ஜூன் 30 ம் தேதி மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘ராணி சீதை’ அரங்கில் - எழுத்தாளர் விந்தனின் நினைவு நாள் மற்றும் அவரது நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி, விந்தன் அறக்கட்டளைக் குழு சார்பில் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக ஜெயகாந்தனும், தோழர் நல்லக்கண்ணுவும் கலந்து கொண்டனர்.

ஜெயகாந்தன் பேச வந்தபோது, அரங்கிலிருந்த தமிழின உணர்வாளர்கள், “பிழைப்புக்குத் தமிழ்; பெருமைக்கு சமஸ்கிருதமா? சமஸ்கிருதம் தான் உயர்மொழி என்றால், தமிழில் பேசாதே; சமஸ்கிருதத்தில் பேசு” என்று, அரங்கிற்குள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். அதிர்ச்சி அடைந்த ஜெயகாந்தான், அப்படியே ஒலிப்பெருக்கி முன் பேசாமல் நின்றார். தொடர்ந்து எதிர்ப்பு முழக்கங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தோழர்களை சமாதானப்படுத்தினர்.

“தவறு செய்வது எல்லோருக்கும் இயற்கைதான்; மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி தனது பேச்சைத் துவக்கினார் ஜெயகாந்தன். தமிழின உணர்வாளர்கள் அரங்கை விட்டு வெளியேறினர். இறுதியில் பேசிய தோழர் நல்லக்கண்ணு, “யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மைதான். ஆனால் ஜெயகாந்தன் தொடர்ந்து சறுக்கிக் கொண்டே இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

இதே போல் - கோவையில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் ஜெயகாந்தனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.