புரட்சி பெரியார் முழக்கம்

ஆண்டுக்கட்டணம் ரூ.150/-
தொடர்புக்கு:  ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர்,  திருவான்மியூர், சென்னை-41.

 

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை.இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங்களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து...

தமிழ் மன்னர்கள் ஆகிய சோழர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல் ஆட்சி செய்து இருக்கின்றனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இதுதான். பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சத்தைத் தொட் டவன் இராசராச சோழன். அதைத் தெளிவாகச் சான்றுகளுடன் விளக்கும் பகுதி பார்ப்பனர் களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உறவு, பிரிக்க முடியாத உறவு இருந்து வந்தது. இது எல்லா நாடுகளிலும் காணப்பட்ட மதம் - அரசு / அரசர்கள் உறவைவிட நெருக்க மானது. பிறப்பின் அடிப்படையில் அமைந்தது.

பார்ப்பனர்களின் நால் வகுப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தொழில்களை அமைக்கும் விதமாக அமைந்திருந்தது. ஒருவன் எந்த குலத்தில் பிறந்தானோ அந்தக் குலத்திற்கு உரிய தொழிலைத் தான் செய்ய வேண்டும், செய்ய முடியும் என்ற நால்வகைப் பகுப்பு முறை ஒரு இறுக்கமான கட்டமைப்பு ஆகும். மேலும் தலைவிதி, மறு பிறப்புப் போன்ற கருத்துகளையும் பார்ப்பனர் களின் தத்துவம் ஆதரித்து நிற்கிறது. மன்னன், கடவுளின் குறிப்பாகத்  திருமாலின் மறு அவதாரம். எனவே, அவனது அரச கட்டளைகள் கடவுள் சொல்லுக்கு இணையானவை, அவற்றை யாரும் எதிர்க்க  கூடாது. இது போன்ற கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்குப் பார்ப்பனர்களின் கருத்தியல் மன்னர்களுக்கு தேவையாய் இருந்தது. மன்னர்கள் மக்களைக் கருவிகளைக் கொண்டும், கொலைக் கருவிகளைக் கொண்டும், அடக்குவதை விட இத்தகைய கருத்துகளைக் கொண்டு அடக்கு வது எளிது என்பதை விரைவில் உணர்ந்து கொண் டனர். அதைப் பார்ப்பனர்கள்தான் திறமையாகச் செய்வார்கள் என்பதையும் உணர்ந்து கொண் டார்கள். எனவே மன்னர்கள், பார்ப்பனர்கள் கூட்டுறவு இருவருக்கும் பயன் அளிப்பதாய் விளங் கிற்று. மக்களை ஏமாற்றுவதிலும், அவர்களைச் சுரண்டுவதிலும் இந்த ஒற்றுமை மிகவும் திறமையாக வேலை செய்தது, இத்தகைய கூட்டுறவு இன்று வரை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். சங்ககாலம் தொட்டே இந்த உறவு இருந்து வந்தது. கே.கே. பிள்ளை அவர்கள் தமிழக அந்தணர்கள் நல்லவர்கள், தமிழே அவர்கள் மொழி என்று தமது நூலில் வாதிடுகிறார் (மேலது பக்.315-317). ஆனால் அதற்குத் தக்கச் சான்றுகள் எதையும் அவர் காட்ட வில்லை. மாறாக சங்ககாலப் பாடல்கள், மன்னர் களின் பெயர்கள் ஆகியவை அம்மன்னர்களும் பார்ப்பன அடிமைகளே என்ற எண்ணத்தைத் தான் தோற்றுவிக்கிறது. கரிகாற் சோழனைப் பற்றிய சங்கப் புலவன் பாட்டு, வேத வேள்வி செய்த பார்ப்பனருக்கு நிதி, கொடை அளித்து உதவி செய்தான் என்பதை சிறப்பித்துக் கூறுகிறது. பல்யாகசாலைப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்ற பெயர்கள் சங்ககால மன்னர்கள் யாகம் செய்தார்கள் அல்லது செய் வித்தார்கள் என்பதைச் சுட்டி நிற்கும். அதன் பின்னர் வந்த களப்பிரர் சமண சமயத்தினர், அவர்கள் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் கட்டுக்குள் இருந்ததாகத் தெரிகிறது.

வேள்விக்குடி செப்பேடு இதனைத் தெளிவாகக் கூறுகிறது. அதில் ஒரு பார்ப்பனப் புலவன் பாண்டிய மன்னனைப் பார்த்துக் கூறும் செய்தி, “முன்னர் உன்னுடைய முன்னோர்கள் எங்களுக்கு நிலம் கொடுத்தனர், பின் கலி சூழும் காலம் தோன்றிய போது அந்த நிலம் எம்மிடம் இருந்து பிடுங்கப்ப ட்டது. (இது களப்பிரர் ஆட்சியைக் குறிக்கும் காலமாக இருக்கலாம்) கலி என்னும் இருள் நீங்கியவுடன் அந்நிலம் எம்மிடம் வந்து சேர்ந்தது”. இதனால் நாம் அறியும் செய்தி பார்ப்பனருக்கு நிலக் கொடை அளிக்கும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தே நிலவி இருக்கிறது என்பதே. களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்தில் மகேந்திரவர்மன் காலம் வரையிலும் பார்ப்பனர் கொட்டம் அடங்கியே இருந்தது. மகேந்திரவர்மன் சைவ மதத்திற்கும் அதன் பின்னர் வந்த பல்லவர்கள் அவரவர் விருப்பப்படி சைவ அல்லது வைணவ மதத்தைத் தழுவிய பிறகு நிலை தலைகீழாக மாறி சமணர்களும் சாக்கியர்களும் விரட்டப்பட்டனர். சிவ - வைணவ மதங்களுக்கு அரசர்கள் ஆதரவு பெருகிற்று. சமணர்கள் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். மதுரையில் கழுவேற்றப்பட்டனர். வட ஆற்காடு எண்ணாயிரம் என்ற ஊரில் 8000 சமணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆழ்வார் ஒருவர் சமணர்களையும் சாக்கியர்களை யும் கண்ட இடத்தில் கொல்லுவதே சிறந்த மதத் தொண்டு என்று பாடியுள்ளார். இவ்வாறாகப் பல்லவர் காலத்தில் சிவ, வைணவ மதங்களின், குறிப்பாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலை பெறத் தொடங்கிவிட்டது. பிறகு பிற்கால சோழ, பாண்டியர், விசய நகர, மராட்டியர் என்று காலம் காலமாய் நின்று நிலவ ஆரம்பித்துவிட்டது. இன்றும் அது நீடித்து வருகிறது.

கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் கூறுவது நமது நெஞ்சை உருக்குவதாய் அமைகிறது. “தமிழகத்து மன்னர்கள் தமிழகத்து அந்தணர் களிடம் என்ன குறை கண்டனர் என்பது விளங்க வில்லை. இம்மன்னர்கள் ஆயிரக்கணக்கில் வட நாட்டு பிராம்மணர்களை இறக்குமதி செய்து கோவில்களிலும் கல்வி நிறுவனங்களிலும் மடங் களிலும் அவர்களைப் பணிக்கு அமர்த்தினர்.

பொன்னையும் பொருளையும் குடியுரிமைகளை யும் வாரி வழங்கினர். “பிராமணருக்கு” மட்டும் நிலங்களும் முழு கிராமங்களும் தானமாக வழங்கப் பட்டன. அகரம் அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் இவை விளங்கின. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல் படாது.

எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், ஆயங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது. இதைவிடத் தெளிவாக ஒரு வரலாற்று ஆசிரியர் எவ்விதம் பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றிக் கூறுவார் என்று எதிர்பார்க்க முடியும்? ஆயினும் சில திருந்தாத உள்ளங்கள் “சோழர்கள் அப்படி இல்லை! பார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தனர்” என்று வரலாற்றைப் புரட்டிப் போட்டு முதுகில் குத்தும் வேலையைச் செய்து வருகின்றனர். இதற்குச் சில தமிழ் ஆய்ந்த முனைவர்களும் முது முனைவர்களும் தாளம் போடுகின்றனர். 1000 கிராமங்களில் 230-ஐத் தான் சோழர்கள் தானமாக அளித்தனர். இது ஒரு பெரிய செய்தியா? பார்ப்பன வரலாற்று ஆய் வாளர்கள் வேண்டும் என்றே கூட்டிச் சொல்லி பார்ப்பனர்களுக்கு சோழர்கள் ஆதரவாகச் செயல் பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர்” என்பது அவர்கள் வாதமாகும். இந்த எண்ணிக்கைகளை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் மக்கள் தொகையில்

2 சதவீதம் உள்ள அயலவர் கூட்டம் 20 சதவீதம் நிலத்தைத் தானமாகப் பெறுவது குற்றமாக அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஏன்? சோழர்கள் குறிப்பாக இராசராச சோழனின் நற் பெயரை நிலைநாட்டி அவனைத் தமிழ்க் காவலனாகக் காட்டுவதற்குத்தான்! ஆனால், கல்வெட்டுகள் பொய் சொல்லுவதில்லை. கோவிலில் போடும் சோற்றில்கூட வேதம் பயின்ற சிவனடியார்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) முதல் இடம், மற்றவர்களுக்கு இரண்டாம் இடம் என்று இட ஒதுக்கீடு செய்த கொடுமையைக் கல்வெட்டுகள் சொல்லுகின்றன.

(தொடரும்)

Pin It

தோழர்களே!

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படு வதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதே யொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அநேக காரியங்கள் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ் நிலைமைக்கும் ஆளாகி வருகின் றோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைதல் என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும்.

சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி, அடிமை சாதி என்பவர்கள் இருப்பதோடு ஆண், பெண் தன்மை களில் உயர்வும் தாழ்வும் இருந்து வருகின்றது. இவை தவிர ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி தன்மைகளும் இருந்து வருகின்றன.

இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டவை யாகவும், இவ்வளவுக்குக் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்நிலையில் உள்ளவனும், கீழ் நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான். மூடநம்பிக்கைகள்தாம் வெகுகாலமாக மனித சமூகத்தில் எந்தவித மாறு தலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகின்றன. சாதி வித்தியாசங்களுக்கும் சாதிக் கொடுமைகளுக்கும் கடவுள்தான் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால்தான் பரிகாரம் செய்ய முடியும்?

எந்த மனிதனும் மற்ற சாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும், தன் சாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற் பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா சாதியாரிடமும் இருந்து வருகின்றது. சாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான்; சாதிக் கலப்பை விபச்சாரித்தனமாக எண்ணுகிறான்! இந்த மனப்பான்மை சாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.

அ°திவாரத்தில் கையை வைத்துச் சாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

திருவள்ளுவர், கபிலர், இராமானுஜர் முதலிய புராணக்காரர்களும், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்பந்தமான சில புதிய முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலகமொப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள சாதி பேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. ஆதலால், சாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பல சாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த் தாலோ, அவைகளும் தாங்கள் எப்படியாவது மேல் சாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண் டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன.

சாதியில்லாதவர்களும் கலப்பு சாதிக் காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற சாதியைச் சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களேயொழிய, தங்களைப் பொறுத்த வரை சாதியொழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்தத் தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டு மானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இட மிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும்.  மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதி யானாலும் காரியத்திற்கு உதவ மாட்டான்.

- பெரியார்
(பட்டுக்கோட்டை உரை, ‘குடிஅரசு’ 5.4.1936)

Pin It

17.08.12 வெள்ளி               மாலை 5.00         நெல்லை

(தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி)

18.08.12 சனி                       காலை 10.00       திண்டுக்கல்

(விருதுநகர்,தேனி,திண்டுக்கல்,மதுரை,    சிவகங்கை)

18.08.12 சனி                        மாலை 5.00         திருச்சி

(திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்)

22.08.12 புதன்                      மாலை 5.00         தலைமை நிலையம்

(வடசென்னை,தென்சென்னை,காஞ்சிபுரம்,    வேலூர்)

