புரட்சி பெரியார் முழக்கம்

ஆண்டுக்கட்டணம் ரூ.150/-
தொடர்புக்கு:  ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர்,  திருவான்மியூர், சென்னை-41.

 

2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.

•              ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.

•              கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டால் அதனடிப் படையிலேயே தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்ற கருத்தை நான் ஏற்கிறேன். உச்சநீதிமன்றமே, இந்த அடிப்படையில் தண்டனையை ரத்து செய்துள்ளது.

•              (பம்பாய் குண்டு வெடிப்பில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள) அஜ்மல் கசாப்பின் இளம் வயது அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக இழைத்த குற்றம் என்ற இரண்டு அடிப்படையில் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கலாம். ஆனாலும், நீதிபதியின் மனசாட்சிதான் இதில் தீர்ப்பாக இருக்க முடியும். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் இதில் உறுதியாக கருத்து கூறுவது நீதிமன்றத் தலையீடாகிவிடும்.

•              ‘தீவிரவாத இயக்கத்தோடு’ தொடர்புடையவர்கள் என்றும், அந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்கள் என்றும் அதன் காரணமாகவே ஏனையோருக்கு வழங்கப்படும் ‘தண்டனைக் குறைப்பை’ அனுமதிக்க முடியாது என்றும் கூறுவது சரியான கருத்து அல்ல. தண்டனைக் குறைப்புக்கு சட்டபூர்வமான விதிகள் ஏதும் கிடையாது. தண்டனைக் குறைப்பு கோருவோரின் நடத்தை, குற்றமிழைத்ததற்கான சூழ்நிலை, கடந்தகால குற்றச் செயல்கள், சமூக மற்றும் குடும்பப் பின்னணி போன்றவை கவனத்தில் எடுத்துத்தான் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது.

•              1967 ஆம் ஆண்டு 35வது சட்ட ஆணையத்தின் அறிக்கையில் இந்தியா போன்ற பெரிய பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் மரண தண்டனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஜெகமோகன் வழக்கில் மரணதண்டனை சட்டபூர்வமாக நிலைநிறுத்தப்பட்டது. 1980 இல் பச்சன்சிங் வழக்கில் அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே மரணதண்டனை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் அதே சட்ட ஆணையத்தின் பரிந்துரை தான் சுட்டிக்காட்டப்பட்டது. 1967க்குப் பிறகு உலகில் பல நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. மாறி வரும் சர்தேச சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய சட்ட ஆணையம் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

•              ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் இறுதி வரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தண்டனைக்கான நடைமுறைகளை நீதிமன்றமே வகுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கெல்லாம் சட்டங்கள் கிடையாது. வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது, ஒரு கைதியின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரிடமோ, 161வது பிரிவின் கீழ் மாநில ஆளுநரிடமோ தண்டனைக் குறைப்போ அல்லது பொது மன்னிப்பையோ கோரும் உரிமையை இதனால் ஒரு கைதி இழந்து விடுகிறார். இது 21வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.

•   தூக்குத் தண்டனை வழங்கும் வழக்குகளை குறைந்தது மூன்று நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அனைவரும் ஒருமித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்; தீர்ப்புகள் மாறுபட்டிருந்தால் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது என்பதே என் கருத்து.

•  காந்தி, தாகூர், அம்பேத்கர், நேரு போன்ற மகத்தான தலைவர்களின் கொள்கைகளை உண்மையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழுமையடையும். அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிப்பதால் மட்டும பயனில்லை. காந்தியை தேசத் தந்தையாக நாம் ஏற்கிறோம். ஆனால், தூக்குத் தண்டனை தேசத் தந்தை கொள்கைக்கு எதிரானது அல்லவா?

Pin It

நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது.

நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன்.

ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என் பேரில் விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.

ஏனெனில், வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட இழிகுல மக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப்பட்டும் நாட்டுக்கோ அச்சமூகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன். அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லி சிலர் வயிறு வளர்க்கின்றார்கள். சிலர் சோம்பேறிகளாய் வாழ்கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதுபோலவே இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த சுவாமிகள்; இராமலிங்க வள்ளலார் என்கிற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்குத் தெரியும். 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100க்கு ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அதுபோலவே இன்று பிரத்தியட்சத்தில்  இருக்கும் காந்தி மகாத்மாவும், திருப்பாலக்குடி மஸ்தான் வணங்கப்படுவதும், அவதாரமாகவும் நபியாகவும் கருதப்படுவதும், அதோடு மாத்திரமல்லாமல் அவர்களது மலம் முதல் சுவாசக்காற்று வரை மதிக்கப்படுவதும் எனக்குத் தெரியும்.

