ஆக. 29ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் விசுவ இந்து பரிஷத். ஆனால், அதை காந்தி நினைவு நாளில் தொடங்கப்பட்டதாக மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள், சாமியார்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு விசுவ இந்து பரிஷத். பாரதிய ஜனதா கட்சி உருவாவதற்கு முன்பே 1964ஆம் ஆண்டிலே ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் ஆலோசனை பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அயோத்தியில் ‘இராமன்’, மதுராவில் ‘கிருஷ்ணன்’, காசியில் ‘விசுவநாதன்’ ஆகிய மூன்று மதக் கடவுள்களுக்கும் அங்கே அமைந்துள்ள மசூதிகளைத் தகர்த்துவிட்டு கோயில்கள் கட்டவேண்டும் என்று அறிவித்தது. பிற மதத்தினரை ‘இந்து’ மதத்துக்கு மாற்றுவதற்காகவே ‘தர்ம பிரச்சார்’ என்ற தனிப் பிரிவை, விசுவ இந்து பரிஷத் உருவாக்கியுள்ளது. 1966ஆம் ஆண்டு  பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த திட்டமிட்டு, அவரது வீட்டுக்கு தீ வைத்து, சங் பரிவாரங்களோடு சேர்ந்து விசுவ இந்து பரிஷத்தும்  வெறியாட்டம் நடத்தியது.

இந்த விசுவ இந்து பரிஷத், திருச்சியில், ‘ஜனவரி 30ஆம் தேதி’ காந்தி கொலை செய்யப்பட்ட நாளில் பொன் விழா ஆண்டை கொண்டாட முடிவு செய்தது. இதற்கு காவல்துறையும் அனுமதி வழங்கியது. காந்தி கொலை செய்யப்பட்ட நாளில் காந்தி கொலையை நியாயப்படுத்தும் ஒரு அமைப்புக்கு அனுமதி வழங்கும் நிலைக்கு காவல்துறை - ஆர்.எஸ்.எஸ்.   அமைப்புபோல் செயல்படுவது வெட்கக்கேடானதாகும். இதைக் கண்டித்து, திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், உடன்பாடுள்ள அமைப்புகளைத் திரட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தியது.  ஜனவரி 30 பகல் 11.30 மணியளவில் திருச்சி தெப்பக்குளம் அருகிலுள்ள காந்தியார் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். மதவெறிக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டு, ‘விசுவ இந்து பரிஷத்’ கூட்டத்துக்கு அனுமதித்த காவல்துறையைக் கண்டித்து, காந்தி சிலையின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாலை அணிவிக்க வந்த காங்கிரசாரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார், தலைமைக்குழு உறுப்பினர் புதியவன், தோழர்கள் பழனி, முருகானந்தம், முத்து, தெய்வமணி, வழக்கறிஞர் சந்துரு, ஆதித் தமிழர்  பேரவைத் தோழர்கள் மலர்மன்னன், ஆறுமுகம், அறிவழகன், மா.லெ. மக்கள் விடுதலைத் தோழர்கள் வழக்கறிஞர் சுரேஷ், செல்வக்குமார், த.ஒ.வி. தோழர் சம்பத் உள்ளிட்ட 15 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல புவனா சரவணன் தலைமையில் கோட்சே பட எரிப்புப் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்

15 பேர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்

பெங்களூர், சிவாஜி நகர், வேளாண்மை அறிவியல் நிறுவன அரங்கில் ‘கற்பி ஒன்று சேர் ’ அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஒருங்கிணைப்பில் 26-01-2015 திங்கள் அன்று பிற்பகல் 3-00 மணி முதல் 8-00 மணிவரை  பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு நடந்தேறியது.

நிகழ்ச்சி கர்நாடக மாநில ரிபப்ளிகன் கட்சி, சமதா சைனிக் தள் ஆகியவற்றின் தலைவராகிய முனைவர் வெங்கடசுவாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்டையா, சப்தகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திரநாத், பெங்களூர் பல்கலைக் கழக சமூகவியல்துறை தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே ஆகியோர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிப் பணிகளை தமிழிலும், கன்னடத்திலும் விரிவாகப் பேசினர். கூட்டத் தலைவரும் கன்னட தலைவர்களும் பெரியாரைப் பற்றியும் அவரது போராட்டங்களைப் பற்றியுமே அதிகம் பேசினர்.

நிகழ்ச்சியில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை பற்றிய ஆறு, ஆறு பாடல்களைக் கொண்ட குறுவட்டுகள் தமிழ், கன்னட மொழிகளில் வெளியிடப் பட்டன. பாடல்களைத் கழகத் தோழர் சித்தார்த்தனும், பாடகி சுஜாதாவும் எழுதி, தோழர்கள் சுஜாதா, கோபிநாத் ஆகியோர் பாடியிருந்தனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் அம்பேத்கரைப் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலுக்கும் பெரியாரைப் பற்றிய ஒரு கன்னடப் பாடலுக்கும் மாணவர்கள் நடனம் ஆடினர். குறுவட்டு வெளியீட்டைத் தொடர்ந்து மேட்டூர் கருப்பரசன் கலைக் குழுவினரால் வீதி நாடகங்கள் நடத்தப் பட்டன. அவற்றை மக்கள் வெகுவாக வரவேற்றனர். குறிப்பாக  மூன்றில் ஒரு பங்கினராக இருந்த கன்னட மக்களும், கன்னடத் தலைவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.