ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள (Poly gamy) இலாமிய மதச் சட்டம் அனுமதிக்கிறது என்பதால், அரசு ஊழியராக உள்ள முஸ்லிம் - இரண்டாவது திருமணம் செய்து கொள்ள லாமா? இப்படி ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. உ.பி.யில் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் குர்ஷித் அகமதுகான் என்ற அரசு ஊழியர் முதல் மனைவி சோபினா பேகம் இருக்கும்போதே, அஞ்சும்பேகம் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து முதல் மனைவியின் சகோதரி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். காவல்துறை விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இரண்டாவது திருமணம் செய்தது உறுதியானதைத் தொடர்ந்து மாநில அரசு தலையிட்டு, அரசு ஊழியர் நன்னடத்தை விதியை மீறியதாக அவரை பதவி நீக்கம் செய்தது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஒருவர், அரசு நன்னடத்தை விதியின் கீழ் அரசிடம் முன் அனுமதி பெற்றாக வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட்ட குர்ஷித், அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இஸ்லாமிய மதத்தின் சட்டம் பலதார மணத்தை அங்கீகரிப்பதால், தனக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான உரிமை உண்டு என்பது இவரது வாதம். இதற்கு அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு வழங்கும் மதச் சுதந்திர உரிமையை எடுத்துக்காட்டினார். உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர், ஏ.கே. கோயல் ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பில் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது: 

“அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு - மதத்தைப் பின்பற்றவும் பரப்பவும் பாது காப்பை வழங்கியிருக்கிறது. அது மதத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைகளைப் பாதுகாப் பதற்கான உரிமையே தவிர, சுகாதாரம், ஒழுக்கம் போன்ற பொது ஒழுங்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான உரிமை அல்ல.

பலதார மணம் என்ற முறை மதத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதும் அல்ல; ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்யும் முறை அரசியல் சட்டம் 25ஆவது பிரிவுக்கு உட்பட்டு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம்தான்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பலதார மணம் - இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதை பின்பற்றி வாழ்வதற்கு அனுமதித்து விட்டதாகக் கூற முடியாது. மதத்தின் மீதான பக்தி, நம்பிக்கை என்பது வேறு; அதை அப்படியே வாழ்க்கையில் நடைமுறைப்படுத்து வது வேறு; இரண்டுக்கும் இடையே கூர்மையான வேறுபாடு உண்டு.

எனவே உ.பி. அரசு நன்னடத்தை விதிகளின் கீழ் எடுத்த நடவடிக்கை சரியானதே என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அகில இந்திய முஸ்லிம் மதச் சட்ட வாரியம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறிய வாரியம், “இந்த உத்தரவு, பலதார மணத்தை தடுக்கவில்லை.

அதே நேரத்தில், அதை அடிப்படை உரிமையாகக் கோர முடியாது என்றே கூறியிருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மார்க்க அறிஞர் சீனத் கவுக்கத் அலி, உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளார். ‘பலதார மணத்தை’ பெண்களுக்கு எதிரான ஆயுதமாக மிரட்டும் போக்கை இந்த உத்தரவு கட்டுப்படுத்தும் என்று அவர் கூறுகிறார். தொழுகை நடத்துவதுபோல ‘பல தாரமணம்’ மதத்தின் முதன்மையான அம்சம் அல்ல” என்று வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் யூசுப் முச்சல்லா கருத்து கூறியுள்ளார்.

இதேபோல் கிறிஸ்தவ மதச் சட்டமான ‘கேனன்’ சட்டம் குறித்தும் ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் அண்மையில் வந்தது. கிறிஸ்தவ மதச் சட்டத்தின் கீழ், திருமணம், திருமண முறிவுகள் நடக்கின்றன. இதற்கான அதிகாரம் ‘சர்ச்’சு களுக்கு உள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளும் ரோமன் கத்தோலிக்கர்களை தண்டிக்கும் அதிகாரம் இந்திய தண்டனை சட்டங்களுக்கு இல்லை என்று கர்நாடக ‘கத்தோலிக்க திருச்சபை’ முன்னாள் தலைவர் கிளாரன்ஸ் வைஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி விக்ரம் சித்ஜென், சமூகப் பிரச் சினைகளில் மதத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது கவலை தருகிறது. இந்தியாவில் எவ்வளவு காலம் வரை மதச்சார்பின்மை நீடிக்கப் போகிறதோ தெரியவில்லை என்று வியப்பு தெரிவித்தார். மதச் சட்டங்களின் ஆணைகளை சமூக மற்றும் குடும்ப வாழ்க்கைப் பிரச்சினைகளில் திணிக்கக் கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல!

இந்து மதச் சட்டமும் இது போன்ற நம்பிக்கைகளையே வாழ்க்கையில் திணிக்க முற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து சங்பரி வாரங்களால் முன் வைக்கப்படுகிறது. சங்பரிவாரங்கள் கூறும் பொது சிவில் சட்டக் கோரிக்கை - மதச் சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்கள் கோரும் பொது சிவில் சட்டங்களிலிருந்து வேறுபட்டது என்பது கவனிக்கத்தக்கது. (பொது சிவில் சட்டம் குறித்த கட்டுரை இந்த இதழின் வேறு இடத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது)