அமீர்கான்-ராஜ்குமார் கூட்டணி யில் வெளி வந்திருக்கும் ‘பிகே’ இந்தி திரைப்படம் ஆங்கில உள் தலைப்பு களுடன் சென்னையில் திரையிடப்பட் டிருக்கிறது இந்தப் படம். திரைப்பட வரலாற்றில் புதிய திருப்புமுனையை உருவாக்கியிருப்பதை நம்மால் உரத்துச் சொல்ல முடியும். கடவுள், மதம் என்று மனிதர்கள் உருவாக்கிய கற்பனைகளை கூர்மையான பகுத்தறிவு வினாக்களால் தகர்த்து உடைக்கிறது.

வேற்றுக்கிரக விண்வெளி வீரரான அமீர்கான், விண்வெளிக்கலம் ஒன்றில் பூமியில் வந்து இறங்கியவுடன் அவரிடமிருந்த ‘ரிமோட் கன்ட்ரோல்’ கருவியை இராஜஸ்தான் பாலைவனத்தில் ஒருவர் திருடிக் கொள்கிறார். மீண்டும் அந்த கருவி இருந்தால் மட்டுமே விண்வெளிக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் ரிமோட் கன்ட்ரோலைத் தேடித் திரியும்போது, அது கிடைக்காத நிலையில் ‘இனி கடவுளால் மட்டும்தான் தேடித் தர முடியும்’ என்று பலரும் அறிவுரை கூறுகிறார்கள். கடவுளைத் தேடும் முயற்சியை தொடங்குகிறார். கடவுளும் கிடைக்காத நிலையில் ‘கடவுளைக் காணவில்லை’ என்று கடவுள் படத்தை அச்சிட்டு வீதி வீதியாக வழங்கி தேடத் தொடங்குகிறார்.

கோயிலுக்குள் நுழையும்போது தனது செருப்புக்கு பூட்டுப் போடுவது; கடவுள் பொம்மைகளை விற்கும் வியாபாரி, சிறிய பெரிய பொம்மைகளுக்கு தனித் தனி விலை கூறும்போது, ஒரே கடவுளுக்கு தனித்தனி விலை ஏன்? என்று கேட்பது; கோயிலுக்குள் அர்ச்சனை தட்டில் காந்தி படம் பொறித்த ரூபாய் நோட்டைப் போடுவதைப் பார்த்து, தன்னிடம் பணம் இல்லாததால், காந்தி படம் போட்ட காகிதத்தை வைக்க, அதில் அர்ச்சகர் ஆத்திரமடைவது, கோயில் உண்டியலிலிருந்தே பணத்தை எடுத்து அர்ச்சனைத் தட்டில் போடுவது; திருடன் என்று அர்ச்சகர் பிடிக்கும்போது தொலைக்காட்சி செய்தியாளர் அனுஷ்கா சர்மா, தனது கைப்பையை உண்டியலில் யாருக்கும் தெரியாமல் நழுவ விட்டு, கைப்பையை எடுப்பதற்கு உண்டியல் திறந்தாரே தவிர, திருடுவதற்கு அல்ல என்று அவரை காப்பாற்றியதும், அர்ச்சகர் அந்தக் கைப்பையை உண்டியலிலிருந்து எடுத்து அதில் உள்ள பணமும் உண்டியலுக்கே உரியது என்று பிடுங்கிப் போடுவது; கோயில் அர்ச்சனைத் தட்டில் தேங்காயோடு பார்த்துவிட்டு, தேவாலயத்துக்குள்ளும் அர்ச்சனை தட்டில் தேங்காயோடு நுழைய, பாதிரியார்கள் எதிர்ப்பது; அங்கே ஒயின் மது பானத்தைத்தான் படைக்க வேண்டும் என்று அறிந்து, ஓயின் பாட்டில்களை வாங்கி அடுக்கிக் கொண்டு நுழைவது; தன்னிடம் திருடப்பட்ட ‘ரிமோட் கன்ட்ரோலை’ திருடியவரிடமிருந்து விலை கொடுத்து வாங்கிய ஒரு ‘பாபா’, அதன் வழியாக கடவுளிடம் நேரடியாக பேசுவதாக பக்தர்களை ஏமாற்றி பணம் பறிப்பது; வெவ்வேறு மதக்காரர்களுக்கு மத அடையாளங்களை மாற்றி, பாபா முன் நிறுத்தி, அவர்கள் எந்த மதம் என்று கேட்கும்போது, தோற்றத்தை வைத்து பாபா மதத்தைக் கூறுகிறார். உடனே அவர்களின் மாற்று அடையாளங்களைக் கலைத்து, வேறு மதக்காரர்கள் என்று நிரூபிப்பது; தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் பாபாவின் வாதங்களை அறிவியல் ரீதியாக வாதிட்டு வீழ்த்துவது என்று படம் முழுதும் நிறுவனமாக்கப்படும் கடவுள், மதங்களுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகள் சாட்டையடியாக வந்து விழுகின்றன.

