அனைத்து மனிதர்களையும் அங்கீகரித்து சமமாகக் கருதுவதும், பார்ப்பனியச் சமூக அமைப்பின் சாதி - வர்க்க - ஆணாதிக்க எதிர்மறைகள் மனிதத் தன்மையற்றவை என்பதை உணர்த்துவதுமே பவுத்தத்தின் மய்யக் கருத்தாகும். புத்தருடைய, எவ்விதத்திலும் வேற்றுமை தலைகாட்ட முடியாத நடைமுறையானது, எல்லா மனித உயிர்களின் அடிப்படை உளவியல் தேவையான தன் மதிப்பையும், வாழ்வியல் தன்னுரிமையையும், சுய ஆளுமையையும் ஏற்றதால் மானுடத்திற்கு அது இசைவாகிக் கொண்டது. சமூக பொருளாதார அரசியல் உரிமைகளைப் பறித்தெடுக்கும் பார்ப்பனியத்தால் நசுக்கப்பட்டு கீழே கிடந்த வெகு மக்கள் புத்தரிடம்தான் - அவருடைய கருத்தியலிலும், செயல்முறைமைகளிலும் சுதந்திரத்தை - சமத்துவத்தை - சகோதரத்துவத்தை நவீனமாகக் கண்டனர். வெகு மக்களைப் பொறுத்தவரையில் பவுத்தம் அவர்களை ஒரு புதிய சமூக, பொருளாதார, அரசியல் திரளாகப் பணமிக்கச் செய்கின்ற வாகனமாக அவர்களுக்குக் கிடைத்தது.

Ambedkar
ஒவ்வொரு உயிரும் தன் விடுதலையைத்தானே தேடிக்கொள்ள வேண்டும் என்பதே பவுத்தத்தின் மூலக் கொள்கை. மனித உயிர்கள் மற்றும் நல்வாழ்வே புத்தருடைய தன்மையான அக்கறையாக இருந்தது. மகிழ்ச்சியான மனிதர்கள் மட்டுமே மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதால், அவர் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில் ஆர்வமுடையவராக இருந்தார். துன்பங்கள் தீர்க்கப்படும் போது மட்டுமே மனிதர்கள் மகிழ்ச்சியடைய முடியும். புத்தர், துன்பத்தை விலக்கி, மனிதர்களுக்கு மகிழ்ச்சியின் தீர்மானகரமான தருணங்களை ஏற்படுத்தவே ஆயத்தமானார். பொருட்களின் உண்மையான தன்மை பற்றிய அறியாமையே துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.

பசியைவிட மிகப் பெரிய துன்பம் வேறு எதுவுமில்லை. பசி - உடலை, நலவாழ்வை, அமைதியை, மகிழ்ச்சியை அழித்துச் சூறையாடி வருகிறது. மனிதர்கள், சக மனிதர் பசியோடு இருப்பதை நீடிக்க விடக்கூடாது. உலகில் யாரெவருமே பசியோடிருக்கக் கூடாது என்பதற்கான வழிவகைகளை நாம் காண வேண்டுமென புத்தர் அறைகூவல் விடுத்தார். வறுமை துன்பத்திற்குக் காரணமாகிறது. உயிர்கள் யாவும் இன்பத்தை விழைகின்றன - துன்பத்தை வெறுக்கின்றன என்பதை வலியுறுத்தினார். சமூகத்தில் குற்றங்களும் வன்முறைகளும் பசி, வறுமை மற்றும் வேலையின்மையால்தான் விளைகிறது என்றார்.

திரண்ட செல்வம் பெற்றிருந்தும் தான் மட்டும் துய்த்தலும்; பிறப்பு, செல்வம், குலம் ஆகியவற்றைக் கொண்டு அகங்காரப்பட்டு பிறரைத் துன்புறுத்துவதுமான பார்ப்பனிய பிறவி முதலாளித்துவ அமைப்பினுள் - மரண தண்டனைகளும், சித்திரவதைகளும், சிறைவாசம் ஒருபோதும் குற்றங்களையும், வன்முறைகளையும் நிறுத்தி விடாது என்றார் புத்தர். மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்குமான ஒரே சிறந்த வழி ஆரோக்கியமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதேயாகும் என்ற அவர், வர்க்கக் கட்டமைப்பில் அதிருப்தியுறுவதையும் கிளர்ச்சி புரிவதையும் தண்டனையால் நிறுத்த முயலாமல், தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் பொருளாதார வளத்தை முன்னேற்றுவதன் மூலம் நிறுத்துவதை வலியுறுத்தினார்.

