காஞ்சிபுரம் புறநகரையொட்டிய செங்கொடியூர் (மேல் கதிர்பூர்) கிராமம், தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த ஊர்.

அங்குதான் காஞ்சி மக்கள் மன்றம் இயங்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும், போர்க் குணமிக்க பெண் தோழர்கள் இந்த மன்றத்தின் செயல்பாட் டாளர்கள், ஆண் தோழர்களும் உண்டு. அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்கள் வழியாக மக்களின் கவனத்துக்கு வந்தது இந்த அமைப்பு. அரசு அமைப்புகளை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்காக இந்தப் பெண் போராளிகள் கொடுத்த விலை அதிகம். பொய்யாக புனையப் பட்ட கொலை முயற்சி வழக்குகளையும் சந்தித்து சிறை புகுந்தவர்கள். பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்களின் அடையாளமாக களத்தில் நிற்கிறது இந்த அமைப்பு.

செங்கொடியூரில் மக்கள் ஆதரவுடன் இவர்கள் நிறுவியுள்ள மக்கள் மன்றம்தான் இந்தத் தோழர்களின் குடியிருப்பு. குடும்ப உறவுகளை விட்டு விலகி, தங்களுக்கான கொள்கைக் குடும்பத்தை ஜாதி, மதம், பால் வேறுபாடுகளைக் கடந்து இவர்கள் உருவாக்கி யிருக்கிறார்கள். உருவாக்கியது மட்டுமல்ல, பல ஆண்டுகள் அதை வெற்றிகரமாக நடத்தி வருவதுதான் பாராட்டுக்கும் வியப்புக்கும் உரியதாகும். இந்த வாழ்க்கை முறைக்கு, “பொது வாழ்வகம்” எனும் அழகான பெயரையும் சூட்டியிருக்கிறார்கள்.

வாழ்வகத்தைச் சுற்றி ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் வீடுகள் வரிசையாக அணி வகுத்து நிற்கின்றன. அவை அரசு கட்டித் தந்த குடியிருப்புகள். பொது வாழ்வகத் தோழர்களின் வலிமையே இந்த மக்கள் தரும் பேராதரவுதான். ஒவ்வொரு வீட்டின் சுவர்களிலும் சமுதாய மாற்றத்துக்கான புரட்சியாளர்களின் கருத்துகள் வண்ணங்களில் பளிச்சிடுகின்றன. வாழ்வகத்தில் நுழைந்தாலோ அங்கே புரட்சி சிந்தனைகள் மணம் பரப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பெரியார், மார்க்ஸ், மாசேதுங், சேகுவரா படங்களுடன் அவர்களின் கருத்துகள் பதியப்பட்டிருக்கின்றன.

இந்தப் பொது வாழ்வகம், உலகத் தமிழர்களின் கவனத்துக்கு கொண்டு சென்ற ஒரு நிகழ்வு உண்டு என்றால் அது செங்கொடியின் வீரமரணம்தான். இதே வாழ்வகத்தில் இளம் வயதில் பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்ட செங்கொடி, புரட்சிகர சிந்தனைகளை தனக்குள் வரித்துக் கொண்டு, போராளியாக மாறினார்.

கலை நிகழ்வுகளில் சமூகப் பங்களிப்பை ஆற்றினார். இராஜீவ் கொலை வழக்கில் முறையற்ற விசாரணைகளால் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட 3 தமிழர்களுக்காக அவர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக எரியும் நெருப்புக்கு தன்னை பலியாக்கிக் கொண்டவர் செங்கொடி. உலக வரலாற்றிலே மரண தண்டனைக்கு எதிராக ஒரு பெண் தீக்குளித்து வீரமரணத்தைத் தழுவிய வரலாறு இதுதான். ஜாதி - இனம் - குடும்பம் கடந்த புரட்சிகர சமூக வாழ்க்கை எத்தகைய போராளிகளை உருவாக்குகிறது என்பதற்கு இது உதாரணம்.