23.08.12 வியாழன்             மாலை 5.00         புதுச்சேரி

24.08.12 வெள்ளி                மாலை 5.00         விழுப்புரம்

29.08.12 புதன்                      மாலை 5.00         திருப்பூர்

30.08.12 வியாழன்             மாலை 5.00         ஈரோடு, கரூர்

04.09.12 செவ்வாய்            மாலை 5.00         கோவை

(கோவை மாநகரம், கோவை வடக்கு,    கோவை தெற்கு)

05.09.12 புதன்                      காலை 10.00       மேட்டூர் ( சேலம் மேற்கு)

05.09.12 புதன்                      மாலை 5.00         சேலம் (சேலம் கிழக்கு)

06.09.12 வியாழன்             மாலை 5.00         குமாரபாளையம் (நாமக்கல்)

08.09.12 சனி                        மாலை 5.00         காவேரிப்பட்டிணம் (கிருஷ்ணகிரி)

Pin It

பாழ்பட்டு, சீர்க்கெட்டு ஆமைகளாய் ஊமைகளாய்க் கிடந்த தமிழினத்துக்கு ‘மானமும் அறிவும்’ பெற்றுத் தர சூளுரை மேற்கொண்டு, தன்மானத்தை இனமானத்துக்காக ஈகை செய்த அறிவு ஆசான் நமது தலைவர் பெரியார் பிறந்த ஈரோட்டில், நாம் சந்திக்கிறோம்.

சுயமரியாதை இயக்க வரலாற்றில் ஈரோட்டுக்கு தனிச் சிறப்புகள் உண்டு.

•              1917 ஆம் ஆண்டில் தனது 38 ஆம் அகவையில் பெரியார் நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஈரோட்டில்தான்!

•              1921 இல் காந்தியார் கட்டளையை ஏற்று 144 தடை உத்தரவை மீறி பெரியார் கள்ளுக்கடை மறியலை தலைமையேற்று நடத்தியதும் இதே ஈரோடுதான்! பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாளும் மறியலில் கைதானார்கள். மறியல் தீவிரமாகி, 10000 பேர் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் பதறிப் போன நிர்வாகம், சென்னை மாகாண அரசுக்கு தந்தி வழியாக தகவல் தந்து, அறிவிப்பு கால வரம்புக்கு முன்கூட்டியே 144 தடை உத்தரவை நீக்கிக் கொண்டது. அறிவிக்கப் பட்ட காலம் வரை தடையை நீட்டிக்காமல் முன்கூட்டியே பெரியார் நடத்திய போராட்டத்தின் அழுத்தத்தினால் தடை திரும்பப் பெறப்பட்டது, வரலாற்றில் அதுவே முதல் முறை! இந்த அடக்கு முறைக்கு எதிரான சரித்திரம் நிகழ்ந்ததும் -  இதே ஈரோட்டில் தான்!

•              வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, அருவிகுத்தி காவல் நிலையத்தில் ஒரு மாதமும், மீண்டும் திருவாங்கூர் சிறையில் 24 மணி நேர கை-கால் விலங்குடன் நான்கு மாதமும் சிறையிலிருந்து பெரியார் விடுதலையானார். தாயாரை சந்தித்து, ஒரு வாரம் ஓய்வெடுக்கலாம் என்று வந்தபோது, அதற்கு  7 மாதத்துக்கு முன்பு கதர் பிரச்சாரம் செய்தபோது பேசிய பேச்சுக்காக அரசு வெறுப்பு குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டது - இதே ஈரோட்டில் தான்!

•              தமிழின வரலாற்றில் மகத்தான சமூகப் புரட்சிக்கு வித்திட்ட பச்சை அட்டை ‘குடிஅரசு’ வார ஏட்டை 1925 ஆம் ஆண்டு திருப்பா திருப்புலியூர் ஞானியார் அடிகளைக் கொண்டு பெரியார் தொடங்கியதும் இதே ஈரோட்டில் தான்!

•              1928 இல் ‘ரிவோல்ட்’ ஆங்கில ஏட்டை பெரியார் தொடங்கியதும் இதே ஈரோட்டில் தான்!

