இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் புதுடில்லியில் மார்ச் 27ஆம் தேதி ‘நிறுவனர் நாள்’ கூட்டம் நடந்தது. அமெரிக்காவில் ‘வேதம்’ கற்றுத் தரும் டேவிட் ஃபிராலெ என்பவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘சங்பரிவார்’ அமைப்பினர் கூடியிருந்தனர். ஃபிராலெ தனது உரையில், “ஆரியர் படை எடுத்து வந்தார்கள்” என்ற கருத்தே தவறானது என்று கூறினார். புராதன இந்தியப் பெருமைகள் இந்தியாவில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படாததையும் அவர் குறை கூறினார்.

“பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும்தான் ‘ஆரிய படை எடுப்பு’ என்ற தவறான கோட்பாட்டை கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் கல்வியாளர்களே பழம் பெருமைகளை மறந்துவிட்டு, ‘ஆரிய படை எடுப்பு’ என்றெல்லாம் நடக்காததைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது வரலாற்று ஆய்வு மய்யத்தின் உறுப்பினரும் செயலாளருமான கோபிநாத் இரவீந்திரன், இந்த பார்ப்பனிய அமெரிக்கரின் உரையிலிருந்து சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக ஆரிய படையெடுப்பு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பல்வேறு இன கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா.

இதன் பன்முகத் தன்மைக்கு மாறாக ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடாது என்று கூறியபோது, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூச்சல் போட்டு பேச்சை முடிக்கக் கோரினார். அப்போது, பார்வையாளர் வரிசையில் இருந்த மய்யத்தின் தலைவரும், ஆர்.எஸ்.எஸ்.காரருமான ஒய். சுதர்சன் ராவ் மேடைக்குச் சென்று, “ஆரியப் படை எடுப்பு என்பது பொய்; அதற்கு தொல்பொருள் சான்று ஏதும் கிடையாது” என்ற கூறி செயலாளர் ரவீந்திரன் கருத்தை மேலும் வெளிப்படுத்த விடாமல் தடுத்தார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மய்யம், ‘ஆரிய மய்யமாகவே’ செயல்படத் தொடங்கியிருப்பதோடு, மாற்றுக் கருத்துகளை அனுமதிக்கவே மறுக்கிறது. ‘இந்து’ நாளேடு (மார்ச் 28) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Pin It