சனிக்கிழமை மேட்டூர் சதுரங்காடியில் கழகத்தின் சார்பாக நடைபெற்ற‘நாத்திகர் விழா’ பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

• 1989முதல் மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கத்தை நிறுவி நடத்தி வந்தவரும்,மூட நம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான நரேந்திர தபோல்கர் முதலாமாண்டு நினைவு நாள்20. 08. 2014ஆகும். கடந்த ஆண்டு அவர் இறந்த சிலநாள்களில்24. 08. 2014அன்று மராட்டிய மாநில ஆளுநர் - பேயோட்டுதல், மந்திரவாதிகளின் செயல்கள்,தேள்,பாம்பு கடிக்கு பாடம் போடுதல்,குட்டிச்சாத்தான்,குறளி வித்தை போன்றவற்றை தடைசெய்யும் மூடநம்பிக்கை ஒழிப்பு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தும் அதைத் தொடர்ந்து14. 12. 2013அன்று மராட்டிய சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு,ஆளுநர் ஒப்புதலுடன்18. 12. 2013அன்று சட்டமாக்கப்பட்டது.

தமிழகத்திலோ1925முதல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, 1973டிசம்பர் இறுதி வரை சுற்றிச் சுழன்று,மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வீச்சான போராட்டத்தை நடத்தி வந்த பெரியார் மறைந்து40ஆண்டுகளுக்கு மேலாக கடந்துவிட்ட நிலையிலும் தமிழகத்தில் அவ்வாறான ஒரு சட்டம் நிiறவேற்றப்படாமல் உள்ளது அனைவருக்கும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும்.

எனவே,நீண்ட பகுத்தறிவு வரலாறு கொண்ட தமிழகத்தில் உடனடியாக மராட்டிய மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டதை ஒத்த மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இப்பொதுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகளைக் கூறும்51ஏ பிரிவின் (ஜி) உட்பிரிவின்படியும்,சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும்,தமிழக அரசு,தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அறிவிக்கைகளின்படியும்,நீர்நிலைகளில் இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளையும்,பிளாஸ்டர் ஆப் பாரிஸ்,சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளையும் கரைப்பதற்குத்தடை விதித்தும்,கடற்கரை,ஆற்றங்கரை,குளக்கரை ஆகியவற்றின் ஓரத்தில் அன்றி, படகு மூலமாக உள்பகுதிக்குச் சென்றே கரைக்க வேண்டுமென்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு, விநாயகர் சிலைக் கரைக்கும் இடங்களில் ஒன்றாக மேட்டூர் காவேரி பாலமும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள12மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசன ஆதாரமாகவும் உள்ள காவேரி ஆறு மாசுபடாமல் காக்க வேண்டியது நம் அனைவரின் அறவியல் கடமையாகும்.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும்,சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்,விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் மேட்டூர் காவேரி பாலத்தில் இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளோ,பிளாஸ்டர் ஆப் பாரிஸ்,சுட்ட களிமண் ஆகியவற்றில் செய்யப்பட்ட சிலைகளோ கரைக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து,அவ்வாறு நிகழுமாயின்,வருவாய்த் துறை,காவல் துறை,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரின் துணையோடு தடுப்பதெனவும் முடிவெடுத்துள்ளோம்.

இம்முயற்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகளும்,மக்கள் இயக்கங்களும்,அமைப்புகளும்,பொது மக்களும் காவேரி பாலம் அருகே திரண்டு வந்து ஆதரவு கொடுக்க வேண்டுமாறு இப்பொதுக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.

• இரவு10மணி முதல் காலை6மணி வரை எவ்வித ஒலிபெருக்கிகளும் இயக்கப்படுவதோ,மேளம்,பறை வாத்தியங்கள் இசைக்கப்படுவதோ - படிக்கும் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும்,சிறு குழந்தைகளுக்கும், கடும் வேலைகளில் ஈடுபட்டு வந்தபின் ஓய்வெடுக்கும் உழைப்பாளர்களுக்கும் உரிமையான நிம்மதியான ஓய்வைக் குலைக்கும் செயல்களாகும் என உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பலமுறை தீர்ப்பளித்திருக்கின்றன.

அதுபோலவே,பிற நேரங்களிலும், பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு, வணிக நிலையங்கள் உள்ள பகுதிகளில் இவ்வளவுதான் ஒலி அளவு இருத்தல் வேண்டுமென விதிகளும் தெளிவாக உள்ளன.

இவ்வாறாக எந்த ஒரு காரணத்துக்கும் ஒலி பெருக்கி அமைக்க காவல்துறையின் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதும் சட்டப்படியான ஒன்றாகும்.

ஆனால்,நமது மேட்டூர் பகுதிகளிலும்,தமிழ்நாட்டில் பரவலாகவும்,குழந்தைகள்,நோயாளிகள்,மாணவர்கள்,உழைப்பாளர்கள்,வணிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் இடையூறாகவும்,மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் அமைதி நேரமான இரவு10-காலை6வரை எவ்வித அனுமதியுமின்றி ஒலிபெருக்கிகளை அலற விடுவதும்,மேளங்களை ஒலிப்பதும்,மற்ற நேரங்களிலும் அளவுக்கு அதிகமான ஒலி வைத்தும் எவ்வித வரைமுறையுமின்றி நடந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக அரையாண்டு தேர்வுகள் நடைபெறும்போது அய்யப்பன் விரதம் என்ற பேராலும் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறும்போது மாரியம்மன்/காளியம்மன் பண்டிகைகளின் பேரிலும் இரவு பகல் என்ற வேறுபாடு இல்லாமல் நாள் முழுதும் ஒலிபெருக்கிகள் உச்சபட்ச ஒலியில் அலறுவது மிகச் சாதாரண நடைமுறையாக இருந்து வருகிறது.

அதுபோலவே பல விழாக்களின் தொடர்பாக ஆற்றுக்கு நீரெடுக்கப் போகிறோம் என்றும் மாவிளக்கு ஊர்வலம் என்றும் எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் இல்லாமல்,பேருந்து வழித்தட முதன்மைச் சாலைகளை மணிக்கணக்கில் அடைத்துக் கொண்டு ஊர்வலம் செல்வதும் மிகச் சாதாரணமாக அங்கிங்கெனாதபடி எங்கும் நடைபெறுகிறது. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல முடியாமல் உயிரிழந்த செய்திகளும் உண்டு.

இனிமேலாவது இவ்வாறான சட்ட விரோத ஒலிபெருக்கி,மேளங்களையும் தடுத்து நிறுத்துமாறும்,சட்ட விரோத ஊர்வலங்களை முறைப்படுத்துமாறும் காவல்துறையினரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மீறி நடக்குமாயின் முதல் ஓரிருமுறை உரிய காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து நிறுத்த முயலுமாறும்,பிறகும் தொடருமாயின் உச்சநீதிமன்ற,உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும்,சட்ட விதிகளையும் நடைமுறைபடுத்த வேண்டிய நல்ல குடிமக்களின் கடமை உணர்வோடு,அவற்றை தடுத்து நிறுத்த நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கழகத் தோழர்களையும் பொது மக்களையும் இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது

Pin It