புத்தர், பொருளீட்டுபவர்கள் மனசாட்சிக்கு அஞ்சுகிற அறவியலாளராக இருக்க வேண்டும் என்ற வரையறையை ஏற்படுத்தினார். சொத்து என்பது உண்மையான திறமையான உழைப்பினால் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து சேர்க்கப்பட வேண்டும் என்பது அவரின் முடிந்த முடிவாகும். ஒழுக்கக் கேடான செயல்களால் செல்வந்தராவது கொடுங்கோன்மைக்கு வழிநடத்தும் என்றார். ஒருவரது வாழ்க்கைக்கான பொருள் சட்டப்பூர்வமான வழிகளிலும், சுரண்டல் இல்லாத வழிகளிலும், வன்முறையில்லாத வழிகளிலும் பெறப்பட வேண்டும் என்ற புத்தர், செல்வத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறவியலைக் கொண்டு வகுத்தளித்தார். பொருளீட்டுவதற்கான அன்றாட நடவடிக்கைகளுடன் ஒழுக்கவியல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள நிபந்தனை விதித்தார். எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் பணத்தின் மீதான பேராசைக்குத் தடை விதித்தார். புத்தர் விதித்த பேராசை மற்றும் வரம்பு மீறிய புலனின்பத்திற்கும் தடை, அடிப்படைத் தேவைகளில் மனிதர்கள் நிறைவுறும் பண்பை வளர்த்தெடுத்தது.

புத்தருக்கு பொருளாதார வளம், சமமானப் பகிர்வும் இன்றியமையாததாகும். மக்கள் ஏழைகளாயிருப்பின், அங்கு செல்வம் தவறாகப் பகிர்வு செய்யப்பட்டுள்ளதாய் அவர் பொருள் கண்டார். தவறானப் பகிர்வு நாட்டில் மக்களுக்கு ஏமாற்றத்தையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். புத்தர், மக்களிடையே செல்வம் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின் வறுமை தலைவிரித்தாடும் என்றார். வறுமை அதிகரிக்க அதிகரிக்க திருட்டு, கொள்ளை ஆயுதக் கலாச்சாரம், மோதல்கள், கொலைகள் நிகழ்ந்தே தீரும் என்பதை விளக்கினார்.

புத்தர், நிலையான வருவாய் ஒரு மனிதன் பொருளியல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு அவசியமானது என்பதை அறிந்திருந்தார். எனவே, அவர் தேனீ பூக்களை சேதப்படுத்தாமல், அவற்றின் தேனை நாற்புறம் சுரண்டி சேகரிப்பதுபோல் பிறரைத் துன்புறுத்தாமல், வஞ்சிக்காமல் நல்ல வழிகளில் தங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி, தாங்கள் வாழ்வதற்காகப் பொருளீட்ட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். ஒழுக்கம், மனதின் மீதான கட்டுப்பாடு மற்றும் சோதனையறிவு இவையே புத்தருடைய அறிவுரைகளின் சாரமாகும். அச்சாரங்களையே பொருளியல் முறைமைகளுக்கும் பொருத்தினார்.

சமூகநல்லிணக்கம், சமநீதிக்கான அறிவுறுத்தல், அன்பு, அரவணைப்பு இவையே புத்தரின் கோட்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளச் செய்யும் வழிமுறைகளாக அமைந்தன. அனைவருக்கும் இயைந்த அறத்தினால், அன்பினால், அரவணைப்பினால் மட்டுமின்றி அதிகாரத்தினால் எதையும் வெல்ல முடியாது என்ற கோட்பாட்டை எதிராளியாக இருந்தாலும் கூட, அவர்களின் மனதிலும் நேர்மறையை ஆழமாகப் பதிய வைப்பதன் மூலம் புத்தர் அவர்களையும் வென்றெடுத்தார். மனிதன் மனதை, உலக மக்களின் மனச்சாட்சியை சீர்திருத்தாமல், உலகைச் சீர்திருத்த முடியாது என்பது புத்தரின் அறிவுரைகளில் மிக முக்கியமானதாகும்.

