புரட்சி பெரியார் முழக்கம்

ஆண்டுக்கட்டணம் ரூ.150/-
தொடர்புக்கு:  ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர்,  திருவான்மியூர், சென்னை-41.

 

பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா, காந்தியை அவரது ஜாதிப் பெயரைக் கூறி விமர்சித்திருக்கிறார். “அவர் ஒரு சாதுர்யமான பனியா. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்தவர். அதனால் காங்கிரசை கலைக்கச் சொன்னார்” என்று பேசி இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும், மற்றொரு பேரனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருமான கோபால கிருஷ்ண காந்தியும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திரா குகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

அமீத்ஷா கூறிய ‘சாதுர்ய பனியா’ என்ற காந்தி மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து பனியா, பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிக் குழுக்கள் பற்றி ஆங்கில ஏடுகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 17, 2017) வெளியிட்ட ஒரு கட்டுரையில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் பார்ப்பனர், சத்திரியருக்குக் கீழே பனியாக்கள் வைக்கப்பட்டிருப்பதை பனியாக்கள் விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறது. குஜராத் சமூகத்தில் ஜாதியின் அடிப்படையிலேயே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்  என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

அதே நேரத்தில், தங்களை சமூகத்தில் மிக உயர்வானவர்களாக கருதிக் கொண்டிருக்கும் ‘பார்ப்பனர்களை’ இழிவாகவும் ‘கெட்ட சகுனக்காரர்கள்’ என்றும் பார்க்கும் கண்ணோட்டமும் இருப்பதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. தீபன்கர் குப்தா எழுதியுள்ள அக்கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“பஞ்சாபிலிருந்து திருவாங்கூர் வரை பல சமூகப் பிரிவினர், ‘பிராமணர்’களை அபசகுன மிக்கவர்கள்; அவர்கள் கண்பட்டாலே கெட்டதுதான் நடக்கும் என்று கருதக் கூடிய சமூகங்கள் இருக்கின்றன. உதாரணமாக மேற்கு கேரளாவில் குரிச்சான்கள் (முரசiஉஉhயளே) என்ற சமூகத்தினர், ஒரு ‘பிராமணர்’ தங்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டால், உடனே ‘கெட்ட நிகழ்வு’ என்று கருதி, அந்தத் தீங்குகளை விரட்டும் சடங்குகளை செய்வது இப்போதும் வழக்கத்தில் உள்ளது. பஞ்சாபில் ஏதாவது ஆபத்து, விபத்து நிகழ்ந்துவிட்டால், உடனே ‘பிராமணர்’ எவராவது சம்பந்தப்பட்டிருப்பாரா? கண்பட்டிருக்குமா? தலையிட்டிருப்பாரா?” என்றுதான் தங்கள் சிந்தனையை ஓட விடுவார்கள்.

ஒரு டிராக்டர் பழுதாகிவிட்டால், ‘பிராமணர்’ எவராவது வயலுக்கு வந்தாரா என்றுதான் முதலில் நினைத்துப் பார்ப்பார்கள். குஜராத்தில் ‘பிராமணர்’களைவிட தாங்களே உயர்வானவர்கள் என்பதுதான் ‘பனியாக்கள்’ மனநிலையாக இருக்கும். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களைப்போல் நடிக்கிறார்கள் என்று பனியாக்கள் கூறுவார்கள்.

ஜாதி அமைப்பு ‘தலித்’ மக்களை இழிவுபடுத்துகிறது என்பது நமக்குத் தெரியும். உண்மையில் இந்து சதுர்வர்ண வர்ணாஸ்ர அமைப்பு பல்வேறு ஜாதிகள் ஒருவரை மற்றவர் இழிவாகவும் தாழ்வாகவும் கருதும் மனநிலையிலேயே வைத்திருக்கிறது. ஒரு மனிதனின் பெருமை, பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கும் உரிமை புனித நூல்களில் இல்லை. அவன் வாழ்ந்து காட்டும் சிறப்பான திறந்த புத்தகத்தில் தான் இருக்கிறது” என்று முடிகிறது அக்கட்டுரை.

 

Pin It

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி)

தேசியம் எதிர் காலனியம் - ஏகாதிபத்தியம் என்ற முரண்நிலை சட்டகங்களுக்குள், பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி எதிர்ப்புத் தலைவர்கள் காலனியத்திற்கு ஆதரவாளர் என்றும் விமர்சனம் செய்துவருகின்றோம். இந்த முரண்நிலை சட்டகம் இன்னும் நம்மிடையே வலுவாக இருக்கின்றது. இந்த விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இந்தியாவில் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் இந்த விவாதங்களில் குறைபாடுகள், இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றுரீதியாக அதிகமாக இந்தியச் சமூகம் தேங்கி நின்றதைக் காலனியம் உடைத்து, முன்னுக்குத் தள்ளியது என்பார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் ஒன்றரை பக்கத்திற்கு முதலாளி யத்தின் புரட்சிகரமான பணிகள் என்று சில விசயங் களைக் குறிப்பிடுவார். நிலவுடைமைமுறை உறவுகளை உடைத்தெறிந்து, இதுவரை கல் போல உறைந்து கிடந்த மதிப்பீடுகள், உறவுகள் எல்லாம் காற்றாகிக் கரைந்து விடுகின்றன. அன்பு, பாசம், குடும்பம், காதல். நட்பு என்பது போன்று வைத்திருக்கின்ற விசயங்களை யெல்லாம் முதலாளித் துவம் உடைத்தெறிந்து விடுகின்றது என்பார் மார்க்ஸ்.

இந்த மதிப்பீடு தவறு என்று சொல்ல முடியாது. முதலாளித்துவத்தின் புரட்சிகரமான பணிகள் என்றொரு பகுதி மார்க்சியத்தில் உண்டு. முதலாளித்துவம் அதனுடைய பணிகளைச் செய்துமுடிக்கும், அதற்குப் பிறகு முதலாளித்துவம் உருவாக்கும் தொழிலாளி வர்க்கம் அப்பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற பார்வையை மார்க்சே உருவாக்கி யுள்ளார். 1853-க்குப் பிறகு முதலாளித்துவ அரசுகளே புரட்சித் தன்மைகளை இழந்துவிட்டன என்ற முடிவுக்கு வரும்போதுதான், மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையின் நிலைப்பாடுகளைக் கடந்து செல்வார். இதற்குப் பிறகுதான் விவசாயிகளுடன் கூட்டணி என்ற போர் தந்திரத்தை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவார்கள். இது மார்க்சியத்திற்கு உள்ளே அமைந்துள்ள சில வளர்ச்சி கட்டங்கள்.

அனுபவரீதியாக முதலாளியத்திற்கு முற்போக்கு பாத்திரம் ஏதுமில்லை, அவர்கள் நிலப்பிரபுத்துவத் துடன் கூட கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்பது தெரிந்தவுடன்தான் மார்க்சும் எங்கெல்சும் விவசாயி களுடன் கூட்டணி என்ற முடிவுக்குச் செல்கிறார்கள். இதற்கு முந்தி விவசாயி வர்க்கம் உடைமை வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம் என்பது போன்ற விமர் சனங்களெல்லாம் உண்டு. பிறகு இந்த நிலைப்பாடுகள் சற்று மாறின. பிற்காலத்தில் ரஷ்ய விவசாயி, சீன விவசாயி, இந்திய விவசாயி ஆகியோரைப் பற்றியெல் லாம் மார்க்ஸ் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுவார்.

