ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்யாகுமார் மீது, பா.ஜ.க. ஆட்சி தேசத் துரோக வழக்கு (இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு) தொடர்ந்து சிறையிலடைத்துள்ளது. அவருடன் மேலும் 5 மாணவர்கள் மீதும் இதே தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த இந்த மாணவர்கள், மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு திரும்பியுள்ளனர். ‘இந்த தேசத் துரோக வழக்கைத் திரும்பப் பெறவேண்டும்’ என்று, பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பார்ப்பன மதவாதிகள் இப்போது ‘தேச பக்தர்’களாக அரிதாரம் பூசித் திரிகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்களில் ஒருவரான டி.ராஜாவின் மகள், இதே பல்கலையில் பயின்று வருகிறார். ‘தேச விரோதிகள்’ பட்டியலில் பார்ப் பனர்கள் இவரையும் சேர்த்து விட்டார்கள். தமிழ் நாட்டில் ‘திமிர்த்தனமாக’ தடித்த வார்த்தைகளைக் கொட்டி, அவ்வப்போது ‘அசிங்கப்’பட்டுக் கிடக்கும் எச்.ராஜா என்ற பார்ப்பனர், ‘டி.ராஜா, தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’ என்று ‘கோட்சே’ மொழியில் பேசி, இப்போது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே காரி உமிழப்பட்டிருக்கிறார். “இது போன்ற கருத்து தெரிவிக்க ஒருவருக்கும் உரிமை இல்லை. குற்றச்சாட்டைக்  கூறும்போது வரம்பு மீறக் கூடாது” என்று கூறியிருப்பவர், மத்திய பா.ஜ.க. அமைச்சராக இருக்கும் வெங்கய்யா நாயுடு.

சரி; இந்த தேசத்துரோக சட்டப் பிரிவு எங்கிருந்து வந்தது? இந்தியாவில் முதன் முதலாக அனைவருக்கும் பொதுவான கிரிமினல் சட்டத்தை உருவாக்கியவர் பிரிட்டிஷ் அதிகாரி, மெக்காலே சட்டத்தில் இந்தப் பிரிவை வரைவு படுத்தி யிருந்தாலும், 1860ஆம் ஆண்டு இந்த கிரிமினல் சட்டம் அமுலுக்கு வந்த போது, இந்தப் பிரிவு நீக்கப்பட் டிருந்தது. அதற்கு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் பிரிட்டிஷ் ஆட்சி, இந்த ‘124ஏ’ பிரிவை சேர்த்தது.

ஏதோ தவறுதலாக இந்தப் பிரிவு நீக்கப்பட்டிருந்தது என்று பிரிட்டிஷ் ஆட்சி சமாதானம் கூறியது. அதே சட்டம், “சுதந்திர” இந்தியாவிலும் அமுலில் இருக்கிறது. (ஒரு சில திருத்தங்களுடன்)

இதே சட்டப் பிரிவைத்தான் பிரிட்டிஷ் ஆட்சி திலகர், காந்தி மீது ஏவியதும் குறிப்பிடத்தக்கது. 1922இல் இந்தப் பிரிவின் கீழ் காந்தி மீது குற்றம் சுமத்தியபோது அவர் சொன்னார், “ஒரு குடிமகனின் அடிப்படை சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான இந்தப் பிரிவின் கீழ் நான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். கிரிமினல் சட்டத் துக்கே ‘அரசன்’ இந்த ‘124ஏ’தான்” என்றார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பேசுவதே தேச துரோகம் என்று அன்றைய ‘காலனி’ ஆட்சி, இந்தப் பிரிவை பயன்படுத்தி வந்தது. 1942ஆம் ஆண்டிலேயே எதிர்ப்புகள் உருவாயின. 1950இல் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது. அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களில் இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பல உறுப்பினர்கள் இந்தப் பிரிவு நீக்கப்படக் கூடாது என்று வாதிட்டனர். ‘124ஏ’ தொடரவே செய்தது.

