கடந்த மூன்று இதழ்களில் வெளிவந்த அழகிய பெரியவன் அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது...

தமிழகம், பாலுறவு குறித்து ஒரு போலியான அணுகுறையினைக் கொண்டுள்ளது ஏன்?
Azhakiya Periyavan

குஷ்புவின் கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பையொட்டி தமிழகம் பாலுறவு விசயங்களில் ஒரு போலியான அணுகுறையைக் கொண்டிருக்கிறது என கருதத் தேவையில்லை. ஒட்டுமொத்த இந்தியச் சமூகமே பாலுறவு குறித்த வெளிப்படையான அணுகுறையைக் கொண்டிருக்கவில்லை. ஒப்பீட்டளவில் தமிழகத்தில் அகம் சார்ந்த விசயங்களைப் பேசவும், விவாதிக்கவும் இடம் உண்டு. பழந்தமிழ் இலக்கியங்கள் அகம் சார்ந்த (காதல்) விசயங்களுக்கு சரிபாதி இடம் அளித்துள்ளன! இல்லறவியலை நாகரிகமுடன் அணுகும் போக்கை வள்ளுவத்தில் காணலாம்.

"இந்தியா டுடே'யின் பாலுறவு குறித்த கருத்துக் கணிப்பில் பெரும்பாலான (80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட) பெண்கள், திருமணத்திற்கு முன்பே உறவு தேவையில்லை என்றிருக்கிறார்கள்; திருமணத்திற்கு முன்பே பாலுறவு தேவை என்ற பெண்களில் 54% மேல்தட்டு மாணவிகள். இந்த சுதந்திரமான பாலுறவு விழைவு, சமூகத்தளத்தில் வேறுவகையான சிக்கல்களை உருவாக்கும் என்பது உண்மை. பாலுறவு தொடர்பான பொருட்களுக்கு ஒரு சந்தை மதிப்பை உருவாக்க வேண்டி, சில நிறுவனங்களால் எடுக்கப்பட்டு பரபரப்பாக்கப்படும் புள்ளி விவரங்களைக் கொண்டு, நாம் நமது சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பாலுறவு பற்றிய சிந்தனைகள், இந்தியாவில் உள்ள எல்லா சமூகங்களிலும் இருந்தே வருகின்றன. அதை ஆரோக்கியமான, நாகரிகப் பார்வையுடன் எப்படி அணுகுகிறோம் என்பதே முக்கியம்.

திருமணத்திற்கு முந்தைய பாலுறவை தலித் சமூகம் எப்படிப் பார்க்கிறது?

பாலுறவு, கற்பு போன்ற விசயங்களில், தலித் சமூகம் ஏனைய பிற சமூகங்களைப் போலத்தான் தனது நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், வேறுசில அம்சங்களில் அது தனித்துத் தெரிகிறது. பிற சமூகங்களைப் போல பெண்களுக்கு மறுமணத் தடைகள், தலித் சமூகத்தில் இல்லை. கணவன் இல்லாது போனால் மறுமணம் செய்து கொள்ளவும், பிடிக்காத அல்லது சேர்ந்து வாழச் சாத்தியமற்ற இணையுடன் விவாகரத்துப் பெற்று, வேறொருவரை மணந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. கிராம அளவிலான பஞ்சாயத்துகளிலேயே இது போன்ற மணவிலக்கைப் பெறுவதும், மறுமணம் செய்வதும் சாத்தியப்படுகின்றன. "அறுத்துக் கட்டுதல்' என்று இதனை அழைக்கிறார்கள்.

தங்களின் "தகப்பன் கொடி' நாவலை, தமிழ் இலக்கிய உலகம் எப்படிப் பார்த்தது?

எனது நாவல் எந்தவிதமான எதிர்பார்ப்பையோ, பரபரப்பையோ உருவாக்கவில்லை. எந்த இதழிலும் அது வெளியாகவில்லை. நேரடியாகவே நூலாக்கம் பெற்றது. பொதுவாக அது ஒரு நல்ல வரவு என்று கருதினார்கள். பரவலாக அது வாசிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியும்.

இந்நாவலுக்கெதிரான முக்கிய விமர்சனம் என்ன?