காலனியம் (ஒரு நாட்டை தனது பிடிக்குள் வைத்திருக்கும் அன்னிய ஆட்சிதான் காலனியம்) பற்றிப் பேசும்போது இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், காலனியம் ஒரே நேரத்தில் காலனியமாகவும் முதலாளியமாகவும் இருக்கின்றது. காலனியம் என்பது மிக மோசமான முதலாளியம் என்ற கருத்தும் உண்டு. காலனியம் ஒரு வரலாற்றுக் காரணி என்ற கருத்தும் உண்டு. காலனியத்தின் பாத்திரம் என்ன என்பது மார்க்சியத்தில் சிக்கலான இடம். அந்தச் சிக்கல் மார்க்சின் எழுத்துகளில் உள்ளது. இன்னும் மார்க்சியத்தில் அந்தச் சிக்கல் நீடித்து வருகின்றது. அந்தச் சிக்கல் அம்பேத்கர் எழுத்துகளிலும் பெரியாரின் எழுத்துகளிலும்கூட இருக்கின்றது.

இந்தியாவில் மிகவும் உறைந்து போன பழமைக் கூறுகளை அடித்து நொறுக்கும் வேலையை, ஐரோப் பாவில் முதலாளித்துவம் செய்ததைப் போல, இங்குக் காலனியம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு பெரியார், அம்பேத்கர் ஆகியோரிடம் இருந்துள்ளது. இன்றும் கூட தலித், பெரியார் இயக்க அமைப்புகளில் இன்றைய இந்திய ஆட்சியில் இருப்பதைவிட, பிரிட்டிஷ் ஆட்சியில் சில அனுகூலமான நிலைமைகள் நிலவின என்ற எண்ணம் இருக்கின்றது. அதனால் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது.

காலனியம் குறித்த கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பி, காலனியத்தின் பண்புநிலைகள் குறித்து முழுக்க எதிர் நிலையான மதிப்பீடுகளை முன்வைத்து மறுதலிக்கும் பின்னைக் காலனிய விவாதங்கள் இப்போது நடந்து வருகின்றன. வங்காளத்தில் பார்த்த சடர்ஜியும் கியோனேந்திர பான்டேயும் அவரது கூட்டாளிகளும், அடித்தள மக்கள் நோக்குநிலை - சபால்டர்ன்னில் தொடங்கி, பின்னைக் காலனிய நோக்கிலான ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர். அடித்தள மக்கள் நோக்குநிலையும் பின்னைக் காலனியப் பார்வைகளும் இணையும்போது காலனிய தேசியம் பற்றிய புதிய உரையாடல்கள் முன்னுக்கு வருகின்றன. அந்த உரையாடல்களில்தான் தேசியம் எந்த அளவுக்குக் காலனிய முதலாளியத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது.  பெரியாரின் தேசியம் குறித்த நிலைப்பாடுகளுடன் அவற்றை ஒப்பிட முடியும்.

ஆகவே முதலாளியம், காலனியம், தேசியம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடுகள், அம்பேத்கர் நிலைப் பாடுகள், பெரியார் நிலைப்பாடுகள் ஆகியவற்றை உடன்வைத்து நோக்கி, ஆழமாகச் சிந்தித்து, மதிப்பிட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அம்பேத் கரும் பெரியாரும் காலனிய ஆதர வாளர்கள், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று வரையறுப்பது சரியாக இருக்காது. இந்த உரையாடலை எம்.எஸ்.எஸ்.  பாண்டியனின் Brahmin and Non-Brahmin, Nations Without Nationalism போன்ற ஒரு சில நூல்கள் முன்னெடுத் துள்ளன. இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போதுதான் தெளிவுகள் கிடைக்கும்.

காலனிய இந்தியாவில், பெரியாரின் நவீனம் எனபது ஒரு மாற்று நவீனம் என்ற நோக்கில் விவாதத் திற்கு உட்படுத்த வேண்டும். அதில் சாதி-வருண எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய இந்தியக் கூறுகளும், ஐரோப்பியக் கூறுகளும் கலந்து இருக்கலாம். பெரியாரின் நவீனத்திற்கு ஒரு விடுதலை அரசியல் உண்டு. அந்த விடுதலை அரசியல் ஒரு incomplete project, அதாவது நிறைவு பெறாத செயல்திட்டம். இந்த இடத்தில் ஹெபர்மாஸ் பயன்படுத்திய incomplete project என்ற சொல்லைப் பயன்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். அந்த விடுதலை அரசியலை முழுவதும் சாத்தியப்படுத்த வேண்டும். அதை முழுவதும் சாத்தியப்படுத்த திராவிட இயக்க தேர்தல் அரசியல் கட்சிகளால் முடியாது; அவை இடமளிக்காது. உண்மையில் அந்த அரசியல் கட்சிகளைவிட பெரியார் ரொம்ப பெரியவர், வலுவானவர்.

