அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மதப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அய்.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு உத்தரவிட்டுள்ளார். மதச் சார்பற்ற ஒரு நாட்டில் அதிகாரிகள் மதப் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது என்ற கருத்து வரவேற்கப்பட வேண்டியதாகும். அதிகாரி உமாசங்கர், கிறிஸ்துவ சுவிசேஷப் பரப்புரையாளராக ஊர்தோறும் பயணம் செய்கிறார். தனது ‘சுவிசேஷ’ப் பிரச்சாரத்தின் வழியாக பார்வையற்றவர்களுக்கு பார்வை பெற்றுத் தருவதாகவும் பேச இயலாதவர்களை பேச வைப்பதாகவும் கூறுவதும் அறிவியலுக்கு எதிரானது. நேர்மைக்கு புகழ் பெற்ற ஒரு அதிகாரி, கடும் மன உளைச்சலில் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்றே தெரிகிறது. ஆனாலும், அவரது மதப் பிரச்சாரம் ஏற்கவியலாது என்பதே நமது உறுதியான கருத்து.

அதே நேரத்தில், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டக் கூடாது என்ற அரசு ஆணைகள் மதிக்கப்படுவது இல்லை. காவல் நிலையங்கள், பஜனை மடங்களாக காட்சியளிக்கின்றன. தேர்தல் ஆணையர் நீதிபதி என்ற நிலையில் உள்ளவர்கள் பூணூல் மேனியோடு சங்கராச்சாரி காலில் வீழ்கிறார்கள். அதிகாரிகள் மேஜையில் மதத் தலைவர் படங்கள் அலங்கரிக்கின்றன.  ‘சபரிமலை’ போகும் வேடங்களோடு அலுவலகம் வருகிறார்கள். அரசு வளாகங்களில் கோயில் கட்டுகிறார்கள். ஜெயலலிதா வழக்கு, பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்தபோது இந்து அறநிலையத் துறை ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு உத்தரவிட்டது. பண்ணாரி அம்மன் கோயிலில் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகள் தீ மிதிக்கிறார்கள். நீதிபதிகளும், உயர் அதிகாரிகளும் ‘இலக்கிய உரை’ என்ற பெயரில் இராமாயணம், ‘பகவத் கீதை’, பக்தி இலக்கியங்கள் குறித்து பரப்புரை செய்கிறார்கள். இப்படி ஏராளம் பட்டியலிட முடியும். வீட்டிற்குள் மட்டுமே இருக்க வேண்டிய இந்த மத வழிபாடுகளை பொது விடங்களுக்குக் கொண்டு வருவதுகூட ஒரு பரப்புரைதான். இதற்கெல்லாம் ஏன் எந்தத் தடையும் இல்லை?

உமாசங்கருக்கு எதிராக போராடக் கிளம்பியிருக்கும் ‘சங்பரிவாரங்கள்’, அதிகாரிகளை தங்களின் மதச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தியதை ஏராளமாக பட்டியலிட முடியும். சான்றுக்கு சில:

•             அரசு ஊழியர்கள், ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினர் களாக இருக்கலாம் என்று அனுமதித்து,  அதற்கான தடையை நீக்கி ஆணையிட்டது, குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி. அப்போது முதல்வராக இருந்தவர் கேசுபாய் பட்டேல். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் ஜன.3, 2000. அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்க தடை இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ்.சில் எப்படி உறுப்பினராகலாம் என்று எதிர்ப்புகள் வந்தன. அதற்கு பிரதமர் வாஜ்பாய், “ஆர்.எஸ்.எஸ். அரசியல் அமைப்பு அல்ல; அது ஒரு கலாச்சார அமைப்பு” என்று நியாயப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன. 5 நாள்களில் 12 ஒத்தி வைப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது வாஜ்பாய் ஆட்சிக்கு நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி பலம் இல்லை. கூட்டணி கட்சிகளின் தயவில் செயல்பட வேண்டியிருந்ததால் கட்சித் தலைவர் குஷாபாவு தாக்கரே வழியாக குஜராத் முதல்வர் கேசு பாயிடம் பேசினர்.  ஆர்.எஸ்.எஸ். ஆணையை திரும்பப் பெறக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தது. கடைசியில் கோவிந்தாச்சார் யாவும், வெங்கய்ய நாயுடுவும், குஜராத் முதல்வரிடம் மத்திய ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி உத்தரவை திரும்பப் பெறச் செய்தனர்.

•             1948ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்துக்கு நள்ளிரவில் இராமன், சீதை சிலைகளைக் கொண்டு வந்து போட்டார்கள். இராமன், சுயம்புவாகத் தோன்றியிருக்கிறான்; இதுவே இராமன் பிறந்த இடம் என்றார்கள். மசூதி பூட்டப்பட்டது. பிறகு இராமனை வழிபட மசூதியை திறக்க வேண்டும் என்று வழக்குப் போட்டார்கள். நீதிபதியாக இருந்த பாண்டே, மசூதியை வழிபாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டார். இதற்காக அந்த நீதிபதியை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது பாரதிய ஜன சங்கம்.

•             அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தபோது உ.பி. முதல்வராக இருந்தவர் பா.ஜ.க.வைச் சார்ந்த கல்யான் சிங். ‘கரசேவை’ என்ற பெயரில் மசூதியை இடித்துத் தள்ள திட்டமிட்ட நிலையில், கல்யாண்சிங், பைசாபாத் காவல்துறை பொறுப்பில் டி.பிராய் என்கிற, மதவெறி அதிகாரியை பொறுப்பாக நியமித்தார். மசூதி இடிக்கப்பட்டபோது, அதைத் தடுக்க வந்த மத்திய ஆயுதப் படை போலீசை தடுத்து நிறுத்தி, ‘கரசேவகர்கள்’ மசூதியை இடிக்க அனுமதித்தார், டி. பிராய். மசூதி இடித்து முடிக்கப்பட்டப் பிறகு, தனது பதவியிலிருந்து விலகினார். அவரை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராக்கி நன்றிக் கடன் தெரிவித்தது.

•             பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் சங்பரிவாரங்கள், வன்முறையில் இறங்கின. இஸ்லாமியர்கள் குறி வைத்து தாக்கப்பட்டார்கள். கலவரங்கள் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி, நீதிபதி சிறீ கிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. அதற்குப் பிறகு, 1996இல் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்த சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, இந்த ஆணையத்தை கலைக்க முடிவு செய்தது. கடும் எதிர்ப்புகள் காரணமாக தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டது. காவல்துறை அதிகாரிகளே கலவரத்திலும், கொள்ளையிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்டி சிரிகிருஷ்ணா ஆணையம் முன் வைத்ததோடு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய 31 காவல்துறை அதிகாரிகள் பட்டியலையும் வெளியிட்டது. இவர்கள் மீது பா.ஜ.க. - சிவசேனா ஆட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன தெரியுமா? 10 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது. ஒரு அதிகாரி மும்பை மாநகர ஆணையராகவே நியமிக்கப்பட்டார். ஆணையம் குற்றம் சாட்டியிருந்த இதர 12 அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை அரசே விலக்கிக் கொண்டது.

•             அதிகாரிகளை மட்டுமல்ல, இராணுவத்தினரும் பா.ஜ.க. ஆட்சியில் வரம்பு மீறி மதவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதற்கு அரசும் அனுமதித்தது.  2000ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்தபோது, பா.ஜ.க. செயற்குழு கூடியது. அந்த செயற்குழுவில் இந்திய இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு கார்கில் போர் நிலவரம் குறித்து விளக்கமளித்துப் பேசினர். கலந்து கொண்ட அதிகாரிகளின் பெயர்- இராணுவ செயல்பாட்டுக்கான தலைமை இயக்குனர் எம்.சி. விஜ், உதவி ஏர்மார்ஷல் எஸ்.கே. மாலிக்.

•             கார்கிலுக்கு அருகே ஒரு பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ‘சிந்து தர்ஷன்’ என்ற விழாவை நடத்தியபோது (1998) விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ததே, இந்திய இராணுவம்தான். லெப்டினன்ட் ஜெனரல் வி.எஸ். புத்வார் என்ற அதிகாரி, முன்னின்று ஏற்பாடுகளை செய்தார். கார்கில் போருக்குப் பிறகு, மீண்டும் இதே பகுதியில் ‘வேதங்களை’ ஓதி, ஆர்.எஸ்.எஸ். விழா நடத்தியபோது, இந்திய இராணுவ அதிகாரிகளும் படையினரும் விழாவில் பங்கேற்றனர். அமைச்சர்கள் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சிந்துதர்ஷன் விழாக்களில் இராணுவத்தினர் பங்கேற்பது வழக்கம். ஆனால், இராணுவமும் மதவெறியும் கைகோர்த்து நிற்கும் இந்த ஆபத்துகள் குறித்து கண்டனங்கள் எழுவது இல்லை.

அதிகாரிகள் மதப் பிரச்சாரம் செய்யலாமா என்று, உமாசங்கர்களைக் கேட்கும் சங்பரிவாரங்கள், மேலே நாம் பட்டியலிட்டுள்ளவைகளுக்கு என்ன பதிலை கூறப் போகிறார்கள்?