செங்கொடி நினைவகம் பொது வாழ்வகத்தின் பின்புறத்தில் மக்கள் ஆதரவுடன் நிறுவப்பட்ட செங்கொடி நினைவிடத்தின் முகப்பில் இருபுறமும் திலீபன், முத்துக்குமார் சிலைகள், தூய்மையான பளிங்கு கற்களில் நடந்து சென்று செங்கொடியின் உருவச் சிலையை நெருங்கும்போது இனம் புரியாத ஒரு உணர்வு; இந்த உணர்வு கோயில்களில் முடங்கிக் கிடக்கும் கல்சிலைகளுக்கு கும்பிடு போடும் எந்திரத்தனமான அனிச்சை நிகழ்வு அல்ல; சமூகத்துக்காக எந்த தியாகத்துக்கும் தயாராக வேண்டும் என்ற உந்துதலைத் தரும் இலட்சிய உணர்வு.

பொது வாழ்கவம் இயற்கையை நேசிக்கிறது. சுற்றிலும் இயற்கை மணம் வீசும் பசுமைகள். பறவைகள் இனிமையான விதம் விதமான ஓசைகளை எழுப்புகின்றன.

அருகே பொது நிகழ்வுகளுக்கான மக்கள் கூடும் திறந்தவெளி, அதற்கான எழிலார்ந்த மேடை.

பணிகளை தோழர்கள் திட்டமிட்டு, அதற்கான பொறுப்புகளை சுழற்சி முறையில் செய்து முடிக்கிறார்கள். ஒரே சமையல் கூடம், ஒரே சாப்பாட்டுக் கூடம், உணவுக்கான மணி ஒலித்ததும் கூடுகிறார்கள். ஒன்றாக அமர்ந்து உண்கிறார்கள்! கிராமத்து மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை இளம் பருவத்திலேயே மக்கள் மன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கிறார்கள். அமைப்பின் மீது இந்த மக்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அப்படி இளம் பருவத்திலிருந்தே வாழ்ந்த, வளர்ந்த பல பெண்கள் இப்போது பட்டதாரிகள்; வழக்கறிஞர்கள்.

மக்கள் மன்றத்துக்கு மேலும் ஒரு பெருமை சேர்ப்பது, அவர்கள் நடத்தும் கலைக் குழு. பெரும்பாலும் பெண்களே கலை நிகழ்வுகளை நிகழ்த்துகிறார்கள்.

பறை அடிக்கிறார்கள்; நடனமாடுகிறார்கள்; நாடகம் நடத்துகிறார்கள்; புரட்சிகரப் பாடல்களைப் பாடுகிறார்கள். மக்களை சமூக மாற்றத்துக்கு அணியமாக்கும் புரட்சிகர கலை நிகழ்வுகள், மக்களின் பேராதரவைப் பெறுகின்றன.

ஆண்டுதோறும் மே நாள் பேரணியை நடத்துவது வழமை; இப்போது செங்கொடி நினைவு நாளும் சேர்ந்து கொண்டது.

இத்தனை சிறப்புகளுடன் செயல்படும் காஞ்சி மக்கள் மன்ற பொது வாழ்வகத்தைச் சார்ந்த மூன்று தோழர்களின் வாழ்க்கை இணை ஏற்பு விழா, பொது வாழ்வக வளாகத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணியளவில் மிகச் சிறப்புடன் நடந்தேறியது.

மேகலா-சிவபெருமாள் ஒரு இணையர்; மேகலா-பொது வாழ்வகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். சிவபெருமாள்-உடற்பயிற்சி ஆசிரியர்; திராவிடர் விடுதலைக் கழகத் தோழர். மற்றொரு இணையர் உமா-பாலமுருகன். இருவரும் பொது வாழ்வகத்தின் தோழர்கள். மூன்றாவது இணையர் மகாலட்சுமி-தஞ்சைத் தமிழன். மகாலட்சுமிவழக் கறிஞர். தஞ்சைத் தமிழன்-ஓவியர். இருவரும் பொது வாழ்வகத் தோழர்கள்.

விழாவுக்கு முதல் நாளிலிருந்தே கொள்கைத் தோழர்கள், திரளத் தொடங்கிவிட்டனர். மணவிழா வேலைகள் தொடங்கிய ஒருவாரத்துக்கு முன்பே மக்கள் மன்றத் தோழர்கள் அனைவருக்கும் கிராம மக்களே மகிழ்ச்சியோடு உணவு வழங்கினர். மக்கள் மன்றம் பணியாற்றும் கிராமங்களைச் சார்ந்த பெண்களும் ஆண்களுமாக சுமார் 200 தோழர்கள் இணையேற்பு விழாவுக்கான அனைத்து வேலைகளையும் ஓடி ஓடி செய்தது கண்கொள்ளாக் காட்சி.