இந்தியாவின் உச்சநீதிமன்றம், இந்தப் பிரிவை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது என்று ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டியது. கருத்து சுதந்திர உரிமைகளில் ‘தேச துரோகம்’ குறுக்கிடக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பிரதமராக இருந்த நேரு, நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், இந்த தேசத் துரோக சட்டப் பிரிவு, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறிய தோடு, வெகு விரைவில் இதை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்குவது நல்லது (The sonner we get rid of it the better) என்றார். ஆனாலும், 65 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சட்டப் பிரிவு நீடிக்கிறது. இப்போது பல்கலையில் மாணவர்கள் வெளியிட்ட கருத்துகளுக்காகவே இந்த சட்டம் சீறிப் பாய்கிறது.

‘எக்னாமிக் டைம்ஸ்’ நாளேட்டில் (பிப்.17, 2016) இது குறித்து சுவாமிநாதன் எஸ். அன்கிலேசாரிய அய்யர் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். “‘தேச விரோதி’ என்ற கூப்பாடு ஒரு வெற்று முழக்கம்; ஒரு சுதந்திர சமூகத்தில் இந்த கூப்பாடுகளுக்கு இடமிருக்க முடியாது; ‘தேச விரோதிகள்’ என்ற கூச்சல் அயோக்கியர்களின் முதல் அடைக்கலப்பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாமில் அமெரிக்க இராணுவம் அந்த மக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்காவின் ‘அடாவடி’க்கு சொந்த நாட்டிலே எதிர்ப்பு எழுந்தது. ‘அமெரிக்க தேச பக்தி’க்கு எதிரானது என்று அரசாங்கம் கூறியது. அந்த ‘தேசபக்தி’யை ஏற்க அமெரிக்க சிந்தனையாளர்கள் மறுத்துவிட்டனர்.

இங்கிலாந்து ஆட்சிக்கு முழுமையாகக் கட்டுப்பட் டிருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தில் 1933இல் ஒரு விவாதம் நடந்தது. “எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இங்கிலாந்து நாட்டுக்காகவோ, அரசருக் காகவோ இங்கிலாந்து நாடாளு மன்றம் போராட வேண்டிய தேவையில்லை” என்ற தலைப் பில் நடந்த விவாதம் அது. ஆதரித்து 275 பேரும், எதிர்த்து 153 பேரும் பல்கலைக் கழகத்தில் வாக் களித்தனர்.

“அரசுக்கு விசுவாசம் காட்டத் தேவையில்லை” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மாணவர்கள் எடுத்த இந்த உறுதிமொழியைப் போலவே மான்செஸ்டர், கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர்களும் உறுதி ஏற்றனர். இதற்காக இந்த மாணவர்கள், ‘தேச விரோதிகள்’, ‘பிசாசுகள்’, ‘கம்யூனிஸ்டுகள்’ என்று குற்றம்சாட்டப்பட்டனர். அதற்காக எவர்மீதும் ‘தேசத் துரோக’ வழக்கை ஆட்சியாளர்கள் பதிவு செய்யவில்லை.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி, பிரிட்டனிலிருந்து பிரிந்து போக போராடியது. இதற்காக அக்கட்சித் தலைவர்கள் மீது பிரிட்டன் தேச விரோத சட்டத்தை ஏவியதா? இல்லை; சமூகத்தில் அவர்களின் உரிமைக் குரலை கவுரவத்துடன் அங்கீகரிக்க முன் வந்தது. ஸ்காட்லாந்து கோரிக்கையை முன் வைத்து தனி வாக்கெடுப்பு நடத்த முன் வந்தது. அதேபோல வேல்ஸ் தேசிய இனமக்களும் தனிநாடு கேட்டு பிரிட்டனை எதிர்த்துப் போராடி னார்கள். அதற்காக பிரிட்டன் அவர்களை சிறையில் அடைக்கவில்லை.

கனடாவில் ‘க்யுபெக்’ கட்சி சுதந்திரத்திற்குப் போராடியது. இது தேச விரோதமாக கருதப்படவில்லை. சட்டபூர்வமான ஜனநாயக கோரிக்கையாகவே கனடா அரசு அணுகியது.

ஸ்பெயின் நாட்டில், ‘கேட்ட லோனியா’ (Cata Lonia) மாநிலத்துக்கு தனிநாடு கோரும் கட்சிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றன. 2015இல் கனடாவில் நடந்த தேர்தலில் இந்த தனிநாடு கோரும் கட்சிகள் போட்டி யிட்டு 47.8 சதவீத வாக்குகளைப் பெற்றன. ஸ்பெயின் அரசாங்கம் இந்த தனி நாடு கோரிக்கையை கடுமையாக எதிர்த்தாலும், போராடுகிற கட்சிகளின் தலைவர்களுக்கு ‘தேசத் துரோக’ பட்டம் சுமத்தவோ, சிறைப் படுத்தவோஇல்லை. ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள், வன்முறையைத் தூண்டுவோர் மீது மட்டும்  அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன.