திரு.காந்தியைவிட மஸ்தான் சாயுபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு.காந்தியை மனிதராகக் கருத வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்திற்கும், வயிற்று வளர்ப்புக்கும் திரு.காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று சொல்லுகிறவர்கள், திருப்பாலக்குடி சாயபுவை உண்மையிலேயே தெய்வத் தன்மை பொருந்தியவராக மதித்துப் பூஜித்து வருகிறார்கள். எங்கள் ஊரிலிருந்து அநேக பி.ஏ., பி.எல்., எம்.ஏ., முதலியவர்களும், உயர்ந்த சாதியார் பிராமணர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுமே போய் அவரது எச்சிலை சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரே பழனி பஞ்சாமிர்தம் போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால், இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன்.

திருப்பாலக்குடி சாயுபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால் அவரது எச்சில் கலந்த தண்ணீரைக் குடித்து லாபம் பெறலாம் என்று கருதி மக்கள் மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே திரு.காந்தியை மகாத்மா என்று கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும், இழிவுகளும் எல்லாம் அதற்கு மாறாகக் கருப்பட வேண்டியதாயிற்று. ஆனால், என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடைய வேண்டாம். எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகுஜாக்கிரதையாய் அலசிப் பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால் நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். உதாரணமாக இன்றைய கீதை என்பதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண், மக்களை மக்கள் இழிவுபடுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்குகின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றோ எதற்காகச் சொன்னான் என்றோ உணர முடியாமல், பகவான் சொன்னார் என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லோருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புகழப்படுகின்றது. அதுபோலவேதான் புராணங்கள், சாத்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.

ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் அயோக்கி யனாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும் கருதும்படியாகப் பிரச்சாரம் செய்பவர்கள். உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் ‘இராமசாமிக் கழுதைக்கு செருப்படி’ என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் ‘இராமசாமி கழுதை செத்துப் போய்விட்டது’ என்றும், ‘இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி’ என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன்பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளிலிருந்து ஒரு அளவுக்கு நான் வெற்றிப் பெற்றுவிட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டுமென்று கருதி இருந்தாலும் நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனேயாவேன்.

- பெரியார், ‘குடிஅரசு’ 11.10.931

Pin It

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை.இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங்களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து... ஆகஸ்டு 9 இதழ் தொடர்ச்சி...

கல்வியிலும் வடமொழிக்கே முழு உரிமை, தமிழுக்கு என்று ஒரு கல்விச் சாலை அமைத்ததாகக் கல்வெட்டுச் சான்று கிடையாது. ஆனால் முழுவதும் வடமொழி இலக்கணம், புராணங்கள், சிவ தருமம், சோம சித்தாந்தம், ராமானுச பாடியம், பிரபாகரின் மீமாம்சம், வியாகரணம் ஆகியவற்றை மட்டும் கற்பிக்க வடஆற்காடு கப்பலூர், செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆணியூர் (ஆனூர்) தென்னாற் காட்டில் இராசஇராச சதுர்வேதி மங்கலம் என்னும் எண்ணாயிரம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எழுதும் கை நோகும், நினைக்க மனம் நோகும். இந்தச் சோழர்கள் பார்ப்பனரை அடக்கி வைத்தவர்கள் என்று முனைவர்கள் சொல்லு கிறார்கள். என்ன கொடுமை இது! படித்தவன் சூது வாது செய்யக் கூடாது என்ற பாரதியின் வாக்கை அவர்கள் மறந்து விட்டனர் போலும்.

கோவில் பணிகளில் குறிப்பாகக் கருவறைப் பணிகளில் பார்ப்பனர்களே அமர்த்தப்பட்டனர். இதை இராச இராச சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றின் மூலம் நாம் எளிதாக அறியலாம்.

