திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க பேச்சாளரும், திராவிடர் இயக்கக் கருத்தியலை தனது உரையின் உயிர் மூச்சாகக் கொண்டு பேசியவரும் பெரியார் இயக்கக் கழக மேடைகளில் தொடர்ந்து பங்கேற்றுப் பேசிய வருமான கோவை இராமநாதன் (87) மே 11ஆம் தேதி கோவையில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார்.

திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுஅவர் நிகழ்த்திய நீண்ட உரையும், பழனியில் தமிழ் வழிபாட்டை ஆதரித்து பெரியார் இயக்க மேடையில் அவர் ஆற்றிய உரையும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகும். 1977, 1984ஆம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1996இல் நாடாளுமன்ற உறுப் பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றம் முன்னணியினர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் மே  11 அன்று மாலை அவரது இல்லம் சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பொறுப் பாளர்கள், தோழர்களுடன் கோவை இராமநாதன் இல்லம் சென்று கோவை இராமநாதன் அவர்களைச் சந்தித்து அவரது குடும்பத்தினருடன் உரையாடி வந்தனர்.

இறுதி நிகழ்வில் கழக சார்பில் கழகப் பொருளாளர் துரைசாமி, நேருதாஸ், நிர்மல் குமார், சூலூர் பன்னீர்செல்வம், பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, வெங்கட், கிருஷ்ணன், இசைமதி, சபரி, அய்யப்பன், அகிலன், முத்து, ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை இராமநாதன் 16 வயதில் பொது வாழ்வில் ஈடுபட்டார். கோவை, மதுரை, திருச்சி, வேலூர்,  சென்னை, என்று தமிழகத் தில் பல்வேறு சிறைகளில் 27 முறை சிறைபட்டவர். சுமார் 6 ஆண்டுகாலம் சிறையில் கழித்தவர்! 1953இல் மும்முனைப் போராட்டம் 3 மாதம் சிறை! 1962இல் விலைவாசி மறியலில் 4 மாதம் சிறை! 1963இல் கோவையில் 144 தடை மீறல் 2 மாதம் சிறை!

1964இல் மொழிப்போரில் அரசியல் சட்டம் பிரிவு 17ஆம் பாகத்தை கொளுத்தியதற்காக 1 ஆண்டு கடுங் காவல்! 1965இல் நாஸ் தியேட்டரை தீயிட்டுக் கொளுத்தியதாக சதி வழக் கில் 3 மாதம் சிறை! மேல் முறையீட் டினால் 1966இல் 2ஆண்டு கடுங்காவல்! இதில்  10 மாதம் சிறைக்குப் பிறகு வழக்கு அரசுத் தரப்பில் திரும்பப் பெற்றதால் விடுதலை! 1976இல் “மிசா” கைதியாக. கோவை சென்னை சிறைகளில் (9+5) 14 மாதம் சிறை!

1977இல் மதுரையில் பிரதமர் இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் தளபதியாக. செயல்பட்டதால் கொலை முயற்சி வழக்கில் மதுரை, கோவை சிறைகளில் 2 ஆண்டு கடுங்காவல்! 1977 முதல் 1989 வரை பல்வேறு போராட்டங்களில் 3மாதம், 2மாதம், 6வாரம் என்று சிறை.!

1989ஆம் ஆண்டு தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக இருப் பினும்  மொழிப்பிரிவு “343”ஐ இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கொளுத்தி யதால் பேராசிரியர் அன்பழகன் உட்பட சட்டமன்ற பதவியை இழந்த 10 பேரில் ஒருவர்! 1991இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதை கண்டித்து மறியல் செய்ததால் 3 மாதம் சிறை.!

இவ்வாறு 27முறை சிறைபட்டு ஆறு ஆண்டுகாலம் சிறையில் ஜனநாயகத்தையும் மொழியையும் காக்க  சிறைப் பறவையாக சிறகடித்து பறந்தவர் தான் - கோவைத் தென்றல் மு. இராமநாதன்.