கடவுள், மத உணர்வாளர்களை ‘கேலி செய்யும்’ காட்சிகள் இல்லாமல் அறிவார்ந்த கேள்விகளை மட்டுமே படம் எழுப்புவதால் தணிக்கைக் குழுவால் காட்சிகளை வெட்ட முடியவில்லை. பாகிஸ்தானியர் என்றாலே வெறுக்கக் கூடியவர்கள் என்ற கருத்தை உடைத்து, பாபாவின் சீடராக உள்ள ஒருவரின் மகள், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இளைஞரை விரும்பி, சூழ்நிலையால் பிரிந்து, பிறகு மீண்டும் இணைவதுபோல் காதல் காட்சிகளும்கூட ‘மத எதிர்ப்பை’ உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது, படத்தின் சிறப்பு. தொலைக்காட்சி செய்தியாளராக அனுஷ்கா சர்மாவும், வேற்றுக்கிரக விண்வெளி வீரராக அமீர்கானும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். பிறக்கும் குழந்தைக்கு மதத்துக்கான அடையாளக் குறியை கடவுள் போட்டிருக்கிறாரா என்று மருத்துவமனையில் பிறந்த குழந்தையிடம் கதாநாயகன் தேடுகிறார். நான் எந்தக் கடவுளை வணங்குவது? பசுவை வணங்க வேண்டும் என்று கூறும் கடவுளையா? ஆடுமாடுகளை பலி கொடுக்க வேண்டும் என்ற கடவுளையா? கையெடுத்துக் கும்பிடச் சொல்லும் கடவுளையா? முழங்கால் முட்டிப் போட்டு வணங்கும் கடவுளையா? மதம் உள்ளவர்கள் கூட இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றலாம். மதமே இல்லாதவர் களுக்கு கடவுள் ஏதும் கிடையாதா? - என்று சரமாரியாக கேள்விகளை வெடிக்க வைக்கிறது திரைப்படம். வடநாட்டில் சங்பரிவாரங்கள் இத்திரைப்படத்துக்கு தடை கோரி வன்முறைகளை தொடங்கிவிட்டனர். தணிக்கைக் குழு இதில் வெட்டக்கூடிய எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை என்று உறுதியாக கூறிவிட்டது. பா.ஜ.க. மதவெறி சக்திகள், அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் இப்படி ஒரு அருமையான பகுத்தறிவு திரைக் காவியத்தை துணிவுடன் தயாரித்துள்ள படக்குழுவினரைப் பாராட்ட வேண்டும்.

நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களையும் பாபாக்களையும் அம்பலப்படுத்துவதே படத்தின் நோக்கம். நடிகர் அமீர்கான் ஒரு இஸ்லாமியர் என்பதால் ‘இந்து’ கடவுள்களை இழிவுபடுத்துவதாகக் கூறும் சங்பரிவாரங்களுக்கு அமீர்கான் பதிலடி தந்துள்ளார். “படத் தயாரிப்புக் குழுவில் தன்னைத் தவிர தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட 99 சதவீதம் பேர் இந்துக்கள்தான்” என்று பதில் கூறியிருக்கிறார்.

தமிழில் இது ‘டப்பிங்’ செய்யப்படும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம். பகுத்தறிவுக் கருத்துகளை இலட்சோப இலட்சம் மக்களிடம் கொண்டு செல்லும் இத்திரைப்படம், மக்கள் பேராதரவோடு வெற்றி நடைபோடுகிறது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி!

- கண்டுவந்தவன்

Pin It