காலை 10 மணியளவில் மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. புரட்சிகரப் பாடல்கள், பறை முழக்கங்களுக்கிடையே வாழ்த்துரை உறுதியேற்பு நிகழ்வுகள் நடந்தன. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று உறுதிமொழி கூறி இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். தாலி இல்லை; மதச் சடங்குகள் இல்லை; ஜாதிகளைக் கடந்த திருமணம்.

தோழர் சரசுவதி, தோழர் தலித் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லக்கண்ணு, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பாசறை செல்வராசு, வழக்கறிஞர் பாரிவேந்தன், வேல் முருகன், பயிற்சியாளர் முத்து உள்ளிட்ட தோழர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். மணவிழா உறுதி ஏற்ற தோழர்கள், மணமகள் கோலத்தில் மாலையுடன் கலை நிகழ்வுகளில் பங்கேற்றதை, தோழர் ஆர். நல்லக்கண்ணு தனது உரையில் வியந்து பாராட்டினார். இப்படி ஒரு காட்சியை வேறு எங்கும் பார்க்க முடியாது என்றார்.

இந்த மண விழாவுக்கும் - மன்றத்துக்கும் தாமாக முன் வந்து ஆர்வத்துடன் உதவி வரும் தோழர்களின் பட்டியலை மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர் மகேசு நன்றியுடன் படித்தபோது உண்மையான பொதுத் தொண்டுக்கு சமூகத்தின் ஆதரவுக்கரங்கள் நீளவே செய்யும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

இணையேற்பு நிகழ்வின் அழைப்பிதழ் இந்த இணையர்கள் தேர்வு நடந்த முறையை இவ்வாறு பதிவு செய்தது.

“தோழர்களே! சாதி, மதம் மறுத்து பெண்ணடிமைத்தனத்தின் சின்னமான தாலியை நிராகரித்து மூடச் சடங்குகளைப் புறக்கணித்து போலி ஆடம்பர பகட்டுகளை ஒழித்து, மனித உறவை வெறும் பண உறவாக மாற்றும் மொய் வசூல் பண்பாட்டினைத் தவிர்த்து நடைபெற உள்ள இச்சுயமரியாதை திருமண விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இம்மணமக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை மக்கள் பணிக்கென அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தது இவ்வாறு தான்... இவர் நேர்மையும், நற்பண்புகளும் நிறைந்தவரா? நமது சமூக பணிக்கு இடையூறு செய்யாதவரா? உழைப்பை நேசிப்பவரா? கொள்கைகளை எச்சூழலிலும் விட்டுக் கொடுக்காதவரா? இங்கு புற அழகோ, அந்தஸ்தோ, படிப்போ பிரதானமாக பார்க்கப்பட வில்லை. மாறாக, அமைப்புத் தோழர்களின் பரிந்துரையையேற்று பெற் றோரின் சம்மதத்தைப் போராடிப் பெற்று அனைத்திற்கும் மேலாக தங்களுடைய விருப்பமும் அதில் அடங்கியிருந்ததால் எடுக்கப்பட்ட முடிவே ஆகும்.” ஜாதி கடந்த பொது வாழ்வக வாழ்க்கை முறை சாத்தியமானதே என்பதை நடை முறையில் சமுதாயத்துக்கு நிரூபித்துக் காட்டி வருகிறது, காஞ்சி மக்கள் மன்றம்.

மண விழாவில் வாழ்த்திய ஒரு தோழர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இயக்கங்களைச் சார்ந்த தோழர்களின் திருமணத்தில் நாம் வாழ்த்தும்போது இது குடும்பத் திருமணம் அல்ல; இயக்கத் திருமணம் என்று கூறுவோம். ஆனால் இந்தத் திருமணம் இயக்கத்தில் நடக்கும் நமது குடும்பத் திருமணம்”. ஆம்; இயக்கங்களின் உறவுகளே குடும்ப உறவுகளாவதுதான் சமூக மாற்றத்துக்கான திறவுகோல்! அந்த சாதனையை நிகழ்த்துகிறது இந்த ‘பொது வாழ்வகம்’! 

Pin It