பார்ப்பன வேத மதம் - தீண்டப்படாத பார்ப்பனரல்லாத மக்களுக்கு காலம் காலமாக சம உரிமைகளை மறுத்தும் வர்ணம் - ஜாதியமைப்புகளைத் திணித்தும் அடிமைப்படுத்தியது.

அப்படி மறுக்கப்பட்ட உரிமைகளுக்குப் போராடியவர் பெரியார். அரசியலில் - கல்வியில் - உத்தியோகங்களில் - இந்த மக்களுக்கு உரிய பங்கினை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்தது. 1925இல் காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறினார்.

அதே 1925இல் தான் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பார்ப்பனர்கள் “இராஷ்டிரிய சுயம் சேவக் சங்” (ஆர்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை நாக்பூரில் தொடங்கினார்கள். “இந்தியா இந்துக்களின் நாடு; இந்துக்களை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று கூறு போடக் கூடாது” என்ற கொள்கைகளை உருவாக்கி, ஜாதியமைப்பு வர்ணாஸ்ரமப் பிரிவுகளை நியாயப்படுத்தினார்கள்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் அமைப்பு களான ஜனசங்கமும், அதற்குப் பிறகு உருவான பாரதிய ஜனதாவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற இடஒதுக் கீட்டை உறுதியாக எதிர்த்தன; மண்டல் பரிந்துரையை அமுல்படுத்திய வி.பி.சிங் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது.

சுமார் 90 ஆண்டுகாலம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் மறுத்து வந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் திடீரென உ.பி.யில் ஒரு நிகழ்ச்சியில் ஆதரித்துப் பேசியுள்ளார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்கிறார்.

ஏன் இந்த மாற்றம்? இந்துக்களை மதத்தின் அடிப்படையில் ஒன்று திரட்டி, ‘இந்து ராஷ்டிரம்’ அமைக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உணர்வுகளே மேலோங்கி நின்றன! நிற்கின்றன! எனவே, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகக் கூறி வலை வீசும் முயற்சிகள் தொடங்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களை இந்துக்களின் பிரதிநிதிகளாக்கி அவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை கட்டமைத்து, மதக் கலவரங்களுக்கு கூர் தீட்டுகிறார்கள். இந்துமத அணி திரட்டலுக்கு இதுவே சரியான வழி என்பதே இவர்களின் திட்டம்.

காலம் காலமாக இந்து பார்ப்பன தர்மம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுத்த சமவாய்ப்பையும் - சுயமரியாதையையும் - மீட்க வந்த இடஒதுக்கீடு - இப்போது இந்து மத அணி திரட்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஆபத்தானது; இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே குழி தோண்டி புதைக்கும் சூழ்ச்சியானது! தமிழ்நாட்டிலோ இடஒதுக்கீட்டை - நேர் எதிர் திசையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் தங்களை ஜாதித் தலைவர்களாக்கிக் கொண்டு, சொந்த ஜாதியினரை அரசியல் அதிகாரத்துக்கான வாக்கு வங்கிகளாக மாற்றத் துடிக்கிறார்கள். ‘தலித்’ மக்களை எதிரிகளாக்கி கலவரங்கள் தூண்டப்படுகின்றன.

இந்த ஜாதிய அணி திரட்டலுக்கு - சமூக ஜனநாயகம் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

ஆம்! மதவெறிக்கும் ஜாதி வெறிக்கும் இடஒதுக்கீடு எனும் சமூக நீதி பலி கடாவாக்கப்படுகிறது. ஆபத்திலிருந்து சமூகநீதியை மீட்டெடுக்க வேண்டிய சவால் இப்போது மதச் சார்பின்மை - சமூக நீதி சக்திகள் முன் எழுந்து நிற்கிறது.

இடஒதுக்கீடு நோக்கம் குறித்து பெரியார் கூறுகிறார்: “நமக்கு இழிவையும் கீழ்த் தன்மையையும் வசதியின்மையையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து மக்களுக்கு சமமான தன்மை வரும் வரை இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து நாகரிகமடைந்து அரசியலில் கலந்து கொள்வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் அவரவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும்.” - ‘விடுதலை’, பெரியார், 9.4.1950 ‘மதம்’ குறித்து பெரியார் கூறுகிறார்: “மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் - அதுவும் காலத்துக்கும் அறிவுக்கும், ஏற்ற மாறுதலுக்குக் கட்டப்பட்டது என்பதாக இல்லாமல் - மதத்திற்கே மனிதன் ஏற்பட்டான் என்றும்; அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமை என்றும்; அது எப்படிப்பட்டதானாலும் அதைப் பற்றிக் குற்றம் சொல்லவோ, குறை சொல்லவோ, திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாயிருந்தாலும் அதை அழித்துத் தீர வேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடைய கடமையாகும். ஆகவே, அக்கடமைக்குட்பட்டவைகள்தாம் சமயக் கொள்கை யாகும்.” - ‘குடிஅரசு’ 25.1.1931

“அந்தக் காலத்திற்குத் தோற்றுவிக்கப்பட்ட மதமும் - கடவுளும் அன்றையப் பாதுகாப்புக்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்புக்கு இன்று யாரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஒரு 5 ரூபாய் நோட்டை வைத்து அதன் மீது ஒரு பளுவையும் வைத்து, நாலு பக்கங்களிலும் ஏசுநாதர், முகம்மது நபி, சிவன், மகாவிஷ்ணு என்று எழுதிவிட்டுப் போய்விட்டால் ஒருவன்கூட அதை எடுக்கத் துணிய மாட்டான். இன்றையக் காலத்திலோ அதை ஒருவன்கூட எடுக்காமல் இருக்க மாட்டான்.” - ‘விடுதலை’ 11.3.1948

இதுவே - இன்றைய மதங்களின் நிலை! சமத்துவத்துக்காக போராடி பெற்றதே இடஒதுக்கீடு எனும் சமூக நீதி அந்த நீதியை தனியார் துறைகளிலும் வென்றெடுக்கவும் - ஜாதி ஒழிப்புக் கொள்கையை முன்னெடுக்கவும் - பொருளியல் சுரண்டலுக்கும், பெண்ணடிமைக்கும் எதிராகவும் முன்னெடுக்கவும், பெரியார் பிறந்த நாளில் சூளுரைப்போம்!   

Pin It