ஒரு மனிதனின் மனம் மாறிவிடுமானால், அம்மனிதனை நேர்மறை சக்தியாக, ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர காவல் துறையோ, ராணுவமோ தேவையில்லை. அதன் காரணமாகத்தான் புத்தர், மக்களின் மனசாட்சியை வலுப்படுத்தி, அதன் மூலம் அவர்களை தம்மத்தின் பாதையில் நிற்க வைத்தார். புத்தரின் தம்மத்தில் பொருளியல் கோட்பாடு என்பது, மனிதன் சமூகஉயிரி என்பதை நிலை நாட்டுவதாகும். பொருளாதார வெற்றிக்கு இடையறா முயற்சி, விழிப்புடைமை, நல்ல தோழமை, வரவுக்குப் பொருந்திய வாழ்க்கை ஆகியவற்றை வைத்தார். புத்தர், உடைமைகளை அனுபவிக்கும் இன்பத்தை ஏற்றுக் கொண்டு, அவற்றை அனைவருக்கும் உரிமையாக்கினார்.

குடும்பத்தின் சொத்து அந்தக் குடும்பத்தினருக்கு மட்டுமில்லை என்று அறிவித்த புத்தர், உடைமைகளை அனுபவிக்கும் பாங்கில் இன்பம் எய்த, ஒருவர் தம் செல்வத்தைப் பகிர்தலின் படலமாக்க கேட்டுக் கொண்டார். செல்வம் தமக்கும் சக மனிதர்களுக்கும் பயன்பட வேண்டும். செல்வம் மூலதனமாகத் திரட்சி பெற்று குவித்து சேர்த்து வைக்கப்படத்தக்கதன்று; பகிர்ந்தளிக்கப்படத்தக்கது. செல்வம் முதலாளித்துவமாக மாறிவிடக் கூடாது. செல்வத்தின் நீட்சி ஏகாதிபத்தியமாக மாறிவிடக் கூடாது. செல்வத்தின் ஆட்சி உலகமயமாகி விடக் கூடாது. இதுவே புத்தர் கொண்ட பொருளியல் முறைமைக்கான அடிப்படையாகும்.

செல்வத்தைச் சேர்க்கும்போது தட்ப வெப்ப சூழ்நிலைமைக்கோ, பசி - பட்டினிக்கோ அச்சம் கொண்டு விடக் கூடாது. மாறாக, அத்தனை துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள ஒருவர் தயாராக இருக்க வேண்டும் என்றார் புத்தர். அவர், மக்களின் பொருளாதார ஆதாரத்திற்காக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், அரசுப் பணிகள் ஆகியவற்றை அங்கீகரித்தார். இவற்றில் ஈடுபடுவோர் உள்ள நலத்திற்கான சூழல்களுக்காக பகுத்தறிவு, நன்னெறி, ஈகை, மெய்யறிவு கைக்கொள்ளப்பட வேண்டும் என்றார். இச்சூழலமைவினால் இத்தொழில்களில் தமக்கும் பிறருக்குமான இன்பத்தைப் பெற முடியும் என்றார். உயிர்களேதும் துன்புறுத்தப்படாமலும், தீய செயல்கள் எதிலும் ஈடுபடாமலும் அமைதியான தொழில்களில் ஈடுபடுதலைப் பெரும் பேறாகக் கருதிய புத்தர் - அடிமை வணிகம், ஆயுத உற்பத்தி, கொடிய நஞ்சு தொடர்பான தொழில்கள், போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை தவறான வாழ்க்கை என்ற வரையறைக்குள் உள்ளடக்கினார். ஒருவரது வாழ்க்கைக்கான பொருள் சட்டப்பூர்வமான வழிகளிலும், தீங்கு, வன்முறையில்லாத வழிகளிலும் பெறப்பட வேண்டும் என்பது புத்தர் திரும்பத் திரும்ப அறிவுறுத்தியதாகும்.

