பிப்.14 உலக காதலர் நாள் - வாழ்த்துவோம்! வரவேற்போம்!

பழந்தமிழர் பண்பாடு காதலைப் போற்றுகிறது; தமிழ் இலக்கியங்கள் காதலைப் பேசுகின்றன; இப்போது காதலுக்கு ஏன் தடை கற்கள்?

பழந்தமிழகத்தில் -

• தெருவில் உப்பு விற்றப் பெண்ணும்
• மீன் விற்ற பெண்ணும்
• பரணில் கிளி விரட்டிய பெண்ணும்
• தந்தைக்கு சோறெடுத்துச் சென்ற பெண்ணும் - ஆண்களைச் சந்தித்து விரும்பியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

- இதுவே நம் இலக்கியங்கள் கூறும் பண்பாடு!

காதலைப் பற்றி பெரியார் கூறுகிறார்:

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து.

“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” - குடிஅரசு 21.7.45

“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.”- விடுதலை 24.5.47

கழக செயலவை தீர்மானம் வெற்றி: காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

26.10.2014 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக செயலவை, காவல் நிலையங்களில் ‘மரண தண்டனை’ வழங்கிவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி, காவல்துறையினர் தப்பி விடுவதை சுட்டிக் காட்டி, தீர்மானம் நிறைவேற்றியது. அத் தீர்மானத்தில், “காவல்நிலைய விசாரணைகளில் நடக்கும் உண்மைகளைக் கண்டறிய, எதிர்காலத்திலாவது கண்காணிப்புக் காமிராக்களை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொருத்த வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. திராவிடர் விடுதலைக் கழகம் முன் வைத்த இந்த ஆலோசனை, இப்போது உயர்நீதிமன்ற உத்தரவு வழியாக நிறைவேற்றப்படவிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. பிரகாஷ்ராஜ் தொடர்ந்த பொதுநல வழக்கில் காவல்நிலையத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எப்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் மார்ச் 9ஆம் தேதிக்குள் கண்காணிப்பு காமிராக்களை பொருத்துமாறு காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. பணி நிறைவடைந்த அறிக்கைiயும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசும் கண்காணிப்புக் காமிரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டது.