நாவலைக் குறித்து பெரிய அளவிலான விவாதங்கள் எதுவும் எழும்பவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், நாவல் குறித்து ஆய்வு மாணவர்களாலும், விமர்சகர்களாலும் பல்கலைக் கழகங்களிலும் இலக்கிய அமர்வுகளிலும் கட்டுரைகள் படிக்கப்பட்டன. சென்னைப் பல்கலைக் கழகம் "தகப்பன் கொடி' உள்ளிட்ட 5 நாவல்களுக்கு என்று தனியாக கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது. அந்த 5 நாவல்களும் படைப்பாளிகளின் முதல் நாவல்களாகும். அப்போது எஸ். ராமகிருஷ்ணன், இந்த 5 நாவல்களும் தமிழ் நாவல் இயக்கத்தை நவீன தளத்திலிருந்து பின்னிழுப்பதாகக் கூறியிருந்தார். "தகப்பன் கொடி', "ரத்த உறவு', "சிலுவை ராஜ் சத்திரம்' போன்ற இந்த நாவல்கள் கதையளவில் குடும்பத் தலைமுறை வரலாற்றைச் சொல்வதாகவும், கால அளவில் 1900 முதல் 1950 வரையிலுமான பழங்காலத்தைக் கொண்டதாகவும் இருந்தன என்பதாலேயே இந்த விமரிசனம் எழுந்தது. "காலச்சுவடு' இதழில் பிரம்மராஜன் எழுதிய கட்டுரையில், எனது நாவலின் மொழியை கதையோட்டத்துடன் பொருந்தாத மொழி என்றிருந்தார். நாவல், ஆணியப் பார்வையுடன் இருக்கிறது என்றும் சில விமர்சனங்கள் எழுந்தன.

சாதி ஒடுக்குறையை எதிர்ப்பதில் தமிழர்கள் இன்னும் தோல்வியையே சந்திக்கின்றனரே?

தமிழகத்தில் மட்டுமல்ல, சாதியம் இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே எப்போதும் இருந்து வருகிறது. இந்தியர்கள் இந்தியன் என்ற உணர்வுடனோ, மாநில உணர்வுடனோ இருக்கிறார்களோ இல்லையோ; ஆனால், கண்டிப்பாக சாதிய உணர்வுடன் இருக்கிறார்கள். சில பகுதிகளில் சாதியின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட, சாதியின் உணர்வு அடியோடு ஒழிக்கப்படவில்லை. அந்த உணர்வு நீருபூத்த நெருப்புத்துண்டென உறைந்து கிடக்கிறது. சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் அந்நெருப்பை தீப்பிடிக்கச் செய்கின்றன.

தமிழகத்தில் சாதிய ஆதிக்கம் நீடிப்பதற்குக் காரணம், தலித்துகள் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலம் பொருந்தியவர்களாக இல்லாதிருப்பதுதான். நீண்டகால திராவிட அரசியலின் ஆட்சிகள், சாதி ஒழிப்பில் எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை. மாறாக, இவர்களின் ஆட்சியிலேதான் சாதிய அடையாளங்களோடு அரசியல் கட்சிகளாக மக்கள் அணிதிரள்வது பெருவாரியாக நடந்தது. இவ்வமைப்புகளை, தேர்தல் கூட்டணிகளைக் கருத்தில் கொண்டு ஆளுகின்ற கட்சியின் அரசுகளே வளர்த்தெடுத்தன.

வெண்மணி தொடங்கி திண்ணியம் வரை நடந்தேறிய எல்லா சாதிய வன்கொடுமைகளின் போதும் அரசு ஒன்றும் செய்யவில்லை. கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற இடங்களில் தலித்துகள் தேர்தலில் நிற்க முடியாமல் இருப்பது தேசிய அவமானம். அதற்கு வெட்கித் தலைகுனிவதற்கு பதிலாக மீசை முறுக்கினால், எப்படி அதை ஒழிக்க எண்ணம் வரும். ஒரு நல்லெண்ணக் குழுவை அனுப்பி வைத்ததோடு கடந்த அரசு அமைதியாகி விட்டது. இப்பிரச்சினையில் வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலவளவு படுகொலை போன்றவற்றின் வழக்குகளில், தலித்துகளுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்பவர்களும், வழக்கு மன்றத்தில் வாதாடுகிறவர்களும் குற்றவாளிகளால் மிரட்டப்படுகிறார்கள். வன்கொடுமை வழக்குகள், பெரும்பாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. தலித் இயக்கங்கள் இன்று பல பகுதிகளில் சாதிய ஆதிக்கத்தை ஒடுக்கும், எதிர்த்துக் குரல் கொடுக்கும் அரணாக இருக்கின்றன. தலித் மக்களின் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து அவை போராட்டங்களை நடத்துகின்றன.