நவீனம் என்பதை இந்தியச் சூழல்களில் பெரியார் அமரச் செய்திருக்கின்றார்; தொழிற்படச் செய்திருக் கின்றார். ஐரோப்பிய நவீனத்தை அப்படியே மொன்னையாக இங்கே எடுத்து ஒட்டக் கூடாது. அப்படி ஒட்டுவது அல்ல பெரியாரின் நவீனம். ஐரோப்பாவில் நடந்தது போன்ற பெருந்தொழில் மயமாக்கல், தேசிய அளவிலான பெருநிறுவனங்கள் உருவாக்கல் ஆகியவை அல்ல நவீனம். சாதி-வருண எதிர்ப்பு, சனாதன இந்துத்துவ எதிர்ப்பு, நம் சுயத்தி லிருந்து நவீன வாழ்க்கைமுறை வளர்த்தல் ஆகியவை தாம் பெரியார் நவீனம். இப்போது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நவீனமாக்கல் என்பது, இந்தியாவை ஐரோப்பாவிற்குத் திறந்துவிடுவது அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.

நவீனத்தை நம் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்ய நமக்குப் பெரியார் தேவைப்படுகின்றார். பெரியாருக்கு முன்பு நவீனத்தைத் தமிழ்ப் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்யும் பணியை அயோத்திதாசர் தொடங்கி வைத்தார். நவீனத்தைப் பண்பாட்டில் வேர் கொள்ளச் செய்ய நம்முடைய ஜீவா, நாவா (நா.வானமாமலை) போன்றோரெல்லாம் உழைத்துள்ளனர். ஆனால் அதனை பெரியார் இல்லாமல் செய்ய முடியாது. பெரியார்தான் திராவிட-தமிழ் அடையாளத்தை முழுக்கவும் வலிமையாகவும் ஒரு எதிர்ப்பு அடையாளமாக உருவாக்கியுள்ளார். பெரியார் இல்லாமல் இந்த எதிர்ப்பு அடையாளத்தை வேறு எவராலும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே தான் பெரியாரே நமது நவீன அடையாளமாகிறார்.           

(நிறைவு)

Pin It

கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல்

இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார்.

“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

நாம் எந்த மொழிக்கும்  எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை எதிர்க்கும்போது அந்தத் திணிப்புக்கான வேர் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அந்த வேரை நீக்குவதற்கான போராட்டத்தை தொடங்க வேண்டும்.

இந்தி - இந்தியாவின் அலுவல் மொழி என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது அட்டவணையில் 344, 345 மற்றும் 351ஆவது பிரிவுகள் கூறுகின்றன. இந்தப் பிரிவுகள் நீடிக்கும் வரை இந்தித் திணிப்புகள் தொடரவே செய்யும். எனவே இந்தப் பிரிவுகளை சட்டப் பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அரசியல் சட்டம் இதுவரை 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. முதல் திருத்தத்திற்கு காரணமாக இருந்தவரே தந்தை பெரியார் தான். ஆகவே ஆட்சி மொழிப் பிரிவுகளை நீக்கிடும் திருத்தம் கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்சி மொழிக்கான சட்டத்தில் இடம் பெற்றுள்ள பிரிவுகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழி களுக்கான சமத்துவத்தை மறுக்கும் பிரிவுகள் ஆகும்.