இக்கல்வெட்டு தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானத்தின் தெற்குப் பக்கச் சுவரில் காணப்படு கிறது. தமிழ் எழுத்தில் உள்ளது. காலம் 1014 ஸ்ரீராஜராஜன் தஞ்சைப் பெரு உடையார் கோவிலுக்குச் சோழ மண்டலத்திலும் பாண்டிய மண்டலத்திலும் தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழமண்டலத் திலுள்ள பிரம்மதேயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களில் நிலம், உறவினர், பொருள் உடையராய்ப் பார்த்து ஸ்ரீபண்டாரம் செய்வதற்கு பிராமணர்களையும் திருபரிசாரகம் (சமையல்) செய்வதற்கு மாணிகளை யும் (திருமணம் ஆகாதவர்கள்) கணக்கு எழுதுவதற்குக் கரணர் களையும் சந்திர சூரியர்கள் உள்ளவரை நியமிக்க அனுப்ப வேண்டும் என்று ஆணைபிறப்பித்ததைச் சுட்டுகிறது. இது குறித்து ஆசிரியர் எழுதுவது இதை இன்னும் தெளிவாக விளக்கும். கருவறை சம்பந்தமான ஊழியஞ் செய்பவர்கள் என்பதால் இதில் குறிப் பிடப் பட்டுள்ள திருப்பரிசாரகர்கள், மாணிகள், பண்டாரிகள் ஆகியோர் “பார்ப்பனர்”களாக நியமிக்கப்பட் டனர். தஞ்சைப் பெருவுடையார் கோவில் உள்பட எல்லாக் கோவில்களும் பார்ப்பனர்களின் கூடாரமே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த ஒரு சான்று போதாதா?

இதை மற்றும் ஒரு கல்வெட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். கோவிலுக்குப் பணியாளர்களும் தேவை அல்லவா? கருவறைக்குள் நுழையும் அனுமதி இல்லாத வேலைகளான மெய்க்காவல், ஆடற் பெண்டிர் ஆகி யோருக்கு வேலைக்கு ஆள் எப்படி எடுத்தான்? ஊர் சபையினருக்கும் அதாவது பிரம்மதேயம் அல்லாத மற்ற ஊர்களுக்கும் ஆணை பிறப்பித்துள் ளான். ராஜராஜேச்சுவரம் உடை யார்க்கு சோழ மண்டலத்திலுள்ள பிரம்மதேயங்களிலிருந்தும், ஊர்களி லிருந்தும் மெய்க்காவலர்களை அனுப்ப வேண்டும்.

அதாவது கருவறை தொடர்பான வேலைகளுக்கு பிரம்மதேயத்தில் உள்ள பார்ப்பனர்கள் மட்டும்! மற்ற வேலைகளுக்கு ஊர் சபையினர்! இதுதான் இராசராச சோழனின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை! இதுதான் பார்ப்பனர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது? நல்ல வேடிக்கை.

வெளியீடு: நுண்மை பதிப்பகம்,  48ஏ வடக்கு ஆண்டார் தெரு, திருச்சிராப்பள்ளி-2,

Pin It

கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கப் பொதுக் கூட்டம் 25.3.2012 மாலை 6.45 மணிக்குப் புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலையருகில்) நடைபெற்றது. பெருந்திரளாகப் பொது மக்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்திற்கு புதுச்சேரி கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சமர்பா குமரனின் இன எழுச்சிப் பாடல்களுடன் கூட்டம் துவங்கியது. துணைத் தலைவர் வீராசாமி நன்றியுரை வழங்கினார். கூட்டம் இரவு பதினொரு மணி வரை நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில் - “உலக நாடுகளெல்லாம் இந்தியாவை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் நடத்தி வந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது வெடி பொருளாகப் பயன்படுத்தி மிஞ்சிப் போன, மண்ணைக் கெடுக்கின்ற வேதிப் பொருள்களையெல்லாம் உரமாக மாற்றி எம்.எஸ்.சாமிநாதன் என்கின்ற பார்ப்பனனை வைத்து இந்தியாவில் பிரபலப்படுத்தினர். ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாகக் கொண்ட கப்பலைப் பிரான்சு நாட்டில் உடைத்தால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று நம் நாட்டில் வந்து உடைத்தனர். உலகத்தில் கைவிடப்படுகின்ற, அங்கு காலாவதி ஆகின்ற தொழில் நுட்பமெல்லாம் நம் தலையில் கட்டப்படுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதால், அவற்றின் கழிவுகளால் அதிகம் புற்று நோய் வரும் இடங்களாக வாணியம்பாடி, கல்பாக்கம், ஆம்பூர், திருப்பூரும் இருக்கின்றன. இரண்டாயிரம் பேர் வேலை செய்த ஸ்டாண்டர்டு கம்பெனியை மூடிவிட்டு 400 பேர் வேலை செய்கின்ற போர்ட் கம்பெனியைத் திறக்கிறார்கள். நம் நிலமும் வேலை வாய்ப்பும் இவர்களால் பறி போகிறது.

2010-2011 ஆம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்ட ‘ஆட்டோ மொபைல்ஸ்’ 2,34,00,000 ஆகும். அதற்கே புதிய மின் உற்பத்தி நிலையங்களை அவர்கள் அமைக்கவில்லை.

