சங்பரிவாரங்கள் எழுப்பும் வாதங்களுக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பாக இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு (செப். 30, 2015) எழுதிய கட்டுரை இது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பே ஒழிக்க வேண்டும் என்று கருத்துகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கைதான் தமிழகத்தை இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர்த்தியிருக்கிறது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறி பார்க்கும் முன்பே துப்பாக்கிக் குண்டு முந்திக் கொண்டு பாய்வது போன்றதே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கருத்து உள்ளது என்பதுபோல், “Anti-quota call jumps the gun” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இக்கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது.

விடுதலை இராசேந்திரன் கட்டுரையின் தமிழ் வடிவம்:

“எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையேல் இடஒதுக்கீடு எவருக்குமே இருக்கக் கூடாது” என்று பெரும் பணக்கார சமூகமான பட்டேல்கள் போராடியதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறைகூவல் விடுத்துள்ளார். அண்மையில் தமிழகம் வந்த பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா, தேவேந்திர குல வேளாளர்கள், தங்களை இடஒதுக்கீடுப் பட்டியலிலிருந்து நீக்கிக் கொள்ள விரும்புவதாக, தமிழக மக்களிடம் கூறினார். அவ்வளவுதான், இந்த அறிவிப்புகள் ஆங்கில ஊடகங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரே குரலில் ஒலிக்க கிளம்பிபிட்டன. தேசம் நோய் பீடித்துள்ளதற்கு ஒரே காரணம், இந்த இடஒதுக்கீடு கொள்கைதான் என்ற ஒரே கருத்தை திரும்பத் திரும்ப இந்த ஊடகங்கள் பதிவு செய்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். தலைவரானாலும், பா.ஜ.க. தலைவரானாலும், போராட்டத்தால் சீர்குலைவுகளை உருவாக்கி வரும் பட்டேல் சமூகமானாலும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறவர்கள் அனைவருக்குமே இந்த கொள்கை பற்றிய வரலாற்றுப் பார்வையில்லை; இடஒதுக்கீடு எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டது என்ற அடிப்படைப் புரிதலும் இல்லாமல், அதன் நோக்கத்தையே திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், இடஒதுக்கீடு கொள்கை - தமிழ் மண்ணில் பூத்த ஒரு முற்போக்குக் கொள்கை. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற இலட்சிய நோக்கத்தை நோக்கி, தமிழ்நாட்டின் மதிப்பு மிக்க தலைவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கொள்கை.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே 1854அம் ஆண்டே தொடங்கி வைக்கப்பட்டது. தங்கள் நிர்வாகத்தின் கீழுள்ள பதவிகளை அனைத்து முக்கிய ஜாதிகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஒரு நிலையான ஆணையை (எண்.128-27) பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, அதிகாரத்துக்கு வந்த சென்னை மாகாண ஆட்சி, அரசு வேலைகளில் ஒதுக்கீடுகளை செய்து ஆணை பிறப்பித்தது. இதன்படி 44 சதவீதம் பார்ப்பனரல்லாதார்; 16 தவீதம் பார்ப்பனர்; 16 சதவீதம் முஸ்லீம்; 16 சதவீதம் ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்தவர்கள்; 8 சதவீதம் பட்டியல் இனப் பிரிவினர் (தலித்) என ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணை செயலாக்கம் பெறாமல், 1927ஆம் ஆண்டு வரை காகிதத்தில் மட்டுமே முடங்கிக் கிடந்தது. 1927ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்று அழைக்கப்பட்ட வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீடு முதன்முதலாக பத்திரப் பதிவுத் துறையில் மட்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த ஆணையில் பல மாற்றங்கள் நடந்தன. வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடுகள் கொண்டு வரப்பட்டன. 1951ஆம் ஆண்டில் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் மூண்டெழுந்த மக்கள் கிளர்ச்சியில் மத்திய அரசு முதன்முதலாக சட்டத்தைத் திருத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சட்டத்திருத்தமே இடஒதுக்கீடு கொள்கையை உறுதிப்படுத்தியது.

அனைத்து அரசு உத்தியோகங்களையும் ஒரே சமூகத்தினர் தங்கள் வசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தான், இதை மாற்றி அமைக்க பிரிட்டிஷ் ஆட்சி அனைத்து முதன்மை ஜாதியினருக்கும் வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கருதியதன் விளைவே இடஒதுக்கீடு கொள்கை. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் மைசூர் மகாராஜாவும் இந்த கொள்கையின் அவசியத்தை உணர்ந்தார்.

