நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட்டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்றுஉண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சிலநாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தநாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளியிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்துசெய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றைஆதாரங்களுடன் விளக்கி, மேட்டூர் கழகத் தோழர் மே. கா. கிட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார்.

‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக்கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவுசெய்கிறது. கடந்த 08. 07. 2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி. கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலயபிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள். அதில், “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் நால்வருடனும் அந்நாளில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்களுடனும் வைத்தியநாத ஐயர் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து சாமி தரிசனம்செய்தார்” என்று எழுதியுள்ளார் கட்டுரையாளர்.

இப்பொழுது மட்டுமல்ல, 23. 02. 1997 ஆம் ஆண்டு‘தினமணி’யில் “ஆலயப் பிரவேசத்தின் முன்னோடி”என்ற தலைப்பிலும் மதுரை மீனாட்சியம்மன்கோவிலில் நடந்ததுதான் முதல் கோவில் நுழைவுப்போராட்டம் என்றும், போராட்டத்தின் முன்னோடிவைத்தியநாதர் அய்யர் என்றும் எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் பற்றியஉண்மைகளைத் தெரிந்தே திட்டமிட்டு மறுத்து வி. கே. ஸ்தாணுநாதனால் எழுதப்பட்ட கட்டுரைக்குமறுப்புத் தெரிவித்து உண்மையான வரலாற்றை எழுதி, கடிதமாக பெரியாரியக்கத் தோழர்கள் அனுப்பினார்கள்.

மறுப்புக் கட்டுரையை ‘தினமணி’ நாளேடு வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாசகர் கடிதம் பகுதியிலும்கூட மறுப்பை வெளியிடவில்லை. மீண்டும் ‘தினமணி’ 08. 06. 2005 இல் அதே ஸ்தாணுநாதன் எழுதிய “வரலாறு படைத்த நிகழ்ச்சி” என்ற கட்டுரையில் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிப் பற்றிய செய்தியை வெளியிட்டது. முன்பு எழுதிய கட்டுரையில் இருந்த அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலேயே அந்தக் கட்டுரையும் அமைந்திருந்தது. இதையெல்லாம் மறுத்து பெரியாரியக்கத் தோழர்களால் 2005 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பெரியார் பாசறை வெளியீட்டின் மூலம் குத்தூசி குருசாமி நூற்றாண்டு நினைவாக ஒரு சிறு நூலையும் வெளியிட்டார்கள்.

கட்டுரையாளரின் பொய் வரலாறு ‘தினமணி’யிலிருந்து ‘தினத்தந்தி’க்கு மாறியிருக்கிறது அவ்வளவுதான். தொடர்ந்து ஒரே பொய் வரலாற்றை மாறி மாறி எழுதுகிறார். ஈழத் தமிழர் வரலாற்றை பிரசுரித்து அதை நீங்கள் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளீர்கள். இங்குள்ள தமிழர்களின் வரலாற்றை தவறாக உங்கள் இதழ்களில் இனிமேலும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதை பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

• சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01. 1926 இல்கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07. 02. 1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும்மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமுன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர். மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (‘கேசரி’ 71, 73 ஐசளஉhமை, 339)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் தலைமையில்1927இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழை வாயிலையும்கருவறையையும் கோவில் நிர்வாகிகள்பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள்சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25. 06. 1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும்12. 08. 1928இல் திருவானைக்கோவிலிலும்அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

•தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர்காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு - பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதி திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரதேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளேபெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கியதட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள்இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.

இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்கமறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ. 60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர்ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்றுபாராட்டி எழுதியது.

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடுநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ. முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில்‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல்டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவுமசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939 ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
யார் இந்த வைத்தியநாத அய்யர்?

வைத்தியநாத அய்யர், திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் (1922) பெரியார் கொண்டு வந்த தீண்டப்படாதார் கோவில் நுழைவுத் தீர்மானத்தைஎதிர்த்தவர். இதை திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இவர் நடத்திய ஆலயப்பிரவேசம், அன்று நடக்கவிருந்த மதுரை,இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

கோவிலில் யாருக்கும் தெரியாமல், இரவு நேர கடைசிபூஜைக்குப் பிறகு, சில தாழ்த்தப்பட்டவர்களுடன் உள்ளே நுழைந்தார். இதற்கு உறுதுணையாக இருந்ததோடு கருவறையை பூட்டிவிட்டு ஓடிய பார்ப்பனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தவர், கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரர். வரலாற்றுப் பிழையான கட்டுரைக்கு வரலாற்று ஆதாரங்களோடு எழுதியுள்ளேன்.

தமிழ், தமிழ்நாடு, தமிழனுக்காக பத்திரிகை நடத்துபவராகிய நீங்கள் தமிழனுடைய வரலாற்றைத் தவறாகப் பிரசுரித்ததற்காக அந்த களங்கத்தைத் துடைக்கும் வண்ணம் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கழகத் தோழர் மே.கா.கிட்டு ‘தினத்தந்தி’ ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Pin It