1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் 81,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அன்று 52 சதவீதம் கிராமங்களுக்கு மின் வசதி இல்லை. 2011 ஆம் ஆண்டில் 1,82,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இன்னும் மின்சார வசதி பெறாத கிராமங்கள் 43 சதவீதம் உள்ளன. உற்பத்தியாகும் மின்சாரம் பன் னாட்டு நிறுவனங்களுக்குத் தான் பயன்படுகிறது. தன்னை (சிறுதொழில் செய் வோர்) அழிக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாத வர்கள், கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாகப் போராட முன் வருகிறார்கள்.

அணுஉலை வெடித்தால் 2 மணி நேரத்தில் அனைவரும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உடனே சென்றுவிட வேண்டும். அணுஉலையிலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் ஒரு லட்சத்திற்கும் மேலாக மக்களோ, சுற்றுலாத் தளமோ இருக்கக் கூடாதென்று இந்திய அணு சக்தி ஆணையம் வரையறுத்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் கொடுத்த அறிக்கையில் நாகர்கோவிலில் மொத்தம் 2980 பேர் மட்டுமே வாழ்வ தாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாகர்கோவில் 2 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.

அணுஉலைக்கடியில் பூமியிலுள்ள நெருப்புப் பிழம்பை மூடிய படிமங்கள் வெறும் 110 மீட்டர்தான் இருக்கிறது. ஆனால், இறுகிய பாறை 140 கி.மீ. ஆழம் வரை இருக்கவேண்டும் என்பது அணுசக்தி ஆணையத்தின் வரையறை.. மக்கள் சேர்ந்து போராட்டம் தொடங்கி, அதற்குப் பின்னால் அரசியல் கட்சிகள் ஓடிய போராட்டம் இது ஒன்றுதான்.

அணுஉலை கூடங்குளத்தில் வேண்டுமென்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் கேரளா மற்றும் மராத்திய மாநிலம் ஜெய்தாபூரில் அணுஉலையை எதிர்க்கிறார்கள். இராசபக்சே தமிழர்களுக்குத் தனிநாடு கொடுத்தால்கூட இவர்கள் (மார்க்சிஸ்ட்கள்) ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வு என்பார்கள். அணுஉலை அமைக்க 13000 கோடி ரூபாய் செலவு செய்தது வீணாகிவிடும் என்கிறார்கள்.

2005-2006 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கு 3,74,937 கோடி ரூபாயை வரித் தள்ளுபடி செய்துள்ளது. இது வீண் விரயம் இல்லையா? அணுஉலைக்குப் பதிலாக அதே கட்டிடத்தில் எரி பொருளாக இயற்கை வாயுவைப் பயன்படுத்து என்கிறார்கள் அணுஉலை எதிர்ப்பாளர்கள்.

மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1994 ஆம் ஆண்டில் இனிமேல் மின் நிலையங்களைக் கட்டுவதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதியில்லை என்றார். தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 4 தனியார் அனல் மின் நிலையங்கள் தங்களுக்கு நிலுவைத் தொகையை அரசாங்கம் தரவில்லை என்று கூறிக் கடந்த பிப்ரவரி முதல் தேதி முதல் மின் உற்பத்தியை நிறுத்தினாலும், அவர்களுக்கு தமிழக அரசு தினமும் 2 கோடி ரூபாயை இழப்பீடாகத் தருகின்றது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 3,200 மெகாவாட் மின்சாரத்தில் 1100 மெகாவாட் குறைவாகத் தருகின்றது. அதை முழுமையாகக் கொடுத்தாலே தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை போய்விடும்.

மாற்று மின் திட்டங்களைக் கைக்கொள்ளுங்கள்! ஆபத்தான அணுமின் நிலையங்களைக் கைவிடுங்கள்! போராடுகின்ற மக்கள் போராட்டத்திற்குத் துணை நில்லுங்கள்! என்றார் கொளத்தூர் மணி.

புதுவை தலைவர் லோகு.அய்யப்பன் உரையாற்றுகையில் - கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாது என்று போராடும் போராட்டக் குழு மற்றும் அதற்குத் தலைமையேற்றிருக்கின்ற உதயகுமார், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெற்றார். மூன்று தொண்டு நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெர்மானியர் கண்டுபிடிக்கப்பட்டார் என்ற செய்தியெல்லாம் ‘தினமலர்’ போன்ற பத்திரிகையிலெல்லாம் போட்டு மக்களை நம்ப வைத்தீர்கள். அவரை ஜெர்மனிக்கே நாடு கடத்திவிட்டோம் என்கிறீர்களே, அவர் இங்கிருந்தால் போராட்டக் குழுவிற்கு தான் பணம் கொடுக்கவில்லை யென்ற உண்மையைச் சொல்லிவிடுவார் என்ற பயத்தினாலா? ஆனால், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தபோது அப்படிப்பட்ட எந்தச் செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இதே நாராயணசாமி நாடாளு மன்றத்தில் கூறியிருக்கின்றார். அப்போ, அது வேற வாய், இது வேற வாயா? போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்றார்.

