சட்டத்தின் பிரிவு 312 அனுமதிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் இடஒதுக்கீட்டின் வழியே நீதிபதிகளாகும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உருவாக்குவதுதான் வெகுமக்கள் நலனுக்காக இயற்றப்படும் சட்டங்களை, எளிதில் நடைமுறைப்படுத்த உதவும். எனவே, இந்திய நீதிப்பணியை உருவாக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

-தலித் முரசு ஆசிரியர் குழு