ஆட்சி மொழி சட்டம் குறித்து அரசியல் நிர்ணய சபையிலேயே சூடான விவாதங்கள் நடந்துள்ளன. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், இந்திக்கு ஆதரவாகவே பேசினார்.

நமது அரசியல் நிர்ணய சபை என்பதே மக்களின் பிரதிநிதித்துவம் கொண்டது அல்ல; படித்தவர், பணக்காரர் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிக்க உரிமை இருந்த நிலையில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள். சூத்திரர், பஞ்சமர், நந்தன்கள், சம்பூகன்கள் இல்லாத அவையாகவே அது இருந்தது. அம்பேத்கர், அ ரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவர். அவரும் நந்தனின் பிரதிநிதியாக செயல்படக் கூடிய நிலையில் இல்லை. இந்தியை அலுவல் மொழியாக தொடருவதா வேண்டாமா என்ற வாதம் நடக்கவில்லை. அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் தொடரலாமா என்பதுதான் வாதத்தில் மேலோங்கி நின்றது. எண்களைக்கூட உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட எண்களுக்கு பதிலாக இந்தி எழுத்து எண்களையே பயன்படுத்த வேண்டும் என்று இந்திக்காரர்கள் வாதாடினார்கள். இந்த விவாதங்களை நாம் படிக்க வேண்டும். மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படி அரசியல் சட்டத்தில் இந்தி ஆட்சி மொழிக்கான பிரிவை நீக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் வலிமை பெரியார் இயக்கத்துக்குத் தான் இருக்கிறது என்பது என் கருத்து. (கைதட்டல்)

இப்போதும் இந்துத்துவா சக்திகளால் சீரணிக்கப்பட முடியாத ஒரே தலைவராக பெரியார் தான் இருக்கிறார். நான் ‘இந்துவாக சாக மாட்டேன்’ என்று அறிவித்த அம்பேத்கரையே ‘இந்துத்துவா’ வாதிகள் தங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1956இல் அம்பேத்கர் புத்தமார்க்கத்துக்கு மாறி விட்டார்.  அதற்குப் பிறகு அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்த வரும் இல்லை. ஆனால், இந்தியாவில் ஜாதி எந்த மதத்தையும் விட்டு வைக்கவில்லை. உலகம் முழுதும் கிறிஸ்துவ மதம் இருக்கிறது. அங்கு ஜாதி இல்லை; இங்கே கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி நுழைந்து விட்டது; புத்த மார்க்கத்திலும் நுழைந்து விட்டது.

அதேபோல் இந்தியாவின் வழிகாட்டும் கொள்கை நெறியில் பசு மாடு பற்றி பேசப்படுகிறது. விவசாயத்தை பாதுகாக்க விவசாயத்தை நவீனமாக்க மாடுகள், கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிற பிரிவுகளில் நமக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை. அதன் கடைசி பகுதி பசுவதை கூடாது என்று கூறுகிறது. இந்தப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலேயே அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதை அம்பேத்கர் ஏற்கவில்லை. வழிகாட்டும் கொள்கை நெறியில் தான் சேர்த்தார். இந்த வழிகாட்டும் கொள்கைப் பிரிவைக் காரணம் காட்டி, காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கேரளா, ஒரு சில வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, எல்லா மாநிலங்களிலும் ‘பசுவதைத் தடைச் சட்டத்தை’ கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது பசு மாட்டோடு எருமை, கன்று குட்டி, ஒட்டகத்தையும் சேர்த்து, சந்தைகளில் இறைச்சிக்காக விற்க தடை செய்துள்ளார்கள்.