இப்போதும்கூட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் விரும்புவதுபோல், இடஒதுக்கீடு கொள்கையை நேர்மையாக மறுபரிசீலனை செய்தால், அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் பெரிய மாற்றங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்பதை உணர முடியும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப, அரசு அலுவலகங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் எட்டிப் பிடிக்கவில்லை என்ற உண்மையை அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே உறுதிப்படுத்து கின்றன. வேண்டுமானால், தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங் களில் கீழ் மட்ட, இடை நிலை அரசு வேலைகளில் புறக் கணிக்கப்பட்ட மக்கள் ஓரளவு வேலை வாய்ப்புகளை பெற்றிருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இடஒதுக்கீடு கொள்கை மிக மிக மோசமான அளவில்தான் பின்பற்றப்படு கின்றன. 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக பட்டியல் இனப் பிரிவினர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வந்தாலும், ‘குரூப் ஏ’ பதவிகளில் அவர்களுக்காக ஒதுக்கப்பட் டுள்ள 15 சதவீத இடஒதுக்கீட்டைக்கூட முழுமையாக எட்டிப் பிடிக்கவில்லை. இதேபோல் பழங்குடியினருக்கான 7.5 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பவில்லை .

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 1993 செப்டம்பரிலிருந்தும் மத்திய கல்வி நிறுவனங்களில் 2009-லிருந்தும்தான் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதமுள்ள பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றிருப்பது வெறும் 8 சதவீதம் மட்டும்தான். பொதுத் துறையாக செயல்படும் தேசிய மய வங்கிகளில் 474 பொது மேலாளர் பதவிகள் இருக்கின்றன. இதில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் கிடையாது. பல மத்திய அமைச்சகத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் - ‘குரூப் ஏ’ பதவிகளில் ஒருவர்கூட இல்லை. இவை எல்லாம் மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்கள்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கொள்கை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்பது மட்டுமல்ல, இடஒதுக்கீட்டின் பயன் முழுமையாக அனைத்து பிரிவினருக்கும் சென்றடைய பல்வேறு பிரிவினரையும் அதிகாரமயப்படுத்தும் நோக்கத்தோடு மாற்றங்களுக்கும் உட்பட்டு வந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளுக்குள்ளேயே அவர்களோடு சமமாக போட்டியிட முடியாமல், ஒதுங்கி நிற்போருக்கு, வழி திறந்து விடவும், அவர்களுக்கான இடங்களை உறுதி செய்யவும், அதிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு தனியே பிரித்தெடுக்கப் பட்டது. அதே பார்வையில், அருந்ததியினருக்கும் மைனாரிட்டி களுக்கும் தனித்தனியாக ஒதுக்கீடுகள் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது தமிழ்நாட்டில் படித்து முன்னேறிய பிரிவினர், இடஒதுக்கீட்டுக்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள். இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான “தேசிய அறிவு ஜீவி”களின் அணியில் ஒரு தலைமுறையாக இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்று சமூக, பொருளாதார கலாச்சார நிலைகளில் தங்களை மேம்படுத்திக் கெண்ட சிலரும் சேர்ந்து கெண்டு, இடஒதுக்கீட்டை எதிர்க்கப் புறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, பிறகு அதை ஒழித்துவிட வேண்டும் என்ற இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் முன்வைக்கும் ‘மாய்மால’க் கருத்துகளில் மயங்கிப் போய் பேசுகிறார்கள். எந்தப் பிரச்சினையானாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான கருத்து இருப்பது அவர்களுக்கான உரிமை; அதேபோல இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்தவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.

ஆம், இடஒதுக்கீடு முற்போக்கானது, அந்தக் கொள்கை தேவையானதே என்பதை தலைநிமிர்ந்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூகத் தேவையை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். அது மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்புகளை உருவாக்கும் இலட்சியத்தை அடையும் காலம் வரை இந்த கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையும், இதுவே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கம் என்பதையும் வலியுறுத்திக் கூற முடியும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டும் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இந்தக் கொள்கையின் பயன் இன்னும் சமூகத்தின் கீழ் மட்டத்தில் வாழும் பிரிவினருக்கும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் வாழ்வோருக்குச் சென்று அடையும் வரை, கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு இடஒதுக்கீட்டை ஒருபோதும் கைவிட முடியாது. தமிழ்நாட்டின் கடந்கால வளர்ச்சிக்கு இடஒதுக்கீடு கொள்கை முக்கிய பங்காற்றியிருக்கிறது. வளர்ச்சிக்கான இந்தக் கொள்கையின் பங்களிப்பு - தொடர்ந்தாக வேண்டும்., தமிழக அரசியல் கட்சிகளுக்கு இந்த உண்மை நன்றாகவே புரியும். சொல்லப் போனால், பா.ஜ.க.வும், இதற்கு விதி விலக்கு அல்ல; இந்த நிலையில் இடஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தை தமிழக பா.ஜ.க. ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்று தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.