Pin It

தோழர் அருணன் எழுதிய ‘தமிழகத்தில் - சமூக சீர்திருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு’ நூலிலிருந்து:

வைசியர்கள் சூத்திரர்கள் சண்டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை  என  இரு பெரும் பிரிவுகளாகப் மோதினர்

புராதன பொதுவுடமைச் சமுதாயமானது தனது உள் பலவீனத்தால் சிதைந்தபோது உலகில் அடிமைச் சமுதாய அமைப்பு எழுந்தது. இந்தியாவிலும் எழுந்தது. இங்கே வர்ணாஸ்ரமம் என்கிற வடிவத்தில் அது எழுந்தது. மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிறப்பின் அடிப்படையில் நால் வருணங்களாகப் பிரிக்கிற அந்த அமைப்பில் சூத்திரர்களின் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலை யாகவே இருந்தது என்றால், இந்த நால் வருணத்திற்கு அப்பாற்பட்ட சண்டாளர்கள் என்பவர்களின் நிலையோ அடிமை நிலையேதான்.

கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி இப்படிக் கூறுகிறது -

1. “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் பணிவோடு ஊழியம் செய்வதே.” ( I 91)

2. “ஒரு சண்டாளனை, வீட்டு விலக்காகியுள்ள ஒரு பெண்ணை, சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்ட ஒருவனை, (சமீபத்தில்) பிரசவமாகியுள்ள ஒரு பெண்ணை, ஒரு பிரேதத்தை, பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சையாகத் தொட நேர்ந்துவிட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனது பரிசுத்தத்தைப் பெறுவான்.” (V 85)

சூத்திரர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் என்றால் சண்டாளர்கள் பிரேதத்துடன் இணையாக வைக்கப்பட்டிருந்ததைக் காணலாம். உண்மையில் தமிழகத்தில் அடிமை முறை என்பது 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. “19 ஆம் நூற்றாண் டின் ஆரம்ப ஆண்டுகள் வரை விவசாய அடிமை முறையை ஆதரிப்பதாகவே பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறை இருந்தது. உதாரணமாக, வருவாய் வாரியத்திற்கு தஞ்சாவூர் கலெக்டர்எழுதிய ஒரு கடிதத்தில் ஓடிப் போன அடிமைகள் மீண்டும் அவர்களது எஜமானர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும், மற்றொரு எஜமானரால் சட்ட பூர்வமற்ற முறையில் வைத்துக் கொள்ளப்பட்ட ஓர் அடிமையை அவரின் ஒரிஜனல் எஜமானர் மீட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் குறிப்பிட் டிருந்தார். தங்களின் எஜமானர்களுக்காக அடிமைகள் அவசியம் வேலை பார்த்தேயாக வேண்டுமென கட்டாயப்படுத்தும் அதிகாரம் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டு மென்றுகூட அவர் பரிந்துரை செய்தார். ஓடிப்போன அடிமைகளைப் பிடித்துக் கொடுப்பதில் இந்தக் காலத்தில் கலெக்டர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொண்டனர். உதாரணமாக, திருச்சி கலெக்டர் தனது மாவட்டத்திலிருந்து ஓடிப்போன 15 பள்ளர்களை திருப்பி அனுப்புமாறு சேலம் கலெக்டரைக் கேட்டுக் கொண்டு கடிதம் எழுதினார். தஞ்சாவூரிலிருந்த பிரிட்டிஷ் பிரதிநிதிக்கும் இது போன்ற கடிதம் எழுதினார். 1830 இல் திருச்சி கலெக்டர் என்.எஸ்.கேமரோன் தனது மாவட் டத்தைச் சார்ந்த ஒரு “பிராமண” நிலப்பிரபுவிடமிருந்து ஓடிப்போன 10 பள்ளர்களைத் திருப்பி அனுப்புமாறு சேலம் கலெக்டருக்கு கடிதம் எழுதினார்” என்று கூறுகிறார் வரலாற்றுப் பேராசிரியர் சி.பரமார்த்தலிங்கம்.

