ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத் தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கியிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவானவரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது.

ஆனால், அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன.இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலைநீடித்தது.

பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கெனவே உள்ள மாநிலங்களில் ஒன்றாகி, தனித் தன்மையை இழக்க வேண்டி வரும் என்றும், மன்னர் ஹரிசிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, தனது பூர்வீகமான காஷ்மீர், இந்தியாவுடன்இணைந்திருக்க வேண்டும் என விரும்பினார். இதனை கௌரவப் பிரச்சினையாகக் கருதினார்.

காஷ்மீரைத்தன்னுடன் இணைப்பதில் விருப்பம் காட்டிய பாகிஸ்தான் தனது இராணுவத்தை நிலைநிறுத்தியது. இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரிசிங். இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir-POK)) என்று இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இருநாடுகளும் போட்டியிட்டன.

இந்த விவகாரம் 1948 இல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21.4.1948 அன்று தீர்மானம் (எண்.47) நிறைவேறியது. இதன்படி இருநாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஊடுருவிய பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். ஆனால், இது நிறைவேறவில்லை.

இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச்சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐ.நா. சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும்ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஐ.நா.அவையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லா. அவருக்கு ஐ.நா. சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால்,பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை வெளியேற்றினால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்என இந்தியா கூறியது.

நேருவுடன் ஷேக் அப்துல்லா நட்பு பாராட்டுவதாலும், இந்திய இராணுவம் நிலை கொண்டிருப்பதாலும் காஷ்மீர் மக்களால் சுதந்திரமாகவாக்களிக்க முடியாது என பாகி°தான் கூறியது.

உலக நாடுகளின் தலையீட்டில் இருதரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவதுநாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக் கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற அய்.நா. ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது.

அதே நேரத்தில் காஷ்மீரைத் தக்க வைத்துக்கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான், காஷ்மீர்மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி தரும் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவின் உருவாக்கம்.

இந்த சிறப்புத் தகுதியைப் பெறுவதன் மூலம் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கலாம் என நினைத்தார் ஷேக் அப்துல்லா. பொது வாக்கெடுப்பைத் தவிர்க்க இது நல்ல வழி என நினைத்தது நேரு அரசாங்கம். இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்புத்தகுதியை அளிக்கிறது. இந்த சிறப்புத் தகுதியின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் மாநில ஆட்சிக் காலம் 6 ஆண்டுகளாகும். காஷ்மீர் மக்கள் தங்களுக்கு என்று சிறப்புச் சட்டங்கள் இயற்றி அதன் கீழ் வாழ்கிறார்கள். இதில் குடியுரிமை, சொத்துரிமை,அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும். இந்தச் சிறப்பு சட்ட பாதுகாப்பு காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிற பழங்குடியினருக்கும் உண்டு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச்சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரியவரும் அவரது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவரும், காஷ்மீர் மகாராஜாவான ஹரிசிங்கின்முன்னாள் திவானுமான தமிழகத்தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார்தான் இச்சட்டப்பிரிவை வடிவமைப்பதில் முன்னின்றார். உள்துறை அமைச்சர் பட்டேலின் ஒத்துழைப்பையும் கோபால்சாமி அய்யங்கார் பெற்றார். இதன் காரணமாக, 370 ஆவது சட்டப் பிரிவு நிறைவேறியது. மேலும், இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பதுபோல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு, அதன்படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு, 17.11.1956 இல் நிறைவேற்றப்பட்டது. இது, 26.1.1957இல்இந்தியாவின் 8 ஆவது குடியரசு நாளில் நடைமுறைக்குவந்தது. காஷ்மீருக்கெனத் தனி தேசியக் கொடியும் அமைத்துக் கொள்ள சட்டம் அனுமதித்தது.அதன்படி, காஷ்மீர் தேசியக் கொடியும் உருவானது.

பொது வாக்கெடுப்பு நடத்தாமல் காஷ்மீரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய இந்தியா, எக்காரணம்கொண்டும் காஷ்மீரை இழந்துவிடக் கூடாது என நினைத்ததால்தான் சிறப்புத் தகுதி வழங்கும் 370 ஆவது பிரிவுக்கு வழி வகுத்தது.