•              1933 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப் பிரிவை’த் தொடங்க திட்டமிட்டு, அதற்கான திட்டங்களை தனது இல்லத்தில் கலந்து ஆலோசித்து உருவாக்கி ஈரோடு சமதர்மத் திட்டத்தை பெரியார் வெளியிட்ட பெருமைக்குரிய நகரமும் ஈரோடு தான்! இதன் காரணமாக பெரியார் பொதுவுடைமை பேசுகிறார் என்று சக தோழர்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அரசும் அடக்குமுறையை ஏவியது. 1933 இல் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்று ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதியதற்காக அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

•              ‘சமதாய கொள்கையிலும் அரசியலிலும்’ பெரியாருக்கு நேர் எதிர்துருவமாக செயல்பட்டு, அதே நேரத்தில், நண்பராகவும் இருந்த இராஜகோபாலாச்சாரி பார்ப்பனர், காங்கிரசிலிருந்து விலகி, பாகி°தான் பிரிவினையை ஆதரித்துக் கொண்டு, 1942 இல் பெரியார் இல்லம் வந்து, திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததும்  இதே ஈரோட்டில் தான்!

•              17.9.1971 பெரியாரின் 93 ஆவது பிறந்த நாள் ! அந்த நாளில் பெரியார் தொண்டுக்கு நன்றி செலுத்த ஈரோடு மக்கள் திரண்டனர். ஈரோடு நகராட்சி மன்றம் பெரியாருக்கு வரவேற்பு தந்தது. அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியார் சிலையை ஈரோட்டில் திறந்தார்.

- வரலாற்ற வரைபடத்தில் ஈரோட்டைப் பதிவு செய்த தலைவர் பெரியார் பிறந்த மண்ணில் -

பெரியார் லட்சியத்தை முன்னெடுக்கத் துடிக்கும் தோழர்களாய் நாம் ஒன்று கூடுகிறோம்.  இயக்கப் பாதையை தீர்மானிப்பதில் ஒருமித்த கருத்தும், ஒருமித்த உணர்வும் கொண்ட கொள்கைத் தோழர்களாக சங்கமிக்கிறோம்.

பெரியாரியலுக்கு பல்வேறு எதிர் முகாம்கள் ‘அவதார’மெடுக் கின்றன. இந்தி எதிர்ப்பிலிருந்து சாதி ஒழிப்பு வரை பெரியாரின் வரலாற்றுப் பங்களிப்பை குறைத்து, சில நேரங்களில் சிறுமைப்படுத்தி இருட்டில் தள்ளி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

மானத்தையும் உரிமைகளையும் மீட்பதற்கு பெரியார் இயக்கம் நடத்திய மகத்தான போராட்ட வரலாறுகளை மறைத்து புதிய தலைமுறையை குழப்பத்திலாழ்த்தும் சூழ்ச்சிகள் சூழ்ந்து நிற்கின்றன.

பார்ப்பனியமும் - திராவிடர் எதிர்ப்பும் கைகோர்க்கும் மய்யத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாமும் அவதானித்தே வருகிறோம்.

சமூக ஒடுக்குமுறைக்கு நச்சு வேர்களாக நிற்கும் பார்ப்பனியமும், மதமும், கடவுளும், மூடநம்பிக்கையும் கைகோர்த்து நிற்கின்றன. இந்த சக்திகளை உரமூட்டுவதற்கு உறுதியாக்குவதற்கு இந்திய தேசியமும், அதனால் வளர்க்கப்படும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களும் அரண் அமைத்துத் தருகின்றன.

சமூக விடுதலைக்காக சுயமரியாதைக் கொள்கைகளை தாங்கி நிற்கும் நாம் - கட்சி அதிகார அமைப்பு வாதங்களுக்குள் சிக்கிக் கொண்டு கொள்கைப் பாதைகளில் முட்டுக்கட்டைகளை எதிர் கொள்வதற்கான சூழலும் காலமும் இதுவல்ல.