இதே வழிகாட்டும் கொள்கை நெறியில் மதுவிலக்கு கொள்கையை நாடு முழுதும் அமுல்படுத்த வேண்டும் என்ற பிரிவு இடம் பெற்றிருக்கிறது. அதற்காக சட்டம் இயற்ற தயாராக இல்லை. ஆனால், ‘பசுவதை தடைச் சட்டம்’ மட்டும் வேகமாக வந்து விட்டது. மாநிலங்களின் உரிமையாக இருந்த ‘கல்வி’யை 1976ஆம் ஆண்டு பொதுப் பட்டியலுக்கு கொண்டு போய்விட்டார்கள். மத்திய அரசின் ஒப்புதலின்றி, மாநிலங்கள் கல்விக்கான சட்டங்களைப் போட முடியாது என்ற நிலை வந்து விட்டது. கல்வி பொதுப் பட்டியலுக்கு போனதால்தான் மத்திய அரசு ‘நீட்’ நுழைவுத் தேர்வை - நமது மாநிலத்தில் திணிக்கிறது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று நாம் சட்டம் போட்டு விட்டோம். அதையும் மீறித்தான் நுழைவுத் தேர்வு இப்போது திணிக்கப்படுகிறது. 7 கோடி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை மிக்க தமிழக சட்டசபையின் தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் போய்விட்டது. பிறகு ஏன் சட்டமன்றம்? ஆளுநரிடமே அதிகாரத்தைக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள நளினியின் வரலாறு நூலாக வெளி வந்தது. அந்த நூலுக்கு நான் அணிந்துரை எழுதினேன்.  அதில் நான் எழுப்பிய கேள்வி இதுதான். தேசத் தந்தை காந்தி கொலை வழக்கில் கோட்சே, ஆப்தே இருவருக்கும் தூக்குத்  தண்டனை விதிக்கப்பட்டது. கோபால் கோட்சே உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை; அவர்கள் 18 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு 1966இல் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்தது காங்கிரஸ் அரசுதான். காந்தி கொலை வழக்கிலேயே ஆயுள் தண்டனை பெற்றவர்களை 18 ஆண்டுகளில் விடுதலை செய்யும்போது இராஜீவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை 26 ஆண்டுகளுக்குப் பிறகும் விடுதலை செய்ய மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத்தான் கேட்டேன்.

தமிழ்நாடு - இப்படி அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிற  மாநிலமாகவே இருக்கிறது. மாடுகள் விற்பனை குறித்து சட்டம் போடும் அதிகாரம் மாநிலத்துக்குத்தான். ஆனால் மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு உத்தரவு  போடுகிறது. ஏகலைவனின் கட்டை விரலை ‘தானமாகக்’ கேட்ட துரோணாச்சாரிகளின் பெயரால்தான் விளையாட்டுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

நமது பண்பாடு - மொழி - கல்வி உரிமைகளை இழந்து வரும் நிலையில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் வாயிலாக நான் உங்கள் முன் வைக்கும் கோரிக்கை இது தான்:

இந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் சட்டப் பிரிவுகளையும், பசுவை வெட்டக் கூடாது என்று கூறும் வழிகாட்டும் கொள்கை நெறியில் உள்ள பிரிவையும் நீக்கக் கோரி, நீங்கள் போராட வேண்டும்.

பெரியார் இயக்கம் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” - என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய ஜாதி - இந்துத்துவ எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளை நீதிபதி அரி பரந்தாமன் மிகவும் விரும்பிக் கேட்டு மேடையிலும் தனது உரையைத் தொடங்கும் முன் கலைக் குழுவினரை மிகவும் பாராட்டினார்.

தனது உரையை முடித்து, மக்கள் மன்றத்தினரின் கலை நிகழ்வுகளை சிறிது நேரம் அமர்ந்து கேட்ட பிறகு, விடைபெற்றுச் சென்றார்.