1974 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திரா காந்தி-ஷேக் அப்துல்லா ஒப்பந்தத்திலும் (சிம்லா ஒப்பந்தம்) அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவின்படி ஜம்முகாஷ்மீரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை மாற்று வழிகளில் அடிக்கடி மீற முயற்சிப்பது இந்தியத் தரப்பின் வழக்கமாக இருக்கிறது.

பாதுகாப்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாக இராணுவத்தைக் குவிப்பது, மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் இளைஞர்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் கொடுமைகளுக் குள்ளாக்குவது என 370 ஆவது பிரிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் காஷ்மீரில் அதிகம்.காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய உரிமைகளை அவ்வப்போது இந்திய அரசு பறித்தே வந்துள்ளது.

இது குறித்து எல்.கே.அத்வானி, தனது சுயசரிதையில் இந்த அதிகாரப் பறிப்புகளை பெருமையுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் அனுமதிபெற்றுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்றவெறுக்கக்கூடிய முறையை இந்திய அரசு நீக்கியது. அம்மாநிலத்தில் இந்திய குடியரசின் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

தேர்தல் ஆணையம், தலைமை தணிக்கை அதிகாரியின் அதிகாரம், காஷ்மீருக்கு விரிவாக்கப்பட்டது. அம்மாநில முதல்வரை ‘பிரதமர்’ என்று அமைக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டது” என்று எழுதியுள்ளார். சிறப்புத் தகுதியை வழங்கும் 370 ஆவது பிரிவினால்காஷ்மீர் மக்களுக்கு நேரடிப் பலன் தரும் அம்சங்கள் சில மட்டுமே. அவற்றில் முக்கியமானது, காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் அங்குள்ள நிலங்களை வாங்க முடியாது என்பதாகும்.

இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நிலத்தை தாரை வார்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கையின் முயற்சி அங்கு பலிக்கவில்லை. அதே நேரத்தில், காஷ்மீரில் நிரந்தரமாக வாழ்பவர்களுக்கே நிலம் உரிமை என்பதால், வெளி மாநிலத்தவரைத் திருமணம் செடீநுது கொள்ளும் காஷ்மீர் பெண்களுக்கு நிலம் தொடர்பான சொத்துகளில் உரிமை இல்லை என மறுக்கப்பட்டது.

எனினும், வெளி மாநிலப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் காஷ்மீர் ஆண்களுக்கு நிலமும் அதனைச் சார்ந்த சொத்துகளும் உரிமையுடையனவாக இருந்தன. இந்தப் பாலின பாகுபாட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 2002 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டாலும்,காஷ்மீர் பெண்களுக்கான சொத்துரிமை நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்புத்தகுதி என்று பொதுவாகக் கேட்கப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சிலவற்றுக்கும் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப இதுபோல சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 371 ஆவது பிரிவின்படி மகாராஷ்டிராவின் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்கும் வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

371ஏ பிரிவு நாகலாந்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கும், 371 ஜே பிரிவு ஐதராபாத்துக்கும் சிறப்புத் தகுதிகளை வழங்குகிறது.

நமது அரசியல் சாசனத்தின் தொடக்கத்திலேயே, “இந்தியா, அதாவது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியம்” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொழி, இனம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை இவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் காக்கப்பட சில சிறப்பு சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்துத்வா என்கிற நெ(வெ)றியைத் தவிர வேறெதுவும் இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் பா.ஜ.க.வும், அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ் சும் காஷ்மீர் மாநிலத்திற்குத்தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை நீக்குவதற்கான முதற்கட்ட முயற்சிகளை இத்தகைய விவாதங்கள் மூலம் தொடங்கியுள்ளன.

பதவியேற்ற இரண்டாம் நாளிலேயே தேசிய அளவிலான இத்தகைய சர்ச்சை உருவாகியிருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிப்பட வில்லை. குஜராத் கலவரத்தின்போதே இரண்டு நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்து, அதன் பின்‘அமைதி’யை உருவாக்கிய வளர்ச்சியின் நாயகராயிற்றே அவர்! காஷ்மீரிலும் ‘அமைதி’யை நிலைநாட்டக்கூடும்.