கொள்கைப் பயணத்துக்கு வழியமைத்துத் தரும் நெகிழ்வோடு தொடர்ந்து அணியமாவோம்,

தன் முனைப்புகளை ஒதுக்கிவிட்டு சமூகத் தன்மான மீட்புக்கு தயாராவதே உண்மை பெரியாரியல்வாதிக்கான கடமை, பொறுப்பு என்ற உணர்வோடு ஈரோட்டில் கூடுவோம்;

வாருங்கள் தோழர்களே!

கழகத் தோழர்கள் கவனத்துக்கு...

12.8.2012 அன்று ஈரோட்டில் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் சந்திப்பு நடக்கும் இடம்:

செல்லாயி அம்மாள் திருமண மண்டபம், (ஈரோடு பேருந்து நிலையம் அருகில்)

நேரம் : காலை 10 மணி

இளைஞர்களே!

வாலிபர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தற்சமயம் சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்காலிலும் சமயப்பித்து இருக்கிறது. சாதி மத வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுவது அத்தியாவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு, ஆசை எல்லோருக்கும் உண்டென்பது உண்மை. இவைகளினால் இந்தியாவிலுள்ள 33 கோடி ஜனங்களுள் 16.5 கோடி பெண்களும் அடிமையாய் இருந்து, சந்தைக்குப் போய் மாடு வாங்குவது போல் நடத்தப்படுவது ஒழிய வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை ஊன்றிப் பார்த்துப் பிறகு உலகத்தைப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வாலிபர்கள் கையிலிருக்கிறது. பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சுயமரியாதை உணர்ச்சியை உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

பெரியார், (திராவிடன் - 21.02.1929)

Pin It

தலைவர் :                                                        கொளத்தூர் தா.செ.மணி

பொதுச்செயலாளர் :                                      விடுதலை க.இராசேந்திரன்

புதுச்சேரி மாநிலத் தலைவர்:                    லோகு.அய்யப்பன்

மாநிலப் பொருளாளர் :                                ஈரோடு ப.இரத்தினசாமி

மாநில பரப்புரைச் செயலாளர்:                  தூத்துக்குடி பால்.பிரபாகரன்

மாநில அமைப்புச் செயலாளர்:                 தி.தாமரைக்கண்ணன்

தலைமை நிலையச் செயலாளர்:             தபசி குமரன்

மாநிலவெளியீட்டுச் செயலாளர் :           சூலூர் நா.தமிழ்ச்செல்வி

மாநில இணையதளச் செயலாளர்:         அன்பு.தனசேகரன்

பெரியார் தொழிலாளர் கழகம்:                 கோபி. இராம. இளங்கோவன், பெ.திருமூர்த்தி

தமிழ்நாடு மாணவர் கழகம்:      கோவை இர.சிலம்பரசன், ஜெயங்கொண்டம் சிவக்குமார், சென்னை ஜா.ஜெயந்தி

தமிழ்நாடு அறிவியல் மன்றம் :                திருப்பூர் ஆசிரியர் வீ.சிவகாமி, புதுவை பேரா.சே.இராமக்கிருட்டிணன், ஈரோடு ஆசிரியர் ப.சிவக்குமார்.

சென்னை மண்டல அமைப்புச் செயலாளர்: அன்பு.தனசேகரன் (வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம்)

சேலம் மண்டல அமைப்புச் செயலாளர்: மேட்டூர் அ.சக்திவேல் (சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்)

கோவை மண்டல அமைப்புச் செயலாளர்: பல்லடம் சி.விஜயன் (கோவை மாநகரம், கோவை வடக்கு, கோவை தெற்கு, நீலகிரி, திருப்பூர்)

ஈரோடு மண்டல அமைப்புச் செயலாளர்: கோபி. இராம. இளங்கோவன் (ஈரோடு, நாமக்கல், கரூர்)

திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர்: த.புதியவன் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை)

தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர்: நா.இளையராஜா (தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர்)

மதுரை மண்டல அமைப்புச் செயலாளர்: சி.இராவணன் (திண்டுக்கல், மதுரை, மதுரை புறநகர், தேனி, சிவகங்கை, விருதுநகர்)

நெல்லை மண்டல அமைப்புச் செயலாளர்: கோ.அ.குமார் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்.)

Pin It

உட்பிரிவுகள்