நாடாளுமன்ற அவைத் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட உறுப்பினரைக் கேள்வி கேட்க ஒருவேளை பெருந்தன்மையாக அனுமதித்து விட்டாலும், அது அவைக் குறிப்பில் இடம் பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா அந்த உறுப்பினரிடம் பேசி, அக்கேள்வியைத் திரும்பப் பெற வலியுறுத்துவார். அதையும் மீறி ஒருவேளை அந்தக் கேள்வி பதிவாகிவிட்டால், அக்கட்சியின் கொறடா அந்த உறுப்பினரை அன்று மட்டும் ஊரைவிட்டே வெளியேறச் சொல்லி விடுவார். இக்கேள்விக்கான பதில் தேவைப்பட்டாலும், கேள்வி எழுப்பிய உறுப்பினர் இல்லாததால், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறாது. இப்பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

Ambedkar
நாடாளுமன்றத்தில் நிதிநிலை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது, எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் நிதிநிலை குறித்துப் பேசலாம். தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும் எத்தகைய சிறப்பு உரிமைகள் வேண்டும் என்று கோரலாம். தேவையற்ற திட்டங்களுக்காக நிதியை வீணடிப்பதற்குப் பதில் முக்கியத் தேவைகளுக்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரே ஒரு உறுப்பினர்கூட வெட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதை நான் பார்த்ததில்லை. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளே காரணம். கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனில், முன்கூட்டியே அவர்கள் கட்சிக் கொறடாவிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரசில் உள்ள தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் எவரும் எந்த சட்டவரைவையும் முன்மொழிந்ததில்லை.

தீண்டத்தகாத மக்கள், இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கான சட்டரீதியான சிறப்புரிமைகளை / அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுடைய எதிரிகள் காங்கிரஸ் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவர்கள் எப்படி அதை அனுபவிக்க முடியும்?

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது நம்முடைய சமூகத்திற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்பியிருந்தால் செய்திருக்கலாம். ஆனால், அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டனர். அந்தக் காலம் கடந்து விட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்திலும் நாம் கவனமாக இல்லாமல், நம் கண்களை மூடிக்கொண்டிருந்தால், நாம் அழிந்து விடுவோம். இனிவரும் தலைமுறையினரும் நம்மைப்போல துன்பப்படக்கூடாது என நினைத்தால், நீங்கள் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் இடஒதுக்கீடு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியாவில் தீண்டாமை நீடித்திருக்கும்வரை, இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என்னை எதிர்த்தனர். எனவே, ஒன்றும் இல்லாமல் இருப்பதற்குப் பதில் ஏதாவது கிடைக்கட்டுமே என்ற வகையில், நான் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு ஒப்புக் கொண்டேன். இந்த இடஒதுக்கீடு இரண்டு தேர்தலுக்கு மட்டும்தான் இருக்கப் போகிறது. அதுவரை மட்டுமே காங்கிரஸ் போன்ற கட்சிகள், உங்களிடம் வாக்குகளுக்காகக் கையேந்தி நிற்கும்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை நீட்டிக்கும்படி உங்களுக்காக யாரும் கேட்கப் போவதில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, நீங்கள் அவர்களின் சார்பில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்குமா? கண்டிப்பாக வைக்காது. அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் உங்களைத்தான் முட்டாள்களாக்குவார்கள். எனவே, நீங்கள் இப்பிரச்சினை குறித்து சிந்தித்து, எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு கட்சிக்கும் பணமோ, அதிகாரமோ இருக்க வேண்டும். நம் சமூகத்திடம் பணமோ, அதிகாரமோ இல்லை. ஆதிக்கச் சாதியினரின் கருணையால் நாம் கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பனியாக்கள் மற்றும் மார்வாரி போன்றவர்களிடம் அதிகாரம் இல்லை; ஆனால், அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தால் எதையும் வாங்க முடியும். எனவே, நீங்கள் உங்களுக்காக எதையாவது செய்து தீர வேண்டிய தருணம் இது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் அனுப்பலாம். இல்லையெனில் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். எனவே, நீங்கள் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின்' கீழ் ஒன்றிணைந்து, நம் சமூகத்தை குழப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளும் உங்களிடம் வந்து ‘எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பார்கள். ஆனால், அவர்கள் காட்டும் தவறான பாதைக்கு நீங்கள் சென்றுவிடக் கூடாது.

தொடரும்

28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை