acit thiyagarajanபெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் 94ஆம் வயதில் பிப்.26, 2020 அன்று தஞ்சையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் வெளிச்சத்துக்கு வராமல் செயல்பட்ட தன்மானப் போராளி. பெரியாரை இழித்து பழித்துப் பேசியவர்களை ‘பகத்சிங்காக’ மாறி தண்டனை வழங்கியவர். 1957 ஆம் ஆண்டு பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அரசு வழக்கறிஞரான சீனிவாச்சாரி என்ற பார்ப்பனர், பெரியாரை ‘ராமசாமி நாய்க்கர்’ என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைக் கேட்டு ஆத்திரமடைந்து, அவர் மீது ‘ஆசிட்’ வீசியதாக கைது செய்யப்பட்டவர். வன்முறைகளிலும் பழிவாங்குதலிலும் பெரியார் இயக்கத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இயக்கத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் பெரியார் உணர்வாளர்களாகப் பல போராளிகள் இயக்கத்துக்கு வெளியே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆசிட்’ தியாகராஜன்.

செய்தி அறிந்த நாகை மாவட்ட கழகத் தோழர்கள் ஆசிட் தியாகராஜனுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பேராவூரணி திருவேங்கடம், கரிகாலன், சோலை மாரியப்பன், பசு. கவுதமன் உள்ளிட்ட தோழர்களும், நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மகேஷ், இளையராஜா, செந்தில், நாஞ்சில் சங்கர், ஜாகிர் உசேன், விஜயராகவன், கார்த்தி, பீமாராவ், பாண்டியன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். அங்கு நடைபெற்ற வீரவணக்க கூட்டத்தில் சாக்கோட்டை இளங்கோவன், ஆசிட் தியாகராஜன் பற்றி தோழர்களுக்கு எடுத்துக் கூறி வீரவணக்கம் செலுத்தினார்.