புலவர் குழந்தை 1.7.1906 அன்று கோவை மாவட்டம் ‘ஒலவலசு’ என்ற சிற்றூரில் முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த பத்தாமாண்டிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். எந்த நேரமும் ஏதேனும் ஒரு பாடல் எழுதிக் கொண்டிருப்பார்; ஆரம்ப காலத்தில் அம்மன் மீது பக்தி கொண்டு, ‘கன்னியம்மன் சிந்து’, ‘வீரக்குமாரசாமி காவடிச் சிந்து’ முதலான நூல்களை 1925 வரை எழுதிக் கொண்டிருந்தவர்.

1926 ம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1942 ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியைத் தொடங்கி, உயர்நிலைப்பள்ளி தலைமைத் தமிழாசிரியராக 1962-ல் ஓய்வு பெற்றார்.

இவர் எழுதிய “இராவண காவியம்” மிகச் சிறப்பானது; அது மட்டுமின்றி 6 செய்யுள் நூல்களும், 3 உரை நூல்களும், 2 யாப்பிலக்கணம் உரைநடை நூல்களும், 9 உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். ‘இராவண காவியம்’ 1946-ல் முதற்பதிப்பு வந்தது. 2.6.1948 அன்று சென்னை ராஜ்ஜிய அரசு தடை செய்தது.

பிறகு 17.5.1971-ல் கலைஞர் ஆட்சி தடையை நீக்கியது. “கொங்கிளங்கோ” என்ற புனைப் பெயரும் இவருக்கு உண்டு. 24.91973 அன்று மறைவுற்றார். ‘திருக்குறளும், பரிமேலழகரும்’ என்ற விமர்சன நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.