Pin It

‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வார ஏடு தொடர்ந்து கடவுள் - மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த வாரம் (ஜூன் 16-22) வெளி வந்துள்ள ஒரு கட்டுரை இப்படி கூறுகிறது:

“வரலாறு தோன்றிய காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் இன்னல்களைப் போக்குவதற்கும் அற்புதமான கண்டு பிடிப்புக்களை வழங்கிய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சான்றாக எழுத்துக் கலைக்குக் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த ‘சாயிலூன்’, அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘குட்டன்பர்க்’, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘சிங்கர்’, எந்திரங்கள் பலவற்றிற்கும் அடிப்படை விதியாக இருக்கும் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ‘ஆர்க்கிமெடிஸ்’, டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ‘டீசல்’, ரேடியோவைக் கண்டுபிடித்த ‘மார்க்கோனி’, தொலைபேசியைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் கிரகாம்பெல்’, இரத்தச் சுழற்சியை கண்டுபிடித்த ‘வில்லியம் ஹார்வி’, பென்சிலினைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் பிளமிங்’, இளம்பிள்ளைவாதம் அம்மை நோய்களுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த ‘ஆல்பிரட் சாபின்’ மற்றும் ‘எட்வார்டு ஜென்னர்’, காலரா மற்றும் மலேரியா நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடித்த ‘ராபர்ட் கோச்’ மற்றும் ‘ரொனால்ட் ரோஸ்’ எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயனளிக்கும் மேற்கண்டவைகளைப் போன்ற அற்புதமான அன்பளிப்புக்களை வழங்கியவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ளவர்களே” - என்று எழுதுகிறது ‘உணர்வு’ ஏடு.

அறிவியலை கண்டுபிடித்தவர்கள், கடவுள், மத நம்பிக்கையாளர்கள் என்றே வாதத்துக்கு ஏற்றுக் கொள்கிறோம்.

இவர்கள் கண்டுபிடிப்புக்கு கச்சாப் பொருளாக இருந்தது - கடவுளும், மதமும் தானா? அல்லது அறிவியலா?

அனைத்து வல்லமையும் கொண்ட கடவுளும், கடவுள் உருவாக்கிய மதமும் தான் அம்மை நோயையும், பிளேக் நோயையும் மனித குலத்துக்கு தந்தது என்பதை உண்மையான கடவுள் மத பக்தர்களாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

அப்படி கடவுளால் தரப்பட்ட நோயை எதிர்த்துத் தானே மருந்தை கண்டுபிடித்தார்கள்.

அப்படியானால் இவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆத்திகமா? நாத்திகமா?

 

Pin It

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்:

1) 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு இடமே இல்லாத நிலையில் நடுவண் பா.ஜ.க. ஆட்சி இப்போது இந்தித் திணிப்பு வழியாக சமஸ்கிருத பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்க முயல்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்தி பேசும் மாநில அமைச்சர்கள் இந்தியிலேயே பேசுவார்கள் என்றும், தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் - விமான நிலைய அறிவிப்புகளில் -மைல் கற்களில் இந்தித் திணிக்கப்படுவதோடு, ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. பலமொழி, இன, பண்பாடுகளைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை, இந்தி - சமஸ்கிருத - இந்து - இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்க முயல்கிறது. இந்த ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று நடுவண் அரசிற்கு இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

தமிழர்களின் தனித்துவமான சுயமரியாதை - சமூக நீதிப் பண்பாட்டை சீர்குலைக்கும் இந்தப் பார்ப்பனியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் கட்சி, இயக்க வேறுபாடுகளைக் கடந்து அணி திரளவேண்டும் என்று இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

தடுப்புக் காவல் சட்டங்கள்

2) குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டம் இருக்கும்போது கூடுதலாக, அரசுகள் தடுப்புக் காவல் சட்டங்களை இயற்றிக் கொள்கின்றன. பிணையில் வெளியே வருவதைத் தடுப்பதும், குறைந்தது ஓராண்டுகாலமாவது சிறையில் முடக்கி வைப்பதுமே இதன் நோக்கம். இந்த சட்டங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கு வதற்கும், சமூக, அரசியல் செயற்பாட் டாளர்களை ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப் படுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் ரவுலட் சட்டத்தை எதிர்த்தவர்கள் “சுதந்திர” இந்தியாவில் அதைவிடக் கொடூரமான ஒடுக்குமுறை சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கே தலைகுனிவாகும்.

காஷ்மீரிலும், பல வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவச் சட்டங்களே கோலோச்சி வருகின்றன. இத்தகைய தடுப்பு காவல் சட்டங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மரண தண்டனை வழங்குவதற்கும், பிணையில் வெளிவராமல் சிறைக் காவலில் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்துவது சட்ட விரோத மானது என்பதுடன் தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதாகும் என்று அண்மையில் கூட உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் குண்டர் சட்டம் கண்மூடித்தனமாக சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் ஏவி விடப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர் களுக்காக அஞ்சலி தெரிவிக்க சென்னை மெரீனா கடற்கரையில் கூட முயன்ற திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசு ஏவி விட்டிருப்பது சட்டம் மிக மோசமாக முறையற்றுப் பயன்படுத்தப்படு கிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதா ஈழத்தில் இறுதிப் போரில் நடந்தது இனப்படுகொலையே என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த அதே குரலை - அதே உணர்வை வெளிப்படுத்த முயன்றவர்கள் மீது “அம்மாவின்” ஆட்சி என்று கூறிக்கொள்கின்றவர்கள் குண்டர் சட்டத்தை ஏவி விட்டிருப்பது- அவர்களின் தலைவர் அறிவித்த கொள்கைகளுக்கு இழைக்கும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுவ தோடு, கைது செய்யப்பட்டவர்கள் மீது பிறப்பிக் கப்பட்ட குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பா.ஜ.க. கொல்லைப்புற முயற்சி

3) தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் வலிமையற்ற தலைமையையும், ஆளும் கட்சியில் உருவாகியுள்ள பிளவையும் பயன்படுத்தி- கொல்லைப்புற வழியாக தமிழகத்தில் காலூன்ற - பா.ஜ.க துடிக்கிறது. நடுவண் ஆட்சியின் அதிகாரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் ஆட்சி யாளர்கள் பா.ஜ.க வின் அதிகார மிரட்டல் களுக்கு பணிந்து பச்சைக்கொடி காட்டுவதாகவே தெரிகிறது. அதன்காரணமாகத்தான்  பா.ஜ.க வின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் போராளிகளை மோசமாக ஒடுக்குகிறார்கள்.

அண்மையில் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் பேராசிரியர் ஜெய ராமன் உள்ளிட்ட 11 தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புகளுக்குத் தடையின்றி அனுமதி வழங்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்தப் போக்கை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

‘திராவிட நாடு’ எழுச்சி

4) பசு, எருது, எருமை, கன்றுக்குட்டி , ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கக்கூடாது என்று பா.ஜ.க பிறப்பித்துள்ள உத்தரவு மக்களின் உணவுக் கலாச்சார உரிமை களையும், மாநில உரிமைகளையும் பறிப்பதாகும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தையும், விவசாயிகளின் வாழ்வுரிமையையும் கடுமையாக பாதிக்கும் இந்த ஆணையை நடுவண் அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். உழைக்கும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியை மதத்தைக் காட்டி தடுக்கவும், அதன் விற்பனைகளுக்கு நெருக்கடிகளை கொண்டு வரவும் முயற்சிப்பது இந்தியாவைப் பார்ப்பன தேசமாக்கும் சூழ்ச்சியே ஆகும்.

அரசின் இந்த கலாச்சார உரிமைப் பறிப்பு களுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்கள் வீறு கொண்டு எழுந்து நிற்கின்றன. இந்த நிலை தொடருமானால் வட நாட்டிலிருந்து தென்னாட்டை பிரித்து விடுங்கள் என்ற போராட்ட முழக்கங்கள் ஒலிக்க தொடங்கியிருப்பது, தென்னகத்தின் கொதி நிலையை உணர்த்துகின்றன என்பதோடு வட நாட்டுப் பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக உருவாகி வரும் இந்த எழுச்சியை வளர்த்தெடுப் போம் என்று இந்த மாநாடு உறுதியேற்கிறது.       

Pin It

உட்பிரிவுகள்