தனிச் சொத்துடைமையின் மேல் பாசம் இல்லையாயின் அங்கு அமைதி நிலவும். அனைத்துப் பேராசையினையும், தன்னை மட்டுமே நேசிக்கின்ற சுயநலத்தினையும் களைவதன் மூலம், அவற்றின் பின் அலையாதிருப்பதன் மூலம், அவையனைத்தையும் அழித்துவிட்டுத் துறப்பதன் மூலம் உயர் பேரறிவு எய்த முடியும். துயரப்படுபவர் தன்னிலையை மாற்றிக் கொள்ள முயல வேண்டும் என்று கூறிய புத்தர், உடைமைச் சமூக அமைப்பிற்கு எதிராக, எல்லையற்ற செல்வக் கொடூரத்திற்கு எதிராக எல்லோரும் வளமான வாழ்க்கை வாழ உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் அதீத உணர்ச்சிக்கு சுயநலம் - பேராசையும் - பெரும் பொருள் பற்றும் காவலாகின்றன என்ற புத்தர், இந்த சுயநலப் பேராசை உணர்ச்சி ஏன் நீக்கப்பட வேண்டுமென்றால், இதிலிருந்தே சமூகத்தில் விபரீத நிலைமைகள் தோன்றுகின்றன. வெட்டுக்குத்து, முரண்பாடு, மோதல், போர், பொய், புரட்டு எல்லாம் இந்தப் பெரும் பற்றென்னும் பேராசையின் விளைவு என்றார். வர்க்கப் போராட்டத்தின் சரியான விளக்கத்தை அய்யத்திற்கிடமின்றி தந்த புத்தர், வர்க்க சமூக அமைப்பை சுயநலக் காரணகாயத் தொடர் சங்கிலி என்று அழைத்தார்.

சுயநலப் பேராசை இல்லையாயின் அங்கு லாபத் தேடல் விளையுமா? லாபத் தேடல் இல்லையாயின் அங்கு பற்று விளையுமா? பற்று இல்லையாயின் அதில் ஒன்றிவிடுதல் விளையுமா? ஒன்றி விடுதல் இல்லையாயின் அங்கு தனிச் சொத்துடைமை மேல் ஆர்வம் விளையுமா? சொத்துடைமை இல்லையாயின், அங்கு மேலும் மேலும் உடைமை மேல் பேராசை விளையுமா? விளையாது என்றார் புத்தர். தனித் சொத்துடைமையின் மேல் பாசம் இல்லையாயின் மானுடத்தில் அமைதி நிலவும் என்ற புத்தர், நான் புவியைப் புவியாய் அங்கீகரிக்கின்றேன். ஆனால், எனக்குப் புவிமேல் ஆசை இல்லை என்றார்.

உடைமை வர்க்கத்தினரிடம் புத்தர், திறனுக்கேற்ற வேலைகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்; அவர்களுக்கு உணவும், போதிய ஊதியம் அளியுங்கள், பிணியுற்ற காலத்தில் பராமரியுங்கள், இனியவைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உரிய காலங்களில் அவர்களுக்கு விடுதலை அளியுங்கள் என்று பாட்டாளி வர்க்கம் சார்பில் கோரிக்கைகளை வைத்தார். புத்தர் உழைப்பின் மேன்மைக்கு மிகுந்த மதிப்பளித்தார். உழைப்பாளர், தன் விடுதலைக்கான தீர்வுக்குத் தானே உழைக்க வேண்டுமேயல்லாது, வேறு யாருடைய ஆசிகளையோ, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளென எவைகளையுமோ சார்ந்திருக்கக் கூடாது என்றார். இந்தப் பூவுலகைத் தாங்கி நிற்பவர்கள் இந்த உலகின் ஆணி வேரானவர்கள் பாட்டாளிகள் என்றார் புத்தர். ஆம், அவர் மானுட உலகில் பாட்டாளிகளின் முதல் பிரதிநிதி மட்டுமல்ல; முதல் தலைவருமாவார்.

-தொடரும்

-ஏ.பி.வள்ளிநாயகம்