அடிமை நிலையில் இருத்தப்பட்டிருந்த சண்டாளர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 1843 ஆம் ஆண்டின் அடிமை ஒழிப்புச் சட்டம் V மற்றும் 1861 ஆம் ஆண்டின் இண்டியன் பீனல்கோடு சட்டம் XL V ஆகியவற்றின் மூலம் சட்டப்பூர்வ விடுதலை கிடைத்தது என்றாலும், நடைமுறையில் அவர்களுக்கு விடுதலை கிட்ட வில்லை. சமூக ரீதியில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 1871 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை இவ்வாறு கூறியது - “பரம்பரை அடிமை முறை எனும் நுகத்தடியிலிருந்து அதனால் எழுந்த சட்டபூர்வ தொல்லைகளிலிருந்து ஒரு சமூகம் என்ற முறையில் அவர்களை (அடிமைகளை) பிரிட்டிஷ் நிர்வாகம் விடுதலை செய்திருந்தாலும் சமூக அடுக்கில் அவர்கள் இன்னும் படுபாதாளத்திலேயே இருந்தனர். பொது பிரயாணிகள் படகுகளில் ஒரு பறையர் தனது முகத்தை காண்பித்துவிட முடியாது. அரசுப் பள்ளிகள் மற்றும் பொது மக்கள் நிதி உதவியோடு நடக்கிற பள்ளிகளிலும் இதே நிலைதான்.”

மனுதர்மமானது செல்லரித்த ஏடுகளிலே இருந்த மந்திரமல்ல; இந்த நாட்டில் நடைமுறையிலே இருந்த சட்ட, விதி. இதனை இந்த அறிக்கை தெளிவாக நிரூபிக்கிறது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் அபேதுபே (abbe Dubois)  என்கிற பிரெஞ்சுக்காரர் இந்தியாவிற்கு வந்தார். இங்கே - குறிப்பாக தென்னிந்தியாவில் - சுமார் 30 ஆண்டுகள் தங்கியிருந்து இந்த மக்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்தார். இதன் விளைவாக “இந்திய மக்கள்” என்கிற நூலினை பிரெஞ்சு மொழி யில் 1806 இல் எழுதி முடித்தார். இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1820 இல் வெளி வந்தது. அன்றைய “தமிழ் கூறும் நல்லுலகம்” எப்படி இருந்தது என்பதை மேலும் நன்கு அறிந்து கொள்ள இந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன:

1. “நான்கு பிரதான பிரிவுகளில் சூத்திரர்களே அதாவது விவசாயிகளே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். பறையர்களையும் சேர்த்துப் பார்த்தால் இந்திய மக்கள் தொகையில் இவர்கள் குறைந்தபட்சம் ஆறில் ஐந்து பங்கு இருப்பர்.

2. “நிறைய உபசாதிகளைக் கொண்ட பகுதியாக தமிழ் பேசும் பகுதி எனக்குப்பட்டது. அவ்வளவு உபசாதிகளை தக்காணத்தில்கூட நான் பார்க்க வில்லை. மைசூரிலும் மலபார் கடற்கரைப் பகுதியிலும்கூட இல்லை.”

3.     “முதல் சட்ட நிபுணர்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இந்துக்களில் உயர்ந்த இடத்தை வகித்தவர்கள் பிராமணர்களே. அடுத்து ராஜாக்கள். யார் உயர்ந்தவர்கள் என்பதில் விவ சாயிகளான சூத்திரர்களுக்கும், வியாபாரிகளாகிய வைஸ்யர்களுக்கும் இடையே போட்டி இருந்தது.”

4.  “இந்து சாதிகளில் பெரும்பாலானவை இடங் கைப் பிரிவிலோ அல்லது வலங்கைப் பிரிவிலோ அடக்கம். இடங்கைப் பிரிவில் அனைத்து வைஸ்யர்களும் பாஞ்சாலர் எனப்பட்ட ஐந்து கைவினைஞர் சாதிகளும் மற்றும் சூத்திரர்களில் மிகவும் கீழ்நிலைப்பட்டவர்களும் இருந்தனர். இதில் சக்கிலியர் எனப்பட்ட சாதிகளிலேயே மிகக் கீழாகக் கருதப்பட்ட சாதியும் இருந்தது.  வலங்கைப் பிரிவில் சூத்திரர்களில் உயர்ந்த பிரிவினர் இருந்தனர். பறையர்கள் இவர்களின் வலுவான முன்னணிப் படையாக விளங்கினர்.  அவர்களுக்கு ‘வலங்கை மாந்தர்’ எனும் பட்டப் பெயர் இருந்ததிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவுகளுக்கிடையே கடும் பகைமை இருந்து வந்தது. இரு பிரிவு களுக்கிடையே ஏற்படும் மோதல் பெரும் அச்சத்தையும், கடுமையான துன்பத்தையும் உருவாக்கி வந்தது. “பிராமணர்கள்”, “ஷத்திரி யர்கள் மற்றும் சூத்திரர்”களில் பல பிரிவுகள் நடுநிலையாளர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு கைப்பிரிவினர்களுக்கும் விதிக்கப்பட் டிருந்த அனைத்து உரிமைகளையும் அந்தஸ்து களையும் இவர்கள் அனுபவித்தனர். அதே நேரத்தில் இவர்கள் இந்த இரண்டு கைப்பிரிவுகள் எதிலும் சேராதிருந்தனர். இரண்டு கைப்பிரிவு களுக்கு மிடையே கடும்மோதல் எழுந்த போது மத்தியஸ்தம் செய்து வைக்க இந்த நடுநிலை சாதியினர் அழைக்கப்பட்டனர்.”

