வழக்கறிஞர்கள், தங்கள் வழக்கறிஞர் அலுவலகங்களை திருமணம் செய்வதற்குப் பயன் படுத்தக் கூடாது என்றும், திருமணம் என்றாலே அது ‘கொண்டாட்ட மாக’ நடப்பதுதான் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.இராஜேசுவரன், பி.என். பிரகாஷ் அமர்வு 17.10.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. பெரியாரின் சுயமரியாதை திருமணம்கூட இரகசியமாக நடத்துவது அல்ல என்றும் ‘கொண்டாட்டமாக’ பலரையும் கூட்டி வைத்து நடத்துவதுதான் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

எளிமை, சிக்கனத்தை வலியுறுத்தி பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமண முறைக்கும் நீதிமன்றம் தவறான விளக்கங் களை அளித்தது. உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுத்து 26.10.2014 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக்கழக செய லவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. “கொண்டாட்டமாகவும் விழாவாக வும் நடத்தப்படுவதுதான் திருமணம்” என்று உயர்நீதிமன்றம் வரையறுப்பது ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்று தீர்மானம் சுட்டிக் காட்டியது. அதிக எண்ணிக்கையில் திருமணங்களை நடத்தி வைத்து, குற்றவாளிகளைப் போல அதைப் பதிவு செய்த வழக்கறிஞர்களையும் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையாக குறை கூறியது.

இந்த நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய விரும்பும் காதலர் களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து அதைப் பதிவு செய்வதற்கு உதவிடும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா 7.2.2015 சனி மாலை 4 மணியளவில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடை பெற்றது. ஜாதி, மதமற்றோர் கூட்டியக்கம், அம்பேத்கர் பெரியார் கலப்பு திருமணம் செய்தோர் நலச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஜாதி மறுப்பு மணம் புரிந்த தோழர்கள் வேணி, மஞ்சுளா, ஓவியா, சோலை மாரியப்பன், பொழிலன், தியாகு, விடுதலை இராசேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். வழக்கறிஞர் குணசேகரன் ஒருங்கிணைத்தார். திருப்பூர் குணா எழுதிய ‘காதல்’ என்ற ஜாதி வெறியர்களின் வன்முறைகளை விவரிக்கும் நூலும் ஜாதி ஒழிப்புக்கான நாட்காட்டியும் வழக்கறிஞர்களுக்கும் பார்வை யாளர்களுக்கும் விழாக் குழு சார்பில் வழங்கப்பட்டன.