அண்மையில் அசோகமித்திரன், பார்ப்பனர்கள் ஜெர்மனியின் யூதர்களைப் போல துன்புறுத்தப்படுவதாக எழுதியிருந்தார். இது குறித்து தங்களின் கருத்து என்ன?

அசோகமித்திரனின் கருத்து அபத்தமானதும், அசிங்கமானதும் ஆகும். அவர் ஒரு நல்ல எழுத்தாளர். அவரிடமிருந்து இப்படி ஒரு கருத்து வந்தபோது, அதைச் சகிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அசோகமித்திரனின் எழுத்துகளோடு அவரின் கருத்தைப் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது என்று ஜெயமோகன் உள்ளிட்ட சிலர், அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள். தலித்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட போதும், இந்தப் படைப்பாளிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். அதை எதிர்த்து தமது எழுத்தில் அல்ல, குறைந்த பட்சம் ஓர் அறிக்கையாகக்கூட இவர்கள் பதிவு செய்ததில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, அசோகமித்திரன் போன்றவர்கள் தங்களை தலித்துகளின் இடத்தில் வைத்துப் பேசுவது என்பது அநியாயகரமானது. இத்தகு கருத்துகள் போலிக் கூக்குரலாக எழும்பி, நிஜமான அழுகையை மறைத்து விடுகின்றன. பாதிக்கப்பட்டவனின் கருத்தியலை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன. இதிலிருந்து எல்லோருமே பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற ஒரு போலியான பொதுமைப் புள்ளிக்கு சமூகப் பிரச்சினையை இட்டுச் சென்று, பிரச்சினையின் வீரியத்தை திசை மாற்றிவிடுகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் கலைஞனுக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பிலிருந்தும் தந்திரமாகத் தம்மை விலக்கிக் கொள்கின்றனர்.

பார்ப்பனர்கள்தான் இந்தியாவின் கருத்தியல் ஆதிக்க சக்தியாக இன்னும் விளங்குகின்றனர் என்பது உண்மை. சகல துறைகளிலும் அவர்களின் ஆதிக்கமே இருக்கிறது. பல நேரங்களில் பின்னிருந்து இயக்கும் சக்தியாகவும் விளங்குகின்றனர். அசோகமித்திரனின் கருத்துக்கு எதிர்க் கருத்தாக "தலித் முரசு' இதழ், தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் "செல்வாக்கு' செலுத்தும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டு கட்டுரை யொன்றை வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் பார்ப்பனரின் ஆதிக்க நிலையை வெளிச்சமாக்கியிருந்தது இக்கட்டுரை.

அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ்ச் சமூகம், ஏன் திரைப்பட மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது?

தொடக்கம் முதலே திராவிட இயக்கக் கருத்துகளை சொல்லி மக்களைத் திரட்ட திரைப்படத்தையும், நாடகத்தையும் வலுவாகப் பயன்படுத்தினார்கள் அவ்வியக்கத்தின் தலைவர்கள். அந்த ஊடகங்களில் நடிக்கவும், பங்களிக்கவும் செய்தனர். இது, திரைப்படம் நவீனமடைவதற்கு முன்பே தொடங்கியது. அதனால் திரைப்படத்தையும், அதன் மூலம் சொல்லப்படுகிற புரட்சிகர கருத்துகளையும் தமிழ் மக்கள் நம்பத் தொடங்கினார்கள். தணிக்கை செய்யாமல் என் கருத்துகளைச் சொல்ல அனுமதித்தால், ஒரே திரைப்படத்திலேயே தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவேன் என்றிருக்கிறார் அண்ணா. இந்தக் கருத்துப் பரப்பல் பணியில் பங்கேற்ற திரைப்பட நாயகர்களே ஆட்சிக்கு வர முயன்றபோது, அதை மக்கள் எற்றுக் கொண்டார்கள். இது, அரசியலுக்கும் திரைப்படத்துக்கும் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திவிட்டது. இந்த உறவு இன்றளவும் தொடர்கிறது. ஆற்றல் வாய்ந்த மாற்றுச் சிந்தனையுடைய இயக்கம் தோன்றினால் இந்த நிலைமை மாறும்.

உங்களுடைய எழுத்தின் அரசியல் என்ன?

நான் எழுத்தை மக்களுக்கானதாகப் பார்க்கிறேன். சிந்தனை, இயக்கம் ஆகியவற்றில் எழுத்து மாற்றத்தை உருவாக்கும் என நம்புகிறேன். நிலவும் சாதியக் கட்டமைப்புடைய சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதுவதும், அவர்களுக்காக சிந்திப்பதும் எதிர் செயல்பாடாகிறது. அவ்வகையில் எழுதுவதை ஒரு கலகச் செயல் பாடாகக் கருதுகிறேன்.

காதல், திருமணம் போன்றவற்றை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

காதலை நான் விரும்புகிறேன். அது, மானுடப் பொது மொழியும் பண்புமாக இருக்கிறது. சாதி, மத, இனக் கலப்புகளுக்கு வழி செய்வதால் காதல் புரட்சிகரமானதும்கூட! இந்தியச் சமூகத்தில் சாதியம், இனக்கலப்பு நிகழாத வண்ணம் பாதுகாத்துக் கொண்டிருக்கும் ஒரு வளையமாகவே இருக்கிறது. அதை உடைக்கக் காதலை ஒரு சிறந்த வழி. தொன்மைச் தமிழ்ச் சமூகத்தில் காதல் மணங்கள்தான் நடந்திருக்கின்றன. இது, எல்லா தொன்மைச் சமூகங்களிலும் இருந்திருக்கக் கூடிய ஓர் அம்சம்.

திருமணங்கள் - சாதிய மரபு, மதப் பாரம்பரியம், ஆண் ஆதிக்கம் ஆகியவற்றின் பாதுகாக்கும் நிறுவனமாக இன்று மாறிவிட்டன. பெருகி இருக்கும் திருமண ஏற்பாட்டு நிலையங்கள், ஒரு புது தொழில் துறையாக மாறி வருகின்றன. நிலவும் சமூகக் கட்டமைப்பை ஓர் இம்மியும் மாறிவிடாதபடி பாதுகாக்கும் செயல்பாடுகள் இவை. திருமணங்கள் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு உரிய ஓர் எளிய ஒப்பந்த முறையாக இருந்தாலே போதுமானது.

தமிழ்ச் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே? வெளியில் இருந்து பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஜெயேந்திரர், ஜெயலட்சுமி போன்றவர்களின் குற்றச் செயல்களால் இந்த முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது...

Azhakiya Periyavan
தமிழ் நாடு குற்றங்கள் மலிந்த மாநிலம் என்ற தோற்றம் ஊடகங்களின் பரபரப்புச் செய்திகளால் உருவாக்கப்படுகிறது. அது உண்மையல்ல. நிகழும் குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் குற்றப் பகுதிகளாக அறிவிக்கப்படக்கூடிய தகுதி வாய்ந்தவை! சில மாநிலங்களில் தேர்தலை அமைதியாக நடத்த முடியாத நிலை இருப்பதை நாடே அறியும். தலைநகரில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருவதாக செய்திகள் சொல்கின்றன. மதக் கலவரங்களால் நாடே உலக அரங்கில் வெட்கித் தலைகுனியும்படி நடந்து கொண்டது தமிழகமல்ல. "அமைதிப் பூங்கா' என்று தமிழகத் தலைவர்களால் சொல்லப்படும் சொற்றொடருக்கு நியாயம் செய்யும் வகையில்தான் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழ் நாட்டில் தரமான திரைப்படங்கள் வெளிவருவதில்லையே ஏன்?

