உலகின் பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகப் பெரியது இந்திய தொடர்வண்டித் துறை. ஒவ்வொரு நாளும் 2 கோடியே 30 இலட்சம் மக்கள் பயணிக்கும் இந்தத் துறையின் அடிப்படை நோக்கமே, ஏழை எளிய மக்களுக்கான சேவை என்பதுதான். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே மாற்றி வசதிப் படைத்த பணக்காரர்களுக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்குமான துறையாக ((Pro Ritch-Pro Hindi)) மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுமோடி ஆட்சியின் தொடர்வண்டித் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு பயணிகள் கட்டணத்தில் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தில் 6.5 சதவீதமும் உயர்த்திவிட்டார்கள். இப்போது பயணிகள் கட்டணத்தை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருக்கும் எரிபொருள் விலையோடு இணைத்து விட்டார்கள். இனி, எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் பயணிகள் கட்டணங்களும் உயரும். “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் ‘பிராமணர்’களுக்குக் கட்டுப்பட்டது” என்ற வேத’ சுலோகத்தைப்போல் “கட்டண உயர்வு, எரிபொருள் விலைக்குக் கட்டுப்பட்டது; எரிபொருள் விலை உயர்வு, பன்னாட்டுச் சந்தைக்குக் கட்டுப்பட்டது; பன்னாட்டு சுரண்டலுக்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள்” என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

தொடர்வண்டி நிலையங்களில் பிளாட்பாரங்களில் ‘கையால் மலம்’ எடுக்கும் இழிவுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஆனால் 65 ஆயிரம் கோடி செலவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம். துறையில் காலியாக உள்ள 3 இலட்சம் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதில் பெரும்பான்மைப் பணியிடங்கள் பாது காப்புத் துறை சார்ந்தவை என்று கூறப்படுகிறது. ஆனால், பயணிகள் பாதுகாப்புக் குறித்து அறிக்கை மிகவும் கவலைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகாலங்களில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில், 99 புதிய இரயில் பாதைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டாலும், ஒரே ஒரு இரயில் பாதைதான் இன்றுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவலை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. நியாயம் தான்! ஆனால், கடந்த காலங்களில் இப்படி கிடப்பில் போட்ட திட்டங்களை அமுல்படுத்துவதற்கான, எந்த அறிவிப்பும் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?

அறிவிக்கப்பட்டுள்ள 58 புதிய தொடர்வண்டிகளில் 5 தொடர்வண்டிகள் மட்டும் தமிழ் நாட்டின் வழியாகக் கடந்து செல்லும்; அவ்வளவுதான்! இதில் 3 தொடர்வண்டிகள் வட நாட்டிலிருந்து வரும் வழியில் சென்னையை யும், ஒரு தொடர் வண்டி மதுரை, ஓசூரையும் கடந்து செல்கின்றன. மற்றபடி, தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம்! நவீன வசதிகள், கூடுதல் வேகம், சுகாதாரமான உணவு என்றெல்லாம் நிதிநிலை அறிக்கை கூறுவது மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியதுதான். ஆனால், இந்த வசதிகளுக்கு சாமான்ய மக்களை பலி கடாவாக்குவது நியாயமா? அது பார்ப்பனியப் பார்வை அல்லவா?

அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்கியவர்கள் இப்போது தொடர் வண்டித் துறையில் அதற்கு கதவு திறந்துவிட்டார்கள். ‘அரசு-தனியார்- பொதுமக்கள்’ என்ற மறைமுக தனியார் திட்டத்தையும் திணித்துவிட்டார்கள். ஆக, தொடர்வண்டித் துறையை தனியார் மயமாக்கிடமோடி ஆட்சி முடிவு செய்துவிட்டது. சாமான்ய மக்களுக்கான சேவைத் துறையை வணிகத் துறையாக மாற்றி, வசதிப் படைத்தவர்களுக்கான நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டதே தனது தொடர்வண்டித் துறைக்கான கொள்கையாக இந்துத்துவ-பார்ப்பன சக்திகள் பிரகடனப்படுத்தியிருக்கின்றன. இந்துக்களுக்கான உரிமைகள் என்று பேசிக் கொண்டே பார்ப்பன மேலாதிக்கத்துக்கு சேவை செய்யும் அதே அணுகுமுறையைத்தான் அரசுக்கான திட்டங்களிலும் நுழைக்கத் துடிக்கிறார்கள்.

இந்திய மக்கள் அனைவருமே ‘பாரதத் தாயின்’ வயிற்றில் பிறந்த ‘ஒரே மக்கள்’ என்று பேசி வரும் கட்சி பா.ஜ.க. ‘எனது மதமே இந்தியா’தான் என்று தேர்தல் கூட்டங்களில் பேசியவர் மோடி. ஆனால், ‘பாரத மாதா’வின் புதல்வர்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல் குஜராத்துக்கும், இந்தி பேசும் மாநிலங்களின் ‘புதல்வர்’களுக்கு மட்டுமே அரசின் திட்டங்களைக் குவித்துக் கொள்வது என்ன நியாயம் என்று கேட்கிறோம். ‘இந்தியா’வில் உள்ள அனைத்து மாநில மக்களையும் சமஉரிமையோடு மதிக்கும் எந்த நிதிநிலை அறிக்கையையும் ‘இந்திய தேசியவாதி’களாலும், ‘இந்துத்துவ’ தேசியவாதிகளாலும் சமர்ப்பிக்கவே முடியாது என்பதே உண்மை.

அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளும், அமைச்சர்களும் தங்கள் மாநில நலன் சார்ந்தே விருப்பு வெறுப்புப் பார்வையில் செயல்படும் வாய்ப்புகளை உருவாக்கித்தரும் அரசியல் அமைப்புதான் ‘இந்தியா’. இந்த ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடுகளை அனைத்து மாநில மக்கள் மீது திணிப்பதும், இதைத் தட்டிக் கேட்பவர்களை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துவதும் இனி நீண்டகாலம் நீடிக்கப் போவது இல்லை. சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிதிநிலை அறிக்கைகளே இதற்கு சாட்சியங்களாக நிற்கின்றன!

Pin It