பிரெஞ்சு நாடு தனி நாடு கோரும் ‘கோர்சிகான்’ (Corsican) பிரிவினையாளர்களை சிறையில் அடைக்க வில்லை. ஆயுதம் தாங்கிப் போராடினாலோ வன்முறைகளை நிகழ்த்தினாலோ அரசு நடவடிக்கை எடுக்கிறது. சுதந்திரமாக கருத்துகளை வெளியிட அனுமதிப்பதுதான் ஒரு சுதந்தரமான சமூகத்துக்கான அடையாளம்.

இந்த நாட்டில்தான் தேச துரோகச் சட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், தமிழக அரசின் கொள்கைகளை எதிர்த்துப் பாடியதற்காக கிராமியக் கலைஞர் கோவலன் மீதும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார், பத்திரிகையாளர் அஸ்கிலேசாரியா அய்யர்.

இந்த ‘தேசபக்தி’ பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியவர் பெரியார். 1935ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதினார்:

“தேசாபிமானம், தேச பக்தி என்பவைகள் சுயநல சூட்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்கள், தங்கள் சுயநலத்துக்காக பாமர மக்களுக்குள் புகுத்தப்படும் ஒரு (வெறி) போதை என்றும் பல தடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம். மற்றும் ‘தேசாபிமானம்’ என்பது காலிகளுக்கு ஏற்பட்ட ‘கடைசி ஜீவன மார்க்கம்’ என்று மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறிய ஆப்த மொழி என்றும் பல தடவை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.”

- ‘குடிஅரசு’ 29.9.1935

பார்ப்பனர்களை எதிர்த்தால் - பார்ப்பன மதத்தை எதிர்த்தால் - பார்ப்பனக் கடவுளை எதிர்த்தால் - அது ‘தேச விரோதம்’ என்று அச்சுறுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, ‘ஃபார்வர்டு பிரஸ்’ என்ற முற்போக்கு இதழ் வெளியிட்ட கார்ட்டூன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் களிடையே விவாதத்தைக் கிளப்பியது. ‘துர்க்கைக்’ கடவுள் பற்றிய கேலிச் சித்திரம் அது. விசுவ இந்து பரிஷத் மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு பதிலடி தந்தனர் இடதுசாரி மற்றும் தலித் மாணவர்கள்.

‘மகிசா அசுரன்’ என்ற பழங்குடிப் பிரிவைச் சார்ந்த அரசனை ‘துர்க்கை’ தீமையின் உருவம் என்று கூறி கொன்றாள். பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களை தீமையின் வடிவம் என்கிறார்கள் பார்ப்பனர்கள். “எங்களுக்கு மகிசா அசுரன் மாவீரன், பார்ப்பனியத்துக்கு பலிகடாவான தியாகி!” என்று மாணவர்கள் வளாகத்தில் முழக்கமிட்டனர்; கூட்டங்களில் பேசினர்.  நரகாசுரனை மகாவிஷ்ணு சூழ்ச்சியாகக் கொன்ற ‘தீபாவளி’ கொண்டாட்டத்தை பெரியார் எப்படிப் பார்த்தாரோ அதே கண்ணோட்டம் இந்த மாணவர்களிடமும் இருந்திருக்கிறது. கன்யாகுமார், ‘பார்ப்பனியமும் ஜாதியும் மனுவும் எங்கள் எதிரி’ என்றார். அவர் தேசத் துரோகியாம்! பார்ப்பனர் எச். ராஜா, தேசத் துரோகத்துக்கு எதிராக துப்பாக்கி தூக்க சொல்கிறார்.

ஒன்றை உரத்து முழங்குவோம்:

பார்ப்பனியத்திடம் தேசபக்தி சான்றிதழ் பெறுவதைவிட சுயமரியாதையுள்ள ‘தேசவிரோதி’யாக வாழ்ந்து காட்டுவதே உண்மைத் தமிழர்களின்  பெருமைக்குரிய அடையாளம்! ஆம்! நாங்கள் தேச விரோதிகளே!