1972ம் ஆண்டு ‘பரிசு’ என்னும் சிறுகதையுடன் இலக்கியப்பயணத்தைத் தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதை, புதினம், குறும்புதினம், கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. முற்போக்கு முகாமின் முண்ணனி எழுத்தாளர். அவர் படைப்புகளில் முற்றுகை, அச்சமே நரகம், ஆகாயச் சிறகுகள் என்னும் புதினங்களில் உள்ள பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வுச் செய்து ‘பெண்ணிய நோக்கில் மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்கள்’ என்னும் ஆய்வுத் தொகுப்பை அளித்துள்ளார் புதுவை ஞானகுமாரன்.

1985ம் ஆண்டு முதல் இயங்கி வருபவர். இளமுனைவர் பட்டத்துக்காக இத்தலைப்பை தேர்வு செய்திருப்பினும் ஓர் எழுத்தாளர், ஒரு படைப்பாளர் என்னும் நிலையில் பெண் சமத்துவம் பெற வேண்டும் என்னும் கரிசனமே முன்னிற்கிறது. முன்னுரையிலும் கட்டுரையாளர் இதையே குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வேடுக்கு ஏற்ப இவ்வாய்வேட்டை நான்கு இயல்களாக பிரித்துள்ளார். மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்களில் உள்ள பெண்ணியம் தொடர்பானவைகளை பேசினாலும் முதல் இயல் ‘பெண்ணியமும், பெண்ணியல் கோட்பாடுகளும்’ பற்றி பேசுகிறது. பெண்ணியம் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. பெண்ணியத்தின் தோற்றம் எதுவென சொல்கிறது. 1792ல் மோரி உல்ஸ்டோன் கிராப்ட் என்னும் பெண் ‘பெண்களின் உரிமைகளை நியாயப் படுத்துதல்’ என்று எழுதியதே முதல் பெண்ணியத் தொகுப்பு என்கிறார். மிதவாதம், தீவிரவாதம், மார்ச்சியம், தூய அல்லது மரபுநிலை, நவீனம், கூட்டுசேரா, இந்தியம், தலித் என்னும் பெண்ணியக் கோட்பாடுகளை விவரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியாவில் பெண்ணியச் சிந்தனைகள் எந்த அளவில் உள்ளன எனவும் பேசியுள்ளார். பெண் குழந்தைக் கொலை, இளமைத் திருமணம், பெண்களைத் தனிமைப்படுத்துதல், கல்வி மறுப்பு, பலதார மணம் என பெண்கள் எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார். 1910ம் ஆண்டு முதல் இந்தியாவில் பெண்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளை பட்டியலிட்டுள்ளார். விடுதலைக்குப் பின்னான அமைப்புகளின் தொடக்கத்தையும் குறிப்பட்டுள்ளார். இவ்வியல் பொதுவானது. பெண்ணியச் சூழலைக் காட்டியுள்ளது.

இயல் இரண்டு பிறர் புதினங்களில் பெண்ணியம் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என ஆய்ந்துரைக்கிறது. நாவல் என்றால் என்ன என்றும் விளக்கமளிக்கிறது. விடுதலைக்கு முன், பின் படைப்புகளில் பெண்ணியத்தைக் காட்டியுள்ளதையும் வேறு படுத்தியுள்ளார். பெண் விடுதலை ஆண்களே அதிகம் பேசியுள்ளனர் என்னும் கருத்து குறிப்பிடத்தக்கது. விடுதலைக்குப் பின்னான புதினங்களில் பெண்கள் குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்களைக் காண்பதாக எழுதியுள்ளார். ஆயினும் ஆணின் அதிகாரத்திற்கு பாதிப்பு இல்லாமலே பெண்ணியம் பேசப்பட்டுள்ளதாக ஒரு விமாpசனத்தையும் வைத்துள்ளார். இக்காலக் கட்டத்தில் எழுதிய பெரும்பாலான பெண் எழுத்தாளர்களும் இதே சிந்தனையிலேயே இருந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பல நூல்களை, பல நூலாசிரியர்களை எடுத்துக் காட்டித் தன் வாசிப்பறிவை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வியலின் மூலம் ஒரு நூற்றாண்டின் நாவல்களை அறியமுடிகிறது.

இயல் மூன்றிலேயே மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்களுக்குள் பிரவேசித்துள்ளதை புலப்படுத்துகிறார். அவர் படைப்புகளில் முற்றுகை, அச்சமே நரகம், ஆகாயச் சிறகுகள் என்னும் மூன்று நாவல்களில் மட்டும் காணப்படும் பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றிய சிந்தனைகளை ஆய்ந்து அளித்துள்ளார். திருமணம், பொருந்தா மணம், கைம்மை நிலை, வரதட்சனை, பாலியல், பெண்கல்வி மறுப்பு, குடும்ப அமைப்பு, பெண் பேச்சுக்கு எதிர்ப்பு, பெண் பாதுகாப்பு ஆகிய குறித்து மேலாண்மையாரின் புதினங்களில் எவ்வாறு பிரதிபலித்துள்ளது என ஆய்வாளர் விளக்கமாகவே காட்டியுள்ளார். மதம் பெண்ணை இழிவு படுத்துவதைச் சாடியுள்ளார், நிலவுடைமை மூலம் பெண்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்துள்ளார், பெண்கல்விமறுக்கப்படுவதை மேலாண்மையார் ஏற்றுக்கொள்ளவில்லை என ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலாண்மையாரின் கருத்துக்கள் பெண்களுக்கு ஆதரவாகவும் விடுதலை பெற வேண்டும் என்னும் கருத்தை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளன என்பது ஆய்வாளாpன் கூற்று.

மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்களில் பெண் விடுதலை பற்றி பேசுகிறது இயல் நான்கு. குடும்ப நிலையிலேயே பெண் விடுதலை பெற முடியும் என்று மேலாண்மையாரின் படைப்புகள் வலியுறுத்துவதாகவே ஆய்வும் உறுதி படுத்துகிறது. ஆயினும் மரபுகளை மீற வேண்டும் என்று விரும்புவதாகவும் சுட்டியுள்ளார். அச்சமே நரகம் புதினத்தில் அக வாழ்க்கைச் சிக்கலிலிருந்து விடுதலைப் பெறும் பெண்களையும் முற்றுகையில் அக வாழ்க்கைச் சிக்கலிலிருந்து மீள முடியாத பெண்களையும் ஆகாயச் சிறகுகள் புதினத்தில் அகம், புறம் என்னும் இரண்டிலும் வெற்றிப் பெற்ற பெண்களையும் மேலாண்மையார் படைத்துள்ளார் என்கிறார் ஆய்வாளர். பெண்ணியக் கோட்பாடுகள் பலவாய் இருப்பினும் மிதவாதம், மார்க்கசியம் சார்ந்த சிந்தனைகளே மிகுந்துள்ளன என்கிறார். இவ்வாறான சிந்தனைகள் மேலாண்மையாரிடம் வெளிப்படுவது இயல்பே. காரணம் அவர் சார்ந்துள்ள இயக்கம். கொண்டுள்ள கொள்கை . புதினங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டித் தன் ஆய்விற்கு வலிமை சுட்டியுள்ளார்.ஆணாயிருந்தும் பெண்ணியச் சிந்தனைகளை புதினங்களில் விரவியுள்ளார் மேலாண்மையார் என கருத்துரைத்துள்ளார்.

இறுதி பகுதி மேலாண்மை பொன்னுச்சாமியின் நேர்காணல். சுய விவரத்துடன் தொடங்கியுள்ளது. ‘‘‘பெண்ணியம் என்பது குறித்துத் தங்கள் கருத்து என்ன? தங்கள் படைப்புகளில் எத்தகைய பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறீர்கள்?’’ என்னும் வினாவிற்கு ‘மேலை நாட்டு பெண்ணியச் சிந்தனைகளை நம் நாட்டில் செல்வாக்குப் பெற முடியாது. கீழை நாட்டுப் பெண்ணியமே இன்று நம் நாட்டில் ஏற்கப்படுகிறது. குடும்ப அமைப்பு உடைபடாத பெண்ணியமே நான் வலியுறுத்துவது. குடும்பத்தை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே பெண்ணுரிமை ஏற்பட முடியும்.குடும்பத்தை உடைப்பதால் அல்ல. ஆஹணும் பெண்ஹணும் தோழமையுடன் வாழும் படியான சூழ்நிலையப் பெண்ணியச் சிந்தனைகள் உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து ‘ என பதிலளித்துள்ளார். படைப்புகளில் ஆய்வாளர் கண்டறிந்து கூறியதை மேலாண்மையார் பதில் வழி உறுதி படுத்தியுள்ளார். படைப்புலகத்தையும் படைப்பு மனத்தையும் அறியச் செய்தது. பெண்ணியம் தொடர்பான அவர் நோக்கம் வெளிப்பட்டுள்ளது.‘

‘பெண்ணிய நோக்கில் மேலாண்மை பொன்னுச்சாமயின் புதினங்கள்’ என்னும் தலைப்பை ஆய்வாளர் எடுத்துக் கொண்டிருந்தாலும் மூன்றே புதினங்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ஆயினும் அவரின் பெண்ணியச் சிந்தனைகளைத் திரட்டித் தந்து பெண்ணியத்துக்கான தன் பங்களிப்பைச் செய்துள்ளார். பெண்ணியம் தொடர்பான பொதுவான தகவல்களையும் அளித்து ஆய்வேட்டை வளப்படுத்தியுள்ளார். பலப்படுத்தியுள்ளார்.

ஆய்வேடு என்னும் அடிப்படையில் கவிஞர் தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். இளமுனைவர் பட்டமே குறிக்கோள் எனினும் அனைவரும் வாசிக்க வேண்டும், பெண்ணியம் பற்றி பேச வேண்டும், பெண்ணியத்துக்காக போராட வேண்டும் என்னும் உயரிய சிந்தனையோடு தொகுப்பாக்கிய முயற்சி பாராட்டக்கூடியது. தொகுப்பிற்கான அவர் உழைப்பும் பிரமிக்கிறது. இத்தொகுப்பு மேலாண்மை பொன்னுச்சாமி என்னும் படைப்பாளிக்கு புகழ் சேர்க்கும். பெண்ணியம் வெற்றிப் பெறவும் வழியமைக்கும். மேலாண்மையாரின் மனசாட்சியாக புதுவை “தானகுமாரன் பேசியுள்ளார்.அவர் ஆய்வுப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

பெண்ணிய நோக்கில் மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்கள்

புதுவை ஞானகுமாரன்

நா.லலிதா, 7 பெருமாள்புரம், வில்லியனூர், புதுச்சேரி - 605110

விலை – ரூ.40.00

 - பொன்.குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It