திரைப்படத்தை ஒரு கலையாகவும், ஒரு தொழிலாகவும் பார்க்கும் இரு வேறுபட்ட பார்வைகளின் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாகப் பார்க்கிறவர்களே தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர். பணம் ஈட்டும் மலினமான ஒரு துறையாக அதை அணுகும் நிலை மாறும் வரை, நல்ல திரைப்படத்திற்கான சாத்தியம் எங்குமே இல்லை. திரைப்படத்தைக் கையில் வைத்திருப்பவர்களும், அதற்குப் பணம் முதலீடு செய்பவர்களும் தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள். மூடக் கருத்துகளையும், பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும், பெண்ணுக்கு எதிரான பார்வையையும், ஆபாசச் சீரழிவையும், இந்து மத வெறியையும் கொண்ட படங்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழலை மாற்ற முயலும் திரைப்பட முயற்சிகள் முடக்கப்படுகின்றன. அவர்களுக்கானப் பண முதலீடோ, அரசின் ஆதரவோ இருப்பதில்லை. இலக்கியவாதிகளும், நல்ல சிந்தனையாளர்களும் விலகியே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்த் திரைப்படத்தில் இயங்கும் வெளி இல்லை. சமரசம் செய்து கொள்கிறவர்களாலேயே திரைப்படத்தில் நுழைய முடியும் என்கிற நிலை இருக்கிறது. மக்களிடம் நல்ல படங்களுக்கு ஆதரவு இல்லை என்பது பொய். மதுவை கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்து ஒருவரை அடிமையாக்குவது போலத்தான் வணிகத் திரைப்படங்கள் மக்களை மாற்றி வைத்துள்ளன. மருந்து போல நல்ல திரைப்படங்கள் வருகிறபோது, அதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த மாற்றம் மெதுவாகவும், சீராகவும் நடக்கும்.

தமிழ் மண்ணின் அடையாளமற்றிருந்த திரைப்படத்தை பாரதிராஜா, மகேந்திரன் போன்ற கலைஞர்கள் வந்து மாற்றினார்கள். இன்றும் இவர்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வணிகச் சினிமாவுக்கு இணையாக வந்துகொண்டே இருக்கிறார்கள். சேரன், தங்கர்பச்சான், பாலா போல முழு திரைப்பட இயக்கத்திற்கு மாற்றாக, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவர்களோடு நவீன அணுகுமுறையோடு செல்வராகவன், அமீர், லிங்குசாமி என்று வேறொரு தளத்தில் இயங்கும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். ஆர்.ஆர். சீனிவாசன், சந்தோஷ் சிவன், லெனின் என்று நம்பிக்கைக்குரிய படைப்பாளிகள் குறும்படங்களின் வழியே உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்?

கல்லூரிப் படிப்பு முடித்து சில மாதங்களிலேயே ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அந்தப் பணி நிமித்தம் பல கிராமங்களுக்கும் போக வேண்டியிருந்தது. அப்படி நான் சென்று பணியாற்றிய ஓர் அழகான மலைக் கிராமத்திலிருந்து தெபோராள் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் காதல் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது என்று நினைக்கிறேன். இருவீட்டிலும் எங்கள் காதலுக்குச் சம்மதம் இருந்ததால் சிக்கல் எதுவுமில்லை. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. என் படைப்புகளின் முதல் விமர்சகராகவும், என் இலக்கியச் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு துணையிருப்பவராகவும் இருக்கிறார் தெபோராள். யாழினி, ஓவியன் என்று இரு குழந்தைகள். எனது குடும்பம் ஓர் எளிய குடும்பம். நிரந்தரப் பணியின்றி அலைவுறுகிறது என் வாழ்க்கை. எட்டு ஆண்டுகள் தொண்டு நிறுவனத்தில் இருந்துவிட்டு பிறகு ஓர் அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்குப் போய்ச் சேர்ந்தேன். அதுவே தொடர்கிறது. முழுநேர எழுத்தாளராக தமிழ்ச் சூழலில் வாய்ப்பு இல்லை. எனவே, இரு பாதைகளிலுமாகப் பயணம் தொடர்கிறது.

நீங்கள் ஓர் எழுத்தாளராக ஆகியிருக்கா விட்டால், என்னவாக இருந்திருப்பீர்கள்?

நான் சிறுவயதிலிருந்தே கலையுணர்வின் தாக்கம் மிகுந்தவன். ஓவியம், இசையும், நடிப்பும் நான் நேசித்த துறைகள். இத்துறைகளில் ஏதாவது ஒன்றில் இருந்திருப்பேன். மென்னுணர்வுகளாய் கட்டப்பட்டிருக்கும் என் மனம், வேறெதையும் செய்ய விட்டிருக்காது. எழுத வந்திருக்காவிட்டால், ஓர் ஓவியனாகவோ, ஒரு பாடகனாகவோ இருந்திருப்பேன்.

நேர்காணல் : டி.டி. ராமகிருஷ்ணன் தொடரும்
புகைப்படங்கள் : புதுவை இளவேனில் நன்றி : ‘மாத்யமம்'