5.   “நான் கண்ணாரக் கண்ட ஒரு காட்சியை விவரிக்கிறேன். பறையர்களுக்கும், சக்கிலியர் களுக்குமிடையே ஏற்பட்ட மோதலினால் அந்த மாவட்டம் முழுவதிலுமே பெரும் பதட்டமும், பயங்கரமும் நிலவியது. மராட்டிய இராணுவம் படையெடுத்து வருவதுபோல பயந்துகொண்டு மக்கள் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறினர்.. மோதலுக்குக் காரணம் என்னவென்றால், திருவிழா ஒன்றில் சக்கிலியர் ஒருவர் தனது தலைப்பாகையில் சிவப்புப் பூ வைத்திருந்தார் என்பதே. அந்த நிறப் பூவை வைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை என்பதுதான் பறையர்களின் வாதம்.”

பிரெஞ்சுக் காலனியாக இருந்த புதுச்சேரியில் 18-ம் நூற்றாண்டில் துபாஷியாக (மொழிப் பெயர்ப்பாளராக) பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை எழுதி வைத்துச் சென்றுள்ள நாட்குறிப்பு களிலும் இந்த இடங்கை- வலங்கை மோதல் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.

மொத்தத் தமிழ் மக்களும் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல, முதல் இரண்டு வருணத்தவரே சகல அந்தஸ்துகளையும், அதிகாரங் களையும் உடையவர்களாக இருந்தனர் என்பது மட்டுமல்ல, வைசியர்கள் - சூத்திரர்கள் - சண் டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை என இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு மோதிக் கொண் டிருந்தனர். அப்படி இருக்கும்படி செய்யப்பட் டிருந்தனர். அதில் குளிர்காயும் மத்தியஸ்தர்களாக முதல் இரண்டு வருணத்தவர் இருந்தனர்.

பிரமிட் வடிவிலான இந்த வர்ணாஸ்ரம அமைப்பைக் குலைக்க முனைவோர்க்கு கடும் தண்டனை தருகிறது மனுநீதி.

1. “ஒரு புரோகிதரின் மனைவியுடன்கள்ள உறவு கொண்ட அடிமைக்குத் தண்டனை மரணம்” (VIII 359)

2. “உறவினர் பாதுகாப்பில் இருக்கும் இரு பிறப்பாளர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தாழ்ந்த வர்ணத்தான் கள்ள உறவு கொண்டிருந்தால் அவனுக்குத் தண்டனை அவன் மர்ம உறுப்பை அறுக்க வேண்டியது; (உறவினர்) பாதுகாப்பில் இல்லாத ஒரு பெண்ணுடன் அவன் உறவு கொண்டிருந்தால் அதற்குத் தண்டனை அவன் உறுப்புக்களையெல்லாம் வெட்டுவதோடு அவன் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.” (VIII 374)

வர்ணங்களின் பரம்பரைத் தூய்மையைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்ட இந்த தண்டனைகள் கற்பனைக் கதையல்ல; அல்லது ஒரு வெறியனின் வெறும் விருப்பங்களுமல்ல. அவையே வாழ்க்கைச் சட்டங்கள். சிற்சில மாறுதல்களுடன் மனுநீதியே 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழக்கை நியதியாக இங்கே இருந்திருக்கிறது. இன்னும் ஆதாரம் தருகிறார் அபே துபே -

1.“ஒரு பறையர் தனது சொந்த சாதியை மறைத்து பிராமணர்களோடோ அல்லது சூத்திரர் களோடோ பழகினால், அவர்களோடு சேர்ந்து உணவு உண்டால், அவர்களது உணவைத் தொட்டால் அவரது உயிர் பறிபோகக் கூடிய ஆபத்து உண்டு. விஷயம் தெரிய வந்தால் அந்த இடத்திலேயே கொலை செய்யப்படுவார். ஆனால், இப்படிக் கொலை செய்வது என்பது நிதானமான விசாரணைக்குப் பிறகு தரப்படுகிற தண்டனை என்றில்லாமல் பொதுவாக உயர்சாதி உணர்விலிருந்து அந்த நேரத்தில் வெளிப்பட்ட வெறியினால் செய்யப்படுகிற செயலாக இருக்கும். யூதர்களின் வரலாற்றிலும் இத்தகைய சில உதாரணங்கள் உண்டு. சில சாதிகளில் சில விஷயங்களுக்கு இப்படிப்பட்ட மரண தண்டனை உண்டு என்றாலும் அது அபூர்வ மாகத்தான் பின்பற்றப்படும். மாறாக அவமானப் படுத்தப்படும் தண்டனைகளே அதிகம் தரப்படும். உதாரணமாக, பெண்களின் தலைகளை மொட்டையடித்தல் போன்றவை. சில நேரங்களில் குற்றவாளிகளின் தலைகளில் மண் வாளிவைக்கப்பட்டு பல மணி நேரம் சாதித் தலைவரின் முன்னால் நிறுத்தப்படுவர். சில நேரங்களில் கழுதை மீது உட்கார வைக்கப்பட்டு அதன் வாலோடு குற்றவாளியின் முகம் கட்டப் படும். சில நேரங்களில் முகத்தில் சாணியைப் பூசி விடுவார்கள்.  பூணூல் அணிய உரிமை உள்ள சாதியினர் என்றால் அவரின் பூணூலை அறுத்து விடுவார்கள். சில நேரங்களில் சாதிப் பிரஷ்டம் செய்வார்கள் அல்லது அவமானப்படுத்துதலைக் குறிக்கும் முத்திரை பதிப்பார்கள்.”

2. அனைத்து வகை தண்டனைகளிலும் ஓர் இந்துவுக்கு மிக மோசமான தண்டனையாக இருப்பது சாதிப் பிரஷ்டமே... இந்த பரிதாபத்திற்குரிய பிறவி தனது சக ஜீவராசிகளுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை அவன் செத்தவனே. அவன் மனித சமுதாயத்திலேயே இல்லை. தனது சாதியை இழப்பதன் மூலம் ஓர் இந்து தனது நண்பர்களை, சொந்தங்களை, பல நேரங்களில் மனைவியையும், குழந்தையையும்கூட இழக்கின்றன். இவனின் துயரத்தில் பங்கு கொள்வதைவிட இவனை இழக்கவே அவர்கள் தயாராவார்கள். இவனோடு யாரும் உண்ண மாட்டார்கள். இவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தர மாட்டார்கள். இவனின் பெண்களுக்கு திருமணம் நடக்காது. மகன்களுக்கு மணமகள்கள் கிடைக்க மாட்டார்கள். அவன்எங்கே போனாலும் சாதி கெட்டவன் என்று தூற்றப்படுவான். எந்த இடத்தில் செத்தானோ அங்கேயே அவனது பிணம் அழுகி நாற வேண்டியதுதான்.”

3. “தனது சொந்த சாதியை இழந்தவன் அதனினும் கீழ்ப்பட்ட சாதியாக மாறினால் அவனது துன்பம் குறைவாக இருக்கும். ஆனால் அதற்கு வழி இல்லை. சாதி கெட்ட “பிராமண”னுக்கு சூத்திரன் கூடப் பெண் தரமாட்டான். தனது சொந்த சாதியில் மீண்டும் சேர்ப்பிக்கப்படாவிட்டால் மிக இழிந்த சாதியாகிய பறையர்களுடன் அல்லது அவர்களுக்கு சமமானவர்களுடன் அவன் கலக்க வேண்டியதுதான்.”

தாங்கள் போட்ட வேலி தங்களுக்கே விலங்காகப் போய் அதிலிருந்து மீள முடியாமல் தமிழ்ச் சமுதாயம் தத்தளித்தக் கொண்டிருந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிலை. அவனுக்கு மொழி, இனம் என்பதைவிட சாதியே சமூக அடையாளமாக இருந்திருக்கிறது. மந்தையாக வாழும் குணமுள்ளவன்தான் மனிதன். இங்கே அந்த மந்தை என்பது சாதி வட்டத்தைத் தாண்டவில்லை. சாதி எனும் கூண்டே தனது பாதுகாப்பு வளையம் என அவன் நினைத்திருந்தான். உண்மையில் அது முழுச் சமுதாயத்தையும் கிணற்றுத் தவளையாக ஆக்கியிருந்தது. அதிலும் கீழ் சாதிக்காரர்களை சுயமரியாதையற்றவர்களாக ஆக்கியிருந்தது.

